Saturday 31 July 2021

இனமான பேராசிரியப் பெருந்தகை - பிரேம் முருகன்

 இனமான பேராசிரியப் பெருந்தகை - பிரேம் முருகன்


தளராத வயதிலும் தன் தோழனின் இறுதிச் சடங்கிற்கு வந்து நின்று, “சம்பாதிச்சா இப்படியொரு நண்பன சம்பாதிக்கனும்” என்ற பொறாமையில் தள்ளிய நட்பின் இலக்கணம், சித்தாந்தத்தின் நாட்டமும் ஊட்டமும் மிக்கவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினர், பல துறைகளின் அமைச்சர்- திராவிட அறிவுக் கருவூலம் இனமான பேராசிரியர் க.  அன்பழகன்...! நீலாம்பிகை அம்மையாரின் தனித்தமிழ் கழகத்தால் ராமையாவாக இருந்தவர் அன்பழகனாக மாற்றினார், பிறகு தன்னைத் தமிழோடும் திராவிடத்தோடும் இணைந்து ‘இனமானமும் தன்மானமும்’ இணைந்து சமூகப் பணியாற்றினார். 


பரபரப்பாக பேசியும் விவாதமும் போட்டியும் உடைய தமிழக பாராளுமன்ற பொது தேர்தலில், இருபெரும் ஆளுமைகள் இல்லாத ஒரு தேர்தல் என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. அந்த மனிதர்கள் தாண்டிய ஒரு மாமனிதரின் பிரச்சாரம் அற்ற தேர்தல் என்ற பேச்சு, பேராசிரியரை தெரிந்தவர்கள் மத்தியில் மட்டுமே பார்த்து பேசப்பட்டது. திராவிடக் கருத்துக்கள் பல அடங்கிய ஒரு பெட்டகம் தான் அவரது கோர்வையான பேச்சு. அது போன்றே இரு பெரும் தலைவர்கள் இல்லாத தேர்தலில் பேராசிரியரின் அந்த ஓட்டு அவ்வளவு மகிழ்வையும் ஆறுதல்களையும் கொடுத்தது என்பது உடன்பிறப்புகள் மட்டுமே உணரக்கூடிய ஒன்று.

கழக அறிவிப்பு தொடங்கி வேட்பாளர் பட்டியல், முக்கிய நாள் என அனைத்திற்கும் அவருக்கு தெரியாமல் இன்றளவும் நடக்க வாய்ப்பில்லை. கலைஞர் தொடங்கி இன்றைய முதல்வர் வரை அதே பிடிப்பு தான். அத்தகு கழகத்தூண் அவர்…! 


காந்தியக் கொள்கைகளில் இருக்கும் போதாமைகளையும் இடைவெளியையும் பல இடங்களில் அண்ணா நிரப்பியுள்ளார். அண்ணா தமிழகத்தை பல அயல் நாடுகளுடன் ஒப்பிட்டு தமிழ் நாட்டிற்கான முன்னேற்ற பாதையை வழிவகுக்க முனைந்திருந்தார். கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி என பல குறியீடுகளில் அண்ணா முனைந்தது போன்றே பேராசிரியரும் கலைஞருடன் இணைந்து மிக நுணுக்கமான விடயங்களை மேற்கொண்டார். அண்ணா அயலகத்தை எவ்வாறு பயன்படுத்தினாரோ அதுபோன்றே பேராசிரியரும் பயன்படுத்தினார். 1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் பேராசிரியர் அவர்கள் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படிகொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லைதானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டுவிட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் துவங்கி என்.ஜி. ஓ’கள் என பலரையும் வைத்து துவங்கப் பட்ட அந்நிகழ்வின் வெளிப்பாடானது 1983 ஆம் ஆண்டு தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ஒன்றியளவில் 2019ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. நொடிப்பொழுதில் பன்னோக்கு முடிவுடன் எடுக்கும் முடிவு தான் பேராசிரியர் சமூக நலத்துறைத்துறையில் போட்ட அடித்தளம் இதுதான்.


பேராசிரியர் சென்னைப் பல்கலையில் பேசுகையில் “அரசியல் பதவியில் இருந்தால் தான் உலகம் தம்மை மதிக்கும் என்ற நினைப்பிற்கு நம்மை ஆளாக்குகிறது. அது தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளுவதுடன். முதலில் பதவிக்கு ஆசைப்பட்டு தனிமனித உணர்வுக்கு ஆட்பட்டு; அது இயக்கத்தின் இலட்சியத்தை தகர்த்துவிடுகிறது” என்பதை ஆணித்தரமாக சொல்கிறார்.


இந்தியா என்ற நாட்டின் அரசமைப்புடன் நடத்த வேண்டுமாயின் கூட்டாட்சியின் உயிர் நாதத்தையும் சமூக நீதியும் பூலோகப் பரப்பையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உண்மையான கூட்டாட்சி உள்ள ஒரு நாடு சுவிட்சர்லாந்து தான். அந்நாட்டில் மக்கள் பேசும் ஜெர்மனி, ஃபிரன்ஸ், இலத்தீன், ரோமனீஷ் ஆகிய மொழிகளை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. அது மட்டுமன்றி ‘மாநிலங்களாலும் அவற்றின் மக்களாலும் தான் சுவிஸ் கூட்டாட்சி உருவாகியிருக்கின்றது’ என்பதை சுவிஸ் அரசமைப்பு பிரகடனப் படுத்தியுள்து. 


கூட்டாட்சியை முன்மொழிந்தாலே பிரிவினைவாதம் என கொந்தளிக்கும் கொள்கை வாதிகள் ஒருபுறம் இருக்க, அது அதிகார குவிப்பை தவிர்த்து அதிகாரப் பரவலாக்கத்துடன் பொருளாதாரத்தையும் பலத் தரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்க வழியாக பார்க்கின்றனர். “கூட்டாட்சியை வேரறுத்து ஒற்றையாட்சியை மையப்படுத்தப் பட்டதாக அரசை கட்டமைக்க வேண்டும்” என்பதை அன்றே முழங்கியவர் கோல்வல்கர். இப்படிப்பட்ட தொடர் பிரசுரங்களை தனது பிரச்சாரங்களில் “நாம் ஒன்றை முடிவு செய்து பிறர் கருத்தைக்கேளா முடிவை மேற்கொள்ளுதல் என்பது சனநாயகத்திற்கு மாறானது. அதைத் தாண்டி அப்படி இருந்தால் எந்தவொரு இயக்கமும் வளராது. இயக்கம் என்றால் நீங்கள் சொல்வதை நானும் (வயது மூப்பிலான கிழமாக இருந்தாலும் சரி) நீங்கள் சொல்வதை நானும் கேட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். பல மொழிகளில் உரையாட நேரிடுமேயானால் நாம் ஆங்கிலத்தை பயன்படுத்துவோம். பிற்காலங்களில் உலக மொழி தமிழ், கன்னடம், கிரேக்கம் என பிற மொழி வந்தால் அதை கற்றுக்கொள்ளவும் தயங்கோம்…!” என்று மொழிகளில் விளங்கும் தன்னாட்சியை கூட்டாட்சி வகையில் பேசுவதுடன் “தமிழனுடைய பண்பாடு திருக்குறள் பன்பாட்டை தழுவியது” என்ற இனமானத்தை தூவிவிட்டு சென்றார்.


கிடைக்கின்ற நேரத்தில், கிடைக்கின்ற இடத்திலெல்லாம் இனமானத்தை பேசியதால் தான் இனமான பேராசிரியப் பெருந்தகை என்று அன்பால் முழங்குகிறோம்.


காந்தியின் காங்கிரஸ் எப்படியோ அண்ணாவின் திமுகவும் பல சமூக விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உள்ளது. அண்ணாவின் திமுக என்பது பல விழுமியங்களை உள்ளடக்கிய பல பேராளுமையை அடக்கிய கூட்டம் தான். இந்திய அரசியலில் இருக்கும் மிக முக்கியமான வெற்றிடத்தை திமுக பூர்த்தி செய்வதுடன், பல குறியீடுகளில் இந்தியா ஏற்படுத்தும் வெற்றிடத்தையும் தமிழ்நாடு சமன்செய்கிறது.


மொழி என்பதை அடையாளம் எனக் கருதுவதைக் கடந்து, மொழி அதிகாரம் என பேராசிரியர் கருதினார். அதானால் தான் இந்தி பேசாத மக்களின் சுயமரியாதைக்கான குரலாக தான் அண்ணாவைப் பார்க்கிறேன். அந்த அண்ணாவின் நீட்சியாக பல சமூக விழுமியம் பேசும் பேராசிரியர்  திகழ்ந்தார். 


பேராசிரியருக்கு புகழஞ்சலி…!

No comments:

Post a Comment