Sunday 31 October 2021

பேரறிஞர் அண்ணாவும், எமிலிஜோலாவும்!!. (Émile Zola)

 பேரறிஞர் அண்ணாவும்,  எமிலிஜோலாவும்!!. (Émile Zola)






பெரியாரின் மனிதநேய செயல்வடிவம் பேரறிஞர் அண்ணா அவர்கள். நிறையப் பொருட்செலவு செய்தும் தனக்கு முன்பின் தெரியாத, ஒருவிடுதலைப் போராட்ட வீரருக்கு, வாடிகனில் உள்ள கத்தோலிக்க மதகுரு அவர்களிடம் வேண்டுகோள் வைத்து விடுதலை பெற்றுத் தந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!. அருள்கூர்ந்து இந்த வரலாற்றை ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள்!!

எழுத்து வேந்தன் எமிலிஜோலா பிரான்ஸ் நாட்டின் இதழாசிரியர்; சிறந்த வழக்கறிஞர்; மிகச்சிறந்த மனிதாபிமானி. அவன் நடத்திய இதழ்கள் அகோரிபிகாரோ. பிரான்ஸ் நாட்டின் விபச்சாரத் தடைச்சட்டம் போடப்பட்டது அதன் காரணமாக நானா என்கிற விபச்சாரி காவல்துறையினரால் துரத்தப்பட்டுத் தப்பிவரும் போது ஒரு சிற்றுண்டி கடையில், எமிலிஜோலாவும், அவரது நண்பர் செஸானாவும் (Cézanne) உணவருந்திக் கொண்டிருந்தனர் ஓடிவந்த நானா எமிலிஜோலாவிடம் தஞ்சம் அடைகிறாள். ஜோலா வந்தவளை என்னவென்று கேட்கிறார். நானா தன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறாள். காவலர்கள் நெருங்கி வருகிறார்கள்; அவளைக் கைது செய்ய முயல்கிறார்கள். உடனே ஜோலா ,அவளைத் தொடாதீர்கள் அவள் என் அன்பார்ந்த காதலி அவளைக் கைது செய்யத் தேவை இல்லை என்று மறுக்கிறார்.

பிரான்சின் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு ஒருவர் பாதுகாப்பு அளித்தால், அவளை எந்தக் குற்றத்தின் மீதும் கைது செய்யக்கூடாது என்பது அந்தகாலத்து நிலை. காவலர்கள் திரும்பிவிட்டனர். அன்புள்ள நானா நீ ஏன் இந்தத் தொழிலில் ஈடுபட்டாய்? என்ன காரணம்? என்று ஜோலா கேட்கிறார். அவள் தன் குடும்பச் சூழ்நிலை, வயது வந்த பெண் தனிமையில் இருப்பதால் வரும் கேடு; வறுமை ; ஆகியவற்றை எடுத்துச் சொல்கிறாள். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜோலா ,மனம் குமுறிப்போய், அவளையும் அவள் பிரச்சினைகளையும் வைத்தே ஒரு நூல் எழுதினார் அதன் பெயர்தான் நானா.

அதன் மூலம் எமிலிஜோலா பிரான்ஸ் நாட்டின் எழுத்து வேந்தன் ஆனார். அப்படி என்னதான் எழுதினார்? விபச்சாரத்தை ஒழிக்காமல் விபச்சாரியை ஒழிக்கமுடியுமா? பிச்சையை ஒழிக்காமல் பிச்சைக்காரனை ஒழிக்க முடியுமா? குற்றம் இருப்பதால் குற்றவாளி தோன்றுகிறான் வறுமை இன்றி வாழ முடியாதவன் திருடனாகிறான்!! கொள்ளைக்காரனாகிறான்!! என்று சொல்லி மக்களைச் சிந்திக்கத் தூண்டினார். அப்படிப்பட்ட எமிலிஜோலாவிற்கு ஒரு வழக்கு வந்து சேர்ந்தது.

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த தளபதி டிரைபெஸ் (Alfred Dreyfus) பிரான்சின் பல போர்களில் தன்நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தவன். பிறப்பால் அவன் ஒரு யூதன். அவன் வாழ்ந்த காலத்தில் உலகம் முழுவதும் யூத எதிர்ப்பு மிகக்கடுமையாக இருந்தது. அதன் தாக்கம் பிரான்ஸ் நாட்டிலும் எதிரொலித்தது. யூதனொருவன் நம்நாட்டுத் தளபதியாக இருப்பதா? என்று பொறாமை கொண்ட சிலபேர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, டிரைபசுக்கு இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டு, டெவில்ஸ் தீவில்(Devil's Island), சிறையில் அடைக்கப்பட்டான். மனைவி மக்கள் உடன்பிறந்தோர் கதறி அழுதனர் வழிவகைத் தெரியாமல் தவித்தனர். செய்தி எமிலிஜோலாவின் காதுகளை எட்டுகிறது. முன்பின் சந்தித்திராத மனிதன் டிரைபஸ். ஓர்மனிதனுக்கு அதுவும் குற்றமற்றவன்; குறிப்பாகப் பிரான்ஸ் நாட்டின் பல வெற்றிகளுக்குக் காரணமான நல்ல நிர்வாகிக்கு , அவன் யூதன் என்ற ஒரே காரணத்தால், நாம் வாழும் நாட்டில் நம் காலத்தில் இப்படி ஒரு அக்கிரமமா ? என்று ஆர்த்தெழுந்தார். டிரைபஸின் எதிரிகளால் தாக்கப்பட்டார் !!. அவருடைய அச்சகம் சூறையாடப்பட்டது !!


இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டுக் கருப்பு உடை அணிந்து நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில் ஏறி, தன் வறுமை நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் பசியையும் பிணியையும் பொறுத்துக் கொண்டு ராணுவ நீதிமன்றத்தில் வாதாடி டிரைபசுக்கு வெற்றி தேடித்தந்து விடுதலை அடையச் செய்கிறார். விடுதலை பெற்ற டிரைபஸ், இழந்த பொறுப்பினை மீண்டும் பெற்று அவசர அவசரமாக எமிலிஜோலாவை காணவருகிறான். எமிலிஜோலா பிணமாகிக் கிடக்கிறார் !! இறுதிச்சடங்கு நடைபெறுகிறது மனிதநேய காவலன் எமிலிஜோலா மறைந்தான். இது பிரான்ஸ் நாட்டின் ஒரு வரலாற்றுச் செய்தி.


இதோ நம் பேரறிஞர் அண்ணா முதல்வரான ஓர் ஆண்டில் அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இத்தாலியில் வாடிகன் சிட்டிக்குச் செல்கிறார். உலகில் 150 கோடிக்கும் மேலான கிறித்துவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம், போப்பை சந்திக்கிறார். போப் அவர்கள் அண்ணாவின் ஆங்கிலப்புலமை; அவரின் எளிமை தோற்றப்பொலிவு ; ஆகியவை கண்டு மகிழ்ச்சி அடைகிறார் .


உடனே அண்ணா அவர்கள் நான், தங்களைச் சந்திக்கவந்ததில் ஒரு முக்கியசெய்தி ஒன்று உண்டு அதைத் தாங்கள் முடித்துத்தர வேண்டும் என்று வேண்டுகிறார். போப் அவர்களும் என்னால் ஆனதைச் செய்கிறேன் என்று உறுதியளிக்கிறார்.


அண்ணா அவர்கள் கோவாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ரானடே, எனப்படும் கோவா விடுதலை போராளி, போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் சிறையில் வாடிக்கொண்டு உள்ளார் கோவா விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே அவரை விடுவிக்கத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று போப்பிடம் கேட்டுக் கொண்டார். போப் அவர்கள் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உறுதியளிக்கிறார் . விடுதலைக்கு அரசாங்க சடங்குகள் முடிய மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை பொறுத்துக் கொள்க என்று போப் கேட்டுக்கொள்கிறார். அண்ணா, மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து, திருக்குறள் ஆங்கிலப் பதிப்பையும், தஞ்சாவூர் தட்டையும், காஞ்சிபுரம் பட்டாடையும், அன்பளிப்பாகத் தந்துவிட்டு விடைபெறுகிறார்.


அதன் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள் நோயின் ஆதிக்கத்தால் சிலமாதங்களில் இயற்கை அடைகிறார். அண்ணா அவர்கள், ரானடேவை, நேரில் கண்டவரல்ல !!. கோவாவின் விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை ஏட்டில் தான் படித்தார் அதன்மூலம் அறிந்தவற்றை வாய்ப்புக் கிடைத்த போது மனிதநேயம் பற்று இருந்த காரணத்தால் யார் எவர் என்ற பேதமில்லாமல் மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்கிற கண்ணியத்தோடு கடமையாற்றினார். விடுதலை பெற்ற ரானடே, சென்னை வந்து தமக்கு விடுதலை பெற்றுத்தந்த அண்ணாவைப் படமாகத்தான் பார்க்க முடிந்தது. மனிதநேயம் அண்ணாவிடம் இருந்தது; பிரெஞ்ச் வழக்கறிஞர் எமிலிஜோலாவிடம் இருந்தது.

மனிதநேயம் நம்மிடம் இருக்க வேண்டாமா?.


- மு.ந.நடராசன்( மறைவு)


இந்தக் கட்டுரையைக் குவைத்தில், 2012ல் பார்த்த ஒரு இஸ்லாமிய நண்பர் லியாகத்அலி அவர்கள் பணிவாய்ப்பாகப் புனே சென்று அறிஞர் அண்ணாவால் லிஸ்பன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மோகன் ரானடேவை சென்று பார்த்து நலனறிந்து , 93 வயதில் அவர் விடுவிக்கப்பட்ட நிகழ்வை நன்றி மறக்காமல் நினைவுகூர்ந்து, தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவுசெய்துள்ள செய்தியை அறிகிறோம். ரானடே நன்றி உணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

அது பற்றிய விடுதலை 15 செப் 2013 அன்று வெளியான செய்தி இணைப்பில்



https://www.indiatoday.in/india/story/mohan-ranade-who-fought-for-goa-s-liberation-dies-at-90-1556032-2019-06-25



https://www.indiatoday.in/india/story/mohan-ranade-who-fought-for-goa-s-liberation-dies-at-90-1556032-2019-06-25





 









No comments:

Post a Comment