Tuesday 29 September 2020

ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார் - ராஜராஜன் ஆர். ஜெ

 ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார் - ராஜராஜன் ஆர். ஜெ


மிழறிஞர் டாக்டர். மா. நன்னன் அவர்களின் இந்த "ஒப்பற்ற சுயசிந்தனையாளர் பெரியார்" என்கிற புத்தகத்தை அடிப்படையாக வைத்தே என் இன்றைய பேச்சை அமைக்கவிருக்கிறேன்.


இந்த நூல் மூன்று பெரும் தலைப்புகளில் பிரிக்கப்பட்டிருக்கிறது.


1) பெரியார் தண்ணிகிரற்ற சுயசிந்தனையாளர் 

2) பெரியார் பண்பாட்டிற்கு ஒரு தனி உவமையாளர் 

3) பெரியார் காண விரும்பிய புதிய உலகம்.


இதில் எனது இன்றைய பேச்சு முதல் இரண்டை ஒட்டி அதிகமாக இருக்கும். காரணம் எனக்கு பிறகு இருவர் பேச இருப்பதால், என் பேச்சை 30 நிமிடத்திற்குள் தர விரும்புகிறேன். 


பெரியாரை பற்றி படிப்பதே அலாதியானது. பெரியார் எழுத்துக்களை நாம் அன்றாடம் கடந்துவந்துக்கொண்டே தான் இருப்போம். பெரியார் என்பவர் ஒரு விதை. அவர் நம்முள் விழுந்துவிட்டால், அவரது கருத்துக்கள் நம்முள் வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும். நம்மை சிந்திக்கவைத்துக்கொண்டே தான் இருக்கும். அப்படியான பெரியாரை குறித்து ஒரு அருமையான புத்தகத்தை இந்த திராவிட விழுதுகள் ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கத்தை ஒட்டி நான் வாசிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, பெரியாரின் கருத்துகளின் தொகுப்பாகவும், பெரியார் என்னும் மனிதரின் சமூக வாழ்வின் தொகுப்பாகவும் இந்த புத்தகம் இருக்கிறது. நீண்ட விளக்கங்களாக இல்லாமல் சுருக்கமாக அதே வேளையில் தெளிவாக எழுதியிருக்கிறார் அய்யா மா. நன்னன் அவர்கள். 


பெரியார் தன்னிகரற்ற சுயசிந்தனையாளர். இந்த தலைப்பில் 1) மனிதன் 2) பெண் சுயேச்சை 3) காதல் மனம் 4) குற்றமற்ற வாழ்வு 5) மூடநம்பிக்கை 6) ஜோதிடம் 7) கடவுள் 8) ஆத்துமா 9) கல்வி அறிவு 10) நாடு 11) தமிழ் 12) திருக்குறள் என்கிற 12 தலைப்புகளில் பெரியாரியத்தை அழகாக கொடுத்து இருக்கிறார். நீங்கள் இந்த தலைப்புகளை கேட்கும் போதே உங்களுக்கு ஒன்று தெரிந்து இருக்கும். இந்த தலைப்புகள் எல்லாம் பெரியாரின் "பர்னிச்சர் பிரேக்கிங்" தலைப்புகள் என்று! பெரியார் உடைத்த பர்னிச்சர்களை ஒவ்வொன்றாக பாப்போம்.


மனிதன்:


மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார். வேறெந்த உயிருக்கும் இல்லாத பெருமை மனிதனுக்கு உண்டு என்கிறார்கள். ஆனால், மனித பிறவியின் லட்சியம் என்பது வாழ்ந்து பயனடைவது என்பதை விட செத்து சிவலோகமோ, வைகுண்டமோ செல்வது தான் என்பது இங்கு கருத்தாக இருக்கிறது. ஆனால், பெரியார் தெளிவாக சொல்கிறார். மனிதப்பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான். பற்பல எங்களை எண்ணுகிறான். பலவகைகளை இச்சிக்கிறான். எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான். ஒரு சிலவற்றை ஆசை நிறைவேறுகிறது. மற்றவர்களில் ஏமாற்றமடைகிறான். இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப் போகும்வரை இடையில் நடைபெறுகிறவையெல்லாம் அவனின் சுற்றுச்சார்பு பழக்க வழக்கம் இவைகளை பொறுத்து நடக்கின்றன. எனவே மனித வாழ்வி லட்சியமற்ற வாழு என்பது என் கருத்து 

(விடுதலை 20.03.1956)


மனிதன் பிறப்புக்கு லட்சியம் இருக்கிறதோ இல்லையோ, மற்ற உயிர்களை விட மனிதனுக்கு கூடுதலாக பகுத்தறிவு இருக்கிறது. 


ஆனால், மனிதன் மற்ற உயிர்களை விட கவலையும் குழப்பமும் துன்பமும் உடையவனாக இருக்கிறானே அதற்கு என்ன காரணம்?


எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் இன்னொருவனை பார்த்து கவலை கொள்கிறான். எவ்வளவு பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் இன்னொருவனை பார்த்து "உனக்கென்னப்பா கவலை இல்லாமல் இருக்கே" என்று சொல்கிறான். இப்படி மனிதப்பிறவியில் கவலை என்பது சாதாரணமாக இருக்கிறது.


இதற்கு பெரியார் கூறும் காரணம்:


மனித சமுதாயத்தில் மனக்கவலை ஏற்படுவதற்கு முதல் காரணம் சமதர்மம் (சமத்துவம்) இல்லாத தன்மயமாகும். 


ஒரு தமிழ்நாட்டு வியாபாரி வடநாட்டு வியாபாரியை பார்த்து ஆசைப்படுகிறான். கவலைப்படுகிறான். ஒரு வடநாட்டு வியாபாரி வெளிநாட்டு வியாபாரியை பார்த்து ஆசைப்படுகிறான் கவலைப்படுகிறான்.


ஒரு பிச்சைக்காரன் கூட இன்னொரூ பிச்சைக்காரன் சட்டியில் அதிகமாக சோறு இருக்கிறதே என்று கவலை படுகிறான், இந்த கவலைக்கெல்லாம் காரணம் சமத்துவம் இல்ல சமூகம் தான். ஏற்றாத்தாழ்வுகளை நீக்கினால் கவலை நீங்கும் என்கிறார் பெரியார்.

 

இந்த சமத்துவம் ஏற்படாததற்கு காரணத்தையும் பெரியாரே சொல்கிறார். இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்க மனிதன் முயற்சிக்கவில்லை. மாறாக, அவனுக்குள்ள சில நம்பிக்கைகள் தான். அவன் முழு மனிதனாக பக்குவடையாமல் அந்த நம்பிக்கைகள் தான் தடுக்கிறது.  


மனிதன் தான் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்துவராத, பிறவியிலும், பொருளிலும் இருக்கின்ற ஏற்றத்தாழ்விற்கு காரணம் கடவுள் என்றும் விதியென்றும் அஞ்சி அஞ்சி சாகிறான். - விடுதலை 03.07.1950


வரவுக்கதிகமாக செலவு செய்வது விபச்சாரத்தனம் என்பேன் - விடுதலை 14.07.1961


மக்களின் சிந்தனை குறித்து பேசுகையில்...


கம்யூனிஸ்டு என்றால் அப் டூ டேட் தற்கால நிலைக்கேற்ற மனிதனாக இருக்கவேண்டும். மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார்; என்று ஏன் பார்க்கவேண்டும்? அவர்கள் காலத்திற்கும் இவர்கள் காலத்திற்கும் எவ்வளவு மாறுதல் உண்டாகியிருக்கிறது? உண்மையான அசல் கம்யூனிஸ்டு என்றால் எதையும் அலசிப்பார்க்கும் பகுத்தறிவாதியாக இருந்து நான் சொல்லுகிறேன் என்று சொல்லவேண்டும்.

(விடுதலை 20.01.1962)


இதையே அவர் தமது கருத்துக்கும் பொறுத்திச்சொல்கிறார். அவர் தான் பெரியார்!


பெண் சுயேச்சை 


நம் சமுகத்தில் ஆண்களை விட பெண்கள் சுயேச்சையற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிமையும் சமத்துவமும் இல்லை. அதனால் அவர்களுடைய அறிவும் வாழ்நாளும் சுருங்கிவிட்டது என்பதோடு அவை பொதுவான மனித சமுதாயத்தையே சீர்குலைத்து எல்லோருடைய அறிவையும் வாழ்நாளையும் சுருங்கச்செய்துவிட்டது.


பெண்கள் சுயேச்சை அடைவதற்கு கருத்தடை இன்றியமையாதது.


இன்று மக்கள் தொகைக்காக, குடும்ப பேணலுக்காக, உடல்நலத்திற்க்காக கருத்தடை பேசப்படுகிறது. ஆனால், கருத்தடை குறித்து பேசியது இதற்காக அல்ல. பெண்கள் சுயேச்சை பெறவும் விடுதலையடையும் அவசியயம் என்றார் பெரியார். 


கற்பு விபச்சாரம் என்பது பெண்களை மருட்டி அடக்கி ஒடுக்கி ஆண்களின் அடிமைகளாக வைத்திருப்பதை காண்கிறோம். கற்பு என்பது கடவுள் போல என்று சொல்லப்படுகிறது. அதாவது கடவுள் என்பது குழப்பமாக இருக்கிறதோ அதே போல கற்பு என்பதும் குழப்பட்டே வந்திருக்கிறது. மேலும் இவையிரண்டும் பெண்களுக்கு மட்டுமே திணிக்கப்படுகிறதே அன்றி ஆண்களுக்கு இல்லை. 


கற்புமுறை அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்கிறார் பெரியார்.


காதல் மணம்:


உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத்தந்து ஒருவருடைய குணநலன்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து, ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இந்தியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வது தான் உயர்ந்த காதலாகும்.

(குடியரசு - 21.07.1945)


ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகளும், பொருத்தங்களும் பல உண்டு. வேண்டுமானால், அவைகளில் ஒன்று தான் காதலுக்கு இவர்கள் சொல்லும் வேட்கை என்று கூறலாம். வாழ்க்கையின் பிற தேவைகளையும், அறிவையும் பயனையும் புறக்கணித்து விட்டுக்கொள்ளப்படும் அக்காதல் உணர்வை அடக்கி மற்றவற்றையும் கவனித்து வாழ்க்கை துணியை தேடி வாழ வேண்டுமென்பதே பெரியாரின் கருத்தாகும்.


(குடியரசு 17.10.1940)


திருமணம் என்பதையே தடைசெய்யவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருக்கிறது. 


குற்றமற்ற வாழ்வு:


குற்றங்கள் நிகழாமல் இருக்க அவற்றிற்கான தேவைகளோ வாய்ப்புகளோ இல்லாமல் செய்வது தான் தேவையானதாகும். அவற்றை ஒழிக்காமல் குற்றங்கள் நிகழக்கூடாது என்ற நோக்கில் ஒழுக்கங்களை ஏற்படுத்தினால் அவற்றை தடுத்துவிட முடியாது.

(குடியரசு: 24.11.1940)


மூடநம்பிக்கை:


இராகுகாலம் குறித்து பேசும் போது கோடைகாலம், மழைக்காலம் தெரிகிறது, பகற்காலம், இரவுக்காலம் தெரிகிறது. காலை மாலை விளங்குகிறது. ஆனால் இராகுகாலமென்கிறீர்களே அதற்கு குணமென்ன? அது ஏதாவது இருந்தால் உலகில் வேறெந்த நாட்டிற்கும் தெரியாமல் இந்த நாட்டிற்கும் மட்டும் இருப்பதாக சொல்வதேன்?


ஜோதிடம்:


இவர்கள் இன்னுமும் ஒன்பது கோள்களை பிடித்துக்கொண்டு ஜோதிடம் சொல்கிறார்கள். அறிவியல் புதுகோள்களை கண்டுபிடித்த வண்ணம் இருக்கிறது. 


கடவுள்:


கடவுள் என்பது வினைச்சொல் அல்ல. பெயர்ச்சொல். பெயர்ச்சொல் என்று ஒன்று இருக்குமானால் நிச்சயமாக அதற்கு ஒரு கூட்டுப்பொருள் தன்மை (பார்முலா) இருந்தேயாகவேண்டும். அப்படி ஒன்றுமிருப்பதாக நமக்கும் தெரியவில்லை. அவ்வாறு பார்முலா இல்லாதது ஒரு பொருளாகவே ஆகாது. ஆதலால் கடவுள் என்பது ஒரு கற்பனை எண்ணம் என்பது தின்னம்.


கடவுள் என்றால் இயற்கை என்று செல்பவர்களுக்கும் பெரியாரே விடையளிக்கிறார்.


இயற்கை என்பது உணவு உட்கொள்ளுவது, மலஜலம் கழிப்பது., பார்ப்பது, கேப்பது, மூச்சுவிட்டு இழுப்பது, பேசுவது, வழிகாண்பது, பசி தோன்றுவது, தூங்குவது, விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம், சுகம், சூரியன், சந்திரன் வெளிச்சம் இருக்கு முதலியவை இயற்கையாவும்.


இவை எல்லா மக்களுக்கும் பொது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 


இத்தன்மை அல்லது கடவுள், மதம், மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை, ஜெயில், பெருமை, சிறுமை, பக்தி, பிரார்த்தனை, வேதம் முதலியவை அடியோடு கற்பனையேயாகும். 


கல்வி அறிவு:


படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காதவனாய் நாணயமாய் வாழ்வதற்கு 

(விடுதலை 25-01-1947)


சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பது போலவே, நாத்திகமும் அறிவின் உண்மையான எல்லையாகும்!

(குடியரசு 23.10.1943)


நாடு:


திராவிடர் என்பது இலட்சியசொல். ஆரியக்கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மையடை வேண்டும். ஆரியமென்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது. திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பது தான். 


வர்ணபேதம் ஒழிந்த, மதப்பிரிவினைத் தத்துவம் ஒழிந்த எந்த சமுதாயமும் அது தனித்திருந்தாலும், அது ஒன்றியமைத்திருந்தாலும் அதைத திராவிட சமுதாயம் என்று ஒப்புக்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன். (விடுதலை 17.11.1947)


சீனா - இந்திய போர் நடந்த சமயம். நாடே பரபரப்பாக இருந்த சூழ்நிலையில், பெரியார் தனது சாதி ஒழிப்பு போராட்டத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். அப்போது, அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள், அய்யா, நாடே, சீன - இந்திய போரில் பரபரப்பாக இருக்கிறது. நீங்கள், அதை சட்டைசெய்யாமல், உங்கள் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டப்போது, பெரியார் சொன்னது... "சீனா நம் நாட்டுக்குள் வந்து, சாதி ஒழியுமானால், நான் சீனாவை ஆதரிக்கிறேன்" என்பதே அது. இந்த நெஞ்சுரமும், கொள்கைதெளிவும் பெரியாருக்கே சாத்தியம்!  


தமிழ் 


தமிழ் மொழி சிறந்த மொழி, பழமையான மொழி என்பதால் அதற்காக போராடவில்லை... தமிழுக்கு பதில் நமக்கு இந்தி வருவது தகுதியற்ற என்பதால் எதிர்க்கிறேன்.


திருக்குறள்:


திருக்குறள் படி யார் நடக்கிறார்கள்? திருக்குறளையும் உயர்த்திப்பிடித்து பகவத்கீதையும் உயர்த்திப்பிடிக்கிறார்கள்!


2) பெரியார் பண்பாட்டிற்கு ஒரு தனி உவமையாளர் 


என் உடல்நிலை எனது முடிவை அவசரப்படுத்துகிறது. நான் (எனது உடல்நிலை) படுக்கையில் இருக்கவேண்டியவன். ஆனால், என்னால் படுக்கையில் இருக்கமுடியவில்லை. ஏனெனில் படுத்துக்கொண்டே முடிவு பெற எனக்கு இஷ்டமில்லை - இஷ்டமேயில்லை. நடமாடிக்கொண்டே முடிவுபெற வேண்டுமென்றே முடிவு செய்து நடமாடுகிறேன்.

(விடுதலை தலையங்கம் 10.02.1968)


ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப்பணிசெய்ய யாரும். வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். 


இதைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கையையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன். 

(உயர்ந்த எண்ணங்கள் இறுதிப்பக்கம்) 


சொந்தமானத்தை விட்டாகிலும் உன் ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டாற்று! 

(குடியரசு 01.09.1945)


ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப்போன்றே அவனும் மற்றவரிடம் நடந்துக்கொள்வது தான் ஒழுக்கமாகும். தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துக்கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.

(விடுதலை 02-03-1956)


பாவத்திற்குப் பயந்து பதிவிரதையான இருப்பவளும், காவலுக்குப் பயந்து பதிவிரதையான இருப்பவளும், புருஷன் உதைக்குப்பயந்து பதிவிரதையாக இருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள். மனதில் ஒழுக்கம் உடையவளே பதிவிரதை.

(விடுதலை, 17-08-1958)


மக்களை மக்கள் எந்தக்காரியத்திற்காக வேண்டுமானாலும் மன்னிக்கலாம். இணங்களாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறியதானாலும் அது மாணிக்க முடியாததேயாகும்.

(விடுதலை 25.10.1968) 


நம் நாட்டுப் பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படவோ அது வளர்ச்சியடையவோ முடியாமல் தடை செய்யத் தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும் பரிட்சையும் இருக்கிறது. ஆதலால் நம் பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய அவர்களது அறிவுக்கு குறைவென்று தவறிக் கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரில் இருந்தால் எப்படி அதிக காயம் ஏற்படுமோ அதுபோல் புராண இதிகாசக் களை சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு இயற்கை வாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத் தக்க வண்ணம் மூடநம்பிக்கைச் சமயங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர்களைக் கரையேற விடாதபடி சுற்றிக்கொண்டிருக்கின்றன (இனிவரும் உலகம், பக்கம் 4) 


நாங்கள் கடவுள் இல்லையென்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ ஒரு கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்தக்கடவுள் தமிழ்க்கடவுளாக இருக்கட்டும். (விடுதலை 19.07.1961)


அண்ணா குறித்து பெரியார்...


அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவாதி. கடவுள், மதம், சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர். அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர். அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த மந்திரிசபையையே எனக்குக் காணிக்கையாக வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

(விடுதலை 13.02.1969)


மேலும் அண்ணாவைப் புத்தருக்கு ஈடாகவும், புத்தருக்கு அடுத்தபடியாகவும் வைத்துப்போற்றுவதைக்கண்டு அதில் மனிதப் பண்பாட்டின் கூர்மையின் முனையைக் கண்டு திளைக்கிறோம்.


சமுதாய சீர்திருத்தல், பணி மற்ற பணிகளைப்போல் சாதாரண பணியல்ல. மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப்பேச்சுக்கும் ஆளாகி, நம்பிக்கைக்கும் நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியாகும். சமுதாயச் சீர்திருத்தப்பணிக்கு என்ன வேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். அறிஞர் என்கின்ற பெயர் வேறு எவருக்கும் கிடைத்ததற்கரிய பெயராகும். அப்படிப்பட்ட பெயரை முதலில் அண்ணா பெற்றார். நம் நாட்டில் இதுபோல் பெயர் பெற்றிருந்தவர் புத்தர் ஒருவர் தான் ஆவார். புத்தியைக்கொண்டு சிந்தித்ததாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்றவர்களால்தான் சமுதாயச் சீர்திருத்தம் செல்லையா முடியும். 

(விடுதலை 20-03-1969)


நாட்டில் பார்ப்பனர்கள் களைச்செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவையில்லாத களைச் செடிகள் இருப்பதால், பயிருக்குச் சேதம் என்று கருதி, களைச் செடியை அகற்றுகிறோமோ அதுபோல் நாட்டுக்குச் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டை விட்டே அகற்றிவிட விட வேண்டும்.

(விடுதலை 10-07-1961)


வாயில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது;

தேன் கசக்காது. பிறவியில் மாறுதலிருந்தாலொழிய புலி புல்லைத்தின்னாது. ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றே பார்ப்பனர் தன்மை.

(விடுதலை 05.02.1965)


இவ்வாறு பெரியார் கூறுவதற்குகாரணம் அவர்கள் சமுதாய முன்னேன்றத்திற்குத் தடையாக இருக்கிறார்கள். கேடு விளைவிக்கிறார்கள் என்பதோடு அவர்கள் சமுதாயத்திற்குப் பயனற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையேயாகும்.  


இந்த நாட்டில் கக்கூசு எடுக்கிறவன் இருக்கணும்; சலவை செய்பவன் இருக்கணும்; ஆனால், நீ (பார்ப்பான்) எதுக்குப்பா இருக்கணும். (விடுதலை 15.05.1954)


என்று பார்ப்பனர்களை பார்த்து வினவும் பெரியாரின் வினா பொருள் பொதிந்ததாகும். நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இழிவு கற்பிக்கப்பட்டவர்கள் வரையிலுள்ள அனைவரும் சமூகத்திற்குத் தேவையானவர்களாக இருக்கிறார்கள். 


இப்பார்ப்பனர்களால், அதாவது பார்பனீயத்தால், மேலும் அதாவது பார்ப்பனத்தன்மைகளால் செயல்களால் இந்த நாட்டிற்கு என்ன பயன்? அவைகளால் நம் சமுதாயம் இதுவரை அடைந்துள்ள நன்மை தான் என்ன? ஆகவே தான் பயனற்ற கேடு சூழும் பார்ப்பனர்களை பெரியார் எதிர்க்கிறார்.


பெரியாரின் எதிர்ப்பு மேலே நாம் பார்த்ததை மட்டும் வைத்துப்பார்த்தால் பார்ப்பனர்கள் என்கின்ற மனிதர்களை அவர் அழிக்க விரும்புவதாக தோன்றும். ஆனால், அவர் பார்ப்பனீயம் ன்னும் பகையை அழிக்கவேணவாக் கொண்டு முயன்றாரே அன்றிப் பார்ப்பனர்கள் என்னும் பகைவர்களை அழிக்க கடுகளவும் முயன்றதில்லை. பார்ப்பானை இந்த நாட்டை விட்டே அகற்றிட வேண்டும் என்றதும் நீ எதுக்குப்பா இருக்கணும் என்றதும் இக்கருத்தில் தான். உண்மையில் அவர் இக்கருத்துக்கு மாறானவராக இருந்திருந்தால் அவரது முயற்சிகளும் மாறானவையாகவே இருந்து விளைவும் இன்றுள்ள நாட்டு நிலைக்கு மாறானதாகவே இருந்திருக்கும். 


பெரியாரின் மொழிகளால் இது தெளிவாகும்.


எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் சாதியான என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரன் ஆகக்கூடாது; அவன் நல்வாழ்வு வாழக்கூடாது; அவன் ஏழையாகவே இருக்கவேண்டும் என்பதல்ல.

(குடிஅரசு 09.11.1946)


பார்ப்பானை என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்கவேண்டாம் என்றா கூறுகின்றோம். தாராளமாக இருக்கட்டும். ஆனால் அவர்கள் மனிதர்களாக இருக்கட்டும். தேவர்களாக இருக்க வேண்டாம் என்று தானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கு இடையூறு இல்லாத எந்த உரிமையையும் பார்ப்பனருக்கு வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.

(விடுதலை 19.01.1948)


நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். ஜாதி சமயசடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்தவனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்கு பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கை துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன், வியாபாரத்துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத்துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ளவேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும், ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாக பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன். அப்படி இல்லை என்பதை பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

(விடுதலை 01.01.1962)


பார்ப்பனரிடம் அன்பாய் இருக்க எனக்கு வெகு ஆசை. ஆனால் சுதந்திரமற்ற அந்நியனுக்கு அடிமையாக, என் நாட்டை அந்நியன் சூறையாடிக்கொள்ளையடிக்க இசைந்து அன்பு காட்ட முடியுமா? பார்ப்பனத்தோழர்களே! இளைஞர்களே! சிந்தியுங்கள்! போதும்! போதும்! உலகம் உங்களை நகைக்கிறது; வடநாட்டானும் உங்களை வெளுக்க தொடங்கிவிட்டான். டெல்லிக்குப் போய்வந்த நண்பர் ஒருவர் சொன்னார். என்னவென்றால், டெல்லியில் சவுத் இண்டியன், சென்னையா என்றால் எவனுக்கும் முகம் துர்வாடையைக்கண்டால் சுளிப்பது போல சுளிக்கிறதாம். இருவர் நலத்திற்கே சொல்லுகிறேன். மற்றத் தோழர்களையும் அழைக்கிறேன். யாவற்றையும் மறந்துவிடலாம். எனக்கு யார் செய்த தீமைகளையும் மறந்துவிடும் சுபாவம் அதிகம் உண்டு. நன்மையை மறக்கவே மாட்டேன். புதிய சகாப்தத்தை உண்டாக்கலாம்.

(விடுதலை 10.08.1972)  


பெரியார் காண விரும்பிய புத்துலகம் 

சமுக சீர்திருத்தம்,

கல்வி 

அறிவியல் 

மதமும் கடவுளும் 

ஒழுக்கம் பொருளியல் 

பொதுவுடமை 

அரசியல் 

நீதி, காவல்துறை 

பொதுமை உணர்வு 

திருமணம் 


என்ற தலைப்பில் நூலாசிரியர் மா. நன்னன் கொடுத்து இருக்கிறார். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம். 


- ராஜராஜன் ஆர். ஜெ








No comments:

Post a Comment