Sunday 31 October 2021

டி.என். சேஷன் - கார்த்திக் ராமசாமி

 டி.என். சேஷன் - கார்த்திக் ராமசாமி


வன் திருச்சி வந்து சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டிருந்தது. ஒன்றிரண்டு நாட்கள் கூடக்குறைய ஆகியிருக்கலாம். சென்ற வருட ஜூலை மாதத்திலிருந்து ஹாஸ்டல் வாழ்க்கை,  பதினொன்றாம் வகுப்பிற்காக.  பத்தாம் வகுப்பு வரை ஊரில் இருந்த அரசினர் மேல்நிலைப்பள்ளி. எந்தத் தெருவில் யாரைக் கேட்டாலும் அவனைப் பற்றிச் சொல்வார்கள் “வாத்தியார் புள்ளையா? நல்ல புள்ளையாச்சே. இருக்கிற இடம் தெரியாது. படிப்பிலும் கெட்டி”


ஊரில் அவன் வயதை ஒத்தவர்களுக்கு யாராவது அறிவுரை கூற நேர்ந்தால் அதில் அவனைப் பற்றிய உதாரணம் கண்டிப்பாக இருக்கும், “வாத்தியார் புள்ளைய பாரு”


பத்தாம் வகுப்பில் எதிர்பார்த்த படியே பள்ளியில் முதலிடம். முதல் மதிப்பெண்ணிற்கும் இரண்டாம் மதிப்பெண்ணிற்கும் இடையே கிரிக்கெட் மைதானம் அளவு அகண்ட இடைவெளி இருந்தது.  அந்த அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு இருந்தாலும், “நல்லா படிக்கிற புள்ளையை டவுன்ல கொண்டு போய் விடலாம்ல?” எனும் பேச்சு  தந்ததையை அழுத்தியதன் விளைவு திருச்சியில் பிஷப் ஹீப்பர் பள்ளியில் ஹாஸ்டல் வாழ்க்கை. 


அங்கு பதினென்றாம் வகுப்பு என்பது உப்புக்குச் சப்பு. ஆசிரியர்களின் கவனம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மீதே இருக்கும். அவனுக்கு வாழ்க்கை இனிதே சென்றது. விடுதி மதில் சுவர் ஓட்டை வழியாக இராத்திரி பரோட்டா கடையில் உணவு. . சீருடையை மாற்றிவிட்டு சுவர் ஏறிக் குதித்தான்ன்றால் அவனையும் அவன் நண்பர்களையும் மாரீஸ் தியேட்டரில் பார்க்கலாம். 


ஒரு வருடம் சென்றதே தெரியவில்லை, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடித்து வெளியேற, இவர்கள் மீது வெளிச்சம் வீசப்பட்டது. நண்பர்களில் பலரும் மருத்துவப் படிப்பை குறிவைத்ததால் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தனர். மாரீஸ் இருக்கும் திசை மறந்து போனது. பரோட்டா அண்ணனோ அடுத்த செட் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தார். 


பொதுவாக எந்தப்பாடத்தையும் எளிதில் படித்துவிடும் அவனுக்கு, பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பெரிய சிரமமாக இருக்கவில்லை. இருந்தாலும் வழக்கத்தை விட அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.  மருத்துவம், பொறியியல் என ஒவ்வொரு திசையில் ஓடிக்கொண்டிருந்த பலரும் புரியாத இயற்பியல் கணக்கீடுகளையும் வேதியியல் கரிமங்களையும் நினைத்து பயந்த போது அவன் பயம் வேறு மாதிரி இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் யாரும் அலட்டிக் கொள்ளாத ஆங்கிலம் அவனுக்கு சுமையாக அமைந்தது. அதற்குக் காரணம் கிருஷ்ணமாச்சாரி. தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி, நடு நெற்றியில் நாமம், வளைந்த குடைக் காதுகள், துருத்தி நிற்கும் கூர்மையான மூக்கு. அவனைக் கண்டாலே அவருக்கு ஆகாது. ஏதேனும் பிரச்சனை என்றால் முன்னின்று பேசும் வழக்கம் கிராமத்தில் இருந்து இங்கும் அவனுடன் தொற்றிக் கொண்டு வந்துவிட்டது. அப்படி இரண்டொரு முறை நடந்த சம்பவங்களின் போது தூரத்தில் இருந்து அவர் அவனை முறைத்துக் கொண்டிருந்ததை அவன் அப்போது பெரிதாக எடுக்கவில்லை. அதுநாள் வரை ஶ்ரீரங்கத்து மாணவர்கள் முதலிடங்களை, முதல் மரியாதையைப் பெற்று வந்த பள்ளியில் சிறு கிராமத்தில் இருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் தட்டிப் பறித்ததை சில ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் கிருஷ்ணமாச்சாரியாருக்கு முதல் இடம். 


பனிரெண்டாம் வகுப்பின் முதல் பருவத் தேர்வு நடந்து முடிந்தது. தேர்வு100 மதிப்பெண்களுக்குத்தான் என்றாலும் இந்தத் தேர்வின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் மாணவர்களை எடை போடுவார்கள், இந்த மாடு எந்த அளவு வண்டி இழுக்கும் என. இதனால் அவர்கள் அனைவரும் முழுத்திறமையை பருவத்தேர்வில் காட்ட முக்கி முக்கிப் படித்தனர். ஓரளவு திருப்தியாகவே தேர்வும் எழுதினர். அவன் எதிர்பார்த்தைப் போலவே இயற்பியல், வேதியியல், கணிதத்தில் வகுப்பில் முதல் இடம் பெற்றான். உயிரியயில் இரண்டாம் இடம். மொத்த மதிப்பெண்களின் முதல் இடம். இன்னும் ஆங்கில விடைத்தாள் மட்டும் திருத்தித் தரப்படாமல் இருந்தது. ஆனால் அதற்குள் முதல் பருவத்தேர்வில் மூன்று பாடங்களில் முதலிடம் பெற்றவன் எனும் கவனம் அவன் மீது விழுந்திருந்தது. 


இரண்டு நாள் தாமதமாக கிருஷ்ணமாச்சாரி ஆங்கில விடைத்தாளுடன் வந்தார். வகுப்பில் நுழையும் போதே அவர் கண்கள் அவனைத் தேடின. ஒவ்வொருவரின் விடைத்தாளாக அவர்களின் மதிப்பெண்ண்ணை சத்தம் போட்டுப் படித்து பொறுமையாகக் கொடுத்தார். வகுப்பில் கிட்டத்தட்ட அனைவரின் விடைத்தாள்களும் வந்துவிட்டன. இறுதியாக ஒரே ஒரு பேப்பர் அவர் கையில். அவன் மட்டும் வகுப்பில் மீதம் இருந்தான். அவனது பெயரை உரக்க அழைத்தார். எழுந்து நின்றான். 


“முப்பத்து நாலரை மார்க்”


34 1/2. முப்பத்தைந்து எடுத்தால் தேர்ச்சி, ஏற்கனவே இருக்கும் மதிப்பெண் உதவியால் வகுப்பில் முதலிடம். ஆனால் இப்போது 34 1/2. ரேங்க் பட்டியலில் இடம் கிடையாது. வகுப்பில் தேர்ச்சி அடையாத சில மாணவர்களின் பட்டியலில் அவன் பெயர். 


இப்படி முப்பத்தி நாலரை போடும் ஆசிரியரை இதுவரை அவன் பார்த்ததில்லை. பொதுவாக 32, 33 மதிப்பெண் எடுத்தாலே ஒன்றிரண்டு சேர்த்துப் போட்டு பாஸ் ஆக்கிவிடும் ஆசிரியர்களைத் தான் கண்டுள்ளான். விடைத்தாளை எடுத்துப் பார்த்தான், ஒரு ஒரு வார்த்தையாகத் தேடித் தேடி திருத்தியிருந்தார். காற்புள்ளி இல்லையென்றால் அரை மார்க் குறைவு, பெரிய எழுத்து P சின்ன எழுத்தாக உள்ளது, கேபிட்டல் லெட்டர் போடவில்லை என இரண்டு மதிப்பெண் கட். விடைத்தாள் முழுவதும் சிவப்பு வட்டம். இந்த மாதிரி அனைவரின் விடைத்தாளையும் திருத்தியிருந்தால் வகுப்பில் யாருமே தேர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவனுக்கு மட்டும் அந்த நல்வாய்ப்பை வழங்கியிருந்தார். 


இப்போது வேறு ஒரு பயம் வந்து அவனை ஆட்கொண்டது. நன்றாக படிக்கும் தைரியத்தில், விடுதி வார்டனுடன் ஏற்கனவே வம்பு வளர்த்து வைத்திருந்தான். பெயில் எனும் காரணம் கிடைத்தால் போதும் அவருக்கும் பழி தீர்க்க லட்டு போல காரணம் கிடைக்கும். அவன் பெயில் ஆன விசயம், வீட்டிற்கு, ஊருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? “வாத்தியார் புள்ளையா இப்படி?”


எழுந்து நேரே கிருஷ்ணமாச்சாரியிடன் சென்றான். என்ன என்பது போல் பார்த்தார். 

“சார், இந்தக் கேள்விக்கு சரியான பதில் தான் எழுதியுள்ளேன். இன்னும் அரை மதிப்பெண் கொடுத்தால் நான் பாஸாகிவிடுவேன்” வார்த்தைகள் விழுங்கி விழுங்கி வந்தன.


வெடுக்கென பேப்பரை பிடுங்கினார். ஒரு zல் வட்டம் போட்டார்.

 “இங்க small z வரணும். ஆனா கேப்பிடல் Z போட்டுருக்க. அதனால இன்னும் அரை மார்க் கட்” பேப்பரை வெற்றிப் பெருமிதத்துடன் மேசை மீது அலட்சியமாக எறிந்தார்.  ஒரு புழுவைப் பார்ப்பது போல மேலும் கீழும் பார்த்தார். 


அவன் சுயமரியாதை சுண்டப்பட்டது. பேசாமல் பேப்பரை எடுத்துக் கொண்டு என்ன வந்தாலும் எதிர் கொள்வோம் என அவன் இடம் திரும்பினான்.


அன்று மாலை அவன் தந்தை தொலைபேசியில் அழைத்தார். பேசுவதற்காக தலைமை ஆசிரியர் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி அறைக்குச் சென்றான். அப்போது உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமாச்சாரியிடம் பேசிக் கொண்டிருந்தார். சில வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது.


“நீங்க டி.என். சேஷன் மாதிரி நேர்மையான ஆளு சார்.”

No comments:

Post a Comment