Saturday 30 May 2020

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி – 1 [சுற்றுச்சார்பின் மீது பழி போடாமல் நம்மை எப்படி வளர்த்தெடுப்பது?] - கனிமொழி ம. வீபெரியார் மாபெரும் இயக்கத்தின் தலைவர் என்பதைத் தாண்டி அவரிடம் கற்றுக் கொள்ளத் தலைமைப் பண்பை விட நிறைய உள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் பல தவறுகளுக்குச் சுற்றுச் சூழல் மீதும், நண்பர்கள் மீதும் பழி போடும் தன்மை நம்மில் பலருக்கு உண்டு.
"நான் அதைச் செய்யவில்லை, இன்னார் தான் என்னை இயக்கினார்", என்று கூறிவிட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றோம். நாம் செய்யும் செயல்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்ற தெளிவு எத்துணை வயதானாலும் பலருக்கு வாய்ப்பதில்லை.

அந்த வகையில் பெரியாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளை நாம் படிக்கின்ற போது அவர் எவ்வாறு சுற்றுச் சார்பிற்குத் தன்னை ஆட்படுத்தாமல் மீட்டெடுத்துக் கொண்டார் என்பதை அறிய முடியும்.

அவர் பிறந்ததோ வைதீக குடும்பம். சதா சர்வ காலமும் காலட்சேபம் நடந்துக்கொண்டிருக்கும். ஆனால் அந்த குடும்பத்தின் வைதீக தாக்கம் என்பது முற்றிலும் இல்லாமல், புராண -இதிகாசங்களைக் கேள்விக்கு உட்படுத்தும் பகுத்தறிவு பெரியரிடத்தில் இருந்தது என்பதற்கு அடிப்படையே அவரை சுற்றுச் சார்பு பாதிக்கவில்லை, அவர் சுதந்திர சிந்தனையாளராகவே தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார் என்பதற்கு அடையாளம்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் தன்னைச் சுற்றி பெண்களை மிகக் கீழ்மையாக நடத்தியவர்கள் உண்டு. அவர்களை வீடுகளைத் தாண்டி வெளியே அனுமதிக்காதவர்கள் உண்டு. ஆனால் பெரியார் அந்தச் சுற்றுச் சார்பில் மயங்கவில்லை.  துணைவியரான நாகம்மையாராக இருந்தாலும் சரி , தன் சகோதரி கண்ணம்மாளாக இருந்தாலும் சரி அவர்களை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி வெற்றி கண்டார். பல போராட்டங்களை அவர்களை முன்னெடுக்கச் செய்தார்.   கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்திக் காட்டி வெற்றி பெற்றவர்கள் நாகம்மையாரும், கண்ணம்மாள் அவர்களும்.

இவரைப் பிறர் எளிதில் தம் கொள்கைக்குத் திருப்பி விட இயலாது. ஆனால் தந்தை பெரியாரால் தன் கொள்கைக்கு மற்றவர்களை ஈர்க்க
இயலும்.  அதற்குக் காரணம் அவரின் நேர்மை . சுற்றுச் சார்பிற்கு அடிமையாகாத தன்மை. பழுத்த சைவரான திரு.வி. க போன்றவர்களையே தன் கொள்கைக்குப் பக்கத்தில் இழுத்துச் சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார்.

இன்றைக்கும் நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்கின்றோம், பல இளைஞர்கள், போதைப் பொருட்களின் பயன்பாட்டை எவ்வாறு கையாள்கின்றனர் என்று. அவர்களிடம் கேட்கும்போது, இதை ஒரு முறை என் நண்பன் ஒருவன் பழக்கிவிட்டான். இதனை ஒரு தோழி முயற்சி செய்யச் சொன்னாள் அப்படியே பழகி விட்டது என்று கூறுவதைக் கேட்கின்றோம். அவர்களுக்குப் பெரியாரின் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும் என்ற காரணத்தினால் அய்யாவின் சொற்களையே இங்குப் பகிர்கின்றேன்.

“எனது வாலிபப் பருவத்தில் 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள் ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மது அருந்துபவர்கள் ஆவார்கள். அது மாத்திரமா? என்னிடத்தில் அதிக காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள் , ஜமீன்தார்கள், மிராசுதார்கள் ஆகியவர்களும் மது அருந்துபவர்கள். மேற்கண்ட சமயத்தில் அனேகமாக இரவெல்லாம் இந்தக் கூட்டத்தாருடனேயே கோலாகலமாய் இருந்து காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து கொத்துச்சாவியை எடுத்துக் கொண்டு கடை திறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டில் , 5 பாட்டில் ( பிராந்தி) உடைபடும். எனக்கும் மாதத்தில் இந்தச் செலவு 40, 50 ரூபாய் ஆகும்.

என் வீட்டில் சதா 4,2 பாட்டில்கள் இருக்கும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றிச் சோடா கலந்து கொடுப்பேன். சிலர் அதிகம் குடித்து விட்டுப் போதையில் என் மீது துப்புவார்கள். ஒரு கட்டத்தில் டிப்டி கலெக்கடரும் , ஒரு சால்ட் அஸிஸ்டெண்ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டு விட்டு என்னைப் பிடித்துக் கீழே தள்ளி என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படி எல்லாம் இருந்தும் என்னை அந்தச் சகவாசமும், சுற்றுச்சார்பும் அது( மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்று யோசிக்கக் கூடத் தூண்டவில்லை. என் மனைவியாருக்கு என் மீது அடிக்கடி சந்தேகம் தோன்றும். என் வாயை ஊதிக்காட்டச் சொல்வார்கள். நான் கிராக்கி செய்வேன். பலாத்காரத்தால் என் வாயை முகர்ந்து பார்த்து திருப்தி அடைவார்கள்.

இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் சுற்றுச் சார்பு எதுவும் என்னை வசப்படுத்திக் கொள்ளவில்லையென்பதற்காகவேயாகும். (ஆதாரம் : நூல் : தமிழர் தலைவர் - சாமி. சிதம்பரம் )

அவர் தான் பெரியார். Association and Surroundings ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற போதும் , எதிர்மறையான தாக்கங்களிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டு பயணத்திவர் தந்தை பெரியார்.

இன்றைக்கு இருக்கும் பெரியாரியத் தோழர்களில் பலர் சிலர் புகை பிடிக்கலாம், மது வகைகள் அருந்தலாம்.அது தனிப்பட்ட விருப்பம் , உரிமை சார்ந்தது எனினும் ஒரு முழு பெரியாரியத் தோழர் எந்த போதைப் பொருட்களுக்கும் அடிமையாகாமல் இருப்பதே அவரின் சுற்றுச் சார்பிற்கு அடிமையாகாத தன்மையை வெளிப்படுத்திடும். அப்போது தான் அந்த பெரியாரயத் தோழர்களின் கருத்து மக்களை சென்றடையும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் பேணாமல் சுற்றுச்சார்பின் மீது பழிப் போட்டு தப்பித்துக்கொள்வது ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எதிரானதாகவே இருக்கும்.


பெரியாரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய முக்கிய குணம் சுற்றுச் சார்பிற்கு மயங்காது கொண்ட இலக்கை நோக்கி பயணிப்பது. குழந்தைகளுக்கு பெரியாரின் இந்தக் குணத்தை பாடமாக சொல்லிக்கொடுத்து வளர்த்தெடுப்போம். 

Let's apply Periyarism in day to day life.

-தொடரும்  

No comments:

Post a Comment