Saturday 31 July 2021

பேராசிரியர் க. அன்பழகனாரின் மேடைத் தமிழ் - ரா.சே. பாலாஜி

 பேராசிரியர் க. அன்பழகனாரின் மேடைத் தமிழ் - ரா.சே. பாலாஜி


திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் எம். கல்யாண சுந்தரனார் - சுவர்ணம்பாள் இணையருக்கு 1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19இல் பிறந்தவர் க.அன்பழகன். இராமையா என்பது இவரது இயற்பெயர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கலைமுதுவர் பட்டப்படிப்பினை முடித்து 1944 முதல் 1957 வரை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.


பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பொதுவாழ்விற்கு வந்த அன்பழகனார். பின்னர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1962 முதல் 2011ஆம் ஆண்டு வரை மக்களாட்சி அமைப்பில் மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.


தீவிர அரசியலில் ஈடுபட்ட போதும் புதுவாழ்வு என்ற இதழினை நடத்தி வந்தார். மேலும் தமது எழுத்தாற்றலின் வழியே 16க்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். ‘இனமான பேராசிரியர்’ என்று இயக்கத்தாராலும் ‘பேராசிரியர்’ என்று அனைவராலும் அழைக்கப் பெற்ற சிறப்பிற்கு உரியவர் ‘பேராசிரியர் க. அன்பழகன்.’ பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களாலும், அவரது மேடைப்பேச்சாலும் ஈர்க்கப்பட்டுச் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஊறித்திளைத்தவர் ஆவார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.


தமது தந்தையாருக்கு இருந்த அரசியல் ஈடுபாட்டின் காரணமாகச் சிறுவயது முதலே அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1939 நவம்பரில் முதன் முதலாகச் சிறியதொரு கூட்டத்தில் பேசினேன், என்னுடைய தந்தையார் ம. கல்யாண சுந்தரனார், மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் குடியேறிய ஐந்து ஆறு திங்களில் அங்குத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் ஒரு கிளையைத் தோற்றுவிப்பதற்காக நடத்திய கூட்டம் அது. முப்பது நாற்பது பேர் சேர்ந்திருந்தனர். தந்தை பெரியார் தலைமையில் நீதிக்கட்சி இயங்கிய நிலையில், எல்லோரும் அந்தக் கட்சியில் சேர்ந்து, அதை வளர்க்க வேண்டுமென்று என் தந்தையார் பேசினார். அடுத்து சிலர் பேசியவுடன், என்னையும் பேசுமாறு கேட்டனர். இருபது நிமிடம் பேசினேன். தமிழுக்கு இந்தியால் வரக்கூடிய இழுக்கையும் - தமிழ் வடமொழியால் தாழ்த்தப்பட்டதையும், தமிழர்கள் பலவகையில் தாழ்ந்திருப்பதையும் எனக்குத் தெரிந்த வரலாற்றுச் செய்திகளுடன் பேசினேன்’ என்று தம்முடைய முதல் பேச்சு அனுபவத்தைச் சுட்டும் க. அன்பழகன் அதுமுதல் சுமார் எண்பதாண்டு காலம் தமிழ் மேடைப்பேச்சு உலகில் தமது பணியை ஆற்றியுள்ளார். தொடக்கக் காலத்தில் இருந்தே திராவிட இயக்கக் கொள்கைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக இறுதிவரை அவரது மேடை முழக்கம் தமிழ், தமிழர், தமிழர் நெறி, தமிழர் நலன் இவற்றை வலியுறுத்துவதாகவே அமைந்து இருந்தது.


மேடைத்தமிழ் ஆளுமை


தமிழ் இலக்கியத்தைக் கற்று, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1944 முதல் 1957 வரை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று முழுநேர அரசியலுக்கு வந்தவர். தொடக்கக் காலம் முதல் சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டிமன்றம். விவாத அரங்குகள், அரசியல் கூட்டங்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற மேலவை, மக்களவை என்று பல தளங்களில் அவரது மேடைப்பணி நீண்டு வளர்ந்துள்ளது.


அவைக்கு ஏற்பப் பேசும் பண்பாளர் கட்சி மேடைத் தவிரப் பிற கல்வி நிலையங்களில் கிஞ்சிற்றும் அரசியல் கலவாது அருந்தமிழ் பேசும் பெருந்தகவினர். அருவி போல் சொற்கள் அழகாக உருண்டோடி வரும், சொல்லும் பொருளும் கட்டிப் புரண்டு குற்றவேல் செய்யும். மடைந்திறந்தன்ன கடகடவெனப் பேச்சு வெள்ளம் போல் வந்த வண்ணம் இருக்கும்’ என்று மது.ச. விமலானந்தம் குறிப்பிடுகிறார். அன்பழகனின் உற்ற நண்பரும், திராவிட முன்னேற்ற கழகத் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இவரது மேடைத்தமிழ் இயல்பினை, ‘ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் தலையை நிமிர்த்தியவாறு, ஒருமுறை கூடத் தாழாமல் வான் நோக்கிக் கைகளை உயர்த்தியவாறு சொல்மாரி பொழிவது பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் காணக்கூடிய தனிப்பாங்கு எனலாம்’ என்று பேராசிரியரின் பேச்சுமுறை பற்றிக் கூறுவர் ஜாதி, மதப் பற்றுகளை இறுதி வரை எதிர்த்த க. அன்பழகன் இனப்பற்றைத் தமது உயிரெனப் போற்றினார். 


தமிழன் என்ற மொழிப் பெருமிதம், திராவிட இனப் பெருமிதம் அவரிடம் அளப்பறிய இருந்தது. ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதைப் போன்று அவர் இறுதி வரை தமிழரின் நலன் சார்ந்தே சிந்தித்து, அதனையே தமது மேடைப் பேச்சுகளின் வழியும் வலியுறுத்தி வந்தவர் க. அன்பழகன் ஆவார். ஒவ்வொருவரும் தம்முடைய அறிவாற்றலை ஏதேனும் ஒருவகையிலே வளர்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் ஒவ்வொரு வரும் ‘தான் தமிழன்’ என்னும் அடையாளத்தை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். அது தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரும் இழப்பு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


மும்பையிலே வாழுகிற தமிழர்களும்கூடத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறபோது, அதனைச் சொல்லிக்கொள்வதில் அவர்கள் பெருமைப்படுவார்கள். தில்லியிலே, கல்கத்தாவிலே சொல்லிக் கொள்வார்கள். பிறமொழியைப் பேசுகிற மக்களுக்கிடையில் நாம் சிறுபான்மையாக இருக்கிற போது, நாம் யார் என்ற நினைப்பு வருகிறது. நாமே பெரும்பான்மையாக இருக்கிற போது, அந்த எண்ணம் நமக்கு வராமலே போய் விடுகிறது. தொன்னாள் சேர, சோழ, பாண்டியர் என்றும் வேந்தர் ஆண்ட காரணத்தினாலேதான் தமிழனுக்குத் தான் தமிழன் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டன. உணர்வற்ற உடம்பைப் போல் ஆகிவிட்டான், அதனால் நாம் நமது அடையாளத்தை இழந்து நிற்கின்றோம்’ என்று மதுரை பல்கலைக்கழக விருது வழங்கும் விழாவில் க. அன்பழகன் ஆற்றிய உரை தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் கேட்போர் உள்ளத்தில் உருவாகும் வகையில் அமைந்துள்ளது.


தமிழ் இலக்கியங்களில் அவர் பெற்றிருந்த பயிற்சியும், ஆளுமையும் அவரது இலக்கியச் சொற்பொழிவுகளில் அமைந்திருப்பதைக் காண முடியும். திருவள்ளுவர் ஒரு தமிழர். தமிழ் இலக்கியக் கடலிலே தோய்ந்த புலவர். தனிச் சிந்தனையாளர். கவிஞர் கருத்துச் செறிவினர். செந்நாப் புலவர். பொய்யாமொழியினைத் தெளிந்தவர். அவரது அறிவை உரைத்துப் பார்ப்பதற்குகூட வடமொழி வேத சாத்திரங்கள் தகுதி பெறமாட்டா. அவரது குறளுக்கு உண்மையான உரை ஒன்றுதான் இருக்க முடியுமேயன்றிப் பல வழிப்பட்ட உரைகளுக்குத் திருக்குறள் இடம் தரமுடியாது. அப்படி வேறுபட்ட கொள்கைகளைக் காண இடம் தருமானால், அது குறளுக்குப் பெருமையாகாது, ஆங்கிலத்தின் துணைகொண்டு ஆராய்ச்சி முறை வளர்ந்ததால் தான் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே அறிவாற்றல் மிக்கவர்களாய் விளங்கினர் என்பதை இன்று உலகம் ஏற்கிறது. அதற்குச் சான்றாக நிலவுவதும் திருக்குறள் தான்.’ காரைக்குடி திருவள்ளுவர் மன்ற ஆண்டுவிழாக் கூட்டத்தில் அன்பழகன் ஆற்றிய உரை அவரது இலக்கியப் புலமைக்கும், இனஉணர்வு விழைவிற்கும் சான்றாகத் திகழ்கிறது.


இலக்கியப் புலமையும் இனஉணர்வும் நிரம்பிய க. அன்பழகன் அவர்கள் இறுதி வரை தமிழ், தமிழர், தமிழர் நலன் என்பது குறித்து மட்டுமே பேசி வந்தார். தான் பெற்ற பலதிறந்து அறிவையும் தமிழர் நலனுக்காகவே செலவிட்டு வந்தவர் என்பதை அறிய முடிகிறது.


க. அன்பழகனாரின் மொழித்திறன் 


பெரியாரின் கொள்கைகளை ஏற்று அரசியல் வாழ்வில் நுழைந்த க. அன்பழகன் இறுதிவரை தான் ஏற்றுக்கொண்ட கொள்கையைப் பின்பற்றியும் பேசியும் வந்தார். மாநாடுகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் எனத் தான் உரையாற்றும் களத்திற்கு ஏற்ப மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில், பல உத்தி முறைகளைக் கையாண்டு விளக்கியுள்ளார்.


என் தந்தையார், பேசத் தொடங்கினால் ஒரு படபடப்புடன் உணர்ச்சியுடன் தான் பேசுவார். நின்று நிதானித்துப் பேசும் வழக்கம் அவரிடம் இல்லை. அதேபோன்று என் பேச்சிலும் ஒரு வேகம்தான் இருந்தது. பேசும்போது - ஓடுகிற குதிரையை நிறுத்த முடியாமல் அதன் பின்னாலேயே ஒடுகிறவனைப் போன்று என் கருத்தோட்ட வழியில் - என் பேச்சு விரைந்து செல்லும். நாளடைவில் தான் பேசும்போது, கருத்தைச் சொல்லும் முறையில் நிதானிக்கும் (மறுசிந்தனை செலுத்தும்) பழக்கம் ஏற்பட்டது’ என்று தமது தொடக்கக் கால மேடைப்பேச்சிற்கும் நாளடைவில் மேடைப்பேச்சில் தான் பெற்ற பக்குவநிலைக் குறிக்கும் க. அன்பழகன் குறிப்பிடுகிறார்.

‘ஏணிகளை உடைத்தால் தான் படிகளை ஒன்று சேர்க்கலாம அதைப் போலத்தான் வர்ணாசிரம தர்ம ஏணியை உடைந்தால் தான் தமிழனை ஒன்று சேர்க்கலாம்’ சாதி ஏற்றத்தாழ்வை உடைத்தால்தான் தமிழனை ஒன்றுபடுத்த முடியும்’ என்று வர்ணாசிரம வேறுபாடுகளை ஏணிக்கு உவமையாக்கி தமிழர்கள் ஒற்றுமை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


‘சீக்கியர்களைப் போல், இசுலாமியர்களைப் போல் இனஉணர்வும், கட்டுப்பாடும் உள்ளவர்களாகத் தமிழ்நாட்டு மக்களும் மானமுள்ள கூட்டமாக மனிதத்தன்மை உள்ள கூட்டமாக ஆக்கப்பட வேண்டும்’ என்று தமிழ் இனம் மேன்மை பெற வேண்டியதன் அவசியத்தைப் பிற இனத்தோடு ஒப்பிட்டுக் கூறும் முறை அவரது ஒப்பீட்டு மொழிநடைக்குச் சான்றாக உள்ளது.


க. அன்பழகன் மொழிநடையில் சிறப்புப் பெற்று விளங்கும் மொழிநடை அவரது வினா-விடை முறையில் அமைந்த பேச்சாகும். கருத்தை தெளிவாக உணர்த்தவும், குழப்பமின்றி எடுத்துச் சொல்லவும், தருக்க முறையில் அமைவது வினா-விடைப் பேச்சு ஆகும்.

தமிழ்நாட்டுக்காகத்தான் நாங்கள். நாங்கள் யார்? தமிழ்த் தாயின் பிள்ளைகள். நாங்கள் யார்? இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நாங்கள் யார்? இந்த மண் வாழ்ந்தால் எங்கள் பெயர் வாழும் என நம்புகிறவர்கள்’ என்று தமிழ் உணர்வு, இனப்பற்று இவற்றை வினா-விடை முறையில் எளிதில் விளக்கியுள்ளார்.


க. அன்பழகனின் மேடைப்பேச்சின் உச்சம் என்று சொன்னால் அது அவரது உருவக நடைப்பேச்சு ஆகும். பிற திராவிட இயக்கப் பேச்சாளர்களைக் காட்டில் இம்முறை நன்கு கைவரப் பெற்றவர் க. அன்பழகன் ஆவார். திராவிட இயக்க நூறாண்டு துவக்க நாளான 7.02.2012 அன்று கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசிய பேச்சு அவரது உருவக நடைக்குச் சான்றாக அமைந்துள்ளது.


‘திராவிட இயக்கத்தைப் பற்றி இன்றுகூடத் தினமலர் ஏட்டிலே ஏதோ முகமூடி போட்டுக்கொண்டு திராவிடம் என்று சொல்வதாக அந்தப் பத்திரிக்கையிலே ஒருவர் எழுதி நாம் இந்த விழாவைக் கொண்டாடுவதைக் கண்டித்து இருக்கிறார்கள். நம்முடைய நண்பர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கூடச் சொன்னார்கள் இது நமக்குக் கிடைத்த வெற்றி என்று! நான் அவர்களுக்குச் சொல்கிறேன் முகமூடி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. எங்கள் முகம் திராவிடம்! அதைக் காட்டுவதற்குத்தான் நாங்கள் பணியாற்றுக்கிறோம். எங்களுக்குப் போடப்பட்ட முகமூடி சூத்திரன் என்பது; எங்களுக்குப் போடப்பட்ட முகமூடி இந்துக்கள் என்பது; எங்களுக்குப் போடப்பட்ட முகமூடி வைதீகத்தை ஏற்பவர்கள் என்பது; எங்களுக்குப் போடப்பட்ட முகமூடி சமஸ்கிருதம் தான் தேவபாஷை, தமிழ் நீஷபாஷை என்பதை ஒத்துக் கொண்டோம் என்பது; இன்றைக்கு அவற்றை எல்லாம் கிழித்து எறிந்து, அந்த அக்கிரமங்கள், முறைகேடுகள், இழிவுகள் எல்லாம் துடைக்கப்பட்டு இன்றைக்கு நான் திராவிடன்! உலகத்திலேயே திராவிட இனத்திற்கு ஈடாக இன்னொரு இனம் இருப்பதை என்னால் ஏற்க முடியாது! திராவிடனுக்குப் பெருமை சேர்க்கிற மொழிதான் என் தாய்மொழி தமிழ்மொழி! அந்தத் தமிழ் என் தாய்மொழி அந்தத் தமிழ் வழி வந்தவன் நான்! என்னை வீழ்த்த எவனும் இல்லை! எவனையும் ஏற்க நான் தயாராக இல்லை! என்று சொல்லக் கூடிய அளவிற்கான உணர்வை நமக்குத் தந்திருப்பது திராவிட இயக்கம்!’ என்று ‘முகமூடி’ என்ற வார்த்தையை எவற்றுக்கெல்லாம் உருவகப்படுத்தி உள்ளார் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் போது அவரது உருவக நடையும், மொழி உணர்வும், இனப்பற்றும் நமக்குப் புலனாகிறது.


எனவே, க. அன்பழகன் அவர்கள் தமது மொழியுணர்வையும், இனப் பற்றையும் விளக்கிக் கூறுமிடத்து உவமை, ஒப்பீட்டு முறை, வினா-விடை அமைப்பு, உருவக நடை என்று பின்பற்றித் தமது மேடைப்பேச்சினைச் சிறக்கச் செய்துள்ளார்.


ரா.சே. பாலாஜி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

கே. எம்.ஜி. கலை மற்றும் அறிவியில் கல்லூரி,

குடியாத்தம்

No comments:

Post a Comment