Saturday 31 July 2021

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் வாழ்க்கை சித்திரங்கள் - இரவி செல்வராஜ்

 இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் வாழ்க்கை சித்திரங்கள் - இரவி செல்வராஜ்


பேராசிரியர் திருஅன்பழகன் (டிசம்பர் 19, 1922 - மார்ச் 7, 2020) அவர்கள் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர், தமிழ்நாட்டின் தி.மு.க. அரசின் அமைச்சரவையில் நிதி, கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை ஆகிய முக்கியமான துறைகளின் அமைச்சராக வெவ்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றியுள்ளார். தி.மு..வின் பொதுச் செயலாளராக 1977 முதல் 2020-ல் தான் மறையும் வரை (43 ஆண்டுகள்) செயல்பட்டுள்ளார். 2020 மார்ச் 7-ஆம் நாள், தம்முடைய 97-ஆம் வயதில், சென்னையில் காலமானார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் முகருணாநிதி அவர்களின் இளமைக்காலம் முதல் அவரது மறைவு வரை 75 ஆண்டு கால நண்பராக இருந்த சிறப்புக்குரியவர் ஆவார்.


கல்வியும் பொதுவாழ்வும்


அன்பழகன் அவர்கள் 1940-42 காலக்கட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின், 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1962-ஆம் ஆண்டில், சென்னை - செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பணியாற்றினார். 1971-ல், சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1984-ல், ஈழத்தமிழரின் தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தவர்களில் அன்பழகனும் ஒருவர் ஆவார். தி.மு..வின் மூத்த மேடைப்பேச்சாளராக விளங்கினார். இவர் தன் பொதுவாழ்வின் துவக்கம் முதலே தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றியே நடந்தார். இவர், 1996, 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தி.மு.க. சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


எழுத்துப் பணி


அன்பழகன் அவர்கள் எழுத்தாளராகத் தமிழ் மொழி, வரலாறு, தமிழர் உரிமைகள், திராவிடம் மற்றும் சமூகநீதி சார்ந்த நூல்களை படைத்துள்ளார். 

இவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:

1. அழகுராணி

2. இன-மொழி வாழ்வுரிமைப் போர்

3. உரிமை வாழ்வு

4. தமிழர் திருமணமும் இனமானமும்

5. தமிழினக்காவலர் கலைஞர்

6. தமிழ்க்கடல்

7. தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி

8. தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்

9. தொண்டா? துவேஷமா?

10. நீங்களும் பேச்சாளர் ஆகலாம்

11. வகுப்புரிமைப் போராட்டம்

12. வளரும் கிளர்ச்சி

13. வாழ்க திராவிடம் (ஆராய்ச்சி நூல்)

14. விடுதலைக் கவிஞர்

15. விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு

16. பேராசிரியர்கள்

17. சிங்க இளைஞனே! சிலிர்த்து எழு!

18. மாமனிதர் அண்ணா

19. தி திராவிடியன் மூவ்மெண்ட்டு (The Dravidian Movement)

இந்நூல்கள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம், பகுத்தறிவு மற்றும் சமூகநீதி பற்றிய புரிதலையும் எழுச்சியையும் உருவாக்கியது.


Source: https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன் 


பேரறிஞர் அண்ணாவுடன் பேராசிரியர் க.அன்பழகன்.

அரசியல் களம்

அன்பழகன் அவர்களின் இயற்பெயர் ராமையா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த போதே சுயமரியாதைக்காரராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ராமையாவை, பேரறிஞர் அண்ணா திருவாரூரில் முஸ்லிம் இளைஞர்கள் நடத்திய மாநாடு ஒன்றில் பேச வைத்தார். திராவிடத்தையும், சுயமரியாதையையும் ராமையா அனல் பறக்கப் பேச, அந்தக் கூட்டத்திற்கு அண்ணாவைக் காண வந்திருந்த திருவாரூர் இளைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முறையாக ராமையாவைச் சந்தித்தார். அங்கு தொடங்கியது கருணாநிதிக்கும் அன்பழகனுக்குமான (ராமையா) நட்பு. ஏறத்தாழ 75 ஆண்டுக்கால நட்பு.

தனித்தமிழில் பெயர்

பெரியாரிடம் சுயமரியாதையைக் கற்றிருந்த ராமையா, தனித்தமிழில் பெயர் சூட்டிக்கொள்ள விரும்பி, தனது பெயரை ‘அன்பழகன்’ என மாற்றிக்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த அன்பழகன், அதன்பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பேராசிரியராக இருந்த போதும், இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பழகனை, அண்ணா ‘பேராசிரியர் தம்பி!’ என்று அழைத்து வந்தார். அதுவே அவரது நிரந்தரப் பட்டமாகிப் போனது.


உடல் நலிவுற்ற பேராசிரியரிடம் நலம் விசாரிக்கும் தி.மு..தலைவர் மு..ஸ்டாலினும், திரு.துரைமுருகன் அவர்களும்.

தி.மு..வின் முதல்நாள் முதல் தனது இறுதி நாள் வரை

பெரியார் - அண்ணா இருவருக்கிடையிலான முரண்பாடுகள் பெருக, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா. அன்றைய காலகட்டத்தில், அண்ணாவுக்காகப் பெரியாரை விட்டு விலகியவர்களில் அன்பழகனும் ஒருவர். 

தி.மு.க. சார்பில் சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒருமுறையும், சட்டமன்ற உறுப்பினராக 9 முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.

தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் தன் இறுதிநாள் வரை கட்சிக்காக கடும் உழைப்பை செலுத்தி தி.மு..வின் வளர்ச்சியை அணு அணுவாகக் கண்டு மகிழ்ந்தவர் பேராசிரியர் அவர்கள். 

தி.மு..வின் பெருந்தூண்களில் ஒருவரான பேராசிரியர் அவர்களின் பேருழைப்பு தி.மு.க. என்னும் சமூகநீதிக் கட்சியின் வளர்ச்சியையும், பெருமையையும் உயர்த்திக் கொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment