Sunday 31 October 2021

Becoming (நூல் விமர்சனம்) - ராஜராஜன் ஆர்.ஜெ

 Becoming (நூல் விமர்சனம்) - ராஜராஜன் ஆர்.ஜெ

மெரிக்காவின் முன்னாள் First Lady மிச்சல் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறான “Becoming” நூலை அவரது குரலிலேயே முழுமையாக கேட்டு முடித்தேன்.

மிக நேர்மையான எழுத்து. புத்தகத்தை மூன்று பகுதியாக பிரிக்கிறார். 
Becoming Me,

Becoming Us,

Becoming More என்ற தலைப்புகளில் அவரது வாழ்க்கையை பிரித்து எழுதி இருக்கிறார்.

மிச்சல் ராபின்சன், அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநகரின் தெற்கு பகுதியை சேர்ந்தவர். அவரது குடும்பத்தை குறித்து எழுதுகையில், அவரது தாத்தா, பாட்டி அமெரிக்காவில் நடந்த அடிமைமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றுக் குறிப்பிடுகிறார். அவரது தந்தை பிரேசர் ராபின்சன்,  தாய் மேரியான் இருவரும் மிச்சலையும், அவரது அண்ணன் கிரேக்கையும் மிகவும் சுதந்திரமாக வளர்க்கிறார்கள். அவர்களை “வளர்ந்தவர்களாகவே” நடத்துகிறார்கள். எதைக்குறித்தும் பேசும் சுதந்திரம் அவர்கள் வீட்டில் இருக்கிறது. அவரது தந்தை Multiple sclerosis என்னும் நோயை பொருட்படுத்தாமல் பல காலமாக வாழ்கிறார். 

அமெரிக்காவின் எல்லா கறுப்பின குடும்பங்கள் போலவும், நிறவெறி என்றால் என்னவென்பதை உணர்ந்தே மிச்சல் வளர்கிறார். 1969 ஆம் ஆண்டு, மிச்சல் Kinder garden ல் படிக்கிறார். அன்றைய நாள், அனைத்து குழந்தைகளையும் ஒரு அட்டையில் எழுதி வைத்திருக்கும் நிறத்தை காட்டி, அது எந்த நிறம் என்று சொல்லச் சொல்கிறார்கள். மிச்சல் Black, Orange, Purple எனச் சொல்லி விட்டு White என்ற சொல்லை பார்க்கிறார். அவரால் பேச முடியவில்லை. அவரது டீச்சர் உட்கார சொல்லி விடுகிறார்.

இந்தக் குழந்தை தான் பின்னாளில் “White house” என்று சொல்லப்படும் வெள்ளை மாளிகையில் குடியேறினார் என்பது வரலாறு.

மிச்சலின் அண்ணன், கிரேக் ஒரு நல்ல கூடைப்பந்து வீரர். அவருக்கு Princeton University யில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சிறுவயதில் இருந்தே தன் அண்ணனை ரோல் மாடலாக கொண்டிருக்கும் மிச்சல், தானும் Princeton University ல் படிக்கப் போவதாக சொல்கிறார். அப்போது, அவரிடம் “நீ பிரின்ஸ்டன் போகும் அளவுக்கான அறிவாளி கிடையாது” என்றுச் சொல்கிறார்கள். சொன்னவர்களின் வாக்கை பொய்யாக்க மிச்சல் உழைக்கிறார். படிக்கிறார். Princeton University யில் சேர்ந்து சட்டம் படித்து முடிக்கிறார்!

கல்வி தான் நம்மை உயர்த்தும் ஏணி என்பதை மிச்சல் ஆணித்தரமாக பல இடங்களில் பதிவு செய்கிறார்! 

மிச்சலுக்கு சில ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், மிச்சல் தன் வாழ்க்கை பாதையில் முன்னேறுவதில் கவனமாக இருக்கிறார். 

படித்து முடித்து விட்டு, ஒரு கார்ப்பரெட் கம்பெனியில் வேலைப் பார்க்கிறார். அப்போது தான் பராக் ஓபாமா மிச்சலின் கஸ்டமராக அறிமுகம் ஆகிறார்.

பராக் ஓபாமாவின் பின்னணி என்னவென்றால், அவரது தந்தை Kenya நாட்டை சேர்ந்தவர். அவரது தாய் Hawaii ஐ சேர்ந்த ஒரு வெள்ளைப் பெண்மணி. இருவரும் திருமணம் ஆகி சில காலங்களில் பிரிந்துவிடுகிறார்கள். பராக் தன் தந்தையை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறார். பராக்கின் அம்மா, இந்தோனேசியாவை சேர்ந்த இன்னொருவரை மணக்கிறார். பராக் Hawaii ல் இருக்கும் தனது தாத்தா பாட்டி வீட்டில் வளர்கிறார். நிறைய புத்தகங்களை வாசிக்கிறார். உலகை மாற்ற வேண்டும் என்கிற எண்ணமுடைய தீவிர கொள்கை வாதியாக வளர்கிறார்.

பராக் Harvard University யில் மேற்படிப்பு படிக்கச் செல்கிறார். அதற்கு முன்பு நிறைய சமூகப் பணிகளை சர்ச்சுகள் மூலம் செய்கிறார்.

பராக்கிற்கு மிச்சலை பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். பிறகு அது காதலாக மாறுகிறது. பராக் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். மிச்சலும் ஒத்துக்கொள்கிறார். மிச்சலின் கண்டிப்பான குணம், தனக்கு பிடித்ததாகவும், அது தன்னை நேர்மையாக இருக்க வைப்பதாகவும் பராக் சொல்கிறார்.

மிச்சலின் அண்ணன் கிரேக், அவள் கல்யாணமே செய்யமாட்டாள் என்று நாங்கள் நினைத்தோம் என்கிறார். இப்படியாக பராக் - மிச்சல் திருமணம் நடந்தேறுகிறது. பராக் படித்து முடித்ததும் மிச்சல் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறார்.

மிச்சலின் தந்தை நெடுநாள் உடல் பி்ரச்சனையால் இறக்கிறார். மிச்சலின் உயிர் தோழி சுசேனும் அடுத்தடுத்து இறக்கிறார்கள். சுசேன், வாழ்க்கையை கொண்டாடும் ஒரு பெண்மணியாக இருக்கிறார். ஆனால், 26 வயதில் கேன்சரால் இறக்கிறார். இந்த இரண்டு இறப்புகளும் மிச்சலை வெகுவாக பாதிக்கிறது. 

பராக் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அரசியல் மீது மிச்சலுக்கு  நல்லக் கருத்தில்லை. இருப்பினும், பராக்கின் இலட்சியங்களை புரிந்த காதலியாக அவரது முடிவை ஏற்கிறார். அவருடன் வீடு வீடாக ஏறி இறங்கி வாக்கு சேகரிக்கிறார். பராக் நினைத்திருந்தால் அவரது ஹார்வெர்ட் படிப்புக்கு மில்லியனில் சம்பாதிக்கலாம். ஆனால், அவர் தனது கொள்கைக்காக வாழ்பவர். இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையுடன் இருப்பவர். அந்த எண்ணத்தற்கு மிச்சல் எப்போதும் துணையாக இருக்கிறார்.

ஆனால், இன்னொரு பக்கம், சிறுவயதில் இருந்து குழந்தைகளின் மீது மிச்சலுக்கு தனிப்பிரியம். தன் வீட்டில் நிறைய பார்பி பொம்மைகளை வளர்த்ததை சொல்கிறார். பராக்-மிச்சல் குழந்தை பேறுக்கு தயாராகிறார்கள். ஆனால், குழந்தை பேறு எளிதாக கிட்டவில்லை. மிச்சல் ஒரு ஊரிலும் பராக் ஒரு ஊரிலும் இருப்பதும்.. பராக்கின் அரசியல் பணியும் தான் இதற்கு காரணம் என்கிற கோபம் மிச்சலுக்கு வருகிறது. இருப்பினும், அவரவர் கனவுகளை புரிந்து நடக்கிறார்கள். 

பராக் - மிச்சலுக்கு அறிவியலின் துணையுடன் IVF முறையில் அவர்களது முதல் குழந்தை மலியா பிறக்கிறார். பராக்கை ஒரு மிகச்சிறந்த தந்தை என்கிறார் மிச்சல். தனக்கு கிடைக்காத தந்தையின் பாசத்தையும், வழிகாட்டுதலையும் தன் பிள்ளைகளுக்கு பராக் தருகிறார்.

பராக் இல்லியானிஸ் மாகாணத்தின் செனட்டராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவரது தாய் கேன்ரசால் இறந்துவிடுகிறார். பராக் அரசியலுக்குள் நுழைந்த போதே, அவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்துவிடுகிறது. ஆனால், அவர் பராக்கிடம் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன். என் உடல்நிலையை காரணம் காட்டி, நீ உன் வாழ்வின் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடாதே என்கிறார். அது தான் பராக்கை செனட்டர் பதவிக்கு போட்டியிட வைக்கிறது. ஆனால், பராக் தன் அரசியல் பயணத்தின் முதல் வெற்றியை பெற்ற போது அவர் அம்மா உயிருடன் இல்லை. அவரது தந்தையும் அப்போது உயிருடன் இல்லை. மிச்சலின் குடும்பம் பராக்கை அரவணைக்கிறது. (பின்னாளில் பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில், தேர்தல் முடிவுகளை பதட்டத்தோடு காணும் ஒரு புகைப்படம் இருக்கிறது. அதில் பராக்கின் பக்கத்தில் மிச்சலின் தாயார் மேரியான் அமர்ந்து அவரது தோளின் மேல் வாஞ்சையுடன் கை வைத்திருப்பார். இந்த நிகழ்வையும் மிச்சல் இந்தப் புத்தகத்தில் விவரித்திருப்பார்)

பராக் அரசியலில் கடுமையாக உழைக்கிறார்.மிச்சலும் அவரது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  எப்போதாவது கிடைக்கும் ஓய்வில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கிறார்கள். ஒருமுறை, அவர்கள் குடும்பமாக Hawaii சென்றிருக்கிறார்கள். மலியாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். எல்லாம் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த வேளையில், பராக்கிற்கு ஒரு செய்தி வருகிறது. அவர் செனட்டராக பாடுபட்டுக் கொண்டு வந்த “Gun control act” க்கு எதிராக வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. அது நடக்கையில் பராக் அங்கே இருக்க வேண்டும் என்கிறார்கள். அது பராக்கிற்கும் முக்கியமாக தெரிகிறது. அவர் அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயுத்தமாகிறார். அப்போது, ஒரு வயதான மலியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. என்ன பிரச்சனை என்றுத்தெரியவில்லை. மிச்சல் எழுதுகிறார், “பராக் ஒன்றும் பேச முடியாமல் உட்கார்ந்து இருக்கிறார். ஒருபுறம் தான் கொண்டு வந்த “Gun control act” தோற்கடிக்கப்படும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், தன் ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் அந்த சூழ்நிலையில், பராக் நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன். நீ உடனே கிளம்பு என்று சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால், நான் அதைச்செய்யவில்லை. ஏனெனில், மலியாவுக்கு என்ன செய்கிறது எனக்குத் தெரியவில்லை. தனியாக என்னால் சமாளிக்க முடியும் என்றும் தோன்றவில்லை” என்கிறார்.

பராக், அவரது கட்சியினரிடம் அழைத்து, தான் வரவில்லை என்கிறார். அன்று அவர் மிச்சலுடன் தன் குழந்தையை பார்த்துக்கொள்கிறார்.

அந்த “Gun control act” ஆறு ஓட்டில் தோற்கடிக்கப்படுகிறது. பராக் கடுமையாக கட்சியினராலும், ஊடகத்தினாலும் விமர்ச்சிக்க படுகிறார். ஆறு ஓட்டில் தோல்வி. பராக் வந்திருந்தாலும் ஒன்றும் மாறியிருக்காதே? ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள்? என்று மிச்சலுக்கு புரியவில்லை. பராக்கின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த சம்பவம் ஒரு தடையாகிவிடுமோ எனப்பயப்படுகிறார். ஆனால், பராக், தனது நிலைப்பாட்டை விளக்கிச்சொல்கிறார். தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவர் தங்குவதாக முடிவெடுத்ததை சரி என்று வாதிடுகிறார். ஒரு விசயத்தை நாம் இங்கே கவனிக்க வேண்டும், மிச்சல் இந்த விசயம் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பராக் ஓபாமாவின் “A promised Land” எனும் நூலையும் நான் வாசித்து வருகிறேன். அதில் ஓரிரு வரிகளில் இந்த விசயத்தை பராக் கடந்து செல்கிறார். இதை வைத்தே, நாம் இவர்கள் இருவருக்கும் உள்ள குணநலன்களை புரிந்துக்கொள்ளலாம். 

மிச்சல் ஒரு எளிமையாக பெண்மணி. எது சரி? எது தவறு? என்பதை எளிதாக சொல்லக்கூடிய ஒரு மனிதர். அவருக்கு பராக் இந்த விசயத்தில் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பராக் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக, மனித இயல்புகளை புரிந்துக்கொண்டவராக இந்த விசயத்தை எதிர்கொள்கிறார். எத்தனை முறை அடிப்பட்டாலும், அவர் அதை வெளிக்காட்டாமல், மீண்டும் அன்பைக் காட்டும் “நேர்மறை” எண்ணம் கொண்டவராக இருக்கிறார் என்பதே மிச்சலின் பார்வையாகவும் இருக்கிறது. இது தான் பராக்கை வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கும் நகர்த்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக பராக் ஓபாமா அறிவிக்கிறார். மிச்சலுக்கு இந்த நாடு, ஒரு கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்துவிட்டதா? என்கிற கேள்வி இருக்கிறது. ஆனால், பராக்கின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை. அவரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் மிச்சலுக்கு இருக்கிறது. 

பராக்கை விட பெரிய அரசியல்வாதிகள் போட்டியில் இருக்கிறார்கள். ஹிலாரி கிளின்டன், ஜோ பைடன் போன்ற பெரிய தலைவர்களை பராக் ஓபாமா தனது “நேர்மறை அரசியலால்” வெல்கிறார். அவரது பேச்சுக்கள் அமெரிக்கர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது. விளைவு, அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக “பராக் ஒபாமா” தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

முதல் கறுப்பின “First lady” யாக மிச்சல் ஓபாமா இருக்கிறார். புத்தகத்தின் கடைசி பாகத்தில், அமெரிக்க வெள்ளை மாளிகை வாழ்க்கை, அங்கே மிச்சல் செய்த மாற்றங்கள், குழந்தைகளுக்கான சத்துணவு சட்டத்தை கொண்டு வந்ததில் மிச்சலின் பங்கு, இந்த பெரியா மாற்றம் தன் குடும்பத்தினரை, குழந்தைகளை எப்படி பாதித்தது என்பது குறித்து, பராக் எப்படி ஒரு நாட்டின் தலைவராகவும், வீட்டின் தலைவராகவும் நடந்துக்கொண்டார் என்பது குறித்து, இங்கிலாந்து ராணியை சந்தித்தது, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது என பல விசயங்களை மிச்சல் பகிர்ந்திருக்கிறார்!

மலியா ஓபாமாவின் Prom night ல் அவரை ஒரு இளைஞன் அழைத்துச்சென்ற அனுபவத்தை குறித்து  எழுதியிருக்கிறார். எப்படி தானும் தன் கணவனும் வெள்ளை மாளிகையில் இருந்து இறங்கி வந்து, தங்களது மகளை அனுப்பி வைத்தோம் என்று எழுதியிருப்பது உண்மையில் ஆச்சரியத்தை கொடுத்தது.

அமெரிக்க ஜனாதிபதியின் குழந்தைகள் என்கிற எண்ணத்தைவிட சிறந்த மனிதர்களின் குழந்தைகளாக அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். உங்களது படுக்கையை நீங்கள் தான் அமைத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்களை செய்ய வைக்கக்கூடாது என்று அவர் சொன்னது ஒரு எடுத்துக்காட்டு. புகழ் வெளிச்சமும், அதிகார வெளிச்சமும் அதிகமாக தங்கள் குழந்தைகள் மேல் விழாத வகையில் இருவரும் பார்த்துக்கொண்டார்கள்!

மிச்சலைப் பொறுத்தவரை, தான் ஒரு “கோபக்கார கறுப்பின பெண்ணாக - An angry black women” பார்க்கப்படுவதை சொல்கிறார். ஒருக்கட்டத்தில் தான் மனதில் பட்டதை பேசுவதால் எந்தளவுக்கு Bully செய்யப்பட்டேன். Troll செய்யப்பட்டேன் என்பதை எழுதுகிறார். Teleprompter வைத்து பேச வேண்டிய கட்டாயத்திற்கு தான் தள்ளப்பட்டத்தை சொல்கிறார். தான் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், இறுதியாக தனது தோலின் நிறமும், பாலினமும் தான் பலரது கண்களுக்கு தெரிகிறது என்பதையும் பகிர்கிறார். தனது சிறிய சறுக்கலும் ஒட்டுமொத்த கறுப்பின மக்களின் சறுக்கலாக கட்டமைக்கப்படும் என்பதை தன்னியல்பாக இருவருமே கொண்டிருக்கிறார்கள்!

மிச்சலையும், பராக்கையும் இயக்குவது ஒரு கொள்கை தான். இதை இருவருமே அவரவர் புத்தகத்தில் பதிவு செய்கிறார்கள். 

You give up or you work for the change. “Whats better for us? Do we settle with the world as it is, or do we work the world as it should be?”

இருவருமே தங்களது பாதையை “இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும்” என்கிற நிலைக்காக உழைத்தார்கள். உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்!

இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்களின் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல். எனக்கு தெரிந்த சிலருக்கு இந்த நூலை அன்பளிப்பாக கொடுக்க இருக்கிறேன்!

நன்றி!

- ராஜராஜன் ஆர்.ஜெ


No comments:

Post a Comment