Wednesday 22 January 2020

குழந்தைகளுடன் நான் – இனியன், குழந்தைகள் செயல்பாட்டாளர்

ஐந்து வயதுக் குழந்தை ஒன்று அரசியல் மேடை ஒன்றில் தலைவரின் கொள்கைகளையும் கட்டளைகளையும் உரக்கப் பேசினாள். அதனை மகிழ்வோடு பலரும் இணையத்திலும், சமூக வலைதளைத்திலும் பதிவேற்றம் செய்துகொண்டிருந்த வேளையில் கடுமையான எதிர்வினையும் வரத் துவங்கியது. குழந்தைகளை அரசியல் வயப்படுத்தலாமா? என்கிறக் கேள்வியோடு பலரும் இணைய யுத்தம் புரியத் துவங்கியிருந்தனர்.

அதில் பலரும் வைத்தக் குற்றசாட்டு குழந்தைகளுக்கு எதற்கு அரசியல் மேடை. அந்தக் குழந்தை முழக்கமிட்ட கோசம் மற்றும் அவள் பேசியவற்றின் அர்த்தங்கள் அவர்களுக்கே தெரியுமா என்றெல்லாம் துவங்கி, குழந்தைகள் எந்த வயதிலிருந்து அரசியல் பழக்கலாம்? என்னும் கேள்வியோடு இன்று வரைத் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது விவாதம்.

அந்தக் கேள்வி என்னமோ சரி என்பது போல் தோன்றினாலும் இங்கே அரசியலை நோக்கி மட்டுமே கேட்கப்படும் இந்தக் கேள்விகள் அனைத்தும் மேடைகள், பொது இடங்கள் மற்றும் ஊடக நிகழ்வுகள் போன்றவற்றில் ஸமஸ்கிருத ஸ்லோகம் சொல்வதையோ, பகவத் கீதை, மஹாபாரதம் மற்றும் இராமாயணக் கதைகள், பைபிள் கதைகள், திருக்குர்ஆன் கதைகள், திருக்குறள், தேவாராம், திவாசகம்  சினிமா பாடல்களை பாடுவதையோ, ஆடுவதையோ மத அடையாளங்களை சுமத்தல் பற்றிய எவ்விதக் கேள்வியும் எழுப்புவதில்லை.

மாறாக அவையெல்லாம் குழந்தைகளின் இயல்பான பண்புகளில் ஒன்று எனவும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாய் மறந்து விடுகின்றனர். குழந்தைகளின் இயல்புகள் என்பது பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்தும், குடும்ப அமைப்பிலிருந்தும், சமூகப் புறக்காரணிகள் தான் அவர்களுக்கான இயல்புகள் எனச் சொல்லக்கூடிய பலவற்றை திணித்தும், திணித்ததை ஏற்றுக்கொண்டும் இயல்பெனச் சொல்லிக்கொள்கிறார்கள்.

எந்தவொரு திணிப்பும் வளர்ந்த பெரியவர்களுக்கே உரிமை மீறலாக இருக்கிற போது குழந்தைகள் மீது மதங்கள் முதல் வாழ்வாதாரம் வரை அவர்களுக்கே தெரியாமல் அனைத்தையும் திணித்து விட்டு இதுதான் இயல்பு எனச் சொல்லிக் கொள்வதில் தான் இந்த மானுடச் சமூகம் முனைப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறதோ என்கிற ஐயம் அவ்வபோது எழாமல் இல்லை.

ஒரு குழந்தையின் உரிமை என்பது ஒரு பெண்ணிற்கு கரு உருவானக் காலம் முதல் துவங்குகிறது அப்பெண் குழந்தையை சுமக்கும் எண்ணம் இருந்து அதனை சுமக்கும் முடிவினை அப்பெண் எடுத்துவிட்டால் அன்று முதல் அது குழந்தையின் உரிமையாக மாறிவிடுகிறது. கருவிற்கு தேவையான ஆகாரங்களை உட்கொள்வதில் துவங்கி ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகள் உரிமையும் அவர்களுக்கு எதனை அறிமுகபடுத்த வேண்டும் என்னும் தெளிவும் பெற்றோர்களுக்கு நிச்சயம் இருந்திடல் வேண்டும்.

கரு வளர்ச்சியடையத் துவங்கிய 5 மாதத்திற்கு பிறகு கருவில் இருக்கும் குழந்தையின் செவித்திறன் நன்கு செயல்படத் துவங்கும் என்பது மருத்துவச் சான்று அப்படியிருக்கும் நிலையில் வெளியே என்னப் பேசிக்கொள்ளப் படுகிறது என்பதையெல்லாம் கவனிக்கும் நிலைதான். இதில் நிறைமாதத் தருணத்தில் பாடல்கள் அதிகம் கேட்கும் பெண்ணின் குழந்தை நன்றாக பாடுவதாகவும், அதீத மன அழுத்தத்தில் இருக்கும் பெண்ணின் குழந்தை வளரும் தருவாயில் அதே மன அழுத்தத்தில் தவிக்கும் என்பது போல் தான் அரசியலும்.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்டிருக்கும் குழந்தையின் தாயும் முழுக்க முழுக்க அரசியல் பேச்சிகளை கேட்டு கேட்டேதான் பெற்றெடுத்தார்.


அடுத்ததாக குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து அரசியல் பழக்கலாம்?

குழந்தையை எப்போது கோவிலையும், கடவுளையும், இதுதான் உன் மதமென்றும், சாதியென்றும் அடையாளங்களையும், ரசனை என்கிற பெயரில் இசையும், பாடல்களும் அறிமுகபடுத்தப் படுகிறதோ அப்போதே அரசியலும் பழகலாம். அவையெல்லாம் தவறில்லை என்னும் போது அரசியலும் தவறில்லை தான்.

சிறிது நாட்களுக்கு முன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் அம்மா தன் மகன் புத்தகங்கள் வாசிக்கிறான். ஆனால், அவன் விரும்புவது அனைத்தும் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளின் காமிக்ஸ் வடிவங்களைதான். அதனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. எங்கே சாமியார் ஆகி விடுவானோ என்று வருத்தப்பட்டார்.

இதில் வருத்தப்பட எதுவுமில்லை. ரெண்டாவது 10 வயதுக்குழந்தை வளரும் சூழலில் எது பேசு பொருளாகவும் கவனிக்கும் விதத்திலும் அக்குழந்தைக்கு இருக்கிறதோ அதை நோக்கிதான் நகரும். நாளடைவில் சரியாகும். ஆனால் அதற்கு நாமும் கொஞ்சம் தயாராகி அவன் நீங்கள் விரும்பியத் தெளிவு பெறவேண்டுமானால் அதற்கான சூழலையும், உரையாடலையும், புத்தகங்களையும் நீங்கள்தான் அறிமுகபடுத்த வேண்டும். மாறாக திணித்துக் கொண்டிருந்தால் தடம் தான் மாறும் வளர்ச்சியிருக்காது. நீங்கள் நினைக்கும் அரசியலை அவன் பழக வேண்டுமானால் நீங்கள் அரசியல் பேச வேண்டும்.

அரசியல் பழக்குவோம்.-பயணங்கள் தொடரும்No comments:

Post a Comment