Tuesday 31 August 2021

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். - தம்பி பிரபு

 ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். - தம்பி பிரபு



1

க்கதோர் அறிவூட்டி,

பகுத்தறிவு பாலூற்றி,

பதமாய் பாடம் சொல்லும்

ஆசிரியர் அவர்கட்கு

சொல்லுகிறேன் முதல் வணக்கம்.

 

என்னை கவி பாட அழைத்த

நல்லுள்ளங்கள் அனைவருக்கும்,

பகுத்தறிவு நெஞ்சங்களுக்கும்

நல்வணக்கம்.

 

மூன்றெழுத்து கவி பாடி

முப்பால் தந்தவர் கலைஞர்.

முப்பொழுதும் அவர் கற்பனையில்

வாழ்பவன் நான்.

முடிந்ததை முழங்குகிறேன்

கேட்டுக்கொள்வீர்.

 

கலைஞரை நினைப்பது இனிது.

கலைஞரை படிப்பது இனிது.

கலைஞரை பாடுவது இனிது.

கலைஞரை பேசுவது  இனிது.

கலைஞர் முழங்கியதை

முழங்குவது அதனினும் இனிது.

 

கலைஞர் முழங்கியதை முழங்கியதால் பலர்

பேச்சாளர் ஆனார்கள்.

 

கலைஞர் முழங்கியதை முழங்கியதால் பலர்

அரசியல்வாதி ஆனார்கள்.

 

கலைஞர் முழங்கியதை முழங்குவதால் நானும்

பலரை போல கவிஞர் ஆகிறேன்.

 

2

ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்தச் சொன்னால்

நான் இப்படி சொல்வேன்...

 

1 ஒன்றே குலம் - மனித குலம்.

2 இருமொழிக் கொள்கை.

3 மூன்று முன்னோடிகள்

- டி.எம் நாயர், தியாகராயர், நடேசனார்.

4 தலைவர்கள்

- பெரியார், அண்ணா, கலைஞர், இப்போது ஸ்டாலின்.

5 முழக்கங்கள்..

6வது முறை இப்போது பகுத்தறிவாளர் ஆட்சி.

 

இதில்….

5 முழக்கங்கள் அனைத்தும்

கலைஞரின் விளக்கங்கள்.

அதில் 2ம் முழக்கம்...

திராவிடத்தின் விளக்கம்.

 

ஆதிக்கமற்ற சமுதாயம் என்பதுதான்

திராவிடக் கொள்கை.

அதை அமைத்தே தீர்வதுதான்

அக்கொள்கையின் எல்கை.

 

ஆதிக்கத்தால் என்ன கேடு…?

யாருக்கு கேடு?

 

ஆதிக்கம் என்பது

ஆணவப்போக்கு.

அறிவுகொண்டு முடியாதவனின்

கையாளாகாத கொள்கை. 

  

3

ஆணாதிக்கம்

பெண்மைக்கு கேடு.

 

வர்க்க ஆதிக்கம்

சமத்துவ கேடு.

 

சாதி ஆதிக்கம்,

சமூகக் கேடு.

 

மத ஆதிக்கம்

அறிவுக் கேடு.

 

மொழி ஆதிக்கம்

இனத்திற்கு கேடு.

 

வடவர் ஆதிக்கம்,

நம் வாழ்வுக்கு கேடு.

 

ஆக.! ஆதிக்கம் என்பது

மானுடக் கேடு.

 

4

என்னென்ன வழிகளில்

ஆதிக்கம் இருந்தது?.

 

கட்டை விரலோ? தலையோ?

காணிக்கையாக கேட்ட

காலம் ஒன்றிருந்தது.

 

இன்னார் படிக்க,

இன்னார் உழைக்க,

எவரோ உரைத்த

சட்டம் ஒன்றிருந்தது.

 

சத்தான தமிழ் உயிரோடிருக்கையில்

செத்த மொழிக்கு

சிங்காரம் அன்று இருந்தது.

அக்கிரமம் வடியும்

அக்கார வடிசில்,

ஆதிக்கபுரிகளாய்

அக்ரஹாரங்கள் இருந்தன.

 

அரசு வேலைகள்,

அதிகார அரசியல்,

அனைத்திலும்

ஆரியர் ஆதிக்கம்

அளவில்லாமல் இருந்தது.

 

திக்கற்று நின்ற தமிழருக்கு

தீர்வு கண்டது

திராவிட இயக்கம்.

 

நிற்கதியாய் நின்ற தமிழருக்கு

நிம்மதியாக வந்தது

திராவிட இயக்கம்.

 

அதில் பார்போற்றும்

பகலவனாக நம் தந்தை வந்தார்.

நம்மை தோளேற்றும்

தோழராக பெரியார் வந்தார்(2)

 

அவரது பூகம்ப பேச்சில்

அக்கிரஹாரம் முதலில்

ஆட்டம் கண்டது.

 

அவர் பேரறிவின் உச்சத்தால்..

ஓரவஞ்சகம் செய்தோர்

ஓரமாக நின்றனர்.

 

 

5

பின் ஒரு நாள்..

ஆட்சிக்கட்டிலில் நம்மை ஏற்றினார்

நம் அண்ணா.

 

ஆட்சிக்கட்டிலில் ஏறினாலும் அதிகாரம்

ஏறிற்றா?

அம்மட்டும் தீர்ந்ததா ஆதிக்கம்..

 

தீராத ஆதிக்கத்தால்..

உதித்ததுதான் இந்த முழக்கம்.

 

ஒவ்வொரு முறையும்

கலைஞர் முழங்கினார்..

ஒவ்வொரு முறையும்

ஆதிக்கம் தளர்ந்தது..

 

கலைஞர் முழங்கினார்..

ஆட்சிக்கட்டிலில் ஆரிய ஆதிக்கம் தகர்ந்தது.

 

கலைஞர் முழங்கினார்..

தலைமை செயகத்தில் நம்மவர் புழங்கினர்.

 

கலைஞர் முழங்கினார்..

நீதித்துறையில் நம் நீதிபதி முழங்கினார்.

 

கலைஞர் முழங்கினார்..

பெண்கள் உரிமை பெற்றனர்.

 

கலைஞர் முழங்கினார்..

ஒடுக்கப்பட்டோர் கை ஓங்கியது.

 

கலைஞர் முழங்கினார்..

பிற்படுத்தப்பட்டோர் முன்னேறி உயர்ந்தனர்.

 

கலைஞர் முழங்கினார்..

வெறுங்கால்கள் செருப்பு கால்கள் ஆனது.

 

ஜாட்ஜ் கோட்டை முதல் சம்மட்டிபுரம் வரை

கலைஞர் முழங்க..முழங்க..

ஆதிக்கத்தின் தலையில் சம்மட்டி விழுந்தது.

 

 

6

அவ்வளவுதானா? ஆதிக்கம்..

அத்தனையும் தகர்ந்ததா என்றால்

இன்னும் இல்லை.

 

ஆதிக்கம்….அப்படி ஒன்றும் சளைத்ததுவும் இல்லை,

வெட்ட வெட்ட தளைத்திடும் களை அது,

தலை வெட்டினாலும் முண்டமாய் அலையும் பேய் அது.

 

தலை வெட்ட வெட்ட

இந்தி திணிப்பு இன்னும் வளர்கிறது..

களை வெட்ட வெட்ட

நீட் தேர்வு தொல்லை தொடர்கிறது..

 

ஆனாலும் கலைஞரின் முழக்கம்

ஓங்கி ஒலிக்கிறது.

 

ஆதிக்கமற்ற சமுதாயத்தை

அமைப்போம் அல்ல…

அமைத்தே தீருவோம் என்ற

அழுத்தம் தொடர்கிறது.

 

இன்னொருமுறை முழங்கி

இத்துடன் முடிக்கிறேன்…

 

ஆதிக்கமற்ற சமுதாயம்

அமைத்தே தீருவோம்.

 

தம்பி பிரபு

மதுரை



No comments:

Post a Comment