Sunday 31 October 2021

அறிஞர் அண்ணாவின் கொடை - குமாரி கலைவாணி இளங்கோ

 அறிஞர் அண்ணாவின் கொடை - குமாரி கலைவாணி இளங்கோ


காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை

1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது.


சாமானியப் பிறப்புக்கும், சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது, வரலாற்றுத் திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றைத் திருப்புவதாக அமைந்ததும் கூட.


யார் இந்த அண்ணா?

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர்.

இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.


பட மூலாதாரம்,GNANAM

அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் கூட நவீன தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின் பரிமாணத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.

இந்த தாக்கம் ஆதரவாளர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. விமர்சகர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறது என்பது வேறு.

துடிப்பும், பரபரப்பும், விவாதங்களும் நிரம்பிய அவரது வாழ்க்கையை அதன் இயல்பில், சுருக்கமாக அறிமுகம் செய்யும் முயற்சியே இந்தக் கட்டுரை.


திரைப்படங்கள்

அண்ணாவுக்கு முன்பே உடுமலை நாராயணகவி, பாரதிதாசன் போன்ற திராவிட இயக்க சிந்தனை உள்ள கவிஞர்கள் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டனர். ஆனால், 1948ம் ஆண்டு நல்ல தம்பி படத்துக்கு வசனகர்த்தாவாக அண்ணா திரைத்துறையில் நுழைந்தபோது அது திராவிட இயக்கத்துக்கும், திரைத்துறைக்குமே முக்கியமான திருப்பு முனையாக பண்பாட்டு மாற்றமாக இருந்தது என்கிறார் திரைப்படம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தவரும், தமிழப் பேராசிரியருமான இரா.முருகன்.


"நல்ல தம்பிக்கு அண்ணா வசனம் எழுதியிருந்தாலும், 1949ம் ஆண்டு அண்ணாவின் கதை வசனத்துடன் வெளியான வேலைக்காரி படம்தான் உண்மையில் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 


அதற்கு முன்பு காவியப் படங்கள், அரசர்கள்களைப் பற்றிய படங்கள், தெய்வங்களைப் பற்றிய படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அண்ணாவின் வேலைக்காரிதான் சமானிய மனிதர்களைப் பற்றிய கதையை தமிழ்த் திரைத்துறையில் பேசிய முதல் படம் என்கிறார் முருகன். தெய்வீகமான, காவியமான பெயர்களைத் தாங்கியே படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், வேலைக்காரி என்ற பெயரே அந்தக் காலத் திரைத்துறையில் புரட்சிகரமானது" என்கிறார் பேராசிரியர் முருகன்.


தமிழும் அண்ணாவும்

தற்காலத் தமிழ் மொழி மீது அண்ணா செலுத்திய தாக்கமும் அளப்பரியது.

'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல' என்ற தொடரை பலரும் பழமொழி என்று கருதியிருக்கலாம். ஆனால், இது அண்ணாவின் சொல்லாட்சி. 'உறுப்பினர்' என்ற சொல் தமிழுக்கு அண்ணாவின் கொடை என்று தமிழ் ஆட்சிமொழித் துறை அலுவலர் ஒருவர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்ததைக் கேட்டிருக்கிறேன்.

தமிழில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்து மணிப்பிரவளம் என்று சொல்லக்கூடிய கலப்பு மொழியாக ஆகிவிட்டிருந்த நிலையில், அந்த சம்ஸ்கிருதச் சொற்களை நீக்கி தமிழை மீட்க முயன்றது தனித்தமிழ் இயக்கம். மறைமலைஅடிகள், பரிதிமாற்கலைஞர், தேவநேய பாவாணர் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கம் பெரிதும் புலவர்களின் இயக்கமாகவே இருந்தது.

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப தனித்தமிழ்ச் சொற்களைப் படைத்து அதை மேடையில் பேசி, பிறகு பேச்சு மொழியாகவும் ஆக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் அந்த சாதனைப் பயணத்தை தொடக்கியவர் அண்ணா.

பஞ்சாயத்து சமிதி என்ற சொல் ஊராட்சி ஒன்றியம் ஆனதும், காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும், மந்திரி அமைச்சர் ஆனதும், அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனதும், சட்ட சபை சட்டப் பேரவை ஆனதும் அண்ணா தொடங்கிய பேச்சுமொழிப் புரட்சி செய்த சில வேதி வினைகள்.


மேடைப்பேச்சுக்கு உயிர் கொடுத்தவர்

பட மூ,TWITTER

அரசியல் வானில் அண்ணா கொண்டுவந்தது வெறும் பேச்சு மாற்றமல்ல. அது மிகப் பெரிய அரசியல் விழைவை நோக்கிய பயணம். அதன் திசையோடு உடன் பட்டவர்களும், மாறுபட்டவர்களும் உண்டு என்பது வேறு.

"20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மேடைப் பேச்சு பழங்காலப் பேச்சைப் போல ஒலிக்கத் தொடங்கியது. பழங்காலச் சொற்களை, உவமைகளை, உருவகங்களைப் பயன்படுத்த தொடங்கியது. ஆனால், இவையெல்லாம் நவீன, ஜனநாயக அரசியலைப் பேசுவதற்காகவே பயன்பட்டன. வேறு சொற்களில் கூறுவதானால், தமிழர்கள் தங்களை ஒரு நாடாக, ஒரு மக்களாக, பொது மக்கள் திரளாக, ஓர் அரசியல் பொருளாதாரமாக, பெரிய அளவில் இவை அனைத்துமாக நினைக்கத் தொடங்கினர். 


இப்படி அவர்கள் புதிதாக ஒன்றைச் செய்ய முயன்றபோது, அவர்களது பழைய விஷயங்கள் மேலெழுந்து வந்தன" என தமிழ் மேடைப் பேச்சும், திராவிட அழகியலும் (Tamil Oratory and Dravidian Aesthetic) என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் யேல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னார்டு பேட்.

அதாவது மேடைப் பேச்சில் செந்தமிழைக் கொண்டுவந்த திராவிட அரசியல், அதை பழமையை நோக்கி கொண்டு செல்வதற்காக செய்யவில்லை. நவீன ஜனநாயக அரசியலுக்காக அதை செய்தது. புதிதாக ஒரு சமூகமாக, நாடாக, பொருளாதார அமைப்பாக தங்களை நினைக்கத் தொடங்கிய நிலையில், அந்த அரசியலைப் பேசுவதற்காகவே பழைய மொழியை மீட்டெடுத்து அவர்கள் பயன்படுத்தினர் என்பதே அவர் கூறுவதன் பொருள். இப்படிப் பழமையான செம்மொழியை மீட்டெடுத்து அதை புதிய அரசியலுக்குப் பயன்படுத்தும் அசகாய சூரத்தனத்தை திராவிட அரசியலுக்குக் கொடையாக அளித்தது வேறு எவரும் அல்ல, அண்ணாதான்.


அறிஞர் அண்ணாவின் இலக்கியக் கொடை

அண்ணா ஒரு நாடக அறிஞர். அவர் கலை நயமும் கருத்து வளமும் உலக நாடக இலக்கிய ஆசிரியர் வரிசையில் வைத்தெண்ணத்தகும் சீரும் சிறப்பும் உடையவர். அறிஞர் அண்ணா அவர் காலத்தின் குரலாகவும் நிழலாகவும் விளங்கினார். அவர் ஒரு பல்கலைவாணர் பல்கலைச் செல்வர். மக்களை முன்னேற்றவும், சீர்திருத்தவும் நாடகக் கலையை சீர்தூக்குவியவர், மோலியர், இப்சன், பெர்னாட்சா, மாக்சிம் கோர்க்கி, ஆண்டன் செகாவ் போல இந்திய நாட்டின் வேறு எந்த மொழியினரைக் காட்டிலும் நன்கு பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.

சமுதாய எழுச்சிக்கான எழுத்துப் படைப்புகள்

20ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு அண்ணாதுரையின் சிறுகதை, புதினங்களின் கொடை 20 ம் நூற்றாண்டுத் தமிழக மறுமலர்ச்சி என்பது மிகப் பெரிய அளவில் திராவிட இயக்கத்தையே சார்ந்துள்ளது. மேடைகளில் பேசியும், ஏடுகளில் எழுதியும் மறுமலர்ச்சிப் பணி ஆற்றிய திராவிட இயக்கத் தலைவர்களுள், அண்ணாதுரையின் இடம் தலைமை சான்றது. கருத்துக்களைக் கட்டுரையாகத் தீட்டுவதோடு அமையாது எளிய மக்களும் விரும்பி ஆவலோடு படிக்கும் கதை வடிவில் இவர் தந்தார். 

இவரைச் சார்ந்தோரும் கதைகள் வாயிலாக மறுமலர்ச்சிக் கருத்துக்களை விதைப்பாராயினர். ஆகவே இன்றையத் தமிழக ம.றுமலர்ச்சியைத் தோற்றுவித்ததில் அண்ணாத்துரையின் கதைகள் ஆற்றிய பங்கு தனிச்சிறப்புப் பெறுகிறது. 20ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு, அண்ணாத்துரையின் சிறுகதை புதினங்கள் கொடை குறிப்பிடத் தக்கதாக அமைந்துள்ளது. அவர் கருத்தை பின்பற்றிப் பலர் எழுதினர். தம் கதைகளில் மறுமலர்ச்சி எண்ணங்களை விதைத்த அவர், கலப்பு மணம், விதவை மணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றை செயல்படுத்த வழிகாட்டினார். எழுதிய வண்ணம், பேசியவண்ணம் அவற்றை நிலை நாட்டிய அப்பெருந்தகையாளரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் சமுதாய மறுமலர்ச்சியின் எழு ஞாயிறு எனலாம்.


அறிஞர் அண்ணாவின் தொடர் தமிழ் கொடை முயற்சிகள்


தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இனம், தமிழ் நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பணியாற்றிய தலைவர் அண்ணா உரை நடை இலக்கியத் தமிழ், தமிழியல் தமிழ், நாடகத் தமிழ், திரை நாடகத் தமிழ், மேடைத் தமிழ், இலக்கியத் தமிழ், நாட்குறிப்பு இலக்கியத்தமிழ் எனும் பல்வேறு தமிழ்த் துறைகளும் செம்மையும் செழிப்பும் சேற முப்பத்தைந்து ஆண்டுகள் அரசியல் உலகிலிருந்து கொண்டு அரிய இலக்கியப் பணியும் மொழிப் பணியும் நாட்டுப் பணியும் ஆற்றிய தன்னிகரற்ற மொழிப்பற்றாளர் அண்ணா. சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் கருத்துக் கருவூலங்களாகக் கொண்டு இரையாற்றும் அண்ணா தன்னிகரற்ற பேச்சாளராகவும் நாடக ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கியதுடன் மக்கள் அன்பைப் பெற்ற சிறந்த தலைவராகவும் காலத்தை உருவாக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார். 

அவரது அறிவும் ஆற்றலும் மொழியும் இலக்கியமும் சிந்தனையும் செயலும் எதிர்கால மக்களுக்கு அரிய கொடையாகும். அரசியல் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகளை நாட்டுக்கு கிழமை தோறும் அளித்திட கடித இலக்கியத்தினை ஒப்பற்ற வடிவமாகத் தேர்ந்து வளர்த்துத் தமிழுலகுக்குப் புது வழி காட்டிய முன்னோடியாக ஒளிரும் அண்ணா.

நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் உரைநடைக்குக் கவிதை வனப்பும் இசையும் சேர்த்து, சொல்லாக்கங்களையும் தொடராக்கங்களையும் செய்ததுடன் புதுப்புது இலக்கிய வடிவங்களையும் ஈந்த அண்ணா தமிழின் துறைதோறும் கொடை நல்கிய இலக்கிய மொழிக்கொடை வள்ளலாகத் திகழ்கிறார். அரசியல் உலகைப் பேரறிஞர் அண்ணா எனப்புகழ்ந்து பெருமை பெறுகிறது.

மக்கள் இலக்கியம் 


அரசியல், இயக்கம், சாதி, செல்வம், பதவித் துணை ஏதுமின்றி அன்பு அறிவு பண்பு தொண்டு ஆகியவற்றை முதலாகக் கொண்டு அண்ணா, இலக்கியம் படைத்து வெற்றி கண்டுள்ளார். தி.மு.க.வை வளர்த்து தமிழ் நாட்டாட்சியை கைப்பற்றிய ஏற்றப் படைப்புகளையும் அளித்து புதுப்பாதை வகுத்த அரசியல் தலைவராக விளங்குகின்றார். - ஆய்வாளர் டாக்டர். ப.ஆறுமுகம் அண்ணாவின் கடித இலக்கியம் அண்ணா தம் எண்ணங்களை, செயல் திட்டங்களை, நெறிமுறைகளை வேண்டுகோள்களை மடல்களில் தொடர்ந்து வெளியிட்டு தமிழர்களைப் படிக்கச் செய்தார். பொதுவாக உணர்ச்சியைத் தூண்டியவர்கள் உண்டு. ஆனால் அண்ணா உணர்ச்சியை இன உணர்ச்சியை ஊட்டினார். அறிவை, பகுத்தறிவை தூண்டினார். ஏனைய மடல் இலக்கியங்கள் கல்வியறிவு பெற்ற நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்காக அற நெறிகளையும் வற்புறுத்துபவை. ஆனால் அண்ணாவின் மடல்கள், எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்காக எழுதப்பெற்றவை. உரிமைகளையும் சமூக நெறிகளையும் வற்புறுத்துபவை. சுருங்கச் சொன்னால் அண்ணாவுக்கு முன் எழுந்த மடல் இலக்கியங்கள் கற்றோர் இலக்கியம் அண்ணாவினுடையவை மக்கள் இலக்கியம்.

கடித இலக்கிய வரலாற்றில் அண்ணா பெறும் இடம் நிகரற்றதாகும்

இறுதியாக அண்ணாவின் கடிதங்கள் மனிதப்பண்பை உயிர்ப் பண்பாக வலியுறுத்தும் பண்பாட்டுப் பேழைகளாகத் திகழ்கின்றன. டாக்டர் கு,விவேகானந்தன்,எம்.ஏ.டி.எச்.இடி., எம்.ஃபில், பி.எச்.டி. உலக அறிஞருள் ஒருவர் அண்ணா ஏதென்ஸ் நகரின் இதயமாக விளங்கியவர் என்று இன்று போற்றப் படுகின்ற, சாந்த சொரூபி, சாக்ரடீசு, தர்க்க வாதத்தில் சிறந்த தத்துவ ஞானியாக மட்டுமே விளங்கியிருக்கிறார். நம் அருமைத் தமிழகத்தில் தோன்றிய அறிஞர் அண்ணாவைப்போல் சகல துறைகளிலும் அவர் சிறப்புப் பெற்றாரில்லை.

அடிமை விலங்கறுத்த அமெரிக்க நாட்டின் தந்தை ஆப்பிரகாம் லிங்கன், அடிமை அகற்றிய வீரர் என்று மட்டும் தான் வரலாறு பேசுகிறது. உலகம் போற்றும் நாடகம் பேராசிரியர் பெர்னாட்சா நாடகம் எழுதுவதில் மட்டும் மேதையாகத் திகழ்ந்திருக்கிறார். நாடகத் தலைவர் என்ற சிறப்புப் பெயரை பெற்ற அவர் ஏதோ ஒரே ஒரு நாடகத்தில் மட்டும் நடித்ததாகத் தெரிகிறது.

இலக்கிய மேதை சேக்ஸ்பியர் இலக்கிய வாசகத்தை மட்டுமே தனதாக்கிக்-  கொண்டிருந்திருக்கிறாரே தவிர பேச்சிலும் பிறவற்றிலும் சிறப்படையவில்லை. வால்டேர், ரூசோ போன்றவர்கள் தங்கள் எழுத்தால் மட்டும்தான் புரட்சிக்கு, வித்திட்டு இருக்கின்றனர். பிற செயல்கள் அவர்களை அண்டியதாகத் தெரியவில்லை.


எழுத்திலும் பேச்சிலும் மன்னன்
நாம் எண்ணிப் பார்க்கின்ற போது உலக மேதைகள் ஒவ்வொரு செயல்களில் சிறப்புப் பெற்றவராகத் திகழ்வதுதான் தெரிகிறதே தவிர, நமது அறிஞர் அண்ணாவைப் போல எல்லாத் துறைகளிலும் சிறந்தவர் என்ற பட்டத்தை பெற்றவர்களாக அவர்கள் இல்லை.

எல்லா துறைகளிலும் வல்லமை பெற்ற ஒரே ஒருவர் உண்டென்றால் அவர் நமது அருமை அண்ணாதான். தமிழ்நாடு செய்த தவப்பயனாக உலகில் எந்த நாடும் பெறாத பெறமுடியாத பெருமையை அண்ணாவால் நமது அருமை தமிழகம் பெற்றிருக்கிறது.

அண்ணாவின் எழுத்து, தலைசிறந்த இலக்கியமாகவும், கலைக்கருவூலமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும், வரலாற்றின் வடிகாலாகவும், அரசியல் ஆராய்ச்சியாகவும் புரட்சிப் பொறியாகவும், பகுத்தறிவுப் பட்டறையாகவும்,சீர்திருத்தச் செல்வமாகவும், பல்சுவைப் பகுதியாகவும் விளங்கும். அண்ணா தமிழ்நாட்டின் அண்ணா, தமிழர்களின் பொதுச் சொத்து. தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியம். தமிழர்களின் முன்னேற்றப் பாதை. பதுத்தறிவுத் திறவு கோல், கலைக் கலங்கரை விளக்கம்.

சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர்

அண்ணாதுரை, சமூக சீர்திருத்தத்திற்குப் புதிய மெருகு கொடுத்து. புதிய உணர்ச்சிகளை தழுவிப் போகாவிட்டால் கட்சிக்கு வளர்ச்சியில்லை எனக் கண்டார். அதனால் புதிய அமைப்புக்குப் பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்தார்
ப.ஜீவானந்தம்

அவரை அடைந்தது பெரும்பேறு
அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு ஒழுக்கம் எல்லாம் ஏற்பட்டுவிடும், வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள், திராவிடர்களிடையே அண்ணா என்றால் அண்ணாத்துரை அவர்கள்தான். எல்லோருக்கும் அண்ணாவாகும் தகுதி அவருக்குண்டு.


சிலர் தலைவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கின்றார். 

அண்ணாவைப் பற்றிய பிற அறிஞர்களின் கூற்று

தமிழர் சமூகத்திலே இடையே வந்து புகுந்து அல்லற்படுத்தும் மூடப்பழக்க வழக்கங்களை வேரோடு கிள்ளியெறியும் பாதையில் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் நிரம்ப உதவி புரிந்து வந்திருக்கின்றன.
அண்ணாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் தோழர் அண்ணாதுரையை நாம் அடைந்தது தனிப்பாக்கியம்தான்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
அண்ணாதுரை கலையறிந்தவர். தமிழ்நாட்டின் பழைய நிலையந்தவர். மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று மார்தட்டிக் கூறிய வீரர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று கோழைகளாய், மோழைகளாய் நாம் குன்றலாகாது. காளைகளாய்க் களிறுகளாய் வாழ்தல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர் அவர். தமிழ்க் குலத்தை அரிக்கும் வேர் புழுக்களை அழித்தாலன்றித் தமிழகம் தழைக்குமாறில்லை. ஊழ்வினையே பேசி ஆழ்வினையற்றிருக்குமளவும் நாம் உய்யுமாறில்லை என்று உறுதியாக கருதுகின்றவர் அவர்.
ரா.பி. சேதுப்பிள்ளை.

அரசியல் துறையில் குடியாட்சியின் சிறப்பைக் காத்து அரசியல் நாகரீகத்தையே ஒரு பண்பாடு என விளங்கச் செய்தவர்.
மு.வ.(தமிழ்ப் பேரொலி- பக் 175)

அண்ணாத்துரை எனும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பதில்
வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செவ்வரசு நாவான்.
அற்புதம் சூழ் மாலுமி என்று ஆடு
திரு.வி. கல்யாணசுந்தரனார்

முடிவுரை

ஒப்புக் கொள்ளப்படும் தலைவன் எனும் முழுமைக்கு சில இலக்கணங்களுக்குரிய பூரண இலக்கியமாக அறிஞர் திகழ்ந்தார்.

அதை இலக்கணங்களை நான் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்துகிறேன்.

1. பேச்சால், மூச்சால், நினைவால், செயலால் எந்த நேரத்திலும் தனது நாட்டிற்கோ, மக்களுக்கோ, எந்த முகாமினின்றும் தீங்கு வரப்பொறுக்காதவன் மட்டுமல்ல, வருகின்ற தீங்குகளைச் சுட்டெரிக்கும் கனல் வெறியின் உத்வேகமாக இருப்பவன்.

2. தன்னை அழித்து நாட்டைக் காப்பாற்றும் உணர்வில் மெழுதுவர்த்தியின் பண்பு கொண்டவன்.

3. விசாலமான இதயத்திற்கு உரிமையாளன். தனது இதயக் கதவைத் திறந்து விட்டு அனைவரையும் அணைத்துக்கொள்ளும் தாயன்பு மிக்கவன்.

4. சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இலட்சியப் பிடிப்பு, அணைத்துச் செல்லும் போக்கு, தகுந்த நேரத்தில் தலைமைக்-குரியவனாகத் தன்னை உயர்த்தி நிறுத்தல் ஆகிய பண்புகளின் கூட்டுத் தொகுப்பாக நிற்பவன்.

5. மன்னிக்கும் மாண்பு, இன்று போய் நாளை வா எனும் அறநெறி உயர்வுள்ளம் இவைகளின் மொத்தச் சேர்க்கையாக தன்னை அறிமுகம் செய்பவன்.

6. தன்னைத் தாழ்த்தி, மற்றையோரை உயத்த்துவதன் மூலம் தன்னை நிரந்தரமாக உர்த்திக் கொள்ளுகின்ற வாய்ப்பை மொத்த சமுதாயத்தின் மூலம் சரளமாகப் பெறுபவன்.

7. சுயநலத்தைச் சுட்டெரித்தவன். பொதுநலத்தைப் பிறப்புரிமையாக்கியவன். 8. இரக்கத்திற்குச் சொந்தக்காரன், இதயத்திற்கு உரிமையாளன்.

9. அறிவு, ஆற்றல், திறமை, தகுதி, தரம், தன்மை, பண்பு, பாசம், இன்னபிற பண்புகளின் பெட்டகம்,

10, நிழல் தருவதில் ஆலமரம், பரம்பரைகளை வளர்ப்பதில் வாழை.

மேற்சொன்ன இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள விருப்புவோர் எழுந்து நிலைத்து விட்ட அண்ணா எனும் நிறுவனத்தை அணுகலாம். அவரைப் பாராட்டாதோர் இல்லை - அவரை ஒப்புக்கொள்வதில் சிரமப்பட்டோரும் இல்லை.
சுடர் விளக்கே, சுந்தர முகமே, எங்களது நினைவு செஞ்சில் என்றென்றும் நினைவு பெற்றிருக்கும்.


குமாரி கலைவாணி இளங்கோ

சிங்கப்பூர்

No comments:

Post a Comment