Wednesday 25 December 2019

மாறி வரும் எழுத்துலகம் - அசோக் குமார் ஜெயராமன்


எழுத்துலகம் எனச் சொன்ன  உடன் இலக்கியம், கவிதை  குறித்துச் சொல்லப் போகிறேன் என நினைக்க வேண்டாம். நிஜமாகவே நாம் படிக்கும் புத்தகங்கள் செய்தித்தாள்களில் உள்ள ‘எழுத்து’ என்பது கடந்த இருபது, முப்பதுஆண்டுகளில் எப்படியான தொழில்நுட்ப மாற்றங்களைச் சந்தித்து என்பதைப் பற்றியே சொல்லப் போகிறேன்.

வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்கள், இல்லாதவர்கள் என அனைவருக்கும் வாசிக்கக் கிடைக்கும் பத்திரிக்கை எதுதெரியுமா? கல்யாணப் பத்திரிக்கை தான். முப்பது வருடங்களுக்கு முன்னர் ‘அச்சாபீஸில்’ (பெட்டிக்கடைக்குஷாப்புக்கடை போல அச்சகத்துக்கு  அச்சாபீஸ் என்பது ஒரு வழக்குச் சொல்) இவை ‘ட்ரடில் ப்ரஸ்’ என்றஇயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டன. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் கூட்டன் பர்க் கண்டுபிடித்த அச்சுஇயந்திரத்திற்கும், அந்த ட்ரடில் ப்ரஸுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை எனச் சொல்லலாம். அதை கையால்இயக்கினார். இதைக் காலால் இயக்கலாம். பின்னர் மின் மோட்டர் பொருத்தப்பட்டு இவை மின்னச்சு இயந்திரங்களாகஉருமாறின.

அச்சு இயந்திரம் மின்சாரத்தால் இயங்கத் தொடங்கினாலும் எழுத்துகளைக் கோர்ப்பது என்பது கையால்செய்யப்பட்டது. அச்செழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து கம்போசிங் ஸ்டிக் எனப்படும் சிறு கருவியில் பகுதிபகுதியாக அச்சுக் கோர்ப்பார்கள். அவ்வாறு கோர்த்த பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து காகிதத்தில் அச்சிடுவார்கள். இதுமிகுந்த உழைப்பைக் கோருவதும் நேரம் பிடிக்கக்கூடியதுமாகும்.

இம்முறையானது தொண்ணூறுகளில் நடந்த கம்ப்யூட்டர் புரட்சியால் பெரும் மாற்றத்தைக் கண்டது. மேசைக்கணினிகளின் வளர்ச்சியானது அலுவலகத்தில் தட்டச்சு இயந்திரத்தைப் பதிலீடு செய்ததுமில்லாமல் அச்சுத் துறையில்Desk Top Publishing (DTP) எனச் சொல்லும் வகையில் வழக்கமான அச்சு இயந்திரம் இல்லாமல் கணினியில்வடிவமைத்து கணினி அச்சுயந்திரத்தில் அச்சடிக்கும் வழக்கத்தைச் சாத்தியமாக்கியது.

மரபான அச்சுத்தொழில் இந்தக் கணினித் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது எனலாம். ஒவ்வொரு எழுத்தாக எடுத்துக் கோர்ப்பதற்குப் பதிலாக

DTP மென்பொருட்களைக் கொண்டு கணினியில் பலமடங்கு வேகமாகத் தட்டச்சு செய்ய முடிந்தது.  அவற்றைப்பக்கங்களாக வடிவமைப்பதும் எளிதானது. பல்வேறு விதமான எழுத்துருக்கள்(Fonts) அழகியலுடன் வடிவமைப்பதைஎளிதாக்கின. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட மாஸ்டர் ப்ளேட்டுகள் ஆஃப்செட் அச்சுயந்திரங்களில் துல்லியமாகவும்வேகமாகவும்  அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டன. அச்சடித்த பின்னர் அச்சு எழுத்துகளைப் பிரித்துப்போடும் தேவையும்இல்லாமல் போனது. 

கணினி நுட்பமானது எழுத்துகள், படங்கள் எனச் சேர்த்து அச்சிடுவதையும், வண்ணப்  புத்தகங்கள் அச்சிடுவதையும்எளிதாக்கியது. இவ்வாறான நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், தரமாகவும் பல்லாயிரக் கணக்கானபக்கங்களை அச்சிட முடிந்தது. அச்சு நூல் பைண்டிங் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மிகக்குறைவான ஊழியர்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை விரைவாகத் தயாரிக்க முடிந்தது.

2000-த்தின் தொடக்கத்தில் DTP, Large scale printing என்பது போய் Print on Demand என்பது வழக்கமாயிற்று. அதாவது ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்காமல் தேவைப்படும் பொழுது தேவையான எண்ணிக்கையில்அச்சடித்துக் கொள்வது.  இதன்மூலம் அச்சடித்த புத்தகங்களைக் கிடங்கில் வைத்துப் பாதுகாப்பது, விற்காமல்இருக்கும் நூல்களில் பணம் முடங்குவது போன்ற பிரச்சினைகள் இல்லாமல் ஆயின.

ஆனால் இன்றோ அச்சுப் புத்தகம் என்பதையே பதிலீடு செய்யும் விதமாக மின்னூல்கள் (E-Books) என்ற புது வடிவத்தை நாளேடுகள், இதழ்கள், புத்தகங்கள் போன்றவை எடுத்துள்ளன. இவற்றை அதற்கே உரிய ஈ-புக் ரீடர் கொண்டுபடிக்கலாம் அல்லது தத்தம் கைப்பேசிகளைக் கொண்டும் படிக்கலாம். அமேசான் கின்டில் (Amazon Kindle), கோபோ(Kobo) போன்ற நிறுவனங்கள் இந்த நுட்பத்தில் கோலோச்சுகின்றன.

அச்சிடுதல் என்பதின் தேவை இனியும் இருக்கும் என்றாலும் மின்னூல்கள் இலக்கியம், கதை, கவிதைகள் பதிப்பித்தல்என்பதை மின்னூல்கள் எளிமையாக செய்யும் வகையில்  மாற்றியுள்ளன. வாசிப்புப்பழக்கம் உள்ள இளம்தலைமுறையினர் வருங்காலத்தில்  மின்னூல்களை மட்டும் வாசிக்கும் சாத்தியம் கூடும் எனலாம்.


No comments:

Post a Comment