Saturday, 31 July 2021

திரைக்கதை உரையாடல் திலகமே! - விருதை சசி (இரா. சசிகலா)

 பெரியார் -அண்ணா - விருதை சசி


சிந்தையிற் தெளிந்த செயலாலே சாதிசூழ்

விந்தையில் வேற்றுமை தானொழித்து – செந்தமிழால்

மந்தை மொழியகற்றி உறவோடுல காளுஞ்சூரிய

சந்திர அறிவுச் சுடர்கள்.



திரைக்கதை உரையாடல் திலகமே! - விருதை சசி (இரா. சசிகலா)



திருக்குவளை மண்ணில் அயனித்த

திரைக்கதை உரையாடல் திலகமே!

அஞ்சா நெஞ்சுரப் பண்புடைய

அஞ்சுகம் அம்மையாரின் அருட்செல்வனே!

இருபது அகவையுடைய இளந்தாரியாய்

இருளகற்ற ஏடேந்திய இந்திரியனே!

திராவிடச் சித்தாந்தக் கருத்துகளை

திரையினில் ஏற்றிய கலைக்களஞ்சியமே!


சிறைவசத்தில் பிறரில் ஆதுலஞ்சூழாது

நிறைமதி உரையளித்த ஆதவனே!

இரவலில்லா உலகமைய உண்மை

அரசியலை கற்பித்த புதுமைப்பித்தனே!

கந்தமென கொள்ளையடிக்கும் கயவர்களை

கந்தழியோடு கர்ஜித்த கனலியே!

கல்யாணி கற்பிக்கோர் அரணமைத்து

கல்லாமைக்கு பகுத்தறிவூட்டிய பராசக்தியே!


              கட்டியம் பேசித்திரியும் மடமையை

                        ஒட்பயுரையில் சுட்டெரித்த சூரியனே!

              மண்ணோக்கி நடக்கும் மாதரினி

                         கண்பார்த்து இயம்பிட உரைசெய்தோனே!

              ஆளலில் மருதநாட்டு இளவரசியை

                           வாளேந்தும் பெண்மையாய் வடித்தவனே!

             நேசிக்கும் உணர்வில் எந்நாளும்

                            ஆசு சூழ்ந்திடாத பாசப்பறவையே!

                         

             பழுவேற்றி பார்க்கின்ற பணத்தந்திரங்கள்

வழுவின்றி போகச்செய்த வண்டிக்காரனே!

             அமுதுமொழி இலக்கியத்தால் உலகுய்ய

              அமரொன்றை சொல்லிலேற்றிய அபிமன்யுவே!

              நயனம் நவில்கின்ற நாயகனின்

              கயமை சாடுகின்ற பூம்புகாரே!

             நீயென்ற நானென்ற சுயமழித்து

             நாமென்ற அதிரம் வாழியவே!

             


- விருதை சசி (இரா.சசிகலா)

கௌரவ விரிவுரையாளர்

அரசு மகளிர் கலைக்கல்லூரி

சிவகங்கை

No comments:

Post a Comment