Tuesday 31 August 2021

நான் தொட்டால் தீட்டாகிவிடும் என்றால் பிரச்சனை என்னிடமில்லை, உன் புத்தியில் இருக்கிறது! - ராஜராஜன் ஆர்.ஜெ

நான் தொட்டால் தீட்டாகிவிடும் என்றால் பிரச்சனை என்னிடமில்லை, உன் புத்தியில் இருக்கிறது! - ராஜராஜன் ஆர்.ஜெ


நான் வேறு, நீ வேறென்று 

நானாக சொல்லவில்லை;

நீ தான் சொல்ல ஆரம்பித்தாய்!


ஆடோட்டி வந்த உன்னை நம்பி காடுகளை இழந்தோம்,

வீடுகளை இழந்தோம்,

நாடுகளையும் இழந்தோம்!


யாவரும் கேளிர் என வாழ்ந்தவர்களுக்கு

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று

கற்பித்தவன் நீ!


எல்லாரும் சமம் என்று 

சொல்வதே எம் நீதி!

அதை ஒருப்போதும் ஏற்காது

உன் மநு நீதி!


நான் தொட்டால் தீட்டாகிவிடும்

என்றால் பிரச்சனை என்னிடமில்லை,

உன் புத்தியில் இருக்கிறது!


நானும் நீயும் ஒன்று தான்

என ஏற்கிறது அறிவியல்.

அதை ஏற்காமல் தடுக்கிறது

உன் அரசியல்!


பிறப்பு ஒரு விபத்து,

சாதி ஒரு சதி,

மதம் ஒரு மாயை,

மனிதமே எங்கள் உயர் தத்துவம்!


கல்வியை மறுத்தாய்,

போராடி பெற்றோம்!

வாய்ப்புகளை மறுத்தாய்,

போராடி பெற்றோம்!


பிறப்பினால் இங்கே எவனும்

உயர்ந்தவனும் இல்லை,

தாழ்ந்தவனும் இல்லை!


திறமை என்பது 

உன் பரம்பரை சொத்தல்ல!

நாங்களும் படித்தோம்,

நாங்களும் உயர்ந்தோம்! 


நான் வேறு, நீ வேறென்று 

நானாக சொல்லவில்லை;

நீ தான் சொல்ல ஆரம்பித்தாய்!


வாழு, வாழவிடு என்று தான் 

அன்றும் சொன்னோம்,

இன்றும் சொல்கிறோம்,

என்றும் சொல்லுவோம்!


- ராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment