Wednesday 25 December 2019

வடக்கில் திராவிட எழுச்சி - கதிர் ஆர் எஸ்


ந்திய துணைக் கண்டத்தில் திராவிட இயக்கம் இந்துத்துவ இயக்கம் என்ற இரண்டு நேரெதிர் இயக்கங்கள் உதித்து, அவற்றின் கொள்கைகளைச்  செயல்படுத்தும் வாக்கரசியல் கட்சிகள் தோன்றி கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடந்து விட்டன.
இந்த நிலத்தின் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டு   சொந்த நிலத்திலேயே நாடோடிகளாக்கப்பட்டு  துரத்தப்பட்ட இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில்...திடப்பட்டதும் திருப்பியடித்ததும்..இன்று திராவிட நிலமாக அறியப்படும் தென்னிந்திய மண்ணில்தான்.
அப்படியும் தொடர்ந்து நம்மீது பண்பாட்டு படையெடுப்புகளும்  வல்லாதிக்க ஊடுறுவல்களும் மொழித்திணிப்பு முயற்சிகளும் தொடர்ந்து  கொண்டே இருக்கின்றன.
ஆந்திரா கர்னாடகா கேரளா என சக திராவிடப் பங்காளிகள் ஆரியத்தின் வீரியத்தில் மொழி பண்பாடு உணவு வழிபாடு என எல்லாவற்றையும் தொலைத்துக் கொண்டிருக்க ஒன் மேன் ஸ்டேன்டிங் என்பது போல நின்று நிலைத்து
ஆரியத்துக்கு எதிராக தனது இன்னிங்சை ஆடி வரும் ஒரே நாடு தமிழ்நாடு.
ஆனால் இந்த துணைக்கண்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் தேசங்கள் முழுவதும் ஆரிய நாகரீகமும் பண்பாடும் போற்றி புகழப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாம் மட்டும் தனித்து நிற்பதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் சாதாரணமானவையல்ல. ஆனால் நாம் அவற்றை பெருமையுடன் எதிர் கொள்கிறோம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஒவ்வொரு முறையும் இந்துத்துவப்பாம்பு நம்மை விழுங்க வருகையில் அதை அடித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்..
ஆனால் அதை விரட்டுவது மட்டுமே எப்படி தீர்வாக இருக்க முடியும்?
ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது ஒரு பெரும் போரின் துவக்க நிலை மட்டுமே..
நாம் இன்னும் போருக்கு நம்மை தயார் செய்து கொள்ளவில்லை..
நம் எல்லைக்குள் வரத்துணியும் எதிரியை விரட்டுவது போரல்ல.. தற்காப்பு மட்டுமே..
போர் என்பது எதிரியின் மொத்த பலத்தையும் எதிர் கொள்வது.
நாம் இந்த போரை இன்னும் எதிர் கொள்ளவில்லை. அல்லது அது நமக்கு தேவைப்படவில்லை.
நம் நாடு நம் மக்கள் என நமது சித்தாந்தத்தை நம்முடனேயே வைத்துக் கொண்டுவிட்டோம்..
காரணம் நமது கொள்கைகள் மீது மற்ற நாட்டு மக்கள் மத்தியில் ஆரியம் உருவாக்கி வைத்திருந்த தவறான கற்பிதங்கள் கருதுகோள்கள்.
முக்கியமாக வட இந்திய நாடுகளில் திராவிடம் என்பது தீண்டத்தகாத ஓர் இயக்கமாகவே பார்க்கப்பட்டது.
பெரியார் அம்பேத்கர் நட்பை காரணம் காட்டி அதை தலித் அமைப்பாகவும் நிறுவியவர்களும்  உண்டு. ஆனால் இந்த இயக்கம் எல்லா மக்களுக்குமான இயக்கம் என்ற உண்மையை காலம் மெதுவாகவே அவர்களுக்கு உணர்த்தியது.
பெரியார் தனது கொள்கைகள் தமிழ்நாட்டோடு நின்றுவிட வேண்டுமென நினைக்கவில்லை என்பதற்கு கான்பூர் அலஹாபாத் லக்னோ கல்கத்தா பூனே மும்பை ஆகிய நகரங்களில் அவர் சுற்றுப் பயணம் செய்து நிகழ்த்திய சொற்பொழிவுகளே சாட்சி.
அன்று அவர் போட்ட விதையின் விளைவாக நமக்குக் கிடைத்தவர்தான் லாலாய் சிங்.
1911ல் உத்திரபிரதேசத்தில்  பிறந்தவர்.
பெரியாரின் சமகாலத்தில் வாழ்ந்து அவரது கொள்கைகளை வடக்கில்  பரப்பியவர்,
பெரியாரின் புத்தகங்களை  மொழி பெயர்த்து வெளியிட்டும், பல முற்போக்கு நாடகங்களுக்கு வசனங்கள் எழுதி அவற்றை மேடையேற்றியும் ஆரியர்களை இந்துத்வத்தை  அதிரவைத்தவர் லாலாய் சிங்.
அவர் செய்த சம்பவங்களில் சிறப்பான சம்பவம் ராமாயணம் பற்றிய பெரியாரின் புத்தகத்தை இந்தியில் வெளியிட்டதும் தடை செய்ய வேண்டுமென்று பார்ப்பன கும்பல் உயர் நீதி மன்றம் வரைசென்றதும்.
வழக்கில் லலாய் வென்றதோடு மட்டுமல்லாமல் பார்ப்பனர்களிடம் ரூ 300 நஷ்ட ஈடு பெற்றதுமாகும்.
திராவிடத் தலைவர்கள் வழியில் லாலாய் சிங்கும் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சம்பூகன் வதம், ஏகலைவன் கதை போன்ற இவரது நாடகங்கள் இந்துத்துவ கும்பலை அலறவைத்தன.
பெரியார் மீது கொண்ட பற்றினால் அவர் பெயரையும் "பெரியார் லலாய் சிங்" என மாற்றிக் கொண்டார்.
பெரியாரின் மறைவு லாலாய் சிங்கிற்கு பெரிய மன வலியைத் தந்தது. அவரது  இரங்கல் கூட்டத்திற்கு வந்து பெரும் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
1993 ல் மறைந்த லாலாய் சிங் வட இந்தியாவின் வியக்கத்தக்க திராவிட உணர்வாளர்.
அவர் காலத்துக்கு பிறகு ஏற்பட்ட மாறுபட்ட அரசியல் சூழல்களால் திராவிடம் தெற்கிலேயே திரண்டு தேங்கி நின்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.
அரசியல் ரீதியாக இந்த துணைக் கண்டத்தை  திமுக கட்சி ஆண்ட போதும் இயக்க ரீதியாக நமது அறிவுக் கிளைகளைப் பரப்பாமல் போய் விட்டோம்.
லாலாய் இறந்து போய் இருபது ஆண்டுகள் கழித்து   அவரது கனவுகள்  நிறைவேறாமல் போனது எத்தனை பெரிய வரலாற்றுப் பிழை என்பதைத்தான் நாம் இப்போது கண்டு வருகிறோம்.
அந்த பிழையின் பலனாகத்தான்  2014ல் நமக்கு மோடி கிடைத்தார்.
இந்திய மக்கள் தொகையில் 40% OBC மக்களும் ,30% SC,ST மக்களும், 15% இசுலாமிய மக்களும்,5 % முதல் 7% வரை கிருத்துவ மற்றும் இதர மதத்தினரும் வாழ்கின்றனர்.
ஆனால் 90% அதிகாரமும் குவிந்திருப்பது மீதமிருக்கும் 10% விழுக்காட்டினரிடம் தான் என்ற நிலையை கடந்த 50 ஆண்டுகளில்  தமிழ்நாட்டில் பெரிய அளவில் மாற்றியிருக்கிறோம்.
ஆனால் இந்திய அளவில் பெரிய மாற்றம் நிகழ வில்லை. காரணங்கள் பல.
தலித் மக்களின் வாக்குகள் ஒரு புறம் குவிந்தாலும் OBC மக்களின் வாக்குகளை சிதறடித்தே இந்துத்வம் அதிகாரத்தில் தமது இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வளர்ந்தது.
2014 ல்  ஓர்  OBC பிரதமரையே  முன்னிருத்தி ஆட்சி அதிகாரத்தையும்
கைப்பற்றிவிட்டது.
இந்துத்துவத்திற்கு எதிராக முஸ்லீம்கள் வாக்களித்தாலும் இந்த முறை தலித்துகளின் வாக்குகளும்  சிதறடிக்கப்பட்டு 2019லும் OBC பிரதமர் மோடி ஆட்சியை பிடித்துவிட்டார்.
அதற்கு நன்றிக் கடனாக தனது அமைச்சரவையில் OBC மற்றும் இஸ்லாமியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு  மொத்த அதிகாரத்தையும் பார்ப்பனீய பனியா கும்பலிடம் கையளித்து விட்டு  நிம்மதியாக இருக்கிறார்.
ஒரு மனிதனுக்கு உண்ண உணவு உடுத்த உடை வாழ வீடு அதில் தேவையான வசதிகள், செல்வம் இருந்தால் அவனுக்கு வீதிக்கு வரும் தேவை அவனுக்கு இருப்பதில்லை. 
ஒரே ஒரு நாள் அவன் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை..உணவு சமைக்க கேஸ் இல்லை..திடீரென மின்சாரமில்லையைன்றால் அவன் நிச்சயம் வீட்டை விட்டு வெளியில் வந்துதானே தீருவான்.
இந்தியாவில் இப்போது நடப்பது அதுதான்.
காலம் காலமாக இந்துத்துவ மாயையில் சிக்குண்டு ஏமாந்த மக்கள் மனதில் பெரியார் வளர்த்த திராவிடம் ஆபத்துதவியாக தெரியத்தொடங்கியிருக்கிறது என்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன.
உபி மபி ராஜஸ்தானின் சில பகுதிகள் பஞ்சாப் ஹரியானா பிஹார் அஸ்ஸாம் மேற்கு வங்கம் ஆகிய வட நாட்டிலும் கிழக்கிலும் திராவிடம் தன்னிச்சையாக தழைக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்ப்பதிலும், மதவாதத்தை எதிப்பதிலும் இந்திய வல்லாதிக்க கோட்பாடுகளை எதிர்ப்பதிலும் இந்த நாடுகள் எந்த நேரடித் தொடர்புமின்றி ஒன்று சேர்கின்றனர்.
அப்படிச் ஒன்று சேர துணையாக தூண்டுதலாக இருப்பது திராவிடமும் பெரியாரும் என்றால் அது மிகையல்ல.
அவர்களைப் பொறுத்தவரை திராவிடம் அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரும் புதையல்.
ஏமாந்து.. எல்லா கதவுகளும் அடைபட்டு நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் துடித்து திகைத்து நின்று  கொண்டிருந்த ஒருவனுக்கு...
இந்தித் திணிப்புக்கான எதிர்ப்பு,
இந்திய வல்லாதிக்க எதிர்ப்பு,
உணவு முறைத்திணிப்புக்கான ஏதிர்ப்பு,
மாநில சுயாட்சிக்கான குரல்,
சமூக நீதிக்கான குரல், என இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதவாக திறந்து விட்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் அவர்களுக்கு திராவிடம் தெரிகிறது.
அதன் விளைவாக பொது விவாதங்களில் கடந்த 5 ஆண்டுகளில் எப்போதுமே இல்லாத அளவுக்கு திராவிடம் பேசு பொருளானது.
பெரியாரைப்பற்றிய விவரங்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டன,பகிரப்பட்டன.
அதே கால கட்டத்தில் இணையத்தில் திராவிட கருத்துக்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேசும் ஏடுகளும் உருவாகியிருந்தன. சமீப காலமாக அவை இந்தி மொழியிலும் பேசத்தொடங்கியிருக்கின்றன.
அவை தொடர்ந்து திராவிட ஆளுமைகள், திராவிட கொள்கை விளக்கங்கள் பெரியாரின் பேச்சுக்கள் எழுத்துக்களின் மொழி பெயர்ப்புகள், அணணாவின் பாராளுமன்ற உரைகள் கலைஞரின் சாதனைகள் என தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ள திராவிடம் இந்தியா முழுவதும் பரவி வேர்விடத்தொடங்கியது
அண்ணாவை கலைஞரை பெரியாரை போற்றும் கர்கா சேட்டர்ஜி ஜிக்னேஷ் மேவானி போன்ற ஆளுமைகள் உருவாகினர்.
சில வட இந்திய சில தலைவர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்ளுவதை விரும்பினர்.
கடைத்தெருக்களுக்கு பெரியார் சௌக் என பெயரிடப்பட்டது. திருவள்ளுவர் சிலையை நிறுவ போட்டியே உருவானது.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பீம் சேனா போன்ற தலித் அமைப்புகள் அம்பேத்கருக்கு நிகராக பெரியாரையும் தூக்கிப்பிடிக்கத் தொடங்கின.
சில மாதங்களுக்கு முன் பெரியாரைப் பற்றி தவறாக பேசிய ராம்தேவ் என்ற சாமியாரின் பேருதவியால் பெரியார் வடக்கில் நிலை பெற்றுவிட்டார்.
அவருக்காக வட இந்திய இளைஞர்கள் நடத்திய போராட்டங்களும் கொடும்பாவி எரிப்புகளும் இணைய யுத்தங்களுமே இதற்கான ஆதாரங்கள்.
இந்த பட்டியலில் சமீபமாக மராத்தியர்களும் குஜராத்தியர்களும் இணைந்திருக்கிறார்கள்.











காலம் காலமாக தலித் அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யமுடியாத பல சாதனைகளை பெரியாரின் வரவு செய்யும் என்பது பலரின் திராவிட உணர்வு கொண்ட சில வட இந்திய நண்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
காரணம் பெரியார் வரவு OBCகளை தலித் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளோடு இணைக்கும் வேலையைச் செய்வதாக சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் திமுக தலைவர் இந்தியாவின் எல்லா நாடுகளிலும் திமுக கட்சியின் கிளைகளை துவக்க ஆதரவளித்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
திராவிடம் என்பதே சமக்கிருதச் சொல் என்றும்.. பின்பு அதே வாயால்  அப்படி ஒரு இனமே இல்லை எல்லாம் பிரிட்டீஷ் அரசின் சதியென்றும்  முனகிக் கொண்டே கிடக்கும் இந்துத்வ கும்பல் தன் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியத்தின் பயனாய் திராவிடம் எழுச்சி பெறுகிறது.. இந்த முறை தேசிய அளவில்.
இதன் விளைவாக அடுத்த பத்தாண்டுகளில் உத்திர பிரதேசத்தில் திமுக ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியமில்லை.


- கதிர் ஆர் எஸ்

No comments:

Post a Comment