Sunday 31 October 2021

தியாகி வண்ணை கே.எஸ் . பாண்டியன்

 தியாகி வண்ணை கே.எஸ் . பாண்டியன்


ழக தோழரும் , இந்தி எதிர்ப்பு போராட்ட வீரருமாகிய வண்ணை  கே.எஸ்.பாண்டியன் அவர்கள் 1937 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.  வண்ணை கே.எஸ்.பாண்டியன்.அவர்கள் நமது கழக 

தலைவர் அறிஞர் அண்ணா கழகத்தை வண்ணாரப்பேட்டையில் 1949 ஆம் ஆண்டு 

ராபின்சன் பூங்காவில் துவங்கிய பொழுது அண்ணாவுடனும் மற்ற கழக முன்னணியருடனும் சேர்த்து முக்கிய பங்காற்றியவர் ஆவார்.அப்பொழுது மேடை எல்லாம் கிடையாது மாட்டு 

வண்டிகளை ஒன்றினைத்து மேடையாக்கி அதில் தலைவர்கள் ஏறி உரையாற்றுவார்கள். 

கழகம் வளர்த்து வரும்பொழுது அதன் வளர்ச்சியினால் பொறாமை கொண்ட மாற்று 

கட்சியினர் கழக தோழர்  வண்ணை கே. எஸ். பாண்டியன் 28/10/1952 அன்று வெளியில் 

சென்று வீட்டுற்கு வரும்பொழுது அவருடைய வீட்டில் வைத்து கண்ணில் மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்  மாபாவிகள்.


இந்த மாபாதக செயலை கண்டித்து கழகத்தலைவர் பேரறிஞர்  அண்ணா தம் திராவிட நாடு பத்திரிகையில் தலையங்கம்எழுதியுள்ளார்கள், மற்றும் வண்ணை கே. எஸ். பாண்டியன் 

பெயரில் மேற்கு கல்லறை சாலையில் 1962 ஆம் ஆண்டு சென்னை மேயர் அவர்கள் பூங்கா ஒன்றை திறந்து வைத்தார்.( கடந்த பத்தாண்டு ஆட்சியில் அது சீர்குலைக்கப்பட்டு விட்டது ). ஒருப் படிப்பகமும் நடத்தப்பட்டது. இன்றும் தியாகி வண்ணை கே. எஸ். பாண்டியன் 

வாரிசுகள் அதே திராவிட இயக்க பற்றுடன் வண்ணையில் அதே வீட்டில் வாழ்கிறார்கள் 

என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

வண்ணை தியாகி கே. எஸ். பாண்டியன் குடும்பத்தினர் 

இணைப்பில்  1) திராவிட நாடு இதழில் பேரறிஞர் அண்ணா கட்டுரை .

              2) திமுக வரலாறு புத்தக குறிப்புகள் 

              3) வண்ணை கே.எஸ்.பாண்டியன் புகைப்படம் .


ஆழமான குழியாம் ! - அண்ணாவின் கடிதம்


ழமான குழி! அறுபத்தேழாயிரம் அடி!

உள்ளத்தில் பட்டதை ஒளிக்காமல் சொல்கிறது கழகம்!

பலர் வாழச் சிலர் சாகலாம்!

கிளர்ச்சிகள் மூட்டிவிடப்படுவன அல்ல!

குழி பறிப்போன் குழியிலேயே வீழ்வான்!

தம்பி!


ஆழமான குழி; மிக மிக ஆழமான குழி - ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமல்ல, 67,000 அடி ஆழமான குழி தோண்டப்போகிறார்களாம், சொல்லிவிட்டார்கள்! எவ்வளவு கஷ்டம் பாவம், இவ்வளவு ஆழமான குழி தோண்ட என்று எண்ணும்போதே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.


பரிதாபம் காட்டுவது இருக்கட்டும். எதைப்பெற இவ்வளவு ஆழமான குழி தோண்டுகிறார்கள்? விஞ்ஞான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஏதாவது அரிய பொருள் அத்தனை அடி ஆழத்திலே புதையுண்டு கிடக்கிறது என்பதற்காகவா என்று கேட்கிறாயா! தம்பி! அதற்காக அல்ல. நமக்காக, கழகத்தைப் போட்டுப் புதைக்க!! 67,000 அடி ஆழக் குழி தோண்டிப் போட்டுப் புதைக்கப் போகிறோம், தி. மு. கழகத்தை 1967-ஆம் ஆண்டு என்று திருச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிலே பேசியிருக்கிறார்கள்.


என்ன செய்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் என்கிறார்கள், சமுதாய நலத் திட்டம் என்கிறார்கள், வட்டார வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள், இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் - நாட்டிலே ஏழை மக்கள் வாழ்விலே பாராட்டப்படத்தக்க விதமான முன்னேற்றம் எதையும் காணாததால் மனம் நொந்து நீ கேட்டிருக்கிறாய் பல முறை, என்னதான் செய்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்? என்ன செய்யப்போகிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்றெல்லாம். அவர்கள் கூறிவிட்டார்கள் திருச்சி மாநாட்டில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை; ஆழமான குழி தோண்டப்போவதாகச் சொல்லிவிட்டார்கள்; 67,000 அடி ஆழம்.


என்ன அண்ணா! நம்மைப் போட்டுப் புதைக்கக் குழி தோண்டப் போவதாக அவர்கள் பேசுகிறார்கள் அத்தனை ஆணவத்துடன்; அதைக் கேட்டு நீ பதறாமல் துடிக்காமல், மகிழ்ச்சியுடன் பேசுகிறாயே என்று கேட்கத் தோன்றும். நான் பதறாததற்கும் துடிக்காததற்கும் காரணம் இருக்கிறது.

67,000 அடி! கவனமிருக்கட்டும்! அத்தனை ஆழமான குழி! ஏன்? அவர்களுக்கு அவ்வளவு அச்சம், அத்தனை ஐயப்பாடு! சாதாரண ஆழமுள்ள குழி, ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி தோண்டினால் போதாது, அதிலே போட்டுப் புதைத்தால் பயனில்லை, மீண்டும் எழுந்து வந்துவிடக்கூடும், மிக அதிகமான ஆழம் தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறதே தம்பி! அவர்களுக்கு; அது எனக்கு நமது கழகம் எத்தனைப் பெரியது, எதிரிகளை எந்த அளவுக்கு அச்சப்படுத்தி வைத்திருக் கிறது என்பதை அறியச் செய்கிறது. அது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைக்கூடத் தருகிறது. தி. மு. கழகம் சாமான்ய மானதல்ல, இந்தியாவை பத்தொன்பது ஆண்டுகளாகக் கட்டி ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்த கழகத்தைப் புதைத்துக் குழியில் போடவேண்டுமென்றால், ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி போதாது, 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது அவர்களின் பேச்சு! கழகத்தின் வளர்ச்சியின் அளவை நாடு உணர்ந்து கொள்ளவும் அந்தப் பேச்சு துணை செய்கிறது.


கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய், கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய்,

கழகமா? பத்துப் பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய்,

கழகமா! கொஞ்சம் துள்ளுகிறது, நாலு நாளில் தன்னாலே அடங்கிவிடும் என்று பேசிய காலம் போய்,

கழகமா? அது உட் குழப்பத்தாலே உருக்குலைந்து போய்விட்டது என்று பேசிய காலம் போய்,

கழகமா? அது உடைபட்டுப் போய்விட்டதே! இப்போது அதிலே என்ன இருக்கிறது!! என்று பேசிய காலம் போய்,

கழகமா? நாங்கள் மூச்சுவிட்டால் காற்றிலே பறக்காதா என்று ஏளனம் செய்த காலம் போய்,

கழகமா? எங்கள் கோபப் பார்வையாலேயே அதனைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட மாட்டோமா? என்று பேசிய காலம் போய்,

கழகமா? எங்களுக்கு அது ஒரு பொருட்டாகுமா! என்று அலட்சியம் காட்டிப் பேசிய காலம் போய்,

கழகமா? அதை 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்டி அல்லவா புதைக்கப் போகிறோம் என்று பேசும் காலம் வந்திருக்கிறதே!


இது எதைக் காட்டுகிறது? கழகத்தை அலட்சியப் படுத்தியவர்கள், அது தன்னாலே உருக்குலைந்து போகும், உடைபட்டுப் போகும் என்று எண்ணினவர்கள், கழகம் சாமான்யமல்ல, அதைப் போட்டுப் புதைப்பதானாலும், சாதாரணக் குழி போதாது, மிக மிக ஆழமான குழி வேண்டும் என்று கூறிடவேண்டிய அளவுக்குக் கழகம் வளர்ந்து, அவர்களைக் கலங்கிடச் செய்கிறதே, அது தம்பி! எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியேகூடத் தருகிறது!

காலஞ் சென்ற சத்தியமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார், ஜஸ்டிஸ் கட்சியை 5,000 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேன் என்று.


இன்றைய காங்கிரஸ்காரர்கள் அவரை மிஞ்சி விட்டார்கள்; குழி தோண்டுவதில்! வாயால்! 67,000 அடி ஆழக் குழியாம்.

அவ்வளவு கடினமான வேலை செய்ய வேண்டும் என்றாகி விட்டது, கழகம் பெற்றுள்ள வளர்ச்சி.

ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - கோபம் கண்ணை மறைக்குமாமே, அதனால் என்று எண்ணுகிறேன் - 67,000 அடி ஆழக் குழிதோண்டிக் கழகத்தைப் புதைக்கத்தக்க வல்லமை உள்ளவர்களானால், இந்த வீரர்கள் கழகம் இந்த அளவு வளர்ந்ததே, என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஏன் கழக வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை?

கழகம் இவர்கள் கண்முன்பாகத்தானே வளர்ந்தது? வேறு எங்காவது ஓரிடத்திலே கட்டப்பட்டு இங்கு திடீரென ஒரு நாள் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்டதா? இல்லையே! இவர்கள் இப்போது இருப்பதுபோலவே அறிவாற்றலுடன், வீராவேச உணர்ச்சியுடன் இங்கேதான் இருந்துகொண்டிருந் தார்கள், நாம் வளர்ந்தபோது. ஏன் தடுக்க முடியவில்லை கழக வளர்ச்சியை? வளர்ச்சியைத் தடுத்திட முடிந்திருந்தால் இன்று இத்தனை ஆழமான குழி தேவைப்பட்டிருக்குமா? பாவம்! 67,000 அடி ஆழமல்லவா தோண்டப்போவதாகச் சொல்லுகிறார்கள். ஏன் இத்தனைக் கஷ்டம்? தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பார்களே, அந்தப் போக்கா?


இப்போது இருப்பதுபோலவே அவர்களிடம் எல்லா வல்லமையும் இருந்தது! பிரசாரம், பண பலம், அதிகார பலம் எல்லாம்! இப்போது இருப்பதுபோலவே அப்போதும் இவர்களே ஆளவந்தார்கள்! இருந்தும்? கழக வளர்ச்சியைத் தடுத்திட முடிந்ததா? இல்லையே! கழகம் வளர்ந்து வளர்ந்து, இவர்களுக்கு மிரட்சி அதிகமாகி, ஆழமான குழி! மிக ஆழமான குழி! என்றல்லவா அலறுகிறார்கள்.


இதன் காரணமாகத்தான், காங்கிரசாட்சியினர் கழகத்தைப் புதைக்க வேண்டும், அதற்காக ஆழக் குழி தோண்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் - என்று பேசிக்கொள்ள மாட்டார்களா?


இது அக்கிரமம்! நமக்காக, நாட்டுக்காகப் பாடுபடும் கழகத்தை நாம் காத்திட வேண்டும், துணை நிற்க வேண்டும் என்று பொது மக்கள் எண்ணிடத்தான் செய்வார்கள்.

மக்களுக்கு வயிறாரச் சோறு கிடைக்க வழி செய்திடுக! - என்று கேட்டிடும் கழகத்தை, ஏழை மக்களே! எலி தின்று உயிர் பிழைத்துக்கொள்க என்று பேசிடும் காங்கிரஸ் ஒழித்திட முனைவதா? அதை நாம் பார்த்துக்கொண்டிருப்பதா? நமக்காக வாதாடும் கழகத்தை, நம்மை வதைத்து வரும் வன்கணாளர் குழி தோண்டிப் புதைப்போம் என்று கிளம்புவதா? நாம் வாளாயிருப்பதா - என்று பொது மக்கள் எப்படி எண்ணிடாமலிருந்திட முடியும்,

காங்கிரசாட்சியினர் இப்போதுபோல இறுமாந்து பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களின் முயற்சி பலன் தராமல், கழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்ததன் காரணமே இதுதான் - பொது மக்களின் நல்லாதரவு!


தம்பி! அவர்கள் குழி தோண்டுகிற வேலையிலே இருக்கட்டும் - ஆழமான குழி!!

நாம், மக்களிடம் சென்று உண்மை நிலைமையை எடுத்துக் கூறிடும் பணியிலேயே நம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும்.


தங்கள் ஆதிக்கத்துக்கு உலை வைக்கிறதே கழகம் என்ற எரிச்சலில், காங்கிரசார் ஆத்திரம் கொள்ளத்தான் செய்வார்கள்; கழி சுழற்றுவார்கள், விழி பெயர்த்திடுவேன் என்பார்கள், குழி தோண்டிப் புதைப்பேன் என்பார்கள்.


பாவிப் பயல்! இன்னும் தூங்கவில்லையே என்று நள்ளிரவு கன்னம் வைத்திட வருபவன், வீட்டுக்குடையானைச் சபித்திடத்தான் செய்வான்.


சனியன் இன்னும் வெளியே போய்த் தொலைக்க வில்லையே என்று கள்ளக் காதலனுக்காக ஏங்கிடும் நாயகி கை பிசைந்துகொள்கிறாள் என்று கதையில் எழுதுகிறார்கள் அல்லவா?

அதுபோல, இவர்கள் ஓயமாட்டேன் என்கிறார்களே! விடாது எதிர்த்து வருகிறார்களே! படிப்படியாக முன்னேறு கிறார்களே! வளர்ச்சி இருந்தபடி இருக்கிறதே! - என்று எண்ணி மனம் புழுங்குகிறார்கள், அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும், கழகத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று.


அவர்களின் ஆத்திரப் பேச்சு, நமது பணி ஆற்றலுடன் நடந்து வருகிறது என்பதற்குச் சான்றளிக்கிறது!


நாம் ஓயாமல் உழைத்து வருகிறோம் என்பதுடன், மேலும் உழைத்திட உறுதியும் உற்சாகமும் இருக்கிறது என்பதை நாம் உணருவதற்கு அவர்களின் உருட்டல் மிரட்டல் பேச்சு நமக்குப் பயன்படுகிறது.

அவர்கள் குழி தோண்டியபடி இருக்கட்டும், நாம் மக்களுக்கு நல்வழி எது என்பதனை எடுத்துக் காட்டியபடி இருப்போம்.


அவர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோகக்கூடாது என்று பதறுகிறார்கள், அதனால் அவர்கள் பேச்சிலே ஆத்திரம் கொந்தளிக்கிறது.


நாம் மக்களுக்கு ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் பணியினை மேற்கொண்டிருக்கிறோம். நமது பணி பயனற்றது, நமது முறை தெளிவற்றது, நமது ஆற்றல் தரமற்றது என்றால் நம்மைப் பற்றிய நினைப்பே ஆளவந்தார்களுக்கு எழாது.

இன்றோ நம்மைப் பற்றிய நினைப்பின்றி வேறு எந்த நினைப்பும் அவர்களுக்கு எழுவதில்லை.


எங்குச் சென்றாலும், எதைச் செய்துகொண்டிருந்தாலும், அவர்களின் மனத்திலே நம்மைப் பற்றியே நினைப்பு!


இதைச் செய்தால் என்ன சொல்லுவார்களோ, அதைச் செய்தால் என்ன செய்வார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்து வாட்டுகிறது.


அதனால்தான், சுற்றிலும் சீமான்கள் வீற்றிருக்க இலட்சங்கள் காணிக்கையாகக் கிடைத்திருக்க, பத்திரிகைகள் புகழ் பாடி நின்றிருக்க, கொலுவிருக்கும் நிலையிலும் அவர்களுக்கு 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்ட வேண்டும் என்ற "அபாரமான' திட்டத்தின்மீது நாட்டம் செல்லுகிறது.


நம்மை ஒழிக்க அவர்கள் மேற்கொண்ட முன்னைய திட்டங்களைப்போலவே இந்தத் திட்டமும், பயனற்றதாகிப் போகும்.


முன்பு அவர்கள் நம்மை ஒழிக்கத் திட்டம் போட்டபோது இருந்ததைவிட இன்று அவர்கள்மீது மக்கள் கொண்டுள்ள கோபம் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது.


ஏதோ சோற்றுக்குக் குறைவில்லை - என்ற நிலையில் மக்கள் முன்பு இருந்தார்கள்.

இன்று, சோறு! சோறு! என்று ஏன் கதறுகிறீர்கள்? கிடைத்ததை வயிற்றில் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஆளவந்தார்கள் பேசிடக் கேட்கும் நிலையில் உள்ளனர்.

மக்கள் அடைந்திருக்கிற கோபம், கசப்பு, கொந்தளிப்பு ஒவ்வொரு நாளும் தெரிந்தபடி இருக்கிறதே, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள், வேலை நிறுத்தங்கள் என்பவை மூலம்.


சமூகத்தில் எந்தத் துறையினராவது மனக்கசப்பின்றி, குமுறலின்றி இருக்கின்றனரா?

கிளர்ச்சி என்றாலே அது வெறும் ஆலைத் தொழிலாளி செய்வது, நமக்கு அது ஒத்து வராது என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களெல்லாம் இன்று தத்தமது அமைப்புகள் மூலம், கிளர்ச்சி நடத்திடக் காண்கிறோமே.


சர்க்கார் அலுவலகப் பணியாளர்கள் சீறி எழுவதைக் காண்கிறோம்.

பாங்குகளில் ஊதியம் பெறுவோர் கிளர்ந்தெழுவதைப் பார்க்கிறோம்.

ஆறாத் துயரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் "ஆர்ப்பாட்ட அணிவகுப்பு' நடத்திடக் காண்கிறோம்.

யார் இந்த ஆட்சியிலே திருப்தியுடன் இருந்திட முடிகிறது? நாடே எமது பக்கம்! என்ற நாப்பறை ஒலித்துக்காட்டு கிறார்கள் ஆளவந்தார்கள்.


இல்லை! இல்லை! - என்ற முழக்கம் எழுப்புகின்றனர் ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும்.

துப்பாக்கி பேசுகிறது! பிணம் விழுகிறது! பீதிகொண்டு மக்கள் ஓடிடக்கூட மறுக்கிறார்கள்.

வீரன் வீழ்ந்தான்! வீரம் வீழ்ந்துபடாது! ஒருவன் மாண்டான்! மற்றவர் மாண்டிடாதிருக்குமட்டும் அறப்போர் நடந்திடும்!! - என்றல்லவா முழக்கம் எழுப்புகிறார்கள்.


போலீஸ் போதவில்லை! இராணுவம் வரவழைக்கப்படுகிறது! ஏன்? கொந்தளிப்பு அடங்க மறுக்கிறது.

சாகவேண்டி நேரிட்டுவிடுமோ என்ற பயம்கூட இன்று மக்களிடம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது; குறைந்து கொண்டும் வருகிறது.

பலர் வாழச் சிலர் சாகலாம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட தத்துவமாகிவிட்டது.

அந்தத் தத்துவம் நடைமுறைக்கே வந்துவிட்டதோ என்று சொல்லத்தக்க நிலைமைகள் உருவாகிக்கொண்டு வருகின்றன.


தம்பி! ஒன்று கூறுவர் காங்கிரசார் கூறுகின்றனர்; இந்தக் கிளர்ச்சிகளை எதிர்க் கட்சிகள் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றன - என்று.


எதிர்க் கட்சிகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; மக்கள் என்ன ஏமாளிகளா, அவர்கள் அறியார்களா, கிளர்ச்சியை ஒடுக்கத் தடியடி நடக்கும், துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதனை? தெரிந்தும் கிளர்ச்சியில் ஏன் ஈடுபடுகிறார்கள்?


அவர்கள் மனத்திலே கொந்தளிப்பு இருக்கிறது. ஆகவே கிளர்ச்சி செய்திடும் துணிவு தன்னாலே பிறக்கிறது.


எந்த எதிர்க் கட்சியும், தடியடிபட வருவீர்! துப்பாக்கிச் சூட்டுக்குப் ப-யாக வருவீர் என்று மக்களை அழைத்து வர முடியாது. ஆனால், நடைபெறும் கிளர்ச்சிகள், ஆட்சியின் அலங் கோலத்தின் விளைவு என்பதை உணராதவர்கள் எதிர்க் கட்சிகள்மீது பழி போடுகின்றனர்.

இதனை முட்டாள்தனம் என்று கண்டித்திருக்கிறார் ஒரு பேரறிவாளர்; இன்றைய ஆட்சியாளர்களும் போற்றித் தீர வேண்டிய பேரறிவாளர்.


இலட்சியங்களுக்காகவும் பொருளாதார நிலை காரணமாகவும், புரட்சிகள் ஏற்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள முட்டாள்தனமானவர்கள், தங்கள் எண்ணத்தோடு ஒட்டிவராத எதனையும் காண இயலாத கருத்துக் குருடர்கள் இந்தப் புரட்சிகளெல்லாம் கிளர்ச்சிகளால் விளைகின்றன என்று எண்ணிக்கொள்கிறார்கள். உள்ள நிலைமையில் திருப்தி ஏற்படாமல், மாறுதலை விரும்பி அதற்கான வேலை செய்பவர்களே கிளர்ச்சிக்காரர்கள்! ஆனால், ஆயிரம் ஆயிரம் மக்கள் ஒரு கிளர்ச்சிக்காரன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக வாழ விரும்பு பவர்கள், இருப்பதை இழந்துவிட விரும்பமாட்டார்கள். ஆனால், பொருளாதார நிலைமை கெட்டு, அன்றாட வாழ்க்கையில் நலிவு வளர்ந்து, வாழ்வே ஒரு சுமை என்று ஆகிப்போய்விடுமானால், வலிவற்றவர்களும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு விடுகிறார்கள்.


இன்று நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இந்த நிலைமைக்குத் துரத்தப்படுகின்றார்கள்! நடப்பது நடக்கட்டும்! - என்று துணிந்துவிடும் நிலைமைக்கு. இதை உணராமல், மக்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசி வருகின்றார்கள் ஆளவந்தார்கள்.


இவர்கள் கருத்துக் குருடர்கள், அறிவற்றவர்கள் என்று கண்டித்திருக்கிறார்.

யார்? பண்டித ஜவஹர்லால் நேருவேதான். அவர் எப்போதோ உணர்ச்சி வயப்பட்டுப் பேசிவிட்ட ஆவேசப் பேச்சு அல்ல; நாடு அறியட்டும், உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார்.

நேருவின் வாரிசுகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!!


Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, they do not want to risk losing what they have got. But when economic conditions are such that their day to day suffering grows and life becomes almost an intolerable burden, then even the weak are prepared to take the risk.


நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன - மூட்டிவிடப்படுவன அல்ல - என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள்.


ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட் காலத்திலேயே இதனைவிடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர்போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார் - "பாறைபோல நின்றவர்'' - அந்த நிலை எதைக் காட்டுகிறது?


சுட்டுத் தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை.

ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது.

கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறு பல உள!

காந்தீயம்

ஜனநாயகம்

அறநெறி

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்

கிளர்ச்சியை ஒடுக்க வீழ்த்தப்பட்டவர் பிணம்!

இவ்வளவும் இருப்பதால்தான் அவ்வளவு ஆழமான குழி தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறது போலும்.

பிறரை வீழ்த்தக் குழி பறிப்போன், வெட்டிய குழியில் தானே வீழ்வான் என்று எங்கோ படித்ததாக நினைவு.

தம்பி! அவர்கள் குழி வெட்டிக்கொண்டே இருக்கட்டும், நீயும் நானும் அதிலே தள்ளப்படுவதாக இருந்தாலும், அந்தக் கடைசி நிமிடம் வரையில் மக்களிடம் சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டிருப்போம். உண்மைக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்த்துவிடுவோமே.

அண்ணன்,


4-9-66

1 comment:

  1. The most important feature of a live score predictor for today
    When playing with live score predictor, you get access to some of the To make sure you bet365 get accurate predictions for your matchpoint upcoming matches,

    ReplyDelete