Sunday 31 October 2021

நாட்டிற்குப் பேரறிஞர் அண்ணாவின் கொடை! - மா. தனசேகர்

நாட்டிற்குப் பேரறிஞர் அண்ணாவின் கொடை! - மா. தனசேகர்


பேரறிஞர் அண்ணாவே நம் தாய்த்தமிழ்நாட்டிற்கும், அது அங்கம் வகிக்கும் இந்தியாவிற்கும் கொடைதான். அண்ணா இந்நாட்டிற்கு வழங்கிய கொடைகளுள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுவது, துணை தேசியம்/ கூட்டாட்சி என்னும் கோட்பாடுதான்.


அண்ணாவைப் பற்றி எழுதும் போது இப்படிச் சித்தரிக்கிறார்கள். 'இருபது நூற்றாண்டுகளாய் தமிழ் நாகரிகத்துக்கு ஏதேனும் உயிர்த்துவமும், உள் வளர்ச்சியும் இருந்ததென்றால்தான் அதில் பிறந்த ஒரு மனிதரான அண்ணா இப்படிச் சுடுமண்ணின் வளத்தைச் செரித்த விதமாய் வர முடியும்'. ஏனெனில் நம் சங்க கால நாகரிகமானது, பல்வேறு மாற்றத்திற்கு உட்பட்டு, பார்ப்பனியத்தால் சிதிலமடைந்திருந்த போதிலும், அதன் வேர் முழுவதும் அறுந்துபடாமல் இன்றும் தமிழர்களிடையே காணப்படும் எச்சங்களின் வழியாக, நம் சங்க கால வாழ்க்கை கலாச்சாரத்தை ஒரு தேசத்தின் கட்டுமானத்திற்கு உரிய அடிப்படை காரணியாகக் கொண்டு வந்து அதன் மூலம் ஒரு கூட்டாட்சியை நிறுவுவது என்கிற அசாத்திய சிந்தனையை ஜனநாயகத்தில் படரவிட்டவர் அண்ணா. அதாவது, ஒரு பண்பட்ட ஜனநாயக ஆட்சி முறைப்படி இயங்கும் நாட்டிற்கான வரையறையைத் தெள்ளத் தெளிவாக வழங்கியவர் நம் அண்ணா தான்.


ஒட்டுமொத்த மனித குலத்திற்கான முன்னேற்றம் பன்மைத்துவத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனைத் துணை தேசியம் என்று கூறலாம். ஏனெனில் பன்மைத்துவம் என்பதே பல்வேறு அடையாளங்களைக் கொண்டு இயங்கும் மக்களினால் தான் உருவாகிறது. அந்த அடையாளங்களை அம்மக்கள் என்றும் இழக்கத் துணியார். எனவே தான் அண்ணா சிந்தித்த, கூறிய திராவிட நாடானது, தனி நாடாக இல்லாமல் கூட்டாட்சியை வலியுறுத்தும் நாடாக இருந்தது. இன்று இங்குக் கட்டமைக்கப்படும் தேசியவாத கருத்துகள், அனைத்து மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை அழித்து, ஒரு மொழி, ஒரு வண்ணம், ஒரு தேசம் என்ற கோட்பாட்டினுள் இந்தியாவை அடைக்கப் பார்க்கிறது. இந்திய வரலாறே சமஸ்கிருத வரலாறுதான் என்று பொய்யுரைகளை எழுதித் தள்ளுகிறது. இந்தத் தேசியவாத கருத்தைத்தான் பெரியார் புரட்டு என்றார்.


அண்ணா அதற்கு மாற்றாகத் துணை பிராந்தியக் கோட்பாட்டினை வலியுறுத்தினார். தேசியவாதிகள் எதையெல்லாம் மறைத்து ஒரு நாட்டையும் அதன் வரலாற்றையும் கட்டமைக்க முயல்கிறார்களோ, அவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தி, இந்தப் புதிய ஜனநாயகக் கோட்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஏனெனில் தேசியவாதம் என்ன செய்கிறது என்றால், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது. அவர்களுக்கான மத, கலாச்சார உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குகிறது. 

ஒரே மதம் என்னும் வரையறைக்குட்பட்ட மக்களிடையேயான பண்பாடு, கலாச்சாரம், மொழி போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்னும் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி நகர்த்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட குழுவின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இயங்குகிறது. மக்களை இயக்குகிறது. எனவேதான் எல்லோருக்குமான ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டிய தேவை உருவாகிறது. அந்த இடத்தில் தான் அண்ணா தன் திராவிட நாடு கோட்பாட்டைக் கட்டமைக்கிறார். தேசியம் நசுக்குகின்ற காரணிகளை எல்லாம் மீட்டுருவாக்கம் செய்து, அவற்றிற்குப் பிராந்திய அடையாளங்கள் ஏற்படுத்திக் கூட்டாட்சி அரசை அமைக்கும் கோட்பாட்டை வலியுறுத்தினார்.


சங்க காலத் தமிழ் நாகரிகத்தை எடுத்துக்கொண்டு, அந்தப் பார்வையை நவீன காலத்தில் வளர்ந்து வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப பொருத்தினார். ஜனநாயகத்தின் மேம்பட்ட வடிவமான கூட்டாட்சி மற்றும் சுயாட்சி அம்சங்களைக் கொண்ட ஒரு அரசை அண்ணா தனது திராவிட நாடு கொள்கை வழியாகத் தெரிவித்தார். அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை பிராந்தியங்களை உள்ளடக்கிய கூட்டாட்சிதானே தவிர, தனி அரசு அல்ல. அண்ணா கண்ட தேசியமானது, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள மக்கள் தங்களின் தாயகத்தைத் தாங்களே ஆண்டுக் கொள்வதற்கான உரிமையேயாகும். உண்மையில் அண்ணா பேசியது பிரிவினைவாதம் அல்ல. அந்தந்த பிராந்திய மக்கள் அவர்களின் அடையாளங்களுடன், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஒரு மேம்பட்ட ஜனநாயக ஆட்சிமுறை.


இதனை அண்ணா தனது நாடாளுமன்ற முதற் பேச்சில் மிக விரிவாகவே பேசியிருப்பார். "திராவிடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். திராவிடர்களுக்கு என்று இந்த உலகுக்கு வழங்கத் திட்டவட்டமான தெளிவான மற்றோரிடமிருந்து வேறுபட்ட சில அம்சங்கள் இருப்பதால்தான் நாங்கள் சுய நிர்ணய உரிமை கேட்கிறோம். இப்படிக் கூறுவதால் நான் எந்த இனத்தவருக்கும் எதிரானவன் அல்ல". புகழ்பெற்ற அப்பேச்சின் சாராம்சம் இதுதான். இதனை இன்னும் அழகாக அண்ணா கூறியது நினைவிற்கு வருகிறது. ஒரு பேட்டியில் அவரின் திராவிட நாடு கோரிக்கை பிரிவினைவாதமாக விமர்சிக்கப்படுவது பற்றிக் கேள்வி எழுகிறது. அதற்கு அண்ணா கொடுத்த பதில்தான் மிகச்சிறப்பானது.


அந்தப் பதில்:-

"நாம் ஒரே குடும்பத்தில் வசிக்கும் சகோதரர்கள் அல்ல. ஒரே வீட்டில் குடியிருக்கும் நண்பர்கள் அதிலும் அழகான தனி வீடு இருக்கும் போது, கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள்". இதை விட எளிமையாக இந்தியாவின் வரலாற்றைச் சுருங்கக் கூற இயலுமா என்பது தெரியாது.


மக்களாட்சி காலப்போக்கில் மேம்படும் பொழுது, உலகம் முழுக்க இயங்கிக் கொண்டிருக்கும் தேசியவாதக் கோட்பாடுகளும் சிதைந்து போகும். தேசியவாதத்திற்கு உட்படுத்தி மக்களின் மொழி இன அடையாளங்கள் நசுக்கப்படும் போது, அங்கே அண்ணா கூறிய திராவிட நாடு கோட்பாடுதான் மேலெழும். அதன் வடிவங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடலாமே தவிர, அண்ணா கூறிய சாராம்சம்தான் தேசியத்தைத் துடைத்தெறியும் ஆயுதம்.


அதனை இத்தனை காலத்திற்கு முன்கூட்டியே சிந்தித்த நம் அண்ணா 'பேரறிஞர்' என்று விளிக்கப்படுவதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. தேசியம் உடைக்கப்பட்டு, இந்தியாவில் அண்ணா கண்ட கூட்டாட்சி மலரும் போது, அந்தந்த பிராந்திய மக்கள் ஒவ்வொருவரின் சுயமரியாதை மிகுந்த வாழ்விலும் அண்ணா என்ற பேரொளி ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.


- மா. தனசேகர்.

No comments:

Post a Comment