பெரியாரே நீ பிறந்திருக்காவிட்டால்!! - கனிமொழி ம.வீ
கோமணத் துண்டு மட்டுமே
சொத்தாகி இருக்கும்
வார் கோலின் வரிகள்
முதுகில் நிலைத்திருக்கும்
முதுகுத் தண்டு
வளைந்தே போயிருக்கும்
நாசியின் சுவாசம் கூட
உத்தரவு கேட்டே சுவாசித்திருக்கும்
நடுநிசி பசி
வயிற்றைக் குத்தி கிழித்திருக்கும்
தாகத்தின் தடங்கள்
நீண்டு கொண்டிருந்திருக்கும்
உணர்வின் வெப்பம்
பிசுபிசுத்துப் போயிருக்கும்
நாக்கின் சுவடுகள்
மறைந்து தான் போயிருக்கும்
எங்கள் பாடல் ஓலமாக
மட்டுமே இருந்திருக்கும்
நட்சத்திரங்களை
தலைக்கு மேல் எண்ணிக்
கொண்டிருந்திருப்போம்
பாதங்களின் வலி
தொடர்ந்திருக்கும்
விக்கலின் ஓசை
மௌனித்திருக்காது
தொண்டைக் குழி
அச்சத்தில் நெளிந்து கொண்டேயிருந்திருக்கும்
தோலின் குருதி
கசிந்து கொண்டேயிருந்திருக்கும்
சோலைகளின் வறட்சி
ஆண்டலைகளின் இருப்பிடமாகியிருக்கும்
கண்களின் ஒளி
மங்கும் வரை இரவு
நீண்டு கொண்டே இருந்திருக்கும்
சொற்கோர்வை
நாணிக் கொண்டிருந்திருக்கும்
பெரியாரே நீ பிறந்திருக்காவிட்டால்!!
பாலையின் வெடிப்புகளாக இருந்திருக்கும்
எங்கள் வாழ்வு
நீ பிறந்தாய்
உன் சுவாசக் காற்று
எங்கள் சுவாசத்தில்
சுயமரியாதை சூடேற்றியது
எங்கள் கனத்த அமைதி
வெடித்துச் சிதறின
எங்களின் அழுகுரல்கள்
புன்னகை மத்தாப்புகளாயின
கால்கள் காலங்களின்
திசையறிந்து பயணித்தன
கைகளுக்கு உணர்வு வந்து
ஏடுகள் சுமந்தன
எங்கள் நித்திரைகள்
வைகறை பொழுதுகளாயின
அறமற்ற அற்பர்களின்
நாவின் பிதற்றல்
ஒடுங்கிக்கொண்டன
உன் குரல் கேட்டு
அத்திம்பேர் அம்மாமிகளின்
கொட்டங்கள் உன்
கேள்விக் கணைகளால்
சிதறுண்டன
எங்களின் முதுகுத்தண்டின்
வலியை நீக்கினாய்,
மூத்திரம் சொட்டு சொட்டாய்ப் போகும்
வலியைப் பொறுத்துக் கொண்டு;
உன் தாடி மயிரின்
நிழலும் நீங்கா
அச்சத்தை அவாள்களுக்கு
ஊட்டிக்கொண்டிருக்கிறது
எங்கள் வாழ்க்கைக்கு
உரமாக உன் வளமையை
இட்டாய்
நாங்கள் என்ன குருதிச்
சொந்தமா உனக்கு?
எங்கள் தன்மான
மிடுக்கின் அடித்தளமான
கொள்கைத்
தந்தையே
கடலின் ஆர்ப்பரிப்பை
ஏந்தி பயணிக்கிறோம்
உன் பெயரை உச்சரித்தபடி
உன் பெயர் உச்சரிப்பின்
ஓங்கிய ஒலி
மந்திர தந்திர
மூலவர்களை
இன்றும் அடித்து
நொறுக்கிக் கொண்டிருக்கிறது!
Sunday, 31 October 2021
பெரியாரே நீ பிறந்திருக்காவிட்டால்!! - கனிமொழி ம.வீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment