Friday 17 April 2020

திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி 2) - சண். அருள் பிராகாசம்

திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி 2) - சண். அருள் பிராகாசம்  

                        
திராவிடர் இயக்கம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று கருதப்பட்டாலும் இது ஒரு சமுதாய அரசியல் சீர்திருத்தப் பேரியக்கம் என்றே குறிப்பிடவேண்டும். இந்திய வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் சமுதாய - அரசியல்  அரங்கில் மாபெரும் திருப்புமுனையை உருவாக்கிய பெருமைக்கு உரியது திராவிடர் இயக்கம்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பன்னெடுங்காலமாக ஏகபோக மாக அனுபவித்த சமூக மதிப்பு, அரசியல் அதிகாரம், பொருளாதார வசதிகள் இம்மூன்றும் அனைவருக்கும் உரியது எல்லோருக்கும் இவை கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து போராட்டம் செய்து அவைகளைப்  பெற்றுத் தந்த இயக்கம் திராவிடர் இயக்கம்.

இந்த இயக்கத்தின் துவக்கம்  எது தோற்றுவித்தவர் யார் என்பதனை ஆராயப் புகுந்தால் இது ஏதோ ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல என்பதை அறிய முடியும். இந்த இயக்கத்திற்கான வேர்கள் பல்வேறு தருணங்களில் பல்வேறு திசைகளில் ஊடுருவி உயிர்கொண்டு பரவி கிடக்கிறது.

பலஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர், என்னும் சமத்துவ சிந்தனையை கொண்டு வாழ்ந்தவர்  தமிழர்.  சூது வாதின்றி வந்தாரை வரவேற்று வாழ்விடம் அளித்து, தமிழர் தம் உயர் குணங்களை பண்புகளை பழக்க வழக்கங்களை விடுத்து  அவ்வயலவர் சிந்தனைக்கு ஆட்பட்டு அடிமைப்பட்டு அவல நிலைக்கு உள்ளாயினர்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது அறிந்த இனத்தினர்   அல்லவா? இழிநிலை அகற்ற இன்னலைத் தீர்க்க தம் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க எண்ணிய அறிஞர் பெருமக்களின் கருத்துக் கருவூலமாக வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக்  கலங்கிய உள்ளங்களுக்கு ஒளிபாய்ச்சி கரைகாட்டும்   கலங்கரை விளக்கமாக எழுந்ததுதான்  திருக்குறள். அதை எழுதியவரை திருவள்ளுவர் என்கிறோம். தமிழினத்தின் தலையாய புரட்சியாளர் திருவள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்று பறை சாற்றிய பண்பாளர்.

ஆரியர் என்னும் அயலவர் கொள்கை தீது என்று ஆணித்தரமாய் அறைந்து உரைத்த உத்தமர் வள்ளுவர். வேதமும் வேள்வியும் மதமும் கடவுளும் மக்களுக்கு நன்மைப் பயப்பன என்ற தீயக் கருத்தினை தீவிரமாக எதிர்த்தவர் திருவள்ளுவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவர் வள்ளுவர்.  செய்கின்ற வெவ்வேறு தொழில்களாலும்  வேற்றுமை கற்பிக்கக் கூடாது என்பது ஆரிய அடிப்படைக் கொள்கையான ‘சதுர்வர்ணம்’ என்னும் பிறப்பில் பேதம் கற்பிக்கும் கொள்கையையும் தொழிலின் பெயரால் சாதி வேற்றுமை நிலவிய தன்மையையும் ஒருசேர எதிர்க்கின்றார் வள்ளுவர்.

அதுமட்டும் அல்லாமல் கடவுள் பெயர் கூறி உயிர்க் கொலை செய்யும் வேள்விகளையும் யாகங்களையும் கண்டிக்கும் விதமாக ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்’ எதற்கு என்கிறார்.  ஒரு உயிரைக் கொன்று தின்னாமல் இருந்தாலே நல்லது என்கிறார். இதுவும் ஆரியர் கொள்கையை அகற்றும் கருத்தாகும்.

மானிடம் அறிவை வளர்த்து மானமுடன் வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் நூல்தான் திருக்குறள். அதிலும் அவர் மானம் பற்றி பத்து குறள்களில் குறிப்பிடுகையில்  ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்,  உயிர் நீப்பார் மானம் வரின்’ என்று மானம் போனால் உயிர் போனது போல் என்றவர்  அப்படியும் மானம் கெட்டு வாழ்பவர்  தலையில் இருந்து விழுந்த மயிருக்கு சமானமாகக் கருதப்படுவர்  என்று ‘தலையின் இழிந்த மயிரனையர்’ என்றும் சொல்கிறார்.

ஆனாலும் அவரே வேறு இடத்தில் மானம் கருதாதே என்று சொல்வார்.   ‘குடி செய்வார்க்கு இல்லை பருவம், மடி செய்து மானம் கருதக்  கெடும்’  என்பதாக ‘குடி செயல் வகை’ என்னும் சமுதாய அக்கரையில் பொது நலம் புரிபவர்களுக்கு நேரம் காலம் எதுவும் இருக்க முடியாது. பொது நலத்திற்குப் பாடுபட முன்வந்தால் நல்ல காலமும் சூழ்நிலையும் வர காத்திருக்கக் கூடாது என்பது  மட்டுமல்ல  அந்த காரியத்தால் மானம் போய் விடுமே  அவமானம் நேருமே என்று கருதவும் கூடாது என்பார்.

இதைதான் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கம் கண்டு தமிழனை தன்மான உணர்ச்சி கொள்ள செய்வதற்குப் பாடுபட்டார். நாம் திராவிடர் மானமிக்க மானிடராக விளங்க வேண்டும் என்றார். மனிதனுக்கு அழகு மானமும் அறிவும் என்றார். அதே நேரம் அவர்தான்  மக்கள் சேவையில் மனதில் கொண்ட கொள்கையைப்  பரப்புவதில் மான அவமானங்களுக்கு அஞ்சக்  கூடாது என்று சொல்லி வாழ்நாள் முழுதும் வன்நெஞ்சர்களின்  வசை சொற்களுக்கும் இழி மொழிகளுக்கும் ஆளானாலும் அசராமல் பணியாற்றினார்.

தந்தை பெரியார் கொள்கைகளை அண்ணா காட்டிய வழியில் திமுகழகம் கலைஞரின் தலைமையில் ஐம்பது ஆண்டு காலம் நடை போட்டது. அந்த பயணத்தில் திமுகழகம் கண்ட ஏற்ற இறக்கங்கள் வாழ்த்துகளும் வசவுகளும் ஏராளம். ஆனாலும் கொண்ட கொள்கையை நிறைவேற்றும் பணியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியே மகேசன் பணி என்று தொய்வில்லாமல் இன்றும் தலைவர் கலைஞர் மறைவிற்குப் பின்னரும் தொடர்கிறது தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்.

திராவிட முன்னேற்றக் கழகம் திருக்குறளை தமிழர்களின் பண்பாட்டு மீட்புக்கு சரியான ஆயுதக் குவியலாகக் கருதியது.  பெரியார் அவைகளை  செப்பனிட்டு கூர்மைப் படுத்தி  பயன் படுத்துங்கள் என்றார். பெரியார் கூட்டிய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகு நாடெங்கும் பட்டி தொட்டிகளிலும் திருக்குறள் பற்றி பேசும் நிலை உருவாயிற்று. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை தனித்தன்மையாகக் கொண்டு விளங்குது திருக்குறள். அது தன்னையும் தன் மக்களையும் அவர்தம் கலாசார பண்பாட்டையும் அடையாளப் படுத்துகிறது என்பதை பெரியார் எடுத்துக் காட்ட அறிஞர் அண்ணா திருக்குறள் திருப்பணியை நாடெங்கும் எழுச்சியுறச் செய்கிறார். கலைஞர் காலமெல்லாம் பேசும் வண்ணம் காணும் வண்ணம்  கல்லிலும் எழுத்திலும் வடிக்கிறார். இதுதான் திராவிட இயக்கத்தினருக்கு திருவள்ளுவர் மீது ஏற்பட்ட பிடிப்புக்கு  பேரன்புக்கு  காரணிகளாகும். 

திமுக கிளைக் கழகங்கள் கூட திருவள்ளுவர் படிப்பகங்களாக பெயர் பெற்றன. திருவள்ளுவர் படம் திமுக என்னும் அரசியல் கட்சியின் உள்ளூர் அலுவலகமான கிளைக் கழகங்களில் இடம் பெற்றது என்பதெல்லாம் ஒரு வரலாற்று சம்பவம் மட்டுமல்ல சாதனை சரித்திரமாகும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் அல்லது வேறு எந்த கட்சியும் இப்படி ஒரு சிறப்பை தன் நாட்டுப்  புலவருக்கு கொடுத்ததா என்பது ஐயத்திற்கு உரியது. ஆய்வுக்கு ஏற்றது.

அண்ணாவின் மறைவின் போது கலைஞர் எழுதிய  கவிதாஞ்சலியில் அண்ணாவை வள்ளுவரின் மறுபிறப்பு என்று  சித்தரிக்கிறார். அவதாரம்  மறுஜென்மம் என்னும் கருத்துகளுக்கு உடன்படாத பகுத்தறிவு படைவரிசையின் தளகர்த்தர் கலைஞர் தன் இலக்கிய அறிவாற்றலால் அண்ணாவை வள்ளுவராகப் உருவகித்து உருவாக்கிய கவிதை வரிகள் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகம்..

“ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரை தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே
எனப்போற்றும் அறப்பனுவல் அளித்திட்டான் ---
மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் --- நம்
கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போல
பண்பட்ட தமிழர் வாழ்வில் --- முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்
பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப் போய்
ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் --- தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக் கோளாய்த் திகழ்ந்திட்ட பெரு நிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார் பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்;
அழுக்காறு --- அவா --- வெகுளி --- இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்;
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- -- இன்று
இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை -- சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை - அடு நெருப்பில்
ஆடினாள் தமிழன்னை
ஓடினாள் - ஓடினாள் - ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்
ஆண்டு சென்று, அருமை மகனே
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள்.
என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.
தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்.
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக
பொதிகை மலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் -- கீழ்
வானுதித்த கதிர் போல”
ஈராயிரம் ஆண்டு முன்னர் ஈற்றடியில்  புரட்சி தீயின் பொறி நெருப்பை மூட்டி விட்ட வள்ளுவனை அண்ணாவின் உருவில் கண்டதை  நாம் எந்நாளும் மறக்க முடியாது.

பள்ளி நாட்களிலேயே உள்ளத்தில் வள்ளுவரை ஏந்தியவர் கலைஞர். அப்போது அவர் பங்கெடுத்த பேச்சுப் போட்டியில் ‘திருக்குறளில் நட்பு’ என்னும் தலைப்பில் பேசினார் . அவருக்கு இளமைக் காலந்தொட்டே இலக்கியத்தில் இருந்த ஆர்வமும் திருக்குறள் மீது இருந்த ஆய்வு நோக்கும் இதனால் விளங்கும். தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் திருவள்ளுவரையும் திருக்குறள் கருத்துகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதே எல்லாம் குறிப்பிடத்  தவருவது இல்லை. அது மட்டும் அல்லாமல் வள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்க அவர் ஆற்றிய சமூகப்பணிகள் ஏராளம்.

திரு கே.ஆர். வேணுகோபால் சர்மா என்னும் ஓவியர் நாற்பது ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக அப்போதிருந்த திரு மு.வரதராசனார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்களிடம் கருத்துகளைக் கேட்டு1959 ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருவுருவத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து படமாக வரைந்தார். அவருக்கு முதலில் இருந்தே முழு ஊக்கமும் உதவியும் தந்தவர்  திராவிட இயக்கத் தீரரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகும்..  அப்போது முதல்வராக இருந்த  திரு  காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, கவிஞர் கண்ணதாசன், நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளர் கல்கி கிருபானந்த வாரியார் உள்ளிட்ட பலரும் அதைப் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.

அந்த திருவள்ளுவர் படத்தை பொதுமக்கள் அறிய  அறிஞர் அண்ணா அவர்கள்தான் 1960 ஆண்டு முதன்முதலாக வெளியிட்டார். அதே ஆண்டு அதே படத்தைத் தாங்கிய சிறப்புத் தபால் தலையும்  வெளியிடப்பட்டது. அப்போது தழகத்துச் சேர்ந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் மத்திய அரசில் அஞ்சல்துறை அமைச்சராக இருந்தவர். அந்த விழாவில்  என்பது கூடுதல் செய்தி. 

திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யும் விதமாக சட்டமன்றத்தில் அந்த படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து  சட்டமன்றத்தில் வாதிட்டார் கலைஞர். ஆனால் அவரது கோரிக்கை அப்போது பச்சைத் தமிழர் ஆட்சியில் பலிக்காமல் ஐந்தாண்டுகள் கழித்து திரு பக்தவச்சலனார் ஆட்சியில் நிறைவேறியது. 22-03-1964 ஆம் நாள் அப்போதைய இந்தியக் குடியரசு துணைத் தலைவராக இருந்த திரு ஜாகிர் உசேன் அவர்கள் திருவள்ளுவர் திருவுருவப் படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் திறந்து வைத்த வைபவம் திமுகழகத்தின் தொடர் வற்புறுத்தலால் என்றால் அது மிகை அல்ல.

சென்னை மாநகராட்சியை திமுகழகம் கைப்பற்றி நிர்வாகம் செய்த காலகட்டத்தில்தான் சென்னையில் காமராஜருக்கு சிலை வைக்கப்பட்டு பிரதமர் நேரு பெருமகன் கைகளால் திறந்து வைக்கப்பட்டது என்பது அறிவோம். அதே போன்று திமுகழகம் தமிழக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் முன்னரே சென்னை மாநகராட்சி நிர்வாகக் காலத்தில் 02-06-1966 அன்று திருவள்ளுவர் சிலையும் சென்னையில் மயிலாப்பூரில் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் திரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை கொண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை மயிலாப்பூர்  திருவள்ளுவர்   கோயிலுக்கு எதிரில் வைக்கப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் அக்கோயிலில் உள்ள வள்ளுவர் சைவமத சார்பாளராக உருவகித்து அலங்கரிக்கப் பட்டிருப்பதோடு அல்லாமல் அக்கோயில் வளாகத்தில் சிவன் காமாட்சி போன்ற கடவுளர் சிலைகளும் உள்ளதால் வள்ளுவரும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச்  சேர்ந்தவராக எண்ணிடவைக்கிறது. அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று உறுதிபட சொல்ல இயலாத நிலையில் அவர் இயற்றிய திருக்குறளும் எல்லா சமயத்தவரும் ஏற்றிடும் பொது அறன்களைக் குறிப்பிடுவதாலும்  அக்கோயிலில் சித்தரித்த வண்ணம் அவரை ஒரு குறிப்பிட்ட மதத்தவர் என்று ஏற்பது சரி அல்ல என்பதை குறிப்பிடவே அந்த கோயிலுக்கு எதிரில் யாவரும் ஏற்றிடும் பொதுவான கோலத்தில் திருவள்ளுவர் சிலை அங்கு நிறுவப்பட்டது என்பது சரியான செயல் ஆகும். அந்த சிலையை அங்கு நிறுவிய திமுகழக ஆட்சியில்தான் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் 1973 ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 2001 ஆண்டு ஜனவரி திங்களில் அக்கோயிலுக்கு குடமுழுக்கும் செய்யப்பட்டது. 

திமுகழகம் 1967 இல்  ஆட்சிப் பொறுப்புக்கு வந்து அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக ஆனதும் போடப்பட்ட திருவள்ளுவர் திருவுருவம் குறித்த அரசாணை திருவள்ளுவர் திருவுருவத்தை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது. அந்த ஆணையில் திருவள்ளுவர் படத்தை அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்கள் அரசு பயணியர் விடுதிகள்  எல்லாவற்றிலும் வைத்திட கோரப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களே அவ்விதம் அரசு கூட்டுறவு சங்கத்தினர் ஏற்பாட்டில் தலைமைச் செயலகத்தில்  திருவள்ளுவரின் படத்தை 10-06-1967 அன்று திறந்து வைத்து ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிடுவார்:  

திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம் பெற்றிருக்கிறது. எல்லோரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள். திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத் தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.
தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும், இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள். இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை நகரத்திலே நடைபெறவிருக்கிறது. தமிழ் ஆய்ந்த - தமிழ் அறிந்த - நல்லறிஞர்கள், பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள். அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.
திருக்குறளின் - தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை, ஓவியங்களாக - வரி வடிவங்களாக - பாடல்களாக - கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை - சென்னை கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் - உருவாக்கிக் காட்டவேண்டும் என்பது!

கலைஞர் நாவலர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பல்வேறு ஊர்களில் நகராட்சி மன்றங்களில் மற்றும் அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து இருக்கிறார்கள்.

அண்ணாவின் ஆசையை அவரின் எண்ணங்களை அப்படியே ஏற்று அவருக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் குமரியில் வானுயர் சிலை என பல திட்டங்களை நிறைவேற்றினார், அண்ணாவின் உரையில் குறிப்பிட்ட சிலப்பதிகார சித்திரங்களையும் பூம்புகாரில் அமைத்தார்.

அண்ணாவின் ஆட்சியில் சென்னையில் உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக சென்னைக் கடற்கரையில் பத்து  தமிழ் சான்றோர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. அதில் திருவள்ளுவர் சிலையும் ஒன்று. 02-01-1968 அன்று நாவலர் திரு நெடுஞ்செழியன் தலைமையில் முத்தமிழ்க் காவலர் திரு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திறந்து வைத்தார்.

திருக்குறள் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வார்
“திருவள்ளுவர் தமிழருக்கு மட்டும் வழிகாட்டி அல்ல; அவர் ஒட்டுமொத்த உலகிற்கும் சொந்தம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’  என்று சொன்ன  திருக்குறள் ஒரு உலக வழிகாட்டி. ஆதலால் தமிழர்கள் ஒவ்வொருவர் மனையிலும் திருக்குறள் இருக்க வேண்டும்” என்று.
அண்ணா முதல்வர் ஆனபிறகு அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக அழைப்பை ஏற்று அமேரிக்கா சென்றார். அங்கு அப்பல்கலைக் கழக மாணவர்களுக்கு திருக்குறளை பரிசளித்து அவர்களுக்கு திருக்குறள் பாடம் எடுத்தார். திருக்குறளின் அருமை பெருமைகளையும் அதன் சிறப்புகளையும் குறள் காட்டும் நெறியையும் உலகம் யாவும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவருடைய நிர்வாகத்தின் கீழ்தான் போக்குவரத்துத் துறையும் இருந்தது. அப்போது கலைஞர் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம் பெறச் செய்தார்.
இது பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு. அந்த காலத்தில் இருந்தே திருவள்ளுவரை திமுகழகத்தவராகவே கருதும்படியாக நேரிட்டுவிட்டது பலருக்கு. திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம் பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசினார். ஒரு முறை சட்டமன்றத்திலேயே எதிர்க் கட்சி உறுப்பினர் காங்கிரஸ் கட்ச்சியின் திரு விநாயகம் அவர்கள்  புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?
இதற்கு என்ன பதில் சொல்லமுடியும். அண்ணாவுக்கு இக்கட்டான நிலை உருவாக்க இட்டுக் கட்டப்பட்ட எடக்கான கேள்வி இது. டிரைவர் கண்டக்டருக்காக என்றால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் என்ன தெரியுமா?

நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது

அண்ணாவின் சாதுர்யமான இந்த பதில், அவர் சொன்னதில் இருந்த நுணுக்கமான பொருள் யாவும் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்தது. அதிசயிக்க வைத்தது.

அண்ணாவின் ஆட்சிகாலத்தில் கலைஞர் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை சென்னையில் உயர்  நீதி மன்றத்திற்கு எதிரில்  ஒரு பன்னடுக்கு கட்டிடம் ஒன்றை அரசுத்துறை அலுவலகங்களுக்காகவும் காதர் கிராமத் தொழில் அங்காடி அமைக்கவும் கட்டியது. அதற்கு “குறளகம்” என்று பெயர் சூட்டப்பட்டது.அது நாள் வரை அப்படி ஒரு புதிய சொல் தமிழ் அகராதியில் இருந்ததில்லை.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்புக்கு கலைஞர் வந்த பிறகு அண்ணன் அடிச்சுவட்டில் தப்பாமல் நடைபோட்டார்.

கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் விதமாக அவர் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. அவற்றில் முதன்மையானது ,  தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று அரசாணைவெளியிட்டது.

மக்கள் பயன்பாட்டிற்கு நாள்காட்டி மற்றும் ஆண்டு கணக்கு என்பவை மிகத் தேவையானது. கிருஸ்த்துவின் பிறந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 1582 ஆண்டு அமைக்கப்பட்ட கிரிகேரியன் நாட்காட்டி முறைதான் பெரும்பாலான உலக நாடுகளில் படிப்படியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இன்றைக்கு உலக வழக்காக அது  பொது ஆண்டுக் கணக்கு (CE- COMMON ERA) என்ற பெயரில்  பின்பற்றப் படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என்று ஒரு நாட்காட்டி ஆண்டு முறையை பின்பற்றி வருவதும் பழக்கத்தில் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆண்டுக் கணக்கு திருவள்ளுவர் பெயரால் இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் ஆண்டு 1971 முதல் ஏற்றுக் கொண்டது. திருவள்ளுவர் ஆண்டு பொது ஆண்டைக் காட்டிலும் 31 ஆண்டுகள் கூடுதலாக கணக்கிடப்படுகிறது. இது திருவள்ளுவர் கிருஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்திருக்கலாம் என்ற அறிஞர்களின் ஆராய்ச்சிக்  கருத்தை  ஏற்று எடுத்த முடிவாகும். இம்முடிவுகளின் படி 1972 ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு  தமிழக அரசிதழ்களில் குறிப்பிடப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் தை மாதம் இரண்டாம் நாள் அதாவது தமிழர் திருநாள் என்று சிறப்பிக்கப்படும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள்  திருவள்ளுவர் திருநாள் என்றும் அந்நாளை அரசு விடுமுறையாகவும் 30-10-1969 அன்று கலைஞர் அறிவித்து 03-11-1969 அன்று அரசாணையும் வெளியானது. . அந்த நாள் ஏற்கனவே மாட்டுப் பொங்கல்  என்றும் உழவர் நாள் என்றும் கொண்டாடப்பட்ட நாள்தான். அந்த நாளை திருவள்ளுவர் திருநாள் என்று கலைஞர் அரசு அழைத்ததில் உட்பொருள் ஒன்று உண்டு. மாட்டுப் பொங்கலை தமிழர்கள் தங்கள் மூதாதையர் குடும்ப முன்னோர்களை நினைவு கூர்ந்து அன்று புத்தாடை வைத்து படையல் இட்டு கொண்டாடும் பழக்கத்தை உடையவர். திருவள்ளுவர் தமிழரின் மூதாதை, தமிழர்  நலம் கருதி நன்னெறி வழங்கிய பெருமான் என்பதால் அவர் நம் எல்லோர் வணக்கத்திற்கு உரிய உயரிய நிலை பெற்ற உத்தமர் என்பதால் அன்று அவர் நினைவை தமிழர் போற்றி புகழ நல்வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அந்த நாளை தேர்வு செய்தார் கலைஞர் என்று கருதலாம். பள்ளி கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் எல்லாம் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

திருக்குறளின் முதல் மூன்று அதிகாரங்களுக்கும் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என்னும் மூன்று திருநாட்களுக்கும் ஒற்றுமை  உண்டு என்பதை ஒப்பு நோக்க முடியும். போகிப் பண்டிகை வான்சிறப்பையும் பொங்கல் பண்டிகை இறை வழிபாட்டையும் மாட்டுப்பொங்கல் நீத்தார் பெருமையையும் நினைவுருத்தும் நிகழ்வுகளாகக் காணலாம். அந்த வகையில் திருவள்ளுவர் ஆண்டு தை முதல் நாளில் வைத்து  திருவள்ளுவர் தினத்தை அதற்கு மறுநாள் உழவர் திருநாள் என்னும் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதும் எவ்வளவுப் பொருத்தம் என்பதை  எண்ணிப்பார்க்கின்  மனம் மகிழ்ச்சிப் பெருக்கில் துள்ளிடும்.  

இப்படியாக திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாமரமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. பண்டிதர்களிடம் மட்டும் பழக்கத்தில் இருந்த குறளை பட்டித் தொட்டி எங்கும் பரவச் செய்ததில் பெரும்பங்கு வகிப்பது திராவிட இயக்கமே திமுகழகமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இரண்டு அடியில் குறட்பா வடிவில் திரண்ட கருத்துகளை சுருக்கிச் சொன்ன திருவள்ளுவர் பெயரில் இரண்டடுக்கு மேம்பாலம் ஒன்றை திருநெல்வேலி நகரில் காணலாம். இந்தியாவிலேயே அதற்கு முன் எங்கும்  கட்டியிராத இரண்டடுக்கு மேம்பாலம் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.1969 ஆண்டு கலைஞர் அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகளில்  கட்டி முடிக்கப்பட்டு 13-11-1973 அன்று அவரே திறந்து வைத்தார். புதிய முறை பாணியில் கட்டப்பட்ட அந்த பொறியியல் சிறப்பின் சின்னமாகத் திகழும் அந்த மேம்பாலத்திற்கு திருவள்ளுவர் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். 

குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஒருமுறை கலைஞரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதினர். அதில் கலைஞரை திருவள்ளுவர் தேடிய சிறந்த மாணாக்கர் என்று புகழ் அணி பூட்டி பூரித்தார்.
“வள்ளுவர் எண்ணித் தவம் கிடந்தார்.என் செயல் பாட்டை நடைமுறைப் படுத்துகிற நல மாணவன் கிடைப்பான் என்று தவம் கிடந்தார். ஓராண்டு அல்ல ஈராண்டு அல்ல 1924 ஆண்டுகள் தவம் கிடந்தார். 1924 ஆண்டிலேதான் ஒரு மாமனிதர் வள்ளுவப் பெருந்தகைக்கு அருமையான மாணவனாக அமைந்தார். அந்த நிலையிலேதான் கலைஞர் அவர்கள்  வள்ளுவருக்கு அருமையான மாணவனாகத் திகழ்ந்து , திருக்குறளுக்கு எண்ணற்ற சீரிய தொண்டுகளை அவர் பற்றி இருக்கிற ஆட்சிக் கருவியை அரசுக் கருவியினைக்  குறள்நெறி பரப்புகிற திசையில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.” (முரசொலி 1-1-2000)

அத்தகைய அருஞ்செயலுக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு என்னவென்றால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் காவல்துறையைச் சார்ந்த திறமையாளர்களுக்கு பொற்கிழியும் நற்சான்றிதழும்  முதல்வர் பதக்கமும்  கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.  அந்த பதக்கத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் ஆலோசித்த போது முதல்வர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவத்தைதான் பொறிக்கப்பட  வேண்டும் என்று சொல்லி ஆணை பிறப்பித்தார்.  ஒரு சிறு பதக்கத்திலேயே வள்ளுவரை பதிக்க எண்ணிய பெரு மனம் கொண்ட பெருமான் கலைஞர்.  தலைநகர் சென்னை முதல் தென்கோடி குமரி முனை வரை வள்ளுவருக்கு வார்த்தெடுத்த பெருமைகள் எத்தனையோ.

இளமைக் காலம்  முதலே திருக்குறள் மீது தீரா பற்று கொண்டு அதை தீர ஆய்ந்து அரும் பெரும் பொருளை அள்ளித்தரும் விதமாக குறளோவியம் வரையத் தொடங்கினார் கலைஞர். ஒவ்வொரு குறளுக்கும் அழகிய நடையில்  பொருள்கூறும் விதத்தால் நல்ல கதை கூறி விவரிப்பார். அப்படி அவர் எழுதிய குறளோவியம் முதல் பதிப்பு நூல் வெளியீடு விழா 17-02-1985 அன்று நடைபெற்றது. அவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத அந்த சமயத்தில் அவ்விழாவில் திருவள்ளுவர் திருப்படம் வரைந்த ஓவியர் திரு வேணுகோபால் சர்மா அவர்களை அழைத்து பத்தாயிரம் ரூபாய் வழங்கி சிறப்பு செய்கிறார். அதன் பிறகு ஆட்சியில் இருந்த போது அந்த ஓவியர் உடல் நலம் குன்றி இருப்பதாக அறிந்து முதலமைச்சர் நிதியில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்க 24-05-1989 அன்று உத்தரவு இடுகிறார். அதற்கு அடுத்து 1990-91 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் திருவள்ளுவர் படத்திற்கான உரிமையை  தமிழக அரசு வாங்கிக்கொள்ளும் என்பதையும் அதற்கு ரூபாய் மூன்று இலட்சம் அவர்கள் குடும்பத்திற்குத் தரப்படும் என்றும் அறிவித்தார். அதன் படி 07-04-1990 அன்று தன் கைபட காசோலை வழங்கிய கருணை உள்ளம் படைத்தவர் கலைஞர்.

அப்போது 1989 மற்றும் 1990 ஆண்டுகளுக்கான திருவள்ளுவர் விருதினை தமிழறிஞர்கள் திரு வ.சுப.மாணிக்கம் அவர்களுக்கும் திரு கு.ச.ஆனந்தன் அவர்களுக்கும் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் அளித்தபோது அடுத்த ஆண்டு முதல் இத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டு இருபதாயிரமாகத் தரப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு 1999 ஆண்டு அதை ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கப் பதக்கம் என்று உயர்தியவரும் கலைஞரே. .

திருக்குறளில் புலமைப் பெற்று சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களை மதித்து அவர்களுக்கு உதவிகள் புரிந்து பெருமை சேர்ப்பதின் மூலம் திருக்குறள் கருத்துகள் வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி யாவும் மக்களிடம் சென்றடைய திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. திருக்குறள் பற்றிய ஆய்வு பெரியார் சொன்னதைப் போல் பகுத்தறிவு சிந்தனைக் கொண்டு புது உரைகள் எழுதப்பட வேண்டும் என்கிற நோக்கில் பல்கலைக் கழகங்களில் திருக்குறள் பற்றிய ஆய்வு செய்வது தேவையாகிறது. அதைக் கருத்தில் கொண்டு 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் மூலமாகக் கிடைத்த ஒன்பது இலட்சம் ரூபாயை தலா மூன்று இலட்சமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் மதுரை பல்கலைக் கழகத்திற்கு தரப்பட்டது. அது ஒரு பெரும் விழாகவே சென்னைக் கடற்கரையில் நடத்தப்பட்டது. குடியரசுத்தலைவர் உயர்திரு ஜாகிர் உசேன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். அண்ணாவின் அறிவுரையில்  கலைஞரும் மட்டற்ற மகிழ்சி கொண்டு அவ்விழாவை முன்னின்று நடத்தினார்.

அறவழியில் பொருள் ஈட்டி இன்பம் நுகர்தலே மானிட வாழ்க்கை என்பதை திருக்குறள் மூலம் தெளிவுற செய்யும் திருவள்ளுவர் தமிழ் இனத்தின் தன்னிகரில்லா தலைமைப் பண்பாளர். இறை என்று ஏற்றிப் போற்ற  வேண்டியத் தகுதிக்கு தக்கவர் திருவள்ளுவர். ஆகவே அவரை அய்யன் என்றழைத்து தெய்வநிலைக்கு உயர்த்தினார் கலைஞர். அதை  ஊர்கள் தோறும் கிராமங்கள் தோறும் கொண்டு சென்று  மக்கள் மனதில் பதிய வேண்டும் என்கிற எண்ணத்தில் திருவள்ளுவர் நூலகம் – படிப்பகம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் துவக்கப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. 03-01-2000 அன்று வெளியான அரசு செய்திக் குறிப்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 16-01-2000 திருவள்ளுவர் திருநாள் அன்று திருவள்ளுவர் நூலகம் படிப்பகம் துவக்கப்பட வேண்டும் என்றும் அதற்க்கான நிதி  முதலில் ரூபாய் ஐந்தாயிரம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு திருக்குறளையும் திருவள்ளுவரையும் திராவிட இயக்கம் தலைமேல் வைத்துக் கொண்டாடியது. திருக்குறள் நெறி திக்கெட்டும் பரவும் வழி செய்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சில்   சென்னையில் வள்ளுவர்கோட்டமும்  தென்கோடி குமரியில் வான்முட்டும் சிலையும் அமைத்தது .தமிழையும் தமிழரையும் உலகத்திற்கு அடையாளம் காட்ட திருக்குறள் என்னும் உலகப் பொதுநூலைஎழுதிய திருவள்ளுவருக்கு நம் அன்பின் காணிக்கையாக எழுப்பிய நினைவுச் சின்னங்கள்தான் வள்ளுவர் கோட்டமும்  நூற்றி முப்பத்தி மூன்று அடி உயர சிலையும்.  வள்ளுவர் கோட்டம்  மற்றும் குமரிகடல் பாறைமீது அமைத்த சிலை இவ்விரண்டின் வரலாறும் பெருமையும் தமிழர் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அவற்றை` அடுத்து காண்போம்.

No comments:

Post a Comment