Sunday 31 October 2021

தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்? - ரவி செல்வராஜ்

 தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்? - ரவி செல்வராஜ்


தற்கு முன் இந்தியத் துணைகண்டத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்ற முன்னோட்டங்களைக் காணாமல் பெரியார் பிறந்ததனால் தமிழ்நாட்டுக்கு என்னென்ன நிகழ்ந்தது என்பதும், அதனால் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட எந்தெந்த வகையில் முன்னேறியது என்பதும் புலனாகாது. அதனால் சில முன்னோட்டங்கள்.





முன்னோட்டம் 1 

“இந்தியா” என்ற பெயர் பாரம்பரிய லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது, இது தெற்காசியாவைக் குறிக்கும் மற்றும் அதன் கிழக்கே ஒரு நிச்சயமற்ற பகுதியாகும். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்த வந்த மன்னர்கள் மற்றும் வர்த்தகர்கள் பலரும் வழியில் இருந்த சிந்து நதியை கடந்து வர வேண்டியிருந்தது. சிந்துநதியைக் கடந்தால்தான் இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பிற்குள் கால்பதிக்க முடியும். அதனால்,  சிந்துநதிக்கு மறுகரையில் உள்ள நாடு என மேற்கத்திய நாடுகள் வர்ணிக்கத் தொடங்க, படிப்படியாக, சிந்து என்பது இந்து, இந்துஸ்தான், இந்தியா என உருமாற்றம் பெற்றது. 

முன்னோட்டம் 2

தெற்காசியாவின்  முதல் நிரந்தரக்குடியிருப்புகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இப்பகுதி சார்ந்த பண்பாடு, உலகின் மிகப்பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000-ல் தொடங்கி கி.மு.2000 வரை உச்ச நிலையிலிருந்த சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.

கி.மு.2000 - 1500 அளவில்(4000 - 3500 ஆண்டுகளுக்கு முன்), இந்தியாவின் வடமேற்கிலிருந்து வந்த ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், அவர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் மற்றும் அரச குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கலப்பினாலும் ஆரியஆதிக்கப் பண்பாடு உருவானது. காலப்போக்கில் மெல்ல மெல்ல ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் ஆகியவை இந்நாட்டில் அரசு அதிகாரத்தின் உதவியுடன் பரப்பப்பட்டு நிறுவப்பட்டது.


முன்னோட்டம் 3

1920-ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு, அதன் காரணமாக இந்தோ ஐரோப்பியர்கள் அல்லது ஆரியர்கள் இந்தியத் துணைகண்டத்தில் தோன்றியிருக்ககூடும் என்ற கருத்து தவறானது என நிரூபிக்கப்பட்டது. 


சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலமும், ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலமும் பொருந்தி வந்தது. இதுவே ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஒரு உறுதியான சான்றானது. போர்களில் இறந்தது போல் காணப்பட்ட பல எலும்புக்கூடுகள் அகழ்வுகளின் போது மேற்பகுதியில் காணப்பட்டது. இது, சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களால்  வன்முறை மூலம் அழிக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுசேர்த்தது. வெவ்வேறு காலக் கட்டங்களில் அங்கிருந்த மக்களைக் கொன்று சிந்துவெளி நாகரிகத்தை முற்றிலும் அழித்திருக்கிறார்கள். ஆங்காங்கு இருந்த சிந்துவெளி நாகரிக மற்றும் பிற நாகரிக மக்கள் வாழ்நகரங்களை மண்போட்டு மூடி அவைகளை விளைநிலங்களாகவும், அரசர்களுக்கு இடம் காட்டுகிறோம் என்று அரண்மனைகளாகவும், வழிபாட்டுத் தளங்களாகவும் மாற்றியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகால மன்னர்கள் வரலாற்றில் இதுதான் நடந்திருக்கின்றது.


சிந்துவெளி நாகரிக தமிழ்நாட்டு ஆதாரங்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007-ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரேமொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளைமொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருத்து. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.


காவிரிக்கரையில் சிந்து சமவெளி எழுத்துக்கள்

தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருந்தன. இதிலிருந்து இந்தியாவின் சிந்து பகுதியிலிருந்து மேற்கு கடற்கரை ஓரமாக பரவி தமிழ்நாடு மற்றும் லெமூரியா வரை சிந்துவெளி நாகரீகம் பரவியிருந்தது உறுதியாகின்றது. அது லெமூரியாவிலிருந்து துவங்கி சிந்து வரை பரவியிருக்கலாம் என்ற கருத்தும் இருக்கின்றது. அதனையே தமிழ்நாட்டில் காணப்படும் தொல்லியல் களங்கள் உறுதி செய்கின்றன.


ஆங்கில ஆதிக்கத்தின் கீழ்

1879-ல் பெரியார் பிறந்த பொழுது இந்திய துணைகண்டம் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை ஆங்கிலேய அரசு ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.  அக்காலக்கட்டத்தில் ஆரிய வழித்தோன்றல்களான பார்ப்பனர்கள், ஜமீன்தார்கள், அரசுப்பணியில் இருந்தவர்கள் என குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை வைத்திருந்தனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 5%-க்கும் குறைவானவர்களே கல்வி கற்றனர், அதனால் அரசுப் பணிகளையும், பதவிகளைப் பெற்றனர், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், நில உடமையாளர்களாகவும், வரி வசூலிப்பவர்களாகவும் இருந்தனர். பிற 95% மக்கள் விவசாயக் கூலிகளாகவும், பிற குலத்தொழில்களை செய்பவர்களாகவும், வரி செலுத்துபர்களாகவும் இருந்தனர்.


பெரியாரின் எதிர்ப்பும் சுயமரியாதைக் கொள்கையும்

இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள், “பார்ப்பனரல்லாதார்” என்ற காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளை சீர்த்திருத்தி எளிமையாக்கியவர் பெரியார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப்பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.


காங்கிரஸில் பெரியார்

பெரியார், 1919-ஆம் ஆண்டு தனது வணிகத் தொழிலை நிறுத்தி விட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸில் இணைவதற்கு முன், தான் வகித்து வந்த அனைத்து பொதுப் பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியமான பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியையும் விட்டு  விலகியதோடு மட்டுமல்லாமல், தன்னை முழுமனதுடன் காங்கிரஸ் இயக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தி வலியுறுத்திய கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல் பிறரையும் உடுத்தும்படி செய்தார். 


போராட்டங்கள்

வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் போராடினார். 1921-ல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் அவருடைய போராட்டத்திற்குப் பணிந்தனர்.


காங்கிரஸை விட்டு விலகுதல்

1922-ல் பெரியார் சென்னை இராசதானியின் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப்பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையாக இருந்த வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு, பிற சாதியினரை இனவேற்றுமை பார்க்கும் உயர்சாதியினரால் தோல்வியுற்றது. அதனால் 1925-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.


சமூக விடுதலைக்கான போராட்டம்

பெரியாரும், அவரது தொண்டர்களும் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்ற-தாழ்வுகளை நீக்கக்கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக-விடுதலைக்காகப் போராடி வந்தனர்.


சுயமரியாதை இயக்கம் 

1925-ல் சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தான் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் (எந்த இனத்துக்கும்) அடிமையில்லை என்ற உணர்வை மக்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் பிற்போக்குத்தனமான மூடப்பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும்,  தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.


கொள்கைகளும் கடமைகளும்

(1) சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.

(2) ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.

(3) சாதிமறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.

(4) அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது.

(5) கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொதுமகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), மற்றும் குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.

(6) இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிர்வாகப் பணி, கல்வி இவற்றில் இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியது.

இவையனைத்தையும் காங்கிரஸில் இருந்த பொழுதிலிருந்தே பெரியார் வலியுறுத்தி வந்தார்.


பெரியார் முதலில் துவக்கிய நாளிதழ்கள்

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாகவே பெரியார் 1925-லிருந்து செயல்படுத்தி வந்தார். இதை பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925-ஆம் ஆண்டு துவக்கினார். ஆங்கிலத்தில், “ரிவோல்ட்” என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகுவேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. இந்த பரப்புரைகளாலும், செய்தித் தாள்களின் தாக்கத்தாலும் பெரியாரின் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளையோர் இணைந்தனர். 


சுயமரியாதையாளர்கள் மாநாடு

1929-ல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மெட்ராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மெட்ராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக்களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது.


பெரியாரை சந்தித்த அண்ணா

1934-ல் ஒரு கூட்டத்தில் பெரியாரை, அண்ணா சந்திக்கிறார். 1967-ல் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார். இடைப்பட்ட 33 ஆண்டுகளில் பெரியார் கற்றுத்தந்த பாடமும், அண்ணாவின் உழைப்பும் அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகுகின்றது. இத்தனைக்கும் அந்த 33 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் அண்ணா பெரியாருடன் இல்லை. தனிக்கட்சி துவங்கி தேர்தல் அரசியலுக்கு வந்து விட்டார். அப்படிப் பார்த்தால் பெரியாருடன் அண்ணா இருந்தது 15 ஆண்டுகள் மட்டுமே. அந்த 1934 முதல் 1949 வரையிலான 15 ஆண்டுகளிலேயே அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகி பெரியாரின் முக்கியமான கொள்கைகளை சட்டமாக்கும் பயிற்சி பெற்று விட்டார். 


தானிருந்த ஒரு கழகத்தின் தலைவனை விட்டுப் பிரிந்து 18 ஆண்டுகளான பின்னும், தங்கள் கட்சியினை அந்த தலைவனே எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்தும், வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன் அந்த தலைவனிடமே சென்று ஆசி பெற்று திரும்பிய அண்ணா, அந்த தலைவனின் கொள்கைகளை சட்டமன்றத்தில் சட்டங்களாக்கியது அதுவரை உலக வரலாற்றில் நிகழாத ஒன்று.

1920 – 1937 இடைப்பட்ட பதினேழு ஆண்டுகளில், பதிமூன்று ஆண்டுகள் (1926-1930 தவிர்த்து) நீதிக்கட்சி சென்னை மாகாணத்தை ஆட்சி செய்து பல்வேறு சமூகநீதி திட்டங்களையும், சட்டங்களையும் அமல்படுத்தியது. பள்ளிக் கல்வித்துறை உருவாக்கப்பட்டு பல்லாயிரம் பள்ளிகள் துவக்கப்பட்டு அனைத்து வகுப்புக்களையும் சேர்ந்த மாணாக்கர்கள் கல்வி பயிலத் துவங்கினர்.


1937-ல் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராகி பள்ளிகளில் இந்தியைத் திணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 1938-ல் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் தான் 1938-ல் நீதிக்கட்சியை வலுப்படுத்த பெரியாரை நீதிக்கட்சித் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. 1940-ல் பெரியார் நீதிக்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின் நடந்த முதல் மாநாடும், நீதிக்கட்சியின் 15-வது மாநாடும் அக்டோபர் 24-25 தேதிகளில் திருவாரூரில் நடைபெற்றது.  


தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்..

என்ற வினாவிற்கு ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் சென்னை மாகாணத்திற்கும், பின் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்  நிகழ்ந்திருக்காது என்று கூறினாலும் அவற்றைத் தொகுக்க ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும் என்பதால் முக்கியமான நிகழ்வுகளை மட்டும் கோர்க்கும் பொழுது முன்னணியில் இருப்பவை...


தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்

1. அன்றிருந்த ஒரே பெருங்கட்சியான அப்பொழுதைய காங்கிரஸ் என்பதே பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்பதைத் தெரிந்து 1925-ல் காங்கிரசிலிருந்து வெளியேறாமல் போயிருந்தால் தமிழ்நாட்டில் இப்பொழுது காங்கிரசோ, பாஜகவோ ஆட்சி செய்து கொண்டிருந்திருக்கும்.

2. அண்ணாவின் சந்திப்பு நிகழ்ந்திருக்காது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவலாகியிருந்திருக்காது. 


3. நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்டிருக்காது.

3. அண்ணா - பெரியாரின் பிரிவு நிகழ்ந்திருக்காது.

4. அண்ணாவால் தி.மு.க.உருவாக்கப்பட்டிருக்காது.

5. தி.மு.க.உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் உருவாகியிருக்க முடியாது. 

6. தி.மு.க. இன்றுவரை உருவாக்கி அது இந்தியா முழுவதும் அமலான ஏராளமான சமூகநீதி சட்டங்கள் எதுவும் அமலாகி இருக்காது.


7. பெரும்பான்மை வடமாநில அரசாங்கங்கள் எப்படி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கொடுக்க முடியாமல் மூடப்பழக்கங்களைப் பரப்பி அவர்களை முன்னேற விடாமல் செய்திருக்கின்றதோ அந்த அவலநிலையே தமிழ்நாட்டிலும் நிகழ்ந்திருக்கும்.

8. கல்வியில் இருமொழிக் கொள்கை இல்லாததால் மராத்தி, பிகாரி, பஞ்சாபி, ராஜஸ்தானி, ஒரியா உள்ளிட்ட வடமாநில மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்று அங்கெல்லாம் எப்படி இந்தி வளர்ந்திருக்கின்றதோ அதுபோல் தமிழும் அழிவின் விளிம்புக்கு சென்று தமிழ்நாட்டில் இந்தி கோலோச்சிக் கொண்டிருந்திருக்கும்.

9. தி.மு.க.உருவாக்கிய சமூகநீதி சட்டங்களே முன்னுதாரணமாகி இந்தியா முழுவதும் பரவி இன்று ஓரளவு இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணையான நிலை இல்லாமல் போயிருக்கும்.

1௦. அப்படி தமிழ்நாட்டில் இந்தி கொலோச்சியிருந்தால் ஆர்.எஸ்..எஸ்-ன் அரசியல் பிரிவான பா.ஜ.க. எப்படி மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகின்றதோ (உதாரணம்: பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பல்லாயிரம் கோடிகளை கடனை பெருநிருவனங்களுக்கு தள்ளுபடி செய்தது, அதன் காரணமாக சரிந்த இந்திய பொருளாதாரம், குடியுரிமை சட்டங்கள், பொதுத்துறை நிறுவனபங்குகளை பெருநிருவனங்களுக்கு மாற்றுவது, வங்கிகளை இணைப்பது, மூன்று வேளாண் திருத்த சட்டங்கள், நீட்தேர்வு, பொதுத்துறையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, மாநிலங்களுக்கு திரும்பத் தரவேண்டிய உரிமைத்தொகைகளைத் தராமல் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது, மத வெறுப்பை ஊக்குவிப்பது, இந்து அடிப்படைவாத செயல்கள் மூலம் கலவரத்தை உண்டாக்குவது, நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதது (இதுபற்றி உச்சநீதிமன்ற நீதிபதியே  அதிருப்தி தெரிவித்துள்ளார்) அதேபோன்ற ஒரு கொடுங்கோலாட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்திருக்கும்.

அதனால் பெரியார் பிறந்ததாலேயே இன்று தமிழ்நாடு பிற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் உயர்ந்து விளங்கியிருக்கின்றது.

அதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 06.09.2021 அன்று சட்டமன்றத்தில் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை “சமூகநீதி நாளாக” அறிவித்திருக்கிறார்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால் திராவிடர் கழகம் உருவாகியிருக்காது, பெரியார் பிறந்திருக்காவிட்டால் தி.மு.கவும் உருவாகியிருக்காது என்பதை உணர்ந்ததாலேயே அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாள் துவக்கினார். அதன்படி பார்த்தால் பெரியாருக்கு மட்டுமல்லாமல் திராவிடர் கழகத்துக்கும், தி.மு.க.வுக்கும் கூட இது 143-ஆவது பிறந்த நாளாகும்.


-இரவி செல்வராஜ்  

No comments:

Post a Comment