Saturday 31 July 2021

நூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை” - ராஜராஜன் ஆர்.ஜெ

 நூல் அறிமுகம்: பேராசிரியரின் “தமிழ்க்கடல் அலை ஓசை” - ராஜராஜன் ஆர்.ஜெ


பேராசிரியர் . அன்பழகன் 1975 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் "தமிழ்க்கடல் அலை ஓசை". 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த தமிழ் உணர்வு எழுச்சியை அப்படியே படம் பிடித்து காட்டும் புத்தகமாக இது இருக்கிறது.  


இப்புத்தகத்திற்கு அணிந்துரையை அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதி இருக்கிறார். 


"சுற்றிச் சுழன்று வந்த பகைமை அணிகளையெல்லாம் புறமுதுகிடச் செய்து வெற்றிக்கொடி நாட்டி நிற்கும் தமிழ் மொழியின் வலிவு எத்தகையது என்பதையும், வளம் எத்துணை சிறப்பு மிக்கது என்பதையும் இந்நூல் மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் மணம் பரப்பிக் காட்டும் விந்தைதான் என்னே!" என்று கலைஞர் குறிப்பிடுகிறார்.


இந்த நூலின் அடிநாதமாக விளங்கும் கருத்தானது, தமிழின் பெருமையை உலகுக்குணர்த்தும் வகையிலும், அதே வேளையில், தமிழை குறித்த ஆரிய, புராண புரட்டுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. 


18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் எழுந்த தமிழுணர்வு எழுச்சிக்கு பின்னால் இருந்த பல்வேறு தமிழறிஞர்கள் குறித்த அறிமுகமும், அவர்களின் கருத்துகளையும் அழகான கட்டுரை வடிவில் நமக்கு படிக்கத்தருகிறார் பேராசிரியர். 


தமிழின் தனித்துவத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் விதமாகவும், அதே வேலையில் ஆரியகலப்பால் தமிழுக்கு நேர்ந்த இழிவையும் எடுத்துரைக்கும் பல தகவல்கள் இதில் இடம்பெறுகின்றன. அத்தோடு, பேராசிரியரின் தனித்தமிழ் ஆர்வமும், பரந்துபட்ட திராவிடத்தின் மீதான  பார்வையும் வெளிப்படுகிறது.


இந்த நூலில் வெளிப்பட்டு இருக்கும் கருத்தான "குமரிக்கண்டத்தை" இன்றைய ஆய்வுகள் மறுப்பதையும் நாம் உணரலாம். அதேவேளையில், இது 1975 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் என்பதால், சமீபத்திய மரபணு, தொல்பொருள் ஆய்வுகள் எல்லாம் திராவிட பண்பாட்டையும், தமிழின் தொன்மையையும் காட்டுவதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பெரியாரின் அடிச்சுவட்டிலும், பேரறிஞரின்  பல்கலைக்கழகத்திலும் பயின்ற பேராசிரியர் தனக்கான கருத்துகளை எப்போதும் நெஞ்சுரத்தோடும், அறிவு நேர்மையுடனுமே எழுதி இருக்கிறார் என்பதற்கு அவரது எழுத்துக்கள் வாழும் சான்றுகளாக விளங்குகின்றன.


இந்த "தமிழ்க்கடல் அலை ஓசை" மூலமாக, பேராசிரியர் . அன்பழகன் அவர்கள் நமக்கு, தமிழ் உலகில் சிறந்து விளங்கிய அறிஞர்களான மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பரிதிமாற்கலைஞர், டாக்டர். கால்டுவெல், சீகன்பால்கு, வீரமாமுனிவர், ஜி.யூ. போப், மறைமலை  அடிகளார், புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளை, நாவலர் பாரதியார், டாக்டர் .வே.சா, தாமோதரனார், 'மொழி நூல்' கார்த்திகேய முதலியார், பேராசிரியர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, செல்வகேசவராயர், நமசிவாயனார் திரு.வி. போன்றவர்களின் கருத்துக்களின் மூலம் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறார்.      


- ராஜராஜன் ஆர்.ஜெ


முழுப்புத்தகத்தை  வாசிக்க: https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011638_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88.pdf


No comments:

Post a Comment