Saturday 25 July 2020

சமூகநீதிக்கதைகள் – Independent Architect ஜெயஸ்ரீ ராமலிங்கம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

சமூகநீதிக்கதைகள் – Independent Architect ஜெயஸ்ரீ ராமலிங்கம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

ணக்கம்                             
திராவிட வாசிப்பு இணையதளத்திலிருந்து வரும் முதல் நேர்காணல் . இந்த நேர்காணலில் நாம் சமூக நீதி பற்றிப் பேசப் போகின்றோம். தமிழ்நாடு சமூக நீதியில் மிகவும் உறுதியாக உள்ள மாநிலம்.  இங்கு சமூகநீதிக்கு நூறு வருட பாரம்பரியம் இருக்கின்றது. அனைவருக்கும் சமமான ஒரே நீதி, அது தான் சமூக நீதி. அனைவரும் சமமாகவும், மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு இல்லாமல், ஆண், பெண் பேதம் இல்லாமல்  சமத்துவ சமூகமாக இருக்க வேண்டும் என்கிற அரசியல் அடித்தளம் தமிழ்நாட்டில் முன்பிருந்தே இருந்து வருகின்றது.
இங்கு சமூக நீதி  அரசியலுக்கான தேவை இருக்கின்றது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்றைய இளைஞர்களிடம் சமூகநீதி பற்றிய புரிதல் எவ்வாறு உள்ளது, அவர்களுக்கு உண்மையிலே சமூக நீதி என்பது என்னவென்று தெரிகின்றதா?  என்பது போன்ற கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டே இருக்கின்றது.  அதைப்பற்றி யோசிக்கும் பொழுது இட ஓதுக்கிடு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லையோ என யோசனை செய்யும் பொழுது இதற்காக உழைத்த தலைவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள்.  அதே போல சமூக நீதி திட்டங்களால் பலனடைந்தவர்கள்  கோடிக்கணக்கில் இருக்கின்றார்கள் எனத் தான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் சமூக நலத் திட்டங்கள் சென்று  சேராத வீடுகளே இல்லை என சொல்லலாம். இந்த மாதிரியான வெற்றி கதைகள் நிறைய நம்மிடம் இருக்கும் பொழுது, நாம் ஏன் அந்த வெற்றியை உரக்க பேசவில்லை எனும் கேள்வி எனக்கு எழுகின்றது.  சமூக நீதி வெற்றி கதைகளைப் பற்றி நாம் பேசாததால், நம் அரசியலையும், சமூக நீதி அரசியலையும் தவறாக நிறைய நபர்கள் பேசுகின்றார்கள். அவர்களெல்லாம் இட ஒதுக்கீடு தவறு எனப் பேசுகின்றார்கள்.  இலவசத்திட்டங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றார்கள் என சொல்கின்றார்கள்.  இதனுடைய நீட்சியாகத் தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என சொல்கிறார்கள்.
இப்படியான அரசியல் சூழ்நிலையில் நாமே நம்முடைய வெற்றிப் பாதையை, குறிப்பாக சமத்துவ சமூக நீதி கொள்கையினால் பயனடைந்தவர்கள், அதனால் முன்னுக்கு வந்தவர்களுடன் பேசி அவர்களுடைய கதையைக் கேட்க வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த நேர்காணல் தொடரை தொடங்குகின்றோம். இந்த முதல் நேர்காணலில் நம்முடன் பங்குகொள்வது தோழர். ஜெயஸ்ரீ  ராமலிங்கம்.
தோழரை பற்றி ஒரு சில வார்த்தைகள்.  இவர் ஒர் Architect (கட்டிடக் கலை நிபுணர்). அதில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளார். இதுமட்டுமின்றி சமூக நீதி தளத்திலும், அரசியல் பார்வையும் தெளிவாக உள்ள பெண். சமூகநீதி கதைகள் தொடரில் முதலில் ஜெய ஸ்ரீ உடன் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி.

நெறியாளர் ராஜராஜன்:  வணக்கம் ஜெயஸ்ரீ. உங்களைப் பற்றி சொல்லுங்கள்.

ஜெய ஸ்ரீ :  வணக்கம். என் பெயர் ஜெயஸ்ரீ . கட்டிடக் கலை நிபுணர். நான் ஒரு திராவிடக்  குடும்பத்தைச் சார்ந்தவள்.
நெறியாளர்:  உங்கள் பள்ளிப்படிப்புப் பற்றி சொல்லுங்கள்
ஜெய ஸ்ரீ  :  திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள எங்கள் ஊரில் தான் பள்ளி படிப்பு முடித்தேன். ஆறாம் வகுப்பு வரை ஒரு கிருத்துவத் தனியார் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். பின்னர் அங்கிருந்து மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக சென்ற பொழுது அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் உங்கள் மகள்  இங்கேயே ஆங்கில வழிக்கல்வியில் ஆறாவது முதல் படிக்கலாமே என்றார்கள். ஆனால் அம்மா அவர்களுடன் சண்டையிட்டு மாற்று சான்றிதழ் பெற்று என்னை அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலேயே ஆறாம் வகுப்பு சேர்த்துவிட்டார். அங்கே படிக்கும் பொழுது பாகுபாடு பற்றிய பார்வை எனக்குத் தெளிவாகத் தொடங்கியது, குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்குள் திராவிடம் வந்து விட்டது. மேலும் திராவிடம் என் இரத்தத்திலேயே உள்ளது என்பதும் எனக்குத் தெரிந்தது.
நெறியாளர்:  தமிழ்வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு வரை படித்தீர்களா, அல்லது பனிரெண்டாம் வகுப்பு வரையா?
ஜெயஸ்ரீ : பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் தான் படித்தேன். பத்தாம் வகுப்பில் நான் எனது வகுப்பிலேயே இரண்டாவது மாணவியாகத் தேர்ச்சி பெற்று வந்தேன். அப்பொழுதே எனக்கு அவர்கள் பாகுபாடு பார்ப்பது தெரிந்தது. இருந்தாலும் கவனமாகப் படித்து 91 விழுக்காடு மதிப்பெண் பெற்றுப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தேன். சரி பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு எங்கு சேரலாம் என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உச்சத்தில் இருந்த நாட்கள். எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை பொறியாளர் (Engineer), மருத்துவர் (Doctor) ஆக வேண்டும் என நினைத்து உயிரியல் பாடத்திட்டத்தில் பதினொறாம் வகுப்பில் சேர்த்து வந்தார்கள். நாங்களும் நாமக்கல் சென்று பிரபல தனியார் பள்ளியில் சேர்வதற்காக சென்ற பொழுது, இறுதி நேரம் ஆகிவிட்டது, இடம் இல்லை என சொல்லிவிட்டார்கள். இதனால் மீண்டும் முசிறிக்கே வந்து, அருகில் துறையூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொறாம் வகுப்பு சேர்ந்தேன். நான் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் எனக்கு அங்குக் கட்டணம் ஏதுமில்லை.
அந்தப் பள்ளியில் சேர்ந்து ஒரு வாரத்தில் எனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து கடிதம் வந்தது. அரசு பள்ளியில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பத்து மாணவர்களில் என்னையும் ஒருவராக அவர்கள் தேர்வு செய்துள்ளதாகவும், உங்களுக்குப் பிடித்த தமிழகத்தில் எந்தப் பிரபலமான பள்ளியில் வேண்டுமென்றாலும் உங்களை சேர்த்து விடுகின்றோம், கட்டணம் ஏதுமின்றி நீங்கள் படிக்கலாம் எனக் கூறினார்கள்.  அப்பொழுது நாங்கள் பள்ளி சேர்வதற்காக முன்பு அழைந்ததெல்லாம் என் நினைவுக்கு வந்தது. 
அதற்குப் பிறகு இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். முன்பு எங்களுக்கு இடமில்லை என சொன்ன அந்த நாமக்கல் பள்ளிகள் கூட அரசின் பட்டியலில் இருந்தன.  இதில் நான் நாமக்கல் எஸ்.ஆர்.வி பள்ளியை தேர்வு செய்து அந்தப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு வரை எனக்குப் பொது அறிவு, அரசியல் பிடிக்கும். ஏனென்றால் வீட்டில் எல்லாவற்றையும் பேசுவார்கள். அதனால் அதையெல்லாம் நான் புறக்கணித்தது கிடையாது. 9, 10 ஆம் வகுப்புகளில் எனக்கு சமூக அறிவியல் வகுப்பு மிகவும் பிடிக்கும். குடிமையியல், வரலாறு என எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
அன்று துணை குடியரசு தலைவர் யார் என்ற கேள்விக்கு , ஹமீது அன்சாரி என சொல்லி ஆசிரியரிடம் பேனா பரிசாகப் பெற்றேன் 2010ல். வகுப்பில் அறுபது மாணவிகள் இருந்தால் அவர்களில் பலருக்குப் படிப்பறிவு இருக்கும் அளவுக்குப் பொது அறிவு, பகுத்தறிவு போன்றவை இருப்பதில்லை. ஒருநாள் கேட்ட பொது அறிவு கேள்வியை, மறுநாள் வந்து வகுப்பில் ஆசிரியர் கேட்டாலும் பொதுவாகப் பலரும் பதில் சொல்வதில்லை. ஒன்பது, பத்தாம் வகுப்பில் அந்த ஒரு கேள்விக்குப் பதில் சொன்னது நான் மட்டும் தான். அதற்கு ஆசிரியரிடம் பேனாவை பரிசாகப் பெற்றேன். அப்போது அரசியல் அறிவோடும், பொது அறிவோடும் நான் இருந்தேன். வாய்ப்பு கிடைத்ததால் எஸ் ஆர் வி சென்றேன், அங்கு சென்ற பிறகு பள்ளி புத்தகம் மட்டும் தான் படிக்க வேண்டும், பள்ளித் தேர்வுகள் திரும்ப திரும்ப எழுதவேண்டும் என்ற நிலை தான் இருந்தது. பொதுவாக பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் நிலை அது தான். அங்கிருந்து படித்து வெளியில் வரும் பொழுது என் பொது அறிவு எல்லாம் குறைந்து, பிரதம மந்திரி யார்? முதலமைச்சர் யார்? என்பது கூடத் தெரியாமல் இருந்தேன்.
நெறியாளர்:  அரசியல் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் சமூக அறிவியல் பிடிக்கும். நம் தோழர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள் உங்களுக்குப் பிடித்த பாடம் என்ன என்று, குடிமையியலில் தான் நமக்குத் தேவையான அரசியல் அமைப்புச் சட்டம், அதன் வரலாறு இருக்கின்றது. எனக்கும் பிடித்த பாடம் அது தான். எனக்கும் சிறு வயதில் என் அப்பா சொல்லி கொடுத்திருக்கின்றார். உங்களைப் போலவே தான் என்னிடமும் மிகவும் சிறு வயதிலேயே கேட்பார்கள் பிரதம மந்திரி யார்? முதலமைச்சர் யார்? என. ஆனால் இது போல எல்லாருடைய வீட்டிலும் நடப்பது இல்லை. ஒரு கட்டத்தில் இந்த அரசியல் ஆர்வம் நம்ம இரத்ததில் ஊறிவிடுகின்றது. அதைப் பெற்றோர்கள் ஒதுக்கிவிடக்க்கூடாது.
ஜெய ஸ்ரீ:  அது பொது அறிவு தான். யாரும் செய்திகள் பார்ப்பதே இல்லை. அப்புறம் எப்படித் தெரியும். அதனால் பிரதம மந்திரி யார்? முதலமைச்சர் யார்?  என அவர்களுக்குத் தெரியாது. இப்பொழுதும் அந்த மாதிரி சூழ்நிலை தான் இங்கு இருக்கின்றது.
நெறியாளர் : உங்களுக்கு கிடைத்த உதவி அரசு பள்ளியில் படித்து முதல் பத்து மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பாக மாவட்ட ஆட்சியாளர் வாயிலாக வந்த உதவி தொகை அல்லவா?
ஜெய ஸ்ரீ :  ஆம். திருச்சி மாவட்டத்தில் படித்த முதல் பத்து மதிப்பெண்கள் எடுத்த 10 அரசு பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில் தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்பொழுது 2010 கலைஞர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.
நெறியாளர் : அந்த 10 பேரும் தனியார் பள்ளில் போய் சேர்ந்தார்களா ?
ஜெய ஸ்ரீ :  இல்லை. அதில் எனக்கு எப்பொழுதுமே வருத்தம் உண்டு. அந்தத் தனியார் பள்ளியில் ஆண்டு கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். நாம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதால்  அவ்வளவு தொகை கட்ட முடியாது. இப்படி வாய்ப்பு வரும் போது சில அரசு பள்ளிகள் அதற்கு சரியான முக்கியத்துவம் தரவில்லை. இது போன்ற ஒரு திட்டம் உள்ளது என நான்கு பேருக்கு மட்டும் தான் தெரிய வந்தது. அதனால் எங்களால மட்டும் தான் அந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடிந்தது. எங்கள் ஊரில் அரசு ஆண்கள் பள்ளியும் இருக்கின்றது, அரசு பெண்கள் பள்ளியும் இருக்கின்றது. நான் பெண்கள் பள்ளியில் படித்தேன். அதில் நானும் என் நண்பரும் மட்டும் தான் இந்தத் திட்டத்தின் மூலம் வந்தோம். ஆண்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த இரண்டு  மாணவர்களுக்கு அது தெரியாது. அதற்கு காரணம் தலைமை ஆசிரியரோட அலட்சியமா ? அல்லது அறியாமையா என எனக்குத் தெரியவில்லை.  அதனால் இப்பொழுது வரை எனக்கு வருத்தம் இருந்து கொண்டே உள்ளது.
நெறியாளர் : அரசாங்கமே உதவி செய்வதற்குத் தயாராக இருந்தும் அதை சரியாகக் கொண்டுப் போய் சேர்க்காமல், அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்கள் இல்லையா.
ஜெய ஸ்ரீ: ஆம்.
நெறியாளர் : கிட்டத்தட்ட  உங்களுக்கு உங்க வாழ்க்கையில் இந்த திட்டம் ஒர் முக்கியத்  திருப்பு முனை தானே, நீங்கள் நேரடியாக சென்று தேடி கிடைக்காத வாய்ப்பை, அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஜெய ஸ்ரீ : ஆம். அப்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்  மிகவும் முக்கியம். அது கௌரவப் பிரச்சனையாகவும் அன்று பார்க்கப்பட்டது. அவ்வளவு சிரமப்பட்டு மதிப்பெண் எடுத்திருக்கும் பொழுது, அதற்கு ஒரு மதிப்பு கொடுக்கும் பொழுது அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன். ஆனாலும் என்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
நெறியாளர் : இப்படியாக உங்கள் பள்ளி வாழ்க்கை சென்றது. அடுத்து உங்கள் கல்லூரி படிப்பைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் கட்டிட கலை படிப்பை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை கூறுங்கள்.
ஜெயஸ்ரீ :  எனக்கு சிறுவயதிலேயே சமூக அறிவியல் மிகவும் பிடித்த பாடம், என் அண்ணன் எனக்கு முகலாய வரலாறு உள்ளிட்ட பாடங்கள் சொல்லி கொடுத்தார், அதே போல எங்கள் பள்ளி ஆசிரியையும் எனக்கு நன்றாக சொல்லி கொடுத்தார். அதனால் எனக்கு சிந்து சமவெளி நாகரீகம், ஹரப்பா – மொகஞ்சதாரோ நாகரீகம் உள்ளிட்டவை பிடிக்கும். அதே போலத் தொல்லியல் துறை சார்ந்தவற்றைப் படிக்கும் பொழுது சிந்து சமவெளி நாகரிகம், அவர்களின் கட்டிடக் கலை போன்றவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை நாம் ஒரு கலாச்சாரத்தை அவர்களின் கட்டிடக்கலையை வைத்தே வரையறுக்கின்றோம். கீழடியிலும் நாம் தமிழர்களின் வரலாறு பற்றி அறியும் பொழுது, அதில் அடிப்படையாக அவர்களின் கட்டிடக் கலையே உள்ளது. இதனால் எனக்கு கட்டிட கலை மீது  ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்பில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்று பொது அறிவிலும் சிறந்திருந்த நான், புதிய பள்ளியில்  பள்ளி படிப்பில் முழுமையாக கவனம் கொண்டும் பனிரெண்டாம் வகுப்பில் 70 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. நான் அங்கு என்னைப் போலவே மாவட்ட ஆட்சியரகம் மூலம் படிக்க வந்தவர்களை நான் சந்தித்தேன். நாங்கள் தாமதமாக பள்ளியில் சேர்ந்ததால் எங்களை 40 படுக்கைகளை கொண்ட பெரிய அறையில் தங்க வைத்தனர். அதில் 20 பேர் பள்ளி நிர்வாக ஒதுக்கீடு மூலம் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 20 பேர் மாவட்ட ஆட்சியரகம் மூலம் வந்த மாணவர்கள்.
நெறியாளர் : உங்களுக்குப் பள்ளி கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்துமே கிடையாதா? நீங்கள் எந்த கட்டணமும் கட்டவில்லையா?
ஜெயஸ்ரீ : ஆம், எல்லாமே அரசால் கட்டப்பட்டன. ஒருமுறை புத்தக கட்டணமாக 1000 ரூபாய் கேட்டனர், அதை கட்டினோம். அரசு அந்த தொகையைப் பள்ளிக்கு முன்பே கட்டிவிட்டது என  அதையும் பள்ளி நிர்வாகம் திரும்பக் கொடுத்து விட்டது.
நெறியாளர் : நல்லது, இந்தப் பயணத்தில் அடுத்ததாக நீங்கள் கட்டிட கலை படித்தீர்கள் அல்லவா?
ஜெயஸ்ரீ : ஆம், எனக்கு கட்டிட கலை என்ற பெயரின் மீது ஒரு விருப்பம், ஈடுபாடு இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் 70 விழுக்காடு மதிப்பெண் பெற்றேன், வீட்டில் எல்லோரும்  மருத்துவம், பொறியியல் எனப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல உள்ளக வடிவமைப்பு (Interior Designing), கட்டிடக் கலை (Architect) என்ற புதிய படிப்புகள் உள்ளன. அதில் பெண்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அப்பொழுது Architect என்றால் கட்டிடக் கலை தான் என்பது எனக்குத் தெரியாது. 
நான் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் அரசு பள்ளியில் எங்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது எப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி என சொல்லி தந்தார்கள். அந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் நான் திருச்சி செல்வது வழக்கம். பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னர் நான் வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லும் வழியில் ஒரு வீட்டில் கட்டிடகலை நிபுணர் என்ற பெயர்ப் பலகையை பார்த்தேன். அந்த வீட்டினுள் சென்று அவரை சந்தித்தேன். அவர் எனக்கு இன்னொரு மூத்த கட்டிடகலை நிபுணர் ஒருவரை பற்றியும், இந்த படிப்புப் படிக்க
National Aptitude Test for Architecture (NATA – நாட்டா) என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும், அதில் தேர்ச்சி பெற்றால் தான் இதைப் படிக்க முடியும் எனவும் சொன்னார். சத்திரம் பகுதிக்கு சென்று மூத்த கட்டிடகலை நிபுணரையும் சந்தித்தேன். பின்னர் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து கட்டிடகலை படிப்பில் சேர்ந்தேன். நான் படித்த கல்லூரி புதிய கல்லூரி, அதில் கட்டிடகலை பாடத்தை முதல் முறையாக அப்பொழுது தான் தொடங்கினார்கள். நான் தான் கட்டிடகலை பாடப்பிரிவில் சேர்ந்த முதல் மாணவர். இவ்வாறு தான் கட்டிடகலையில் சேர்ந்தேன்.
அங்கு முதல் ஆண்டுப் படிக்கும் பொழுது கட்டணம் கட்டச் சொன்னார்கள், அதன் பின்னர் தான் நமக்கு உதவித் தொகை உண்டு எனத் தெரிந்து அதற்கு விண்ணப்பித்தேன், கல்லூரி ஆண்டு கட்டணம், தவிர்த்து வேறு எந்த கட்டணமும் கட்டவில்லை. முதலாம் ஆண்டில் அடிப்படை வடிவமைப்பு பற்றி சொல்லி கொடுத்தார்கள். நமது படைப்புத் திறனை வைத்து வரைந்து பழக வேண்டும். அப்பொழுது மனதில் உள்ள ஒரு புகைப்படைத்தை உருவகமாக வைத்து வரைய சொன்னார்கள். அப்பொழுது நான் எதை நினைத்து அவரை வரைந்தேன் எனத் தெரியவில்லை, ஆனால் நான் வரைந்திருந்தது அம்பேத்கர் அவர்களை. ஒருவேளை அவர் என் இரத்தத்திலேயே கலந்திருப்பதால் அவரை நான் வரைந்திருப்பேன் எனத் தோன்றுகிறது.
நெறியாளர் : முன்னரே நீங்கள் கூறியிருந்தீர்கள் திராவிடப் புரிதல் உங்களுக்கு இருக்கின்றது என, அதன் பின்புலம் என்ன? எங்கிருந்து அது தொடங்கியது என கூறுங்கள் ? வரலாறு சொல்லி கொடுக்கும் அண்ணன்கள் இருக்கின்றார்கள் எனும் பொழுதே சமூகப் பொறுப்புள்ள, வரலாற்று அறிவுள்ள ஒருவராகத் தான் உங்களை வளர்த்திருக்க வேண்டும். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
ஜெயஸ்ரீ :  எனது இரு தாத்தாக்களும் (அம்மாவினுடைய அப்பா, அப்பாவினுடைய அப்பா) பெரியாரியவாதிகள். அப்பொழுதே அவர்கள் படித்தவர்கள்.  அப்பா வழி தாத்தா அன்று (1960-70களில்) எட்டாம் வகுப்பு படித்து அரசு ஆசிரியர் ஆனார் ஒரு தாத்தா. அவருடைய தலைமுறையில் படித்த ஒருவர் அவர் மட்டுமே. தனது இறுதிகாலம் வரை அரசு ஓய்வூதியம் பெற்று மிகவும் மதிப்புடன் வாழ்ந்து வந்தார். தாத்தா அப்பொழுது அம்பேத்கர் நற்பணி மன்றம் என வைத்துத் தன்னை சுற்றி இருந்த சமூகத்திற்கு அம்பேத்கரைப் பற்றி சொல்லி கொடுத்து, உதவிகளும் செய்தார். அவரிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து எங்களுக்கும் அந்தப் புரிதல் வந்தது. 1988லேயே என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே ஐயர், மந்திரங்கள் இன்றி சீர்த்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. அப்பொழுதே அப்பா ஒர் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார். எங்கள் வீட்டினுள்ளே பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட நான்கு தலைவர்களின் படங்களும் இருக்கும்,  அதைப் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். எனக்குள் எப்பொழுது அரசியல் புரிதல் வந்தது எனத் தெரியவில்லை, அம்பேத்கர் படத்தை நான்  வரைந்த பின்னர் தான் நான் அவர்கள் என் உள்ளுணர்வில் கலந்துள்ளதை புரிந்து கொண்டேன்.
நெறியாளர் : உங்களை அறியாமலேயே அம்பேத்கர் அவர்களை வரைந்துள்ளீர்கள், மகிழ்ச்சி.  பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் சரியான நேரத்தில் உங்களுக்கு கிடைத்த ஒர் அரசு திட்டம் மூலம் உங்களது வாழ்க்கை சரியான திசையில் சென்றுள்ளது. இந்த வகையில் சமூக நீதித் திட்டங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன? இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சமூக நீதி திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள் என நிறைய உள்ளன. இந்தத் திட்டங்கள் தேவையா? உண்மையான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடைகின்றதா ?
ஜெயஸ்ரீ : சமூக நீதித் திட்டங்கள் தேவை, ஆனால் அது கடைசிப் பயனாளியையும் சென்றடைகின்றதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது? எனது வாழ்க்கையிலேயே எனக்கு கிடைத்த இந்தத் திட்டம், என்னுடன் படித்த சக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அரசின் கீழ் நிலை பணியாளர்களின் அலட்சியத்தின் காரணமாக இந்நிலை உள்ளது என எண்ணுகின்றேன். இங்கு இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமே இருக்கின்றது, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல அவர்களை மட்டும் எல்லோரும் சபிக்கின்றார்கள். ஏன் அவர்களை மட்டுமே எல்லோரும் குறிவைக்கின்றார்கள் எனத் தெரியவில்லை. மக்களுக்கு அறியாமை அதிகமாக உள்ளது.
நெறியாளர் : சரியான பார்வை, தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது, இங்குப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் (MBC) என அனைவருக்கும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இந்த சாதியினர் கூடப் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினருக்கு(ST) மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது, நமக்கு இல்லை என்ற தவறான கண்ணோட்டம் அவர்களிடம் உள்ளது. இதெல்லாம் ஒருபுறம் என்றால், மறுபுறம் இடஒதுக்கீடே தேவையில்லை, அது தவறான கொள்கை என பேசும் ஒரு தலைமுறையும் இங்கு  உருவாகி உள்ளது, இதற்கு என்ன காரணம் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ?
ஜெயஸ்ரீ : இப்படியான புரிதல் மிகவும் தவறான ஒன்று. இட ஒதுக்கீடு எதற்காக வழங்கப்படுகின்றது என்றால் சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிரிவினர் மேலே வருவதற்காக கொடுக்கப்படும் ஒன்று. என்னால்  இலட்சம் ரூபாய் செலவழித்து அந்தத் தனியார் பள்ளியில் படித்திருக்க முடியாது, எனது மதிப்பெண் , அதற்காக கிடைத்த அரசின் திட்டத்தினால் தான் நான் படித்து மேலே வந்துள்ளேன். இதே தனியார் பள்ளியில் முன்பு எனக்கு இடம் மறுக்கப்பட்டது, ஆனால் அரசு எனது மதிப்பெண்ணின் அடிப்படையில் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கி அதே பள்ளியில் படிக்க வைத்து நான் வாழ்வில் மேலே வர உதவியது. இது போன்ற வாய்ப்புகளை எல்லோரும் பயன்படுத்தி மேலே வர வேண்டும்.
இதே போல இதற்கு அடுத்து வரும் தலைமுறைக்கும் இந்த வாய்ப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன எனத் தெரியப்படுத்த வேண்டும். படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். படிப்பு தான் உங்களுக்கு அடையாளம், வேறு எதுவும் உங்களை அடையாளப்படுத்தாது, உங்கள் பேருக்குப் பின்னால் இருக்கும் நீங்கள் படித்து வாங்கிய பட்டம் தான்  உங்களின் அடையாளம்.
நெறியாளர் : நிச்சயமாக சரியான கருத்து. நீங்கள் உங்களை சுயாதீன கட்டிடவியல் நிபுணராக (Independent Architect) சொல்வது உங்களுக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். கட்டிடவியல் பார்வையில் வரலாற்றில் பார்த்த சிந்து சமவெளியைப் பற்றி சொன்னீர்கள், தமிழ்நாட்டினுடைய கட்டிடவியலைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? குறிப்பாக கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவற்றைப் பற்றி, ஏனென்றால் அவர் கட்டிடவியலின் மீதும் மிகவும் ஆர்வமாக இருந்தார்.  அண்ணா நூற்றாண்டு நூலகம், கத்திப்பாரா மேம்பாலம், தலைமைச் செயலகம் போன்றவற்றை ஒரு கட்டிடவியல் பட்டதாரியாக நீங்கள் எப்படி அவற்றைப் பார்க்கின்றீர்கள் ?
ஜெயஸ்ரீ : கலைஞரைப் பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அவர் ஒரே நேரத்திலேயே பல செயல்களை செய்து வந்தார், அரசியலில் இருந்தார், முரசொலி பத்திரிகை நடத்தினார், கதைகள் எழுதினார், இது போன்ற கட்டிடங்களை உருவாக்கினார். அதே சமயம் எல்லாவற்றையும் சரியாகவும், மிகுந்த கவனத்தோடும் செய்தார். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு. நாம் படிக்கும் படிப்பைத் தவிர வேறு எதிலும் நன் கவனம் போகாது, கட்டிடம் எப்படி வர வேண்டும், எங்கே என்ன இருக்க வேண்டும் என முழுக்க கட்டிடத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர் அப்படியல்ல ஒரே நேரத்தில் பல தளங்களில் செயல்பட்டு கொண்டிருந்தார். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் சென்றேன். எனக்கு அந்த கட்டிடத்தைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, தாஜ்மகாலைப் பார்க்கும் போது கூட எனக்கு அப்படி தோன்றவில்லை. கலைஞர் படிக்கவில்லை, அவருக்கு கட்டிடவியல் தெரியாது, அவருக்கு எல்லாமே சொந்த அறிவு தான், அதை வைத்தே அவர் இவ்வளவையும் செய்துள்ளார். இதை எல்லாம் பார்த்த பிறகு நான் ”கலைஞர் கட்டிடக் கலை” என்ற ஒரு தொகுப்பு பணியை செய்து வருகின்றேன். இந்த பணி இன்னும் நிறைவடையவில்லை. கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம், தலைமைச் செயலகம், திருவள்ளுவர் சிலை .. என அதெல்லாம் ஒரு நீண்ட பட்டியலாக நீண்டுகொண்டே செல்கின்றது.
நெறியாளர் :  இந்த தொகுப்பு பணியை கட்டிடவியல் ஆய்வு கண்ணோட்டத்தோடு நீங்கள் செய்து வருகின்றீர்களா?
ஜெயஸ்ரீ : ஆம், அவரது பாணியே ஒரு தனி வகைமையாகி விட்டது. கட்டிடவியலில் இசுலாமியர் வகைமை, கிறித்துவ வகைமை, இந்தோ சாசினேட் எனப் பல வகைமைகள் உள்ளன. அதே போல கலைஞருடைய வகைமை என்ற ஒன்றே இனி வந்துவிடும். அந்த அளவிற்கு அதில் ஒரு கலைநயம் உள்ளது, ஏனென்றால் டப்பா, டப்பாவாக இருக்கும் கட்டிடங்களைப் பார்க்கும் பொழுது நமக்கு அதில் கலைநயம் கிடைக்காது.  தலைமைச் செயலக கட்டிடத்தை எப்பொழுது பார்த்தாலும் நான் அப்படியே நின்றுவிடுவேன்.
நெறியாளர் : இன்று என் நண்பர் ஷாகில் கூடச் சொன்னார், முன்பு ஆலந்தூரிலிருந்து செல்லும் பொழுது எவ்வளவு வாகன நெரிசல் இருக்கும், ஆனால் கத்திபாரா மேம்பாலம் மிகவும் அழகாகவும், திறனுடனும் வடிவமைத்திருப்பார்கள்.  அதே நேரத்தில் அது கலை நயத்துடனும் இருக்கும். அது தான் கலைஞருடைய பாணி.
ஜெயஸ்ரீ : அதில் உள்ள கலைநயம் தான் மிகவும் முக்கியமான கூறு.
நெறியாளர் : கலைநயம் கலைஞரிடம் மிகவும் அதிகமாகவே இருந்தது.
ஜெயஸ்ரீ : ஆம், வள்ளுவர் கோட்டத்துக்கு சென்று அந்தத் தேரைப் பார்த்தால் அப்படியே பிரமித்துப் போய் நிற்பீர்கள். கல்லூரி நாட்களில் பல கல்வி சுற்றுலா சென்றுள்ளோம், தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது, ஆனால் தாஜ்மகாலை பார்க்கும் பொழுது அந்த அளவுக்கு நான் பிரமிப்பாகவில்லை, நான் எதிர்பார்த்து சென்ற அளவிற்கு அந்த கட்டிடம் எனக்கு ஈர்க்கவில்லை. அதே நேரம் இங்குப் பார்க்கும் பொழுது கலைஞருக்கு என்றே ஒரு தனிப் பாணி கட்டிடக்கலை உண்டு என்றே படுகின்றது, அதனால் தான் அதை ஒரு தொகுப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.
நெறியாளர் : நாம் மீண்டும் சமூக நலத்திட்டங்களுக்குள் செல்வோம், இங்கு சிலர் சமூக நலத்திட்டங்களை இலவச திட்டங்கள் என கொச்சைப்படுத்துகின்றார்கள். சில திரைப்படங்களில் கூட அப்படி காட்டியுள்ளனர். மிக்சி, கிரைண்டரை தூக்கி போட்டு உடைத்ததாகட்டும், வாக்குக்காக மக்களுக்கு இலவசங்களை கொடுக்கின்றார்கள் என சொல்வதாகட்டும். ஆனால் இங்கே நம் மாநிலத்தில் கட்டணமில்லா கல்வி, கட்டணமில்லா மருத்துவம் உள்ளது, ஆனால் அது நிறையப் பேருக்கு தெரிவதில்லை. ஒருபுறம் நன்கு படித்த உங்களைப் போன்ற மாணவிகளுக்கு இலட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க உதவும் அரசு, மறுபுறம் கட்டணமின்றி கல்வியும் கொடுக்கின்றது.

நாம் இந்தத் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றே சொல்லக் கூடாது, சமூக நலத் திட்டங்கள், சமூக நீதித் திட்டங்கள் என்று தான் சொல்ல வேண்டும். மடிக்கணினி கொடுப்பதாக இருக்கும், மாணவிகளுக்கு மிதிவண்டி கொடுப்பதாக இருக்கட்டும், பஸ்பாஸ் எனும் பேருந்து சலுகை கொடுப்பதாக இருக்கட்டும், இவை அனைத்திற்கும் பின்னே ஒர் ஆழ்ந்த சிந்தனை உள்ளது. அதாவது கடைநிலையில் இருப்பவருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் சிலர் இதைப் போகிறபோக்கில் இலவசம் என அவதூறு செய்கின்றனர். நீங்கள் இதை எப்படிப் பார்க்கின்றீர்கள். இல்லை இது தவறானதா?
ஜெயஸ்ரீ :  ஏதும் இல்லாத எளிய மக்களுக்கு அரசு கொடுப்பதை, எல்லாம் இருப்பவர்கள் பார்க்கும் பொழுது அவர்களின் பார்வையில் அதெல்லாம் இலவசமாகத் தான் படும். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது, ஏனென்றால் அவர்களிடம் அந்தப் பொருள் ஏற்கனவே இருக்கின்றது. ஒரு ரூபாய் என்றாலும் அதன் மதிப்பு உழைப்பவர்களுக்கு தான் தெரியும். ஏதுமற்ற மக்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு பல மாதங்களாகும். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு அரசு உதவிகளை செய்வது, பொருட்களை கொடுப்பது தவறில்லை என்பது தான் என் கருத்து.
அரசு மடிக் கணினியில் தான் நானும் படித்தேன். நான் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்ததால் எனக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை, என் தம்பி அரசு பள்ளியில் படித்ததால் அவனுக்கு கிடைத்த மடிக்கணினியை, என் கல்லூரி படிப்பிற்காக கொடுத்துவிட்டான். கட்டிடவியல் வரைபடம் வரைவது போன்ற பல பணிகளுக்கு அந்த மடிக் கணினி தான் எனக்கு கை கொடுத்தது. அதற்கு முன்பு வரை தரம் குறைந்த மடிக்கணினிகளே முந்தைய ஜெயலலிதா அரசின் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டன. என் தம்பி வாங்கும் பொழுது முன்பை விட பல மடங்கு திறன் அதிகமான Wi-fi, Bluetooth போன்றவற்றுடன் எனக்கு அரசின் மடிக்கணினி கிடைத்தது. படித்து முடிக்கும் வரை அந்த மடிக்கணினியில் தான் பணிபுரிந்து வந்தேன். வேலைக்கு சென்ற பின்னர் தான் சொந்தமாக வேறொரு மடிக்கணினி வாங்க என்னால் முடிந்தது. மடிக்கணினி திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதற்கு நானே ஓர் உதாரணம்.
நெறியாளர் : நிச்சயமாக. இட ஒதுக்கீடு பற்றி பேசும் பொழுது, அதை நாம் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட வேண்டும், இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நாம் அதைப் பயன்படுத்த போகின்றோம் என கூறுகின்றார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் பொழுது இன்னும் இட ஒதுக்கீடு சரியாக சென்று சேராமல் பல குடும்பங்கள் உள்ளன, அவர்கள் இன்னும் இதை அறியாமல் உள்ளனர் என சொன்னீர்கள். ஆனால் எதிர் கருத்தாளர்களோ இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் கொடுக்கப்படக் கூடாது, பொருளாதார அடிப்படையில் தான் கொடுக்கப்பட வேண்டும் என ஒரு புறம் கூறுகிறார்கள், மறுபுறம் இட ஒதுக்கீடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகிறார்கள்.
நீங்கள் பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்து விட்டீர்கள் உங்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என மாற்றி, மாற்றி நம்மை குழப்பும் விதமாக பேசுகின்றார்கள். இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? எல்லா சமூகங்களும் இட ஒதுக்கீடு பெற்று தன்னிறைவு அடைந்துவிட்டார்களா? இன்னும் எவ்வளவு நாள் இட ஒதுக்கீடு நீடிக்கப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் ?
ஜெயஸ்ரீ : எல்லோருக்குமே இந்த திட்டம் சென்றடைந்து விட்டதா என என்னை கேட்டால், கண்டிப்பாக இல்லை என்பதே என் பதில். மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்துகின்றார்களோ இல்லையோ, ஆனால் மற்றவர்கள் இதனால் பயன்பெறுவதை பார்த்து அவர்கள் ஆதங்கம் அடைகின்றார்கள். எனக்கு கட்டிடவியல் இளங்கலை பட்டப்படிப்பு அரசின் இடஒதுக்கீட்டில் இலவசமாக கிடைத்ததால் நான் படிக்க முடிந்தது. இல்லை எனக்கு அது வேண்டாம் என நான் ஒதுங்கி இருக்கவில்லை, ஏனென்றால் எனக்கு கல்வி கிடைக்கின்றது. எல்லா மக்களும் மேலே வர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான இந்த திட்டம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இங்கு இடஒதுக்கீட்டிற்கான தேவை இப்பொழுது முடியாது.
நெறியாளர் : இட ஒதுக்கீடு தொடர்பான சரியான புரிதல் இன்றைய இளைஞர்களிடம் இருக்கின்றதா? அரசியல் ஆர்வம் என்பது அவர்களிடம் எப்படி உள்ளது ? நாம் சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் என ஒரு வரலாற்று பாராம்பரியத்தை பேசுகின்றோம், இதனால் எல்லா தரப்பு மக்களும் தான் பயன்பெற்றுள்ளார்கள். ஆனால் இதனால் பயன் பெற்றவர்கள் கூட இதற்கு மாறான அரசியல் திசைவழியிலும், சாதி ஆதிக்க பார்வையோடு இருப்பதற்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கின்றீகள்?
ஜெயஸ்ரீ : என்னை பொருத்தவரை இதற்கு அவர்கள் பெற்றோரின் வளர்ப்பு முறை தான் காரணம் என்பேன். அரசியலை தங்கள் குழந்தைகளுக்கு சரியாக சொல்லித் தருகின்றார்களா? எத்தனை பெற்றோர்களுக்கு இங்கு சரியான அரசியல் புரிதல் இருக்கின்றது? எத்தனை பேர் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளரை பற்றி சரியாக தெரிந்து கொண்டு வாக்களிக்கின்றார்கள்? என நிறைய கேள்விகள் இங்கு உள்ளது. அதிலும் இன்று இன்றைய தலைமுறையில் பலர் வாக்காளர் அடையாள அட்டை கூட வாங்காமல் உள்ளனர். ஆனால் அவர்கள் அரசியலை பற்றி விமர்சனம் கூறுகின்றார்கள். வாக்காளர் அடையாள அட்டை வாங்குங்கள், அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் மிகவும் சிக்கலான மன நிலையில் உள்ளனர். அரசியலை பற்றி விமர்சனம் செய்வார்கள், நான் அரசியலில் இல்லை என்பார்கள், அரசியல் ஒர் சாக்கடை என்பார்கள். ஒன்றும் தெரியாமல் அரசியலைப் பற்றி தவறாக பேசுவார்கள், முதலில் அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் கலந்து பேசுங்கள் என்பது அவர்களுக்கு என் அறிவுரை. செய்தியையே முன்பு பார்க்காமல் இருந்தவர்கள், இன்று மீம்களால் தான் செய்தி பார்க்கின்றார்கள்.
நெறியாளர் : நாம் நிறைய அவர்களிடம் பேச வேண்டும், பேசித் தான் வரலாற்றை அவர்களுக்கு புரிய வைக்க முடியும். அதே நேரம் நீங்கள் சொன்னது போல பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் முறையும் முக்கியமான காரணம். படி, நல்ல மதிப்பெண் எடு, வேலைக்கு செல், வேறு எதையும் பார்க்காதே என சொல்கின்ற பெற்றோர்கள் தான் இங்கு அதிகம். உங்களுக்கு கிடைத்ததைப் போன்ற அரசியல் பார்வை உடைய பெற்றோர்கள் குறைவாகத் தான் உள்ளனர். மதிப்பெண் தான் முக்கியம் என்று தான் அவர்கள் குழந்தைகளை வளர்க்கின்றனர்.
ஜெயஸ்ரீ : மாநிலத்தில் முதல் மதிப்பெண் , மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என அறிவிப்பதை தடை செய்திருப்பது என்னைப் பொருத்தவரை இந்த அரசு செய்த நல்ல செயலாகப் பார்க்கின்றேன். ஏனென்றால் நிறைய மாணவர்கள் நாம் அவர்கள் போல் முதல் மதிப்பெண் எடுக்கவில்லையே என தற்கொலை செய்து கொல்கின்றார்கள். இந்த மதிப்பெண்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நான் படிக்கும் கட்டிடவியல் படிப்பிற்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் ஒரு பொருட்டே அல்ல. நாட்டா நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே கணக்கில் கொள்ளப்படும். 199.8 மதிப்பெண்
நெறியாளர் : இன்று தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான போராட்டங்களைப் பார்த்து கொண்டிருக்கின்றோம், இந்த நுழைவுத் தேர்வு பல ஏழை, எளிய மாணவ/மணவியரின் மருத்துவ கனவை கலைத்துள்ளது. நம் மாநிலத்தில் நாம் நிறைய அரசு மருத்துவ கல்லூரிகளை கட்டியுள்ளோம், நிறைய மருத்துவ இடங்களை உருவாக்கி உள்ளோம். முன்பு தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், அந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் இன்று தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு வாய்ப்பை மறுக்கின்றது, ஏனென்றால் இந்த நுழைவுத் தேர்வு மத்திய அரசின் பாடத் திட்டத்தின் (CBSE) அடிப்படையில் நடத்தப்படுகின்றது. இது நம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டா என்ற நுழைவுத் தேர்வைப் பற்றி சொல்லுங்கள். அந்த தேர்வு எப்படி நடத்தப்படுகின்றது ?
ஜெயஸ்ரீ : கட்டிடவியல் படிப்பு என்பது ஐந்து ஆண்டு படிப்பு, பொறியியல் படிப்பு போல நான்காண்டு படிப்பு அல்ல, இதுவே பெரும்பாலும் மக்களுக்கு தெரிவதில்லை, அவர்கள் கட்டிடவியல் என்பது பொறியியல் படிப்பில் உள்ள பிரிவு என்றே எண்ணுகின்றார்கள். கட்டிடவியல் என்பது தனி படிப்பு. மருத்துவம் போல இதுவும் ஒரு தனி வகைமை படிப்பு. கட்டிடவியல் படிப்புக்கு மத்திய அரசே நாட்டா எனும் நுழைவுத் தேர்வை நடத்துகின்றது. 2017க்கு முன்பு வரை எப்பொழுது வேண்டுமென்றால் தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்லலாம், எப்பொழுது வேண்டுமென்றாலும் நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வு குறிப்பிட்ட இடங்களில் அரசால் நடத்தப்பட்டன. 90க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்தால் நீங்கள் கல்லூரியில் கட்டிடவியல் படிப்பில் சேர தகுதியாகிவிடுவீர்கள். 2017க்கு பின்னர் அரசு இந்த தேர்வை ஏப்ரல் மாதத்தில் மட்டும் நடத்தத் தொடங்கியது. முன்பிருந்த திட்டத்தில் எந்த மாதத்தில் வேண்டுமென்றாலும் நுழைவுத் தேர்வு எழுத முடிந்ததால் தேர்வை எழுதி முடித்து கல்லூரிகளில் எப்பொழுது வேண்டுமென்றாலும் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இதனால் கல்லூரியில் அந்த படிப்புக்கு உள்ள இடங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் நிரப்பப்பட்டு கொண்டே இருக்கும்.
2017க்கு பிறகான இந்த மாற்றத்தால் கல்லூரி இடங்கள் ஓர் ஆண்டு முழுவதும் காலியாக இருந்தன. அதே நேரம் அதிக கல்லூரிகளில் கட்டிடவியல் படிப்பு கொண்டு வரப்பட்டது. ஒரு கல்லூரிக்கும், அடுத்த கல்லூரிக்கும் குறிப்பிட்ட தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதிகள் காற்றில் பறந்தன. இதனால் கட்டிடவியல் படிப்பிற்கான தரம் குறைந்துவிட்டது. கட்டிடவியலில் ஆர்வம் இல்லாத பொறியியலில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்த படிப்பில் சேர்த்து கொள்ளப்பட்டனர். இந்த நேரத்தில் தான் தமிழக அரசு – அண்ணா பல்கலைகழகம், தமிழ்நாடு நாட்டாஎன்ற நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது. இரண்டு நுழைவுத் தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் ஒன்று தான். நாட்டா தேர்வு எழுதும் பொழுது இந்தியாவில் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் சென்று படிக்கலாம். தமிழ்நாடு நுழைவுத் தேர்வு இங்கு உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும், இதன் மூலம் ஒரு சில கல்லூரிகளில் மட்டும் இடம் நிரப்பப்படுவது நின்று பெரும்பாலான கல்லூரிகளிலும் இடம் நிரப்பப்பட வழிவகை செய்யப்பட்டது.
நுழைவுத் தேர்வு அவசியமா என்ற உங்கள் கேள்விக்கு என் பதில், ஆம் அது அவசியம். நுழைவுத் தேர்வு என்பது ஒர் தகுதித் தேர்வு தான். இந்த நுழைவுத் தேர்வில் பாகுபாடு கொண்டுவரக்கூடாது. மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் வரவேண்டும் என்பது போன்ற பாகுபாடு கூடாது. நாட்டா நுழைவுத் தேர்வில் நாங்கள் கட்டிடவியல் படிப்பில் என்ன படிக்கப் போகின்றோமோ, அது தொடர்பான கேள்விகள் மட்டுமே அங்கு கேட்கப்படும், ஆனால் நீட் நுழைவுத் தேர்வு மத்திய பாடத்திட்டத்திற்கு சார்பாகவே உள்ளது. முன்பு நடந்த அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வில் குறிப்பிட்ட விழுக்காடு தமிழக மருத்துவ இடங்கள் மற்ற மாநில மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டன. இதில் படித்த வெளிமாநில மாணவர்கள், படித்து முடித்து விட்டு அவர்கள் மாநிலம் சென்று விடுவதால், நம் மாநிலத்திற்கு தேவையான எண்ணிக்கையில் மருத்துவர் கிடைப்பதில் பற்றாக்குறை ஆகின்றது. அதே நேரம் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு குறைகின்றது.
கட்டிடவியலில் தமிழ்நாடு நாட்டா நுழைவுத் தேர்வைப் போல மருத்துவத்திற்கும் தமிழ்நாடு நுழைவுத் தேர்வை கொண்டு வர வேண்டும், அவ்வாறு கொண்டு வரும் பொழுது, மாநில அரசின் பாடத்த்திட்டத்தையும் அதில் அரசு சேர்த்து கொள்ளும் பொழுது இப்பொழுது நடக்கும் பாகுபாடு ஒழிந்து தமிழக மாணவர்கள் பயன்பெறுவார்கள். மத்திய பாடத்திட்டத்தின் பாணி வேறானது, அந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் பாடப்புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதாமல், மாணவர்களின் கற்பனையில் பதில் எழுதலாம், ஆனால் மாநில பாடத்திட்டதில் அப்படி செய்ய இயலாது, நாம் சொந்தமாக எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. நான் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது சொந்தமாக எழுதி சில முறை தேர்ச்சி ஆகாமலும் இருந்துள்ளேன்.
நெறியாளர் : நீட் நுழைவுத் தேர்வில் பிரச்சனை என்ன வென்றால், வெளி மாநில மாணவர்கள் நம் கட்டமைப்பின் மூலம் பயன்பெறுவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படுவது தான். தமிழக அரசு முன்பு நடத்திய நுழைவுத் தேர்வு எழுத  கிராமப்புற மாணவர்கள் தங்களுக்கு நகர்ப்புற மாணவர்களுக்கு இணையான வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அந்த தேர்வு நிறுத்தப்பட்டது. எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் அதன் பின்னால் இருந்த நோக்கமாகும். அதனால் மாநில பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பில் அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கற்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத் தேர்வின் மூலம் நுட்பமாக எல்லோருக்குமான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தனிப் பயிற்சி செல்வதற்கு இலட்சகணக்கில் பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் உள்ளது.
ஜெயஸ்ரீ : ஆம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் அது உள்ளது, அதனுடன் தனிப்பயிற்சி செல்பவர்கள் மட்டுமே பெரும்பாலும் பயன்பெறுகின்றார்கள்.
நெறியாளர் : சமூக நீதியின் அடிப்படையில் நாம் எல்லோருக்குமான ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை கொண்டு வந்தோம், அதுவும் பின்னால் முடக்கப்பட்டது.
ஜெயஸ்ரீ : எல்லோருக்கும் பொதுவான பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடந்திருந்தால் நம் மாணவர்கள் நிறைய இடங்களைப் பெற்றிருப்பார்கள். அனிதா போன்ற மாணவர்களை நாம் இழந்திருக்க மாட்டோம். அதனால் தான் மத்திய அரசு இந்த நுழைவுத் தேர்வை அவர்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டார்கள்.
நெறியாளர் : இதைப் போலவே இந்த நாட்டா தேர்வுகளை அவர்கள் எதுவும் மாற்றாமல் இருக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : இதுவரைக்கும் அவர்கள் இதுபோல் எதையும் மாற்றவில்லை.
நெறியாளர்: சுயாதீன கட்டிடவியலாளராக நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள் ? உங்களது விருப்பங்கள் பற்றி சொல்லுங்கள் ?
ஜெயஸ்ரீ : பெரியாரிசம் படித்ததால் சுயமரியாதை உள்ள சுயாதீன கட்டிடவியலாளர் என்ற பெயரே எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. ”எனது சுயமரியாதைக்கும், சுயமரியாதை உண்டு “ என்பது தான் என்னுடைய பொன்மொழியே. சுயமரியாதையை என்றைக்கும் விட்டு கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். பெரியார், அம்பேத்கரை படித்ததால் வந்தது இது. நாம் படித்து முடித்தவுடன் பெயருக்கு பின்னால் பட்டத்தை எழுதி பார்ப்பது நமக்கு மிகவும் பிடிக்கும். அது போலவே ஜெயஸ்ரீ இராமலிங்கம் – கட்டிடவியல் பட்டதாரி என எழுதும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சுயாதீனமாக செயல்படுவதால் நான் யாருக்கும் அடிமை இல்லை என்ற நினைவே மனநிறைவை தருகின்றது. நான் இப்பொழுது தனிப்பட்ட வகையிலும் சில பணிகள் செய்கின்றேன், வேலையாகவும் சில பணிகளை செய்கின்றேன். அதே நேரம் கலைஞர் தொகுப்பையும் செய்து வருகின்றேன். வேலைக்காக பணியையும், விருப்பத்திற்காக கலைஞர் தொகுப்பையும் செய்கின்றேன்.
நெறியாளர் : நல்லது, பொருளாதாரத்தில் உங்களை நிலைப்படுத்தி கொண்டு , உங்களது விருப்பத்தையும் நிறைவேற்றி வருகின்றீர்கள் . இதை கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாம் நேர்காணலின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம்.  திராவிடத்தாம் நாம் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா?
ஜெயஸ்ரீ: கண்டிப்பாக திராவிடத்தால் வாழ்ந்தோம், வாழ்கின்றோம். எல்லோரும் வாழ்கின்றார்கள். யாரும் வீழவில்லை. ஏனென்றால் அவர்கள் கொண்டு வந்த எல்லா திட்டங்களும் மக்கள் நலனை மையப்படுத்தி தானே இருந்தது. இப்பொழுது கொரோனா நேரத்தில் கூட மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றார்கள். இதெல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்யும் பொழுது எப்படி நாம் திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்ல முடியும்? திராவிடத்தால் வளர்ந்தோம், வாழ்ந்தோம்னு தான் சொல்ல முடியும்.
நெறியாளர் : மூன்று தலைவர்களின் பெயரை சொல்கின்றேன், உங்கள் மனதில் உள்ளதை சொல்லுங்கள். பாபா சாகேப் அம்பேத்கர்.
ஜெயஸ்ரீ :  என்னுடைய பெயருக்கு பின்னால் நான் படித்து வாங்கிய பட்டம், நான் சுயாதீனமாக பணியாற்றுவது எல்லாமே அண்ணல். அம்பேத்கரால் தான்.
நெறியாளர் : பெரியார்
ஜெயஸ்ரீ : பெண் விடுதலை, பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்ற எல்லாவற்றிற்கும் பெரியார் பாடுபட்டுள்ளார். என் வீட்டில் எனக்கு அண்ணன், தம்பி உள்ளனர், அவர்கள் யாரும் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லாதே, படிக்காதே என யாரும் சொன்னதில்லை. அதற்கு காரணம் பெரியார். எங்கள் வீட்டில் என்னை யாரும் அடக்கி வைக்கவில்லை. அதே போல எங்கள் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி.  அதே போல முசிறியில் முதல் கட்டிடவியல் பட்டதாரி நான் தான். ஊரிலேயே முதல் கட்டிடவியல் பட்டதாரி யார் எனக் கேட்டால் என்னை தான் சொல்வார்கள், அது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் எனது வீட்டாரும் பெரியாரை படித்துள்ளார்கள், நானும் அவரை படித்துள்ளதே .
நெறியாளர் : உங்களை பார்த்து உங்கள் ஊரில் அடுத்தடுத்து கட்டிடவியல் பட்டப் படிப்பு படிக்க வந்திருப்பார்களே? அவர்களுக்கு நீங்கள் வழிகாட்டி வருகின்றீர்களா?
ஜெயஸ்ரீ : வழிகாட்டி வருகின்றேன். ஆனால் பெரும்பாலும் பெண்களை எல்லோரும் கலை, கலை என கலை பட்டப்படிப்பில் மட்டுமே கொண்டு போய் சேர்க்கின்றார்கள். இதை விடுத்து வெளியே வாங்க, இது போன்ற புதிய படிப்புகள் நிறைய உள்ளன என நான் இங்குள்ளவர்களிடம் சொல்லி வருகின்றேன். மேலும் இந்த படிப்புகள் எல்லாம் பெண்களுக்கு நிறைய வாய்ப்புள்ள படிப்புகள் என சொல்லுகின்றேன்.
நெறியாளர் : இறுதியாக கலைஞர். கலைஞரைப் பற்றி சொல்லுங்கள்.
ஜெயஸ்ரீ : கலைஞரைப் பற்றி சொல்வதற்கு என்னிடம் நிறைய உள்ளன. பெரியார், அம்பேத்கரை விட கலைஞரைப் பற்றி நான் நிறைய பேசியிருக்கின்றேன். முன்பு கூறியதைப் போல கலைஞரைப் பற்றி வீட்டிலேயே நிறைய பேசுவார்கள். இன்று என்னுடைய அலுவலகமே கலைஞரின் காலடியில் இருப்பது போல, அவரது வீட்டினருகே தான் உள்ளது. 2009ல் காங்கிரஸ் ஆட்சியின் பொழுது கேபினெட் அமைச்சர்களாக யார், யார் இருந்தார்கள் என்பது வரை எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது. இப்பொழுது கேட்டால் கூட சொல்வேன். அன்று சரியான நபருக்கு சரியான துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருந்தது.
அன்று திருச்சியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டத்திற்கு என்னை என் அப்பா அழைத்து சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் காங்கிரசின் பெரிய தலைவர்கள், திமுகவில் கலைஞர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்ன தான் அரசியல் பேசினாலும், ஒரு படிக்கிற பிள்ளையான என்னை ஏன் என் அப்பா இந்த கூட்டத்திற்கு அழைத்து வந்தார் என அவரை மனதில் திட்டி கொண்டே அமர்ந்திருந்தேன். ஆனால் கலைஞர் அந்த கூட்டத்திற்குள் நுழையும் பொழுது நான் இருக்கையின் மேலே ஏறி உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தேன். உதட்டளவில் நான் வேண்டாம் என சொல்லி கொண்டிருந்தாலும், உள்ளே எனக்குள் அரசியல் இருந்தது. அந்த பிரமிப்பு தான் கலைஞர்.
நெறியாளர் : மிகவும் மகிழ்ச்சி ஜெயஸ்ரீ. இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி திட்டங்கள் மூலம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடைந்துள்ளது என்பதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது இன்னும் தொடர வேண்டும், உங்களைப் போல நிறைய பேர் இந்த திட்டங்களால் பயன்பெற்று மேலே வர வேண்டும் என்பதே நம் எண்ணம். நீங்கள் உங்களுடைய நிறைவு கருத்தை சொல்லலாம்.
ஜெயஸ்ரீ : எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்ததற்கு மிகவும் நன்றி. ஒர் பொது ஊடகத்தில் என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வது இது தான் முதல் முறை. அதிலும் இந்த உரையாடல் மிகவும் பேச வேண்டிய ஒன்றாகும் . என்னை சுற்றி பெரும்பாலும் அரசியலற்றவர்களே இருக்கும் பொழுது இது போன்ற அரசியல் உரையாடல் எனக்கு மகிழ்வாக உள்ளது.
நெறியாளர் : மிகவும் மகிழ்ச்சி ஜெயஸ்ரீ. உங்களைப் போல நிறைய பேர் உருவாக வேண்டும். உங்களுடைய வாழ்க்கையிலும், பணியிலும் மென்மேலும் வளரவேண்டும் , அதே போல சமூகத்துக்கு பயனுள்ள செயல்களையும் நீங்கள் செய்ய வேண்டும். மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

No comments:

Post a Comment