Thursday 20 February 2020

குழந்தைகளுடன் நான் – இனியன், குழந்தைகள் செயல்பாட்டாளர்

குழந்தைகளுடன் நான் – இனியன்குழந்தைகள் செயல்பாட்டாளர்

சென்னைக்கு மிக அருகில் உள்ள கிராமம் தான் அது. பள்ளிக்கு விளையாடச் சென்றிருந்தேன். பள்ளி நேரம் முடிந்தும் அரை மணி நேரம் அனுமதி வாங்கி விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பள்ளி மணி அடித்தவுடன் உடனடியாகக் கிளம்பினான். ஓரிரு முறைக் கெஞ்சியும் கூட இருக்க மறுத்து வேகவேகமாக ஓடினான். அவனது ஓட்டத்திலிருந்து அக்குழந்தையின் அவசர மனோநிலையும் பதட்டமும் என்னையும் தொற்றிக்கொண்டது. அவன் பள்ளி வாயிலைக் கடக்கும் வரை காத்திருந்து விட்டு மற்ற குழந்தைகளிடம் கேட்டேன் ‘ஏன் அவன் இப்படி ஓடுறான்?’
அவனுக்கு அக்கா ஒன்னு இருக்கு. கொஞ்சம் முடியாதவங்க. வீட்டுல எல்லாரும் வரதுக்கு முன்னே அத இவன்தான் போய்ப் பார்த்துக்கணும். வீட்டையெல்லாம் அவன்தான் சுத்தப்படுத்தி வைக்கணும்” என்றனர்.
அரை மணி நேரம் கடந்து முழுதாக விளையாடி முடித்துவிட்டு. அவனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியுமா? எனக் கேட்டேன். பஸ் ஏறப்போகும் வழிதான்பார்த்து விட்டுச் செல்லலாம் என்றார் என்னைப் பள்ளிக்கு அழைத்திருந்த ஆசிரியர்.
வீட்டின் முன் வாகனம் சென்று நின்றது. மிகவும் சாதாரணமான ஓட்டு வீடுதான். சப்தம் கேட்டு வெளியே தலையைக் கட்டினான் அவன். “சார்!” என்ற படி வெளியே வந்தவனிடம்என்னடா பண்ணுறே?”என்றார் ஆசிரியர்.
வீடு முழுக்க பேண்டு வச்சிருக்கு சார். கழுவிக்கிட்டு இருக்கேன். இதோ ஒரு நிமிடம்  சார் வந்திடுறேன் எனச் சொல்லி மீண்டும் உள்ளே ஓடியவன் பத்து நிமிடத்திற்குப் பிறகு கதவைத் திறந்து உள்ளே வாங்க சார்வா மாமா என்றான். நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம். சிறிய மரக் கட்டிலில் உடல் முழுக்க ஆங்காங்கே கந்தல் கந்தலான போர்வைஅதன் மேல் வேட்டிஅதன் மேல் ஒரு தாவணி என இதுதான் ஆடை என்றில்லாமல் முகம் மட்டும் தெரியும் அளவில் சுற்றப்பட்டு மல்லாக்கப் படுக்க வைக்கபட்டிருந்தாள். பார்த்தவுடன் புரிந்தது Cerebellum Paralysis, Mental Retardation மற்றும் Muscular Dystrophy போன்ற பிறப்பு மற்றும் மரபணு சார்ந்த நோய்களின் பாதிப்புகளாக இருக்கும். இவற்றிற்கான மருத்துவ உதவிகள்அவற்றைச் செய்துதரும் அமைப்புகள் பற்றி சரியான வழிகாட்டுதல்கள் எதுவுமில்லா நிலையில் அப்படியே விட்டு வைத்திருகின்றனர் என்பதும் புரிந்தது. 
அப்போது இம்மாதிரியான குழந்தைகளுக்கான மறுவாழ்வு (Rehabilitation) மையம் ஒன்றில் வேலையும் பார்த்துக் கொண்டிருந்ததால்பெற்றோர் வந்ததும் எம்மாதிரியான உதவிகள் செய்யலாம்எப்படியெல்லாம் கவனித்துக் கொள்ளலாம் என்பதைச் சொல்ல காத்திருந்தேன். அதுவரை அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘நான் பிறந்ததிலிருந்து இப்படிதான் இருக்கு மாமா. அப்பா அம்மா எல்லாம் கூலி வேலைக்குப் போய்டுவாங்கஅவங்க வரதுக்கு முன்னால நான் வந்து வீட்டையெல்லாம் சுத்தப்படுத்தி இதையும் சுத்தப்படுத்தி நாத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். அப்படிச் செய்யவில்லை என்றால் எனக்கு அடி விழும்” என்றான்.
பெற்றோர்கள் வந்ததும் பேச்சுக் கொடுத்து “சக்கர நாற்காலி போன்றவற்றை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்க முடியுமே. ஏன் முயலவில்லை?  இம்மாதிரி இருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளவும்இவர்களுக்கென்று செயல்படும் சில பள்ளிகளும் இருக்கிறதேஅங்கே எல்லாம் கூட்டிட்டு போகவில்லையா?”
இது சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்திடும் என எதிர்பார்த்தோம் சார், 20 வருசம் ஆகுது. இப்படியே கிடக்கு. போகாம. கொல்லவும் மனசு வரல. இதால எங்களுக்குத் தான் பயங்கர வேதனை. வெளியவோ ஏதாவது விசேசத்துக்கோ போகவே முடியாது. அப்படிப் போய் 15 வருசம் ஆச்சி. சீக்கிரம் போய் சேராதான்னு காத்துக் காத்து எங்க வாழ்க்கையும் போகுது. நீங்கள் சொல்றது மாதிரியெல்லாம் பள்ளிகள் இருக்குன்னு இப்போதான் சார் எங்களுக்கே தெரியுதுநீங்க சொல்லி. அப்படியே இருந்தாலும் இத வீட்ட விட்டு வெளியெல்லாம் அழைக்க முடியாது. வாசக் கதவத் தாண்டினால் எங்கள் மானம் எல்லாம் போய்டும். இப்பவே ஒண்ணுமில்லே இதுல இத வேற வீட்டவிட்டு வெளியே கொண்டுவந்து இருக்கிறதும் ஒன்னுமில்லாமல் போறதுக்கா. இப்படியே கிடந்தது சாகட்டும்.” என்றனர்.
இதைக் கேட்டு எனக்குக் கோபமும் எரிச்சலும் உச்சபட்சமாக வந்தாலும் எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் குக்கிராமம் (சென்னைக்கு அருகே இருந்தாலும் அப்படிதான்) ஒன்றில்  இருக்கும் பெற்றோரின் மனோநிலை என வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டுகொஞ்சம் விளக்கங்கள் கொடுத்து ஒரு வாரத்திற்குள்ளாகச் சக்கர நாற்காலி ஒன்றை அனுப்பி வைக்கிறேன். வீட்டுக்குள்ளாக வைத்தே அதில் உட்கார வைத்து ஒரு சிலவிசைகள் கற்றுக்கொடுங்கள். 21 வயதாகும் குழந்தை அவள். இன்னும் பேசக் கூடக் கற்றுக் கொடுக்காமல் இருக்கிறீர்கள்முயற்சி செய்யுங்கள். உங்களது இந்த மனோநிலையால் பாவம் அந்த 11 வயதுக் குழந்தையும் தினம் தினம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான். பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிக் கிளம்பினோம்.
ஒப்புக்கொண்டது போல் 10 நாளில் சக்கர நாற்காலியை அனுப்பியும் வைத்தோம். ஆனால்சரியாக ஒன்றரை மாதங்களில்அவள் இறந்து விட்டதாகச் செய்தி சொன்னார் ஆசிரிய நண்பர். 
ஒன்றும் செய்ய முடியாது இத்தனை நாள் அவர்களது மனோநிலையில் அக்குழந்தை பிழைத்திருந்ததே அதிசயம் தான். நம்மூரில் இருக்கும் தீண்டாமைகளில் 21-ம் நூற்றாண்டில் மிக அதிகமான மன அழுத்தத்தைக் கொடுக்கும் கொடுமையான தீண்டாமை எதுவென்றால்இம்மாதிரியான மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் அனுபவிப்பதுதான். அதனால் விட்டுவிடுங்கள் இனியாவது ஓரளவு நிம்மதியான வாழ்வை அவர்கள் வாழட்டும். இரண்டாவது அக்குழந்தையும் இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே பெரிய விசயம்தான்என்றேன்.
மேலே சொல்லியிருப்பது ஒரேயொரு உதாரணம் தான். நான் வேலைப் பார்த்ததே இம்மாதிரியான குழந்தைகள் இருக்கும் இடம் என்பதாலும்கிராமங்கள் தோறும் மட்டுமல்லாது பெருநகரங்களிலும் பயணங்களில் கண்டு வருவதாலும் பகிர்ந்துகொள்ளப் பல கதைகள் இருக்கிறது. அனைத்துச் சம்பவங்களிலும்பெற்றோர்களின் கண்கள் எப்போதும் கலங்கியே நிற்கும்முகம் எப்போதும் சோர்வுடனே இருக்கும். அவற்றையெல்லாம் களைந்தெடுக்க நிலையான செயல்வடிவமோதொழில்நுட்ப வளர்ச்சியோ நம் சமூகம் இன்னும் அடையவேயில்லை.
ஆனால் அப்படியான குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வோ அல்லது அந்தக் குழந்தைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் முதல் அடிப்படை உரிமைகள் வரையிலான தகவல்களை நாம் எந்தளவிற்கு தெரிந்துள்ளோம் என்பது நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. ஏதோ என்னளவில் நான் தெரிந்து வைத்திருக்கும் பெயர்களைப் பட்டியலிடுகிறேன். 
இவையிரண்டும் குறைபாடுகளே அல்ல எனப் பல மருத்துவ அறிஞர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தாலும் மக்கள் மத்தியில் இருக்கும் விழிப்புணர்வின்மையால் குறைபாடுகளாகவே பார்க்கப்பட்டுக்குழந்தைகளும் பெற்றோர்களும் வதைபடுகிறார்கள். அவை ஆட்டிசம் மற்றும் ஹைப்பர் டென்சன். இவை Disability அல்ல Different Abilityஆனாலும் குறைபாடுகள் என்னும் கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. அது களையெடுக்கப்பட்டாலே பெரும்பாலும் அடுத்த கட்டத்தை நோக்கி வளரக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கும் குழந்தைகள் இவர்கள். 
அடுத்ததாக பார்வைக் குறைபாடுகள் (Visual Impairment), காது மற்றும் வாய் குறைபாடுகள் (Diseases of Deaf and Dumb), கை மற்றும் கால் குறைபாடுகள் (Physically Locomotor Disabilityஇவையனைத்தும் ஏதோ ஓரளவிற்கு பழக்கப்பட்டு விட்ட ஒன்றாகத் தான் இருக்கிறது. பல ஆண்டு  காலமாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளின் வாயிலாக சில மாற்றங்களும்அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும்,கண்டிருந்தாலும்இன்னும் பொதுச்சமூகத்தின் பார்வை முற்றிலுமாக மாற்றம் காணவில்லை என்பதைப் பலநேரம் காணமுடிகிறது.
மனநல குறைபாடு (Mental Retradation), மனநலிவு நோய் (Down Syndrome), சிறு மூளை முடக்கம் (Cerebellum Paralysis), தசைநார் சிதைவு (Muscular Dystrophy), தண்டுவடக் கட்டி (Spina Bifidaபோன்றவைதான் தற்போது வேகமாக அதிகரித்து வருபவற்றில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இம்மாதிரியான நோய்களுக்கு மரபணுக் கோளாறுகள் (Genetic Disordersஎனக் கூறப்பட்டு வந்தாலும்வரலாற்றுச் சான்றுகள் படி இக்குறைபாடுகள் கொண்ட மனிதர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது இல்லை. இவையனைத்திற்கும் மாறிவரும் உலக மாற்றங்களும் அறிவியல் மற்றும் வேதியியல் அணு மாற்றங்களுமே காரணம் என்னும் வாதங்களும் முன்வைக்கப்படுகிறது. 
இதற்கு மாற்றாக “உலகப் பரிணாம - வளர்ச்சி என்பதை விட - வீழ்ச்சியில் எதிர்காலத்தில் இம்மாதிரியான குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் மற்றும் மனிதர்கள் தான் உலகில் அதிகளவு இருக்கக் கூடும் அப்படியான காலக்கட்டத்தில் தற்போது “நார்மல்” எனச் சொல்லித் திரிந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்கள் தான் அவர்களின் உலகில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பர். அதை நோக்கித்தான் உலகம் பயணித்து கொண்டிருக்கிறது எனச் சொல்லும் அளவிற்கு, குறைபாடுகள் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறது சில ஆய்வுகள்.” என்கிற வாதங்களும் பரவலாகக் காணக் கிடைக்கிறது.
எது எப்படியாக இருந்தாலும் தற்காலத்தைப் பொறுத்த வரை இம்மாதிரியான குழந்தைகள் அனைவரும் சிறப்புக் குழந்தைகளே. சிறப்புக் குழந்தைகள் என்றால் கூடுதல் கவனம் தேவை என்பதாகப் பொருள். அந்தக் கூடுதல் கவனம் என்பது அனைத்து மட்டத்திலும் நடைபெற வேண்டும். அப்படி நடைபெற்றால் மட்டுமே அது சிறப்பானதாக இருக்கும். ஆனால் காலங்காலமாகத் தீண்டாமை புரையேறியிருக்கும் இச்சமூகத்தில் நவீன தீண்டாமையாக இக்குறைபாடுகளுடைய குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பார்க்கப்பட்டு வருகின்றனர். இத்தீண்டாமை நீங்க இவர்களும் குழந்தைகள் தான் என்னும் மனப்பான்மையை அதிகளவில் எடுத்துச் செல்ல வேண்டிய சமூக அமைப்பில் இருக்கிறோம்.

-பயணங்கள் தொடரும்

No comments:

Post a Comment