Friday 2 July 2021

தத்துவப் போர் – இளம்வழுதி

 தத்துவப் போர் – இளம்வழுதி

இந்தியாவின் வரலாறு என்பதே இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான தொடர் போராட்டம் தான். வடக்கே ஆரியம், தெற்கே  திராவிடம். இந்த இரு தத்துவங்களே இந்தியாவின் திசைவழி போக்கை தீர்மானிக்கிறது.


இதன் விளைவாக இந்திய ஜனநாயக அமைப்பு முறையில் நடத்தப்படும் தேர்தல்களில் அது வெளிப்படும். ஆனால், அது முழுமையான ஒரு போர்க்களமாக இருந்தது இல்லை. காரணம் வடக்கே உள்ள ஆரிய  சித்தாந்தம் பலவகைகளில் மற்றவர்களோடு ஐக்கியப்பட்டும், சிதைத்தும், ஊறுவிளைவித்தும், உட்செரித்தும் இருப்பதுமே காரணமாக உள்ளது. வடக்கே தோன்றிய எந்த ஓர் அரசியல் இயக்கமோ சமுதாய இயக்கமோ ஆரியத்திற்கு எதிரான, ஒரு வலுவான, தத்துவத்தை முன்வைக்கவில்லை அல்லது அவர்களால் அது முடியாமல் போனது. இதன் காரணமாகவே ஆரியம் தனது ஆக்டோபஸ் கரங்களால் வட இந்தியாவில் பெரும் பகுதியை எளிதில் விழுங்கிவிட  முடிந்தது; முடிகிறது.


ஆனால் அவை தமிழ்நாட்டில் எடுபடாமல் போனதற்குத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் தான் காரணம். இதுவரை இல்லாத வகையில், இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் மட்டும் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, ஏன் திமுகவின் வெற்றி அவசியமானதாகிறது? ஏனென்றால், இந்த தேர்தல்தான் வெளிப்படையாக ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான போராக அறிவிக்கப்பட்டு போர்க்களம் கண்டது. அதில் திராவிடம் வெற்றியும் பெற்றது.


மேற்கு வங்காளத்திலும் கேரளத்திலும் நடைபெற்ற தேர்தலோடு தமிழ்நாட்டில் நடந்த தேர்தலை ஒப்பிட முடியாது. காரணம், தமிழ் நாட்டில் நடந்தது இரு தத்துவங்களுக்கு இடையிலான போர். கேரளத்தில் நடந்தது இரு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போராட்டம். மேற்கு வங்காளத்தில் நடைபெற்றது இரண்டு தனிப்பட்ட அரசியல் ஆளுமைகளுக்கு இடையிலான சண்டை. நாம் இந்த மூன்று மாநிலங்களின் தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்து பார்த்து இதைப் புரிந்து கொள்ளலாம்.


மேலே கூறப்பட்டுள்ளவற்றைச் சற்று நுட்பமாக கவனியுங்கள். முதலில், மேற்குவங்கம். ஏன் இதை இரண்டு தனிப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு இடையிலான சண்டை என்று சொல்லுகிறோம் என்றால், அகண்ட பாரதமே எங்கள் கொள்கை! இந்து ராஜ்ஜியமே எங்கள் லட்சியம்!! என்று சொல்லிப் பல மதக் கலவரங்களைத் தூண்டி, பல லட்சம் மக்களைக் கொன்று குவித்து, அதன் விளைவாக, விளைச்சலின் அறுவடையாக, 2014ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தைக் கைப்பற்றி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார் பிரதமர் மோடி. அதன் தொடர் விளைவாக, பல மாநிலங்களிலும் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. பல மாநிலங்களை தங்களின் அதிகார பலத்தைக் கொண்டும் பண பலத்தைக் கொண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சிக் கவிழ்ப்புகளின் மூலமாகவும் தேர்தல் தில்லுமுல்லுக்கள் மூலமாகவும் ஆட்சியில் அமர்ந்தது. 


மோடியின் குரலாக ஒலித்த ஊடகங்களும், மோடியின் ஆதரவாளர்களும் இந்திய ஒன்றியம் முழுவதும் பாஜக மட்டுமே பலமான ஒற்றை தேசியக் கட்சி என்றும் இது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றும் முழங்கினர். இதுவே இந்து ராச்சியத்தின் முதல் வெற்றி என்று பாஜகவும் சங்பரிவாரும் கொக்கரித்தன. ஆட்சியில், நிர்வாகத்தில், செயலற்ற தற்குறிகளாக இருந்தாலும், மதவெறி பிரச்சாரத்தாலும் தேர்தல் தில்லுமுல்லுக்களாலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அசுர பலத்தோடு வெற்றி பெற்றது. மீண்டும், மோடி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். இது குறிப்பிடத்தக்க ஒன்று.

தனிப் பெரும்பான்மையின் பயனாக, நினைத்த மாத்திரத்தில், நினைத்த காரியங்களைச் சட்டமாக்கக் கூடிய வல்லமையும் ஆற்றலும் பெற்றவராக மோடி தன்னை முன்னிறுத்தி கொண்டார். பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்; நெருக்கடிகளைக் கொடுத்தார். அதற்கெல்லாம் அஞ்சாத ஆளுமைகளை கண்டு திகைப்பும் கோபமும் கொண்டார். அதன் விளைவாக அம்மாநிலங்களில் மதக்கலவரங்களை சிண்டு முடிந்து விடும் வேலையை தன் சகாக்கள் மூலம் செய்தார். மோடிக்கு அடிபணிந்தவர்கள் பிழைத்தார்கள், ஆட்சி நீடித்தது; எதிர்த்தவர்கள் அழிந்தார்கள், ஆட்சி கவிழ்ந்தது; என்ற பிம்பத்தை உருவாக்கினார். அதற்குச் சம்மட்டி அடியாக விழுந்த அடி தான் ஆளுமை மம்தாவின் எதிர் சவாலும் அரசியல் தன்மையும்.


அதன் காரணமாகவே ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மோடி, அமித்ஷா, சங்பரிவார் கூட்டம், மேற்கு வங்கத்தை முற்றுகையிட்டது. ஒன்றிய அரசின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ராணுவம், துணை ராணுவம் என்று அனைத்தையும் சேர்த்து வைத்து இடித்தார்கள் மம்தா எனும் ஒரு ஆளுமையை வீழ்த்த.

முதலில், மோடி ஒருவரே சர்வ வல்லமை பொருந்திய தலைவர் என்கிற பிம்பத்தை மேற்குவங்கத்தில் கட்டமைக்க முற்பட்டனர். இரண்டாவது, அரசு நிர்வாகத்தை கொண்டு திரிணாமுல் காங்கிரசைச் சிதைக்கும் வேலையில் ஈடுபட்டனர். மூன்றாவது பிரிவினை மதக்கலவரங்களைத் தூண்டும் விதமாக சங்பரிவார் அமைப்புகளின் மூலம் மோதல்களை உண்டுபண்ணும் போக்கை கடைப்பிடித்தார்கள். நான்காவது திரிணாமுல் காங்கிரசைச் சார்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டு ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார்கள்.

இவற்றையெல்லாம் செய்து முடித்த திருப்தியில், மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற மோடியும் அமித்ஷாவும் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தனர். மம்தாவிற்கு அறைகூவல் விட்டனர். மோடியின் ஜம்பம் மேற்குவங்கத்தில் பலிக்காது என்று காட்டவும், பலரிடம் இருந்த தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து விடவும் களத்தில் இறங்கினார் மம்தா. சண்டைக்குத் தயாரானார்.


இதனைச் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராகவும் கருதாமல், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாகவும் கருதாமல், தன் தனிப்பட்ட ஆளுமையை முன்னிறுத்தி மம்தா களமிறங்கி சங்பரிவார் கூட்டத்தை வீழ்த்த  நினைத்தார். அதன் காரணமாகத்தான் நாம் இதை இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கான சண்டை என்று கருதவேண்டி உள்ளது.

நாம் இதைச் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராக கருத வேண்டியதில்லை என்பதற்கு வலுசேர்க்க இன்னும் சில காரணங்களும் உள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா தன்னை ஒரு பார்ப்பன பெண்ணாகவே முன்னிறுத்திய செய்தியையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும். மேலும் அவர் ஆரியத்திற்கு எதிராகவோ, சங்பரிவார் கூட்டத்தின் இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராகவோ, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்கவில்லை. மாறாக என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் தடைக்கற்களாக ஒன்றிய அரசாங்கமும் மோடியும் இருப்பதாக கருதி மோடி எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்தார். அதன் விளைவாகத்தான் நாம் இதைத் தத்துவப் போராட்டமாக கருதவில்லை. நாக்பூரிலிருந்து மம்தாவிற்குப் பெருமளவில்  எதிர்ப்பு கிளம்பாமல் இருந்ததும், நாம் இங்கு உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று.

மம்தா, மோடி என்று இரண்டு ஆளுமைகள் ஒரு குத்துச்சண்டை வளையத்திற்குள் தங்கள் ஆளுமையை நிரூபிக்க நடத்தப்பட்டதாக தான் இந்தத் தேர்தலை நாம் பார்க்க முடியுமே ஒழிய இது தத்துவங்களுக்கு இடையிலான போர் அல்ல. அரசியல் ரீதியிலான போராட்டமும் அல்ல.


கேரளத்துக் கதையே வேறு. கேரளம் இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் மேற்குவங்கத்தில் ‘ஜோதிபாசு’க்குப் பிறகு கேரளத்தில் தான் இடதுசாரிகள் வலிமையான அரசியல் சக்தியாக உள்ளனர். கேரளத்து அரசியல் களம் என்பது இடதுசாரிகள், சிறுபான்மையினர், காங்கிரஸ்காரர்களால் நிறைந்தது. மூன்றுமே கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கக் கூடியவர்கள்.


முற்போக்கு சிந்தனையும் அறிவியல் பார்வையும் பொதுவுடைமை அரசியலையும் முன்னெடுக்கும் செஞ்சிவப்பு களமே கேரளத்து அரசியல்.


மத நம்பிக்கைகளும் சாதியின் மீதான உள்ளார்ந்த பெருமையும் வர்க்க நிலைகளுக்குத் தக்க மனநிலையும் வாழ்வியல் சூழலும் கொண்ட மக்கள் திரளே கேரளம். இவர்களை தங்கள் வசப்படுத்த அவர்களின் மத நம்பிக்கைகளில்  முக்கியமான  ஐயப்பன் கோவில் விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. ஆட்சியில் இருந்த பினராய் விஜயன், இடதுசாரி அரசாங்கம், தொடக்கத்தில் இவ்விவகாரத்தில் பெரும் குழப்பமும் சஞ்சலமும் கொண்டது. அதன்பொருட்டு மத நம்பிக்கை கொண்ட மக்களிடையே முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இடமும் பெரும் சலசலப்பை விவாதங்களும் காரசாரமாக இந்திய ஒன்றியம் முழுவதும் எதிரொலித்தது. நீதிமன்ற தீர்ப்பை தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டு, ஐயப்பனை வைத்து இடதுசாரி அரசாங்கத்தில் பிளவை உண்டு செய்து, மக்களிடையே பதற்றத்தை வளர்த்து, கலவரங்களை அங்குமிங்குமாகத் தொடங்கும் வேலையைச் செய்தது ஏபிவிபி. இதர சங்பரிவார் அமைப்புகளின் நேரடி வழிகாட்டுதலில், டெல்லியின் அதிகாரத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி அரசியல் காய் நகர்வுகளை செய்தார்கள் மோடியும் அமித்ஷாவும். ஆனால் முற்போக்குவாதிகளும் சிறுபான்மையினரும் பொதுமக்களும் இடதுசாரி அரசாங்கத்தின், பினராய் விஜயன், பக்கமே நின்றனர்.


கேரளத்து அரசியல் களத்தை ஏன் நாம் தத்துவ ரீதியிலான களமாக காண முடியவில்லை என்று சொன்னால், இடதுசாரி அரசாங்கம் என்பது சங்பரிவார் கூட்டங்களுக்கும் ஆரிய சித்தாந்தத்திற்கும் எதிரானதாக  இருந்தாலும், அவர்கள் சாதியை மையப்படுத்திய இந்து தர்மத்தை எதிர்க்காமல் வர்க்க பேதத்தை மட்டும் முன்னிறுத்தி எதிர்த்து அரசியல் களம் கண்டவர்கள். அதன் விளைவாகத்தான் அவர்கள் சாதியின் மீது உள்ளார்ந்த  பெருமையும், வர்க்க நிலைகளில் சமநிலை வேண்டும் என்பதைக் குறித்தும் பேசத் தொடங்குகிறார்கள். இதில் நாம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்று, அவர்கள் 10% உயர் சாதி இட ஒதுக்கீட்டை ஆதரிக்கக் கூடியவர்கள். எப்போதும் ஆரிய சித்தாந்தத்திற்கு எதிராக மன நிலைக்கு வருவது இல்லை. இதன் காரணமாகத்தான் கேரளத்து அரசியல் ஆரியத்திற்கு எதிரான வலிமையான தத்துவப் பின்புலம் கொண்ட அரசியல் களம் அல்ல என்று நாம்  கருதவேண்டி உள்ளது.


பெரும் அழிவிற்கும் உயிர் சேதத்திற்கும் காரணமாய் அமைந்த கொரோணா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி, இந்தியாவையும் தாக்கத் தொடங்கியது. இதனை பல்வேறு தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகம் சூழலியல் சார்ந்து இயங்க கூடிய பல்வேறு தளங்களில் ஆளுமைகள் சுட்டிக்காட்டிய பிறகும், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இதனைக் காது கொடுத்துக் கூடக் கேட்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. அதனால் இந்திய ஒன்றியத்தில் பல மாநிலங்கள் செய்வதறியாது திக்கு தெரியாமல் இருப்பதைக் கொண்டு தங்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


அவ்வேளையில் ஒன்றியத்திற்கு முன்னோடியாக கேரளம் தன் முற்போக்கு சிந்தனைகளையும் பொதுவுடைமை கருத்தையும் நெஞ்சில் ஏந்தி, அறிவியலுக்கு முழுமுதல் இடம் கொடுத்து செயல்திட்டம் வகுத்து, உலகநாடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கித் தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக கையில் எடுத்தது. நோயுற்றவர்களைப் பாதுகாப்பது ஒருபுறம்; மக்களை அரவணைப்பது ஒருபுறம்; மாணவர்களின் கல்வியில் அக்கறை ஒருபுறம்; வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாநில மக்களை மீட்டெடுப்பது ஒருபுறம், என்று அனைத்துத் தளங்களிலும் தன் விஸ்தாரமான அரிவாளைச் சுழற்றியது இடதுசாரி அரசாங்கம். அதன் விளைவாக பல நாடுகளின் இதழ்களும் அமைப்புகளும் பாராட்டினர், கௌரவித்தனர். மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றார் பினராய் விஜயன். தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தன் அரசாங்கத்தின் வெற்றியை தன் செயல்பாடுகளின் மூலம் உறுதி செய்திருந்தார்.


தமிழ்நாட்டு அரசியல் களம் என்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே இரு துருவங்களாக மாற்றியமைக்கப்பட்டது. அது வெறும் அரசியல் துருவங்கள் அல்ல; இரு தத்துவ துருவங்களாக இருந்தது. கேரளத்தில் நடந்த அரசியல் சதுரங்கம் போட்டிக்கும் மேற்கு வங்கத்தில் நடந்த குத்துச்சண்டைக்கும் முற்றிலும் வேறுபட்ட களம் தமிழ்நாட்டு தேர்தல் யுத்த களமாக இருந்தது. தமிழ்நாட்டில் முருகனை முன்னிறுத்தி மத துவேஷக் கருத்துக்களைப் பரப்பி சிறுபான்மை மக்களை அச்சம் கொள்ள வைக்கும் விதமான கருத்துக்களைப் பேசியும் எழுதியும் பிரச்சாரம் செய்தும் இந்துக்களின் வாக்கு வங்கியைத் திரட்டும் திட்டத்தைத் தீட்டிச் செயல்பட்டன சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும். திராவிட இயக்கம் இந்துக்களுக்கு எதிரி என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைத்துப் பொய் பிரச்சாரம் செய்தது. இதனை நீங்கள் நுட்பமாக கவனித்தால், தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவர்கள் முருகனை வைத்து அரசியல் செய்ததின் நோக்கம் விளங்கும்.


அவர்களின் திட்டத்திற்கு வேறு வேறு வடிவங்கள் கொடுத்தனர். அது என்னவென்றால் சித்தாந்தங்களைத் தாங்கிய தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதை உடைப்பதை ஒரு வேலையாக செய்தனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவருடைய சிலைகள் அவமதிப்புக்கும் உடைப்புக்கும் உள்ளானது. அதை கண்டு இன்பம் அடைந்தனர். இதில் குறிப்பிடத்தக்கது எந்த ஒரு சாதி தலைவரும் சாதி சங்கத் தலைவர்களையும் தலைவர்களாக எண்ணிக்கொண்ட தலைவர்களின் சிலைகளும் எந்த ஓர் அவமதிப்புக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. அதற்கு மாற்றாக அவர்களை வலிந்து தங்களின் தலைவர்கள் என்று அப்பட்டமான ஒரு பொய் பிரச்சாரத்தைக் கையிலெடுத்தனர். எடுத்துக்காட்டிற்கு எம்ஜிஆர், பெருந்தலைவர் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் போன்ற தமிழ் நாட்டின் செல்வாக்கு பொருந்திய தலைவர்களை தங்கள் தலைவர்களாக திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு இங்குள்ள சிலர் கைப்பாவையாக இருந்து உதவினர்.


ஏன் இவர்கள் தமிழ்நாட்டிற்கு இவ்வாறான செயல் திட்டத்தை உருவாக்கினார்கள்? அதுதான் சித்தாந்தத்தின் வலிமை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இவர்களின் திட்டங்களுக்குத் தடையாகவும் பெரும் மக்கள் செல்வாக்குப் பெற்ற தத்துவத்தின் அடையாளமாகவும் இருந்தது. அது இவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியது. இரண்டாவது பாஜகவுக்கு தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க பலமும் இல்லை. அவர்கள் வர்ணாசிரம தத்துவமும் இந்து தர்மமும் இங்கு எடுபடவும் இல்லை. பெயருக்குக் கூட மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் சாதிய வாக்குகளைக் குறிவைத்து, சாதியத் தலைவர்களை தங்கள் முன்னோடியாக முன்னிறுத்தி பலம் சேர்த்தனர். இதில் நுட்பமாக செல்வாக்கு பொருந்திய மக்கள் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்களை தங்கள் தலைவர்களாக பயன்படுத்தினர். இவ்வாறான உளவியல் தாக்கத்தையும் மனக் குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தினர்.

பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, ஒரு பெரும் மக்கள் செல்வாக்கும் வாக்கு வங்கியும் கொண்ட அதிமுகவை பல துண்டுகளாக உடைத்து; பல தர்மயுத்தங்களை அரங்கேற்றி; மக்களையும் ஆட்சியாளர்களையும் குழப்பம் அடையச் செய்து; அக்கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் தங்கள் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்தனர். மாநில அரசாங்கத்தை இரு வாய் பேசா பொம்மைகளைக் கொண்டு ஆட்டி வைத்து, ஒன்றிய அரசு தன் அதிகார விளையாட்டைத் தொடங்கியது. அதிகார வர்க்கத்தின் உச்சி முதல் அடி வரை தங்கள் சித்தாந்த பின்புலம் கொண்ட அதிகாரிகளை நியமித்து, முழு அரசும் அரசு இயந்திரமும் தங்கள் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று வேலை செய்தனர். கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புத் திட்ட வரையறைகள், சட்டத்துறை என்று தன் ஆக்டோபஸ் கரங்களைக் கொண்டு தமிழ் நாட்டின் அத்தனை துறைகளையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


பல ஆயிரம் சங்பரிவார் ஆட்களைக் கொண்டு, சிறு குறு கிராமங்களை இலக்காகக் கொண்டு, அம்மக்களுக்கு உதவி செய்வதாக சொல்லி, சில மக்களிடையே நன்மதிப்பைப் பெற்று அவர்களைக் கொண்டு தங்களின் விஷமத்தனமான இந்துத்துவ கொள்கைகளை பிரச்சாரம் செய்தனர். சாதி எண்ணம் கொண்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர்களின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்து, தங்களுக்கு ஆட்களின் எண்ணிக்கையைப் பலப்படுத்திக் கொள்ளவும், இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் தங்கள் கொள்கைகளைப் பரப்பவும் பயன்படுத்தினர்.


அவர்களுக்கு இலக்கு கொடுக்கப்பட்டு சன்மானங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டு தேர்தல் களம், யுத்தகளம் என்று சொல்வதற்கான அனைத்து காரணிகளும் ஒத்துப்போவதை இங்கு நாம் காண முடியும். ஒரு நிழல் யுத்தத்தையே தேர்தலுக்கு முன்பு பாஜக தமிழகத்தில் செய்து வந்தது. இதன் விளைவே தத்துவரீதியாக ஆரியர்களா? திராவிடர்களா? என்று யுத்தம் வடிவமைக்கப்பட்டது. களம் கண்டது, திமுக கட்சி ரீதியாக திராவிட தத்துவத்தின் பிரதிநிதியாகவும் நீதிக்கட்சியின் நீட்சியாகவும் அரசியல் பயணத்தைத் தொடர்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்கு பிறகான திமுகவின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக நாக்பூர் வாசிகள். அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருவரும் தங்கள் கொள்கை பாதை திராவிட அரசியல் என்றே பயணித்தனர். திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஓர் அசல் திராவிட கட்சியாக என்றுமே நடந்துகொண்டதில்லை. வளம் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்திலேயே திராவிடத்தை  பார்த்தார்களே ஒழிய அதை தத்துவக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. இப்படியான ஒரு படிப்பினை, வரலாறு உண்டு. அதனைக் கொண்டே தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது யார் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்கிறார்களோ அதனடிப்படையிலேயே தமிழ்நாட்டின் அடுத்த அரை நூற்றாண்டு கால அரசியல் தீர்மானிக்கப்படும் என்று உணர்ந்தனர்.


கட்சி ரீதியாக அதிமுக பிளவும் தலைமையில் குழப்பம் கொண்டிருந்த வேளையில், திமுக ஏகமனதாக திரு மு.க.ஸ்டாலின் அவர்களைத் தலைமையாக ஏற்றது. அவர் தலைமையேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. 


இதில் சில அதி முக்கியமான சம்பவங்களை குறிப்பிடவேண்டும். முதலில், முழுமையாக அந்த வெற்றிடம் மு.க.ஸ்டாலின் அவர்களால்  நிரப்பப்பட்டது. இரண்டாவது, வெற்றிடம் என்று கிளம்பிய திடீர் போராளிகள் அத்தனை பேரையும் மக்கள் புறக்கணித்தனர். மூன்றாவது, திராவிட ஒவ்வாமை கொண்ட ஆர்எஸ்எஸ் கைக்கூலிகள் திமுகவை ஆதரிக்காமல் மறைமுகமாக பிஜேபிக்கு உதவினர்.


நான்காவது, திமுக தங்களின்  கூட்டணியை இதுவரை அரசியல் கூட்டணி என்றும் தேர்தல் கூட்டணி என்றும் சொல்லும். இம்முறை கொள்கை கூட்டணி என்று முன்மொழிந்து, தேர்தலுக்கு முன்பாகவே மூன்றாண்டுகளாக பயணத்தைத் தொடர்ந்தது. அதன் விளைவே இத்தேர்தலை ஆரிய திராவிட போராக  முன்னிறுத்தி அறைகூவல் விடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது, தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் அனைத்தும் இம்முறை ஓர் அணியாக திரண்டு திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று, ஆரியத்திற்கு எதிரான யுத்தம் என்று பறைசாற்றி, போர் முரசம் இட்டு களம் கண்டது. ஆறாவது, வழக்கமாய் அரசியல் களம் என்பது யார் வரக்கூடாது என்று எண்ணியே மக்கள் வாக்களிப்பர் ஆனால் இம்முறை யார் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர்.


இதனை எல்லாம் கொண்டு நாம் ஆய்வுக்குட்படுத்தி பார்த்தால் மேற்கு வங்கத்தில் நடந்த தனிமனித ஆளுமைக்கான குத்துச்சண்டைக்கும், கேரளத்தில் நடந்த அரசியல் சதுரங்க விளையாட்டிற்கும், தமிழகத்தில் நடந்த தத்துவ யுத்தத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை நீங்கள் அறிந்திட முடியும்.  ஆரியம் Vs திராவிடம் என்பதே இந்திய வரலாறாக அமையும். தமிழகத்தின் வெற்றி இனி வடக்கு நோக்கிச் செல்லும்; அதன் விளைவை இந்திய ஒன்றியம் காணும். அதற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்க இருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.


No comments:

Post a Comment