Sunday 31 October 2021

எழுதப்பட்ட சம்பிரதாயங்களும், எழுதப்படாத சட்டங்களும் - ரவிகுமார் சுதர்சனம்

 எழுதப்பட்ட சம்பிரதாயங்களும், எழுதப்படாத சட்டங்களும் - ரவிகுமார் சுதர்சனம்


யிற்சி அளிப்பதனாலேயே எல்லோரும் அர்ச்சகராகிவிடமுடியுமா? பிறவியின் பயனும், பயிற்சியின் பயனும் ஒன்றா? போன்ற பெரிய கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த எளிமையான பதில்,

பொருளாதாரத்தில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

கல்வியில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

பதவியில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

அறிவில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

ஆற்றலில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

ஆனால் பிறப்பால் என்னைவிட உயர்ந்தவன் என்று யாருமே இருக்க முடியாது

என்று ஒரு மேடைப் பேச்சில் தொல்.திருமாவளவன் சொன்னதையே வழிமொழிந்து, இன்னும் சிலர் எழுப்பும் கேள்விகளுக்குப் போகலாம். அனைத்துச் சாதியையும் அர்ச்சகர் ஆக்கிட்டா மட்டும் உன்னுடைய பிள்ளைகளை அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியில் உடனேயே சேர்த்துவிடப் போறியா என்ற கேள்வி ஒருபக்கம். அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆவதைக் காட்டிலும் அனைவருக்கும் சீரான கல்வி வாய்ப்பு, கல்விக்கேற்ற வேலை அமைதல், அதிகாரத்தில் அமர்தல் போன்றவையே நமக்குத் தலையாயத் தேவையல்லவா என்கிற கேள்வி இன்னொரு பக்கம். மேலே கேட்கப்பட்ட கேள்வியின் நோக்கம் எத்தன்மையதாயினும், அதற்கான பதில் எளிமையாக விளக்க முயற்சிக்கலாம்.


நீங்கள் ஒரு இடத்தில நிற்கிறீர்கள். உங்கள் முன் நான்கு சாலைகள் பிரிகிறது. ஒவ்வொரு சாலையின் முடிவில் ஒரு ஊர் இருக்கிறது. எல்லா ஊர்களின் தன்மை குறித்தும், வசதி குறித்தும்,சவால்கள் குறித்தும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு, எந்தச் சாலை வழியே பயணம் செய்து எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற முடிவு உங்களிடம் விடப்படுகிறது. முக்கியமாக எல்லா ஊரிலும் ஒரே மாதிரியான வசதிகள் இல்லை. இருக்க வாய்ப்புமில்லை. இந்த எல்லாத் தகவலையும் அறிந்தபிறகு நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பெதென்பது உங்கள் விருப்பம். இங்கே நாம் எதிர்பார்க்கப் படுவது எல்லா ஊருக்கும் செல்லும் பயணம் செய்வதற்கான சாலைகள் செப்பனிடப் பட்டிருக்க வேண்டும்.


இங்கே ஊர்கள் என்பது வேலைகள் அல்லது சேவைகளாகவும், வாய்ப்புகள் என்பது சாலைகளாகவும் பொருத்திப்பார்த்தால் நீங்கள் முதலில் எதிர்கொண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். நம் நாட்டில் என்ன என்ன வாய்ப்புகள் இருக்கிறது. அதன் சாதகப் பாதகங்கள் என்ன போன்ற எல்லாத் தகவல்களும் எல்லாருக்கும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். அப்படித் தகவல்கள் கிடைக்கப் பெற்றவன், அவன் தேர்ந்தெடுக்கும் துறையை அடையச் சட்டங்களும் சம்பிரதாயங்களும் கை கொடுக்க வேண்டும். அப்படியென்றால் அந்தத் துறையில் உள்ள சிக்கல்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லையா என்றால், கண்டிப்பாக அந்தச் சிக்கல்களை அறிந்து, ஆய்ந்து படிப்படியாகக் களைய வேண்டும். முதல் படியாக யார் முயன்றாலும் அடைய வேண்டும். அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வழி காட்டுதல் வேண்டுமேயன்றி, வழிகளை அடைத்து விட்டு நீ தகுதியற்றவன் என்று விரட்டுவது சரியல்ல.


கடவுள் படைத்த உலகம் அனைவருக்கும் சமம் என்று சொல்லும் மண்ணில் நின்று கொண்டு கடவுளே எல்லோருக்கும் சமம் இல்லை என்பது எத்தனை முரண். சொல்லுக்கும் சக்தி உண்டு. நம் சொல்லைக் கடவுள் கேட்கும் என்று நம்பிக்கையில் சொல்கின்றவர், அந்தச் சொற்களைக் கொண்டு எல்லோரையும் கடவுள் அருகே நெருங்கி வர பிரார்த்தனை செய்யுங்கள். நம் மண்ணில் எத்தனையோ சம்பிரதாயங்கள்,நம் முன்னோர்களால் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது எதுவும் சட்டமாகப் படாமலேயே இன்று வரை நடைமுறையில் இருக்கலாம். இது சரி தவறு என்பதைத் தாண்டி, அவற்றில் எது தேவை, எது தேவையில்லை என்று ஆய்ந்து அவற்றை நடைமுறை படுத்த முன்னெடுப்புகள் வேண்டும். இதில் நம் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது.


மனிதனுக்கான நீதி கிடைக்குமென்றால் எழுதப்பட்ட சம்பிரதாயங்கள் திருத்தப்படவேண்டும். எழுதப்படாத சட்டங்கள் எழுத வேண்டும்.

-- ரவிகுமார் சுதர்சனம்

No comments:

Post a Comment