Saturday 30 May 2020

பெரியாரின் அன்றைய நீதிக்கட்சி ஆதரவும் , இன்று நாம் திமுகவை ஆதரிக்க வேண்டிய காலச்சூழ்நிலையும் - ஒரு வரலாற்று மீளாய்வு - இரா.வாஞ்சிநாதன்

பெரியாரின் அன்றைய நீதிக்கட்சி ஆதரவும்
இன்று நாம் திமுகவை ஆதரிக்க வேண்டிய காலச்சூழ்நிலையும் - ஒரு வரலாற்று மீளாய்வு
- இரா.வாஞ்சிநாதன்

ன்று 1920களின் இறுதியிலிருந்து பெரியார் தொடர்ந்து நீதிக்கட்சியை ஆதரித்ததற்கும், பாசிசப்பாம்புகள் நம் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாம் திமுகவை ஆதரிக்க வேண்டியதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னிருந்த வரலாற்றை ஏன் தற்போதைய சூழலோடு தொடர்புபடுத்திப்பார்க்க வேண்டுமென்றால், 'HISTORY WILL REPEAT ITSELF'. வரலாறும் வரலாற்று நிகழ்வுகளும் ஏதோ ஒருவகையில் மீண்டும் நிகழும்தன்மையுடையது. வரலாற்றின்மூலம் பாடம் கற்றுத்தெளிவுறுவது அவசியம். 'திராவிட ஞாயிறு' தோழர் ப.திருமாவேலன் அவர்களின் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  "வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!"

நீதிக்கட்சிதான் சுயமரியாதைக் கொள்கைகளை அரசாங்கமாக நின்று செயல்படுத்திய முதல் கட்சி. சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பாகவே பார்ப்பனரல்லாதார் பிரச்னையை பேசியது அவர்களுக்கான உரிமைகளுக்காகப் பாடுபட்டது. ஆனால் பிட்டி தியாகராய செட்டியாரும், டி.எம்.நாயரும் மறைந்த பின்னர் நீதிக்கட்சியின் வலுவான பார்ப்பன எதிர்ப்பு கொள்கையில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டது. அது பெரியாரின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. இருப்பினும் பார்ப்பனரல்லாதாருக்கான உரிமைகளை நீதிக்கட்சி விட்டுத்தரவில்லை. ஆனால் ஒரு புறம் சமதர்மிகள் (பொருளாதார சமதர்மமே விடுதலை என்று பேசியவர்கள்; அன்றைய கம்யூனிஸ்ட்கள்) நீதிக்கட்சி ஜமீன்தார்களின் கட்சி எனவும் பணக்காரர்களின் கட்சி எனவும் அது சமதர்மத்தை பேசவில்லை எனவும் தூற்றினார்கள். பெரியார் நீதிக்கட்சிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் பெரியார் தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார். நீதிக்கட்சி தவறு செய்தபோதெல்லாம் தயவு தாட்சண்யம் பாராமல் அக்கட்சியை கண்டித்த அதே வேளையில், வாக்கரசியல் என்று வந்தபோது தனது ஆதரவை நீதிக்கட்சிக்கே வழங்கினார். அது ஏன் என்பதைப் பார்ப்போம்.

பெரியார் நீதிக்கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவு ஒருகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த கம்யூனிஸ்ட் சிங்காரவேலருக்கு பிடிக்கவில்லை. நீதிக்கட்சி ஜமீன்தாரர்களின் கட்சியாகவும் பணக்காரர்களின் கட்சியாகவும் உள்ளது எனக்கூறி பெரியார் அக்கட்சிக்கு கொடுத்துவரும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும் என்று விமர்சிக்கிறார். அது 30.09.1934 தேதியிட்ட  'பகுத்தறிவு' இதழில் வெளியாகிறது. அதே இதழில் பெரியார் அதற்கு எழுதிய பதிலும் வெளியாகிறது. முற்போக்கு ஜோடனைகள் ஏதுமின்றி பெரியார் கூறிய கருத்துகளாவன:

"1) சரியாகவோ தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தம் 6, 7 வருட காலமாக இருந்து வருகிறது. அதோடு ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசை விட மோசமானது என்று எனக்கு எந்தத்துறையிலும் தோன்றவில்லை. காங்கிரஸ் ஜாதி ஆதிக்கம் வேண்டுமென்கிறது. ஜஸ்டிஸ் பண ஆதிக்கம் வேண்டுமென்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படித்தங்கள் பூணூலைக் கழற்றி எறிய முடியவில்லையோ அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சித்தலைவர்களுக்கு பணத்தை வீசி எறியவோ பணம் சம்பாதிப்பதை தியாகம் செய்யவோ முடியவில்லை. நான் என்னைப் பொறுத்தவரை பணக்கொடுமையைவிட பூணூல் கொடுமையே பலமானதும் மோசமானதுமென எண்ணுகிறேன்.

2) பொப்பிலி ராஜா பெரிய பணக்காரர். தோழர் ஷண்முகம் பெரிய பணக்காரர். இருவரும் இன்னமும் பணமும் பதவியும் பெற ஆசைப்படலாம் என்றே முடிவு செய்து கொள்ளுவோம். ஏனெனில் அவர்கள் இருவரும் துறவிகள் அல்ல. பணமும் பதவியும் ஆசைப்படுவது இன்றைய உலக வாழ்க்கை முறையில் பாதகமான காரியமும் அல்ல. ஆனால் இவர்கள் காங்கிரஸ் தலைவர்களான சத்தியவாதிகள், சத்தியாகிரகிகள் , அஹிம்சாவாதிகளை விட மோசக்காரர்களா? சூட்சிக்காரர்களா? ஏமாற்றுக்காரர்களா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி கேட்கிறேன். "

இங்கே ஜஸ்டிஸ் கட்சி இடத்தில் திமுகவையும் , அன்றைய காங்கிரஸ் இடத்தில் இன்றுள்ள பாஜக/ அடிமை அதிமுகவையும் ஒப்பிட்டு பார்க்கவும். திமுக முன்புபோல் இல்லை அது பணநாயக கட்சியாக உள்ளது, பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை நீர்த்துபோய் விட்டது என எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும், திமுகவை விட பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டும், வெகுமக்கள் அபிமானம் பெற்ற வேறொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏறக்குறைய எவ்வகையான நுழைவுத்தேர்வுகளும் இல்லாமல் செய்து அடிப்படை பள்ளிக்கல்வியின் மூலம் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே கல்லூரியில் சேரலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது திமுக அரசு. இதனால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சம். 

பலதரப்பட்ட சமூக மக்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்யும் இந்த ஏற்பாடு சமூக ஏணியில் கீழே இருப்பவர்களை மேலே கொண்டு வருவதற்கான அச்சாணி. தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது அடித்தட்டு மக்கள் மேலே வருவதற்கும் மொழி வாழவும் வழிவகைச் செய்தது. இதுவா நீர்த்துப்போன பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை? ஜெயலலிதா நுழைவுத்தேர்வு வைத்தே தீர வேண்டுமென துடித்தாரே. கலைஞர் இடத்தில் ஒருவேளை ஜெயலலிதா இருந்திருந்தால் நுழைவுத்தேர்வு இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமா? எந்த வகையில் திமுகவை விட அதிமுக சிறந்த கட்சி? இதேதான் அன்று பெரியாரின் நிலைபாடும் எந்தவகையிலும் நீதிக்கட்சியை விட அன்றைய காங்கிரஸ் சிறந்த கட்சி அல்ல. 

அதிமுக மதவெறி பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு தற்போது மாபெரும் துரோகத்தை மக்களுக்கு செய்துவருகிறது. பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை என்கிறாயே,  பாஜகவோடு திமுக கூட்டணி வைத்ததேயில்லையா என்று கேட்டால், ஆம் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் திமுக 1999 முதல் 2003 வரை இருந்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்குபெற்றது. 

1998 முதல் 1999 வரை 13 மாதங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, தன் மேல் உள்ள வருமான வரி தொடர்பான வழக்குகளை திரும்பப்பெறவும் அன்று மாநிலத்தில் இருந்த திமுக அரசை கலைக்குமாறும் மத்திய பாஜகவிடம் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கைக்கு பாஜக மறுக்க , அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்துதான் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால் அப்போதும் பாஜகவின் குடுமியை கையில் வைத்துக்கொண்டிருந்தது திமுக. பாஜகவின் அடிநாதக் கொள்கையாக , அவர்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது மூன்று விஷயம்:
1. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து முற்றிலும் இந்தியாவுடன் இணைப்பது,
2. ராமர் கோயில் கட்டுவது
3. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது.

'மேற்சொன்ன மூன்றில் எதாவது ஒன்றை வைத்து அரசியல் செய்தால் கூட அல்லது அதற்கான நகர்வை எடுத்தால்கூட கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம்' என்று பாஜகவிடம் written guarantee வாங்கிவிட்டுதான் கூட்டணியில் இணைந்தனர். நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் படத்தை மாட்டிய நிகழ்வு, 2002ல் நடந்த குஜராத் கலவரங்கள் ஆகியன காரணமாக திமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தது. பின்னர் திமுக கூட்டணியில் இருந்து விலகியது. (கலைஞர் சாகும்வரை பாஜகவின் அடிநாதக் கொள்கை எவற்றையும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.) ஆனால் இந்த அடிமை அதிமுக அரசு தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது. 

இந்த பாசிச ஆட்சி 2019ல் ஆட்சிக்கு வந்தவுடன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டது. 'தேசிய குடியுரிமைச் சட்டம்' மூலம் இஸ்லாமியர்களை அகதிகளாக்கும் வேலையை முன்னெடுத்து வெற்றிகரமாக செய்துவருகிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் இவை அனைத்தையும் ஆமோதித்தது அடிமை அதிமுக அரசு. இவை அனைத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் சண்டை செய்து கொண்டிருப்பது திமுக எம்.பி.க்கள். மாநிலத்தில் இவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது திமுக தலைமை. இப்போது சொல்ல முடியுமா அதிமுகவும் திமுகவும் ஒன்று என?    

7.6.1934 அன்று பொப்பிலி இல்லத்தில் நடந்த நீதிக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துகள் கீழ்வருமாறு:

1) "நீதிக்கட்சி பதவிக்காகச் சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களின் கட்சி என்பதுதான் பொதுமக்கள் கருத்து. அக்கருத்து அகற்றப்பட வேண்டும்.

2) நீதிக்கட்சி ஜமீன்தாரர்கள், முதலாளிமார்கள் கட்சியே அன்றி பொதுமக்கள் கட்சி அல்ல என்று கூறப்படுவதைப் பொய்யாக்கிக் காட்டாவிட்டால் கட்சியிலுள்ள உண்மையான உழைப்பாளிகளுக்கு அதைவிட வேறு அபாயம் இருக்க முடியாது. ஏழைப் பொது மக்களுக்குப் பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும்.

3) நீதிக்கட்சியினருக்கு மாநிலச் சட்டமன்றத்தில் மட்டும்தான் அக்கறையும் ஆர்வமுமிருக்கிறது, ஏனெனில் அங்குதான் அமைச்சர் பதவியும், சலுகைகளும் கிடைக்கின்றன என்று பொதுவாகக் கருதப்படுவதில் பொருளுண்டு. மத்திய சட்டமன்றத்தை அவர்கள் புறக்கணிப்பதால் தென்னிந்திய மக்களின் பிரதிநிதிகளாக பார்ப்பனர்களே அங்கு செல்கிறார்கள். அவர்கள் தேசநலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவர்கள், தேசபக்தர்கள் நாங்கள்தான் என்று கூறிக்கொள்வதுடன் பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் தேசத்துரோகிகள் , அந்நிய ஆட்சிக்கும் அதன் கொடுங்கோல் தன்மைக்கும் துணை போகிறவர்கள் என்ற பிரசாரத்தைச் செய்கின்றனர். ஆர்.கே.சண்முகமும், ஏ.ராமசாமியும் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து சிறந்த சாதனை புரிந்திருக்கிறார்கள். எனவே மேலும் பல பார்பனரல்லாதார் அங்கு செல்வது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களுக்கு செய்யும் கெடுதியைத் தடுக்கும்." (புரட்சி 10.06.1934).

'திமுக பதவி மோகம் பிடித்தவர்கள், மத்திய அமைச்சரவையில் பங்குபெற என்னவேண்டுமானால் செய்வார்கள்' என்பவர்களுக்கு விளக்க பெரியார் மேற்சொன்ன மூன்றாவது கருத்தை எடுத்துக்கொள்வோம். பெரியார் நீதிகட்சியினரை மத்திய சட்டமன்றத்தில் பங்கெடுக்கும்படி வலியுறுத்துகிறார். மத்திய சட்டமன்றத்தில் பங்கெடுக்காத நீதிக்கட்சியினரை விமர்சிக்கிறார். தென்னிந்திய பிரதிநிதிகளாக நீதிக்கட்சியினர் சென்றதால்தான் பார்ப்பனரல்லாதார்களுக்கு பார்ப்பனர்கள் செய்யும் தீங்கைத் தடுக்கமுடியும் என்று கூறுகிறார். இவற்றை அப்படியே நாம் திமுகவோடு இணைத்து பார்ப்போம். இந்திய ஒன்றிய அமைச்சரவையில் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, மூன்றாவது அணி ஆகிய மூன்று முற்றிலும் வெவ்வேறு கூட்டணியில் பங்குபெற்று மத்திய அமைச்சரவையில் பங்குவகித்த ஒரே கட்சி இந்தியாவிலேயே திமுக மட்டும்தான். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது, முரசொலி மாறன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001ல் 142 நாடுகள் ஒன்றுகூடிய உலக வர்த்தக அமைப்பின் (WTO) மாநாடு கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் நடந்தது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட முரசொலி மாறன் இந்தியாவின் உரிமைகளை மட்டுமில்லை ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் உரிமைகளையும் மீட்டெடுத்தார். அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு பாதகமான அம்சங்கள் இருந்தன. நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம். அது, விதிமுறைகளைச்  சார்ந்து இயங்க வேண்டும், அதிகாரத்தைச் சார்ந்து அல்ல,’ என அதிகார வர்க்க மேடையிலேயே நின்று முழங்கினார் முரசொலி மாறன். 

பாகிஸ்தான், இலங்கை , வங்கதேசம், மலேசியா ஆகியோரின் அமைச்சர்களுக்கு பிரச்னையை விளக்கி , வரைவு தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும்படி செய்தார். அமெரிக்க அதிபர் புஷ் வாஜ்பேயியிடம் "உங்கள் அமைச்சர் முரண்டு பிடிக்கிறார் , வரைவுக்கு ஒப்புதல் அளிக்க சொல்லுங்கள்" எனக்கேட்டபோது, "முரசொலி மாறனின் நிலைப்பாடுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அவர் முடிவுக்கு எதிராக செயல்பட்டால் என் அரசே கவிழ்ந்துவிடும்" என்பதை வாஜ்பேயி தெரிவித்தார். இந்தியா கேட்டுக்கொண்ட திருத்தங்களை செய்தபிறகே அந்த வரைவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

"வளர்ந்த நாடுகள் விவசாய மானியத்தை குறைக்காமல், வளரும் நாடுகளை ஏன் குறைக்கச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார். இது அப்போது இந்தியாவை வளரும் நாடுகளின் ஹீரோவாக உயர்த்தியது. 'தமிழ்நாட்டின் ஒரு சினிமா கதாசிரியர் உலக வர்த்தக அமைப்பின் ஸ்க்ரிப்டையே மாற்றி எழுதிவிட்டார்' என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிஸ்னஸ் லீக் ஆகிய பன்னாட்டு ஊடகங்கள் முரசொலி மாறனின் நிலைபாட்டை வெகுவாக பாராட்டியது. இவ்வாறு வளரும் நாடுகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. அமெரிக்க சர்வாதிகாரம் உடைக்கப்பட்டது.

 காங்கிரஸ் கூட்டணியில், ஆ.ராசா மத்திய தொலைதொடர்புத்துறை  அமைச்சராக  ஆன பின்புதான்,  அவுட்கோயிங் 1 ரூபாய், இன்கம்மிங் இலவசம் என்றானது. கடைக்கோடி மக்களுக்கும் தொலைத்தொடர்பு சென்றுசேர்ந்தது. 0.7 சதவிகிதம் இருந்த கிராம தொலைத்தொடர்பு அடர்த்தியை 70 சதவிகிதம் ஆக்கியது ஆ.ராசா. டி.ஆர் பாலு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் பல்வேறு சாலைகள் , மேம்பாலங்கள் தமிழகத்துக்கு வந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது கத்திபாரா மேம்பாலம். இப்படி எந்த கூட்டணியோடு இருந்தபோதிலும் உலக, இந்திய, தமிழக நலன்களை காத்தது திமுக எனும் மக்களுக்கான மாபெரும் இயக்கம். இவ்வளவு நன்மைகளை சாதித்துக்காட்டிய வேறொரு மாநிலக்கட்சி இந்தியாவிலேயே எங்கு தேடினாலும் கிடைக்காது.  "அதிமுக திமுக என யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒன்று தான்" என இப்போதும் சொல்ல முடியுமா?

தோழர் ப. ஜீவானந்தம் ,புதுக்கோட்டை வக்கீல் தோழர் வல்லத்தரசு ஆகியோர் கீழ்க்கண்ட விமர்சனத்தை ஜஸ்டிஸ் கட்சி மீது வைத்தார்கள்.
"ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் இல்லை. முதலாளித்துவமும் மதப்பற்றும் இரு கட்சியிலும் இருக்கின்றது. சமதர்மக் கொள்கைகளும் பொருளாதாரச் சமத்துவமும் இரு கட்சியிலும் கிடையாது" .இதனால் பெரியார் ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை அவர் திரும்பப்பெற வேண்டுமென மேற்சொன்ன இரு தோழர்களும் பெரியாரை வலியுறுத்தி 1935 அக்டோபரில் திருச்சி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் பேசினர்.

ப.ஜீவானந்தம், வல்லத்தரசு ஆகிய இருவரும் பேசியதற்கு பதில் சொன்ன பெரியார் இவ்வாறு கூறினார்:

"சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியால்தான் ஜாதி ஆணவம் பிடித்த பார்ப்பனர்களும் கொள்கை இல்லாத காங்கிரஸ்காரரும் உள் நுழைந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார்கள். வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நாம் குறைபேசக்கூடாது. வீராவேசப் பேச்சால் ஒன்றும் முடியாது. பணக்காரர்களை நாம் தற்போதுள்ள நிலைமையில் எப்படி ஒழிக்க முடியும்? எந்த வகையில் அனுபவத்தில் இன்று அது முடியும்? பார்ப்பான் ஒழிவதற்குமுன் பணக்காரத்தன்மை ஒழிந்துவிடுமா? அது சாத்தியமா என்று எண்ணிப்பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாவிட்டால் பொட்டுக் கட்டும் வழக்கம் ஒழிந்த்திருக்குமா?

குழந்தை மனம் ஒழிக்க சட்டம் வந்திருக்குமா? தீண்டாமை விளக்குக்கு ஒரு அளவாவது சட்டம் ஏற்பட்டிருக்குமா? இவ்வளவு பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பெற்றிருக்க முடியுமா? இவ்வளவு சுயமரியாதையாவது ஏற்பட்டிருக்குமா? என்பதை எண்ணிப்பாருங்கள். 'பாழாய்ப்போன எலெக்ஷன் ' என்று சொல்லிவிடுவதில் பயனில்லை. பாழாய்ப்போன எலெக்ஷனில் வருகிறவன் எவனாயிருந்தாலும் அவனைத்தான் சர்க்காரும் மதிக்கிறார்கள். அவன் வசம்தான் நிர்வாகம் போய்ச் சேர்கிறது. எதிரிகள் வசம் போனால் அதைக்கொண்டு நன்மை அதிகம் செய்யாவிட்டாலும் நமக்குத் தீமை அதிகம் விளைவிக்க முடியும். அங்கு சேர்ந்து செய்யும் சட்டம்தான் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது. அவன் செய்வதுதான் நமது தலைவிதியாகிறது. எலெக்ஷனில்தான் நம் பிரதிநிதியை அனுப்ப முடிகிறது.

சமதர்ம முறை என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்தில் புகுத்திக் கனல் விட்டெரியச் செய்தது நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார்.சமதர்மம் ஒருநாளில் ஏற்படக்கூடியதல்ல.ரஷியாவில் கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாக இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமுகத்துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி நாம் குறை கூறுவதால் நாம் நன்மையைச் செய்வதாகாது. 

நமது கொள்கைக்கு பலம் ஏற்படுத்தத் தகுந்த நல்ல நிலைமை ஏற்படும் வரை தற்போது நடக்கும் வேலைத்திட்டத்திற்கு தடை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது இயக்கத்துக்கு இன்று நிர்பந்தம் ஏற்பட்ட காரணத்தினாலேயே நாம் நமது நிலைமையை நன்கு பரிசீலனை செய்து திட்டமொன்றை வகுக்க வேண்டும். எந்த அளவுக்குத் தடையில்லையோ அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்யலாம்.தடைமீற வேண்டுமென்று நாம் முடிவு செய்த பின்பே அதைப் பற்றி யோசிக்க வேண்டும். சமதர்மத்தில் எனக்குள்ள ஆர்வம் அவசரம் நீங்கள் அறியாததல்ல. படிப்படியான திட்டத்துடன் அதை ஒழுங்கான வழிமுறைகளுடன் கொண்டு செலுத்த வேண்டும்.

சமதர்மமென்பது மதம் மாறுவது என்பது போல வெறும் உணர்ச்சியல்ல காரியத்தில் அனேக மாறுதல்களும் புரட்சிகளும் ஏற்பட வேண்டும். அதற்குத் திட்டங்கள், பிரச்சாரம் செய்யச் சௌகரியங்கள் முதலியவைகளெல்லாம் வேண்டும். அவைகளையும் கால தேச வர்த்தமானங்களுக்குத் தகுந்தபடி செலுத்தக்கூடிய ஆற்றலும் துணிவும் வேண்டும். கண்மூடித்தனமான வெறும் பாமர மக்களின் திருப்தியை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் பின் செல்லவும் கூடாது. நாம் பாமர மக்களைத் திருப்பி நடத்துகிரவர்களாய் இருக்க வேண்டும். சமதர்மத்திற்கு நாம் திட்டம் வைத்திருக்கிறோம். அத்திட்டத்திற்கு இம்மியளவு பின்போகும்படியோ மாற்றிக்கொள்ளும்படியோ நான் சொல்ல வரவில்லை." (குடி அரசு : 27.10.1935)

மேற்சொன்னவற்றில் ஜஸ்டிஸ் கட்சி என்பதற்கு பதில் திமுகவையும்,  அன்றைய  காங்கிரசுக்கு பதில் பாஜகவையும்/ அதிமுகவையும் பொருத்தி பார்ப்போம். திமுக நிச்சயம் புனிதமான கட்சி என்பதை வரையறுக்க நான் முயலவில்லை. பெரியார் புனிதங்களை உடைப்பதில்தான் பெயர்போனவர். ஆனால் உண்மைநிலையை சொல்ல எங்கும் எப்போதும் தயங்கியதில்லை அவர். அதிமுகவும் திமுகவும் ஒன்று என எப்போதுமே வரையறுக்க முடியாது. அத்தகைய கூற்று எப்போதும் எந்தவகையிலும் அய்யோக்கியத்தனமானது. திமுகவைத் தவிர வேறு எந்தக்கட்சியும் இந்தளவு பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கைகளை பேசியதில்லை நடைமுறைபடுத்தியதில்லை, அடித்தட்டு மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டியதில்லை என்பதை ஏற்கனவே விளக்கியிருந்தேன். 

என்ன இருந்தாலும் திமுக ஜாதி ஓட்டை வைத்துதானே அரசியல் செய்கிறது? ஜாதி பார்த்துத்தானே வேட்பாளர்களை இறக்குகிறது. பொதுத்தொகுதியில் தலித் வேட்பாளரை ஏன் நிறுத்துவதில்லை
என்பன போன்ற கேள்விகளும் தொடர்ந்து திமுகவை நோக்கி வீசப்பட்டு வருபவை. வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய ஜாதிய அமைப்புமுறை என்பது 2000 ஆண்டுகாலமாக வேர்விட்டு எல்லோரின் ரத்தத்திலும் ஊறிவிட்டது. ஜாதி ஒரு அவமானம் என்பதும், ஜாதியைத் துறந்த மனிதனாக எல்லோரையும் சமமாக மதிக்கக்கூடிய மனிதனாக நாம் மாறவேண்டும் என்கிற முயற்சி கடந்த நூறாண்டுகளாக கொஞ்சம்கொஞ்சமாக நடந்து வருகிறது. 

2000 ஆண்டுகள் வேர்விட்ட சிக்கலான ஜாதிய அமைப்பு முறை என்பது மன்னராட்சிக் காலம், காலனிய காலம், நிலப்பிரபுத்துவம் வீழும் முன், நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த பின், உலகமயமாக்கலுக்கு முன், உலகமயமாக்கலுக்கு பின் , என எப்பேர்ப்பட்ட சமூகச்சூழல் மாறிக்கொண்டே வந்தாலும் இந்த ஜாதிய அமைப்பு காலத்திற்கேற்ற வகையில் தன்னை தகவமைத்துக்கொள்ளும், மறுகட்டுமானம் செய்துகொள்ளும் தன்மையுடையது. எனவே சமதர்மம், தலைகீழ் மாற்றம் ஒரு நாளில் ஏற்படக்கூடியதா?. இதைத்தான் பெரியார் சமதர்மம் ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது என கூறியுள்ளதைப் பார்த்தோம். ஜாதி பார்த்து ஓட்டு போடுவதன் பின்னணியை சரிசெய்ய மக்களின் ஜாதிய மனநிலையை நாம் மாற்ற ஆவன செய்தல் வேண்டும். நடைமுறையில் யாரால் இதைச் செய்யமுடியுமென்றால் தேர்தலில் கலந்துகொள்ளாத இயக்கங்கள் செய்ய வேண்டும். இதனைப் பெரியார் நன்கு புரிந்துவைத்திருந்தார்.இதனால் தான் திராவிடர் கழகம் தேர்தலில் கலந்துகொள்ளாது என்பதை கொள்கையாகவே வகுத்துக்கொண்டார். திராவிடர் கழகம் தேர்தலில் கலந்துகொள்ளாது என்ற நிலைப்பாட்டில் இருந்தாரே தவிர்த்து அவர் மக்கள் யாரையும் ஓட்டு போடக்கூடாது என்றோ தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்றோ எப்போதும் சொன்னதில்லை. 

ஏனெனில் "எலெக்ஷன் மூலம் சர்க்கார் அமைக்கிறவன்தான் சேர்ந்து சட்டம் செய்கிறான். அவன் செய்வதுதான் நம் தலைவிதியாகிறது. " என்கிற அவரின் மேற்சொன்ன கூற்று மூலம் அவரின் நிலைப்பாடு தெளிவாகிறது. இப்போதுள்ள பொதுத்தொகுதியில் பெரும்பான்மை ஜாதியைப் பார்த்துதான் ஏறக்குறைய எல்லாக்கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. (நிச்சயம் இந்த நிலை மாறவேண்டும்தான்). ஒரு தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை உண்டாகிறது. அப்பொழுது ஜாதியைத் தாண்டி அங்கே எந்தக் கட்சி என்பதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். இப்படி திமுகவில் ஜெயித்து வந்தவர்கள்தான் மத்தியிலும் மாநிலத்திலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார்கள். எனவே பேப்பரில் ஜாதி இல்லை என்று எழுதிவிட்டால் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடாது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மூலம் கல்வி , வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொடுப்பதன்மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் சமூகங்களை சமமாய் கொண்டுவருவதற்கான முதல் படிநிலையை எடுத்துவைக்கிறோம்.

இத்தனை பெரிய சமூகச்சிக்கல் கொண்ட ஜாதியமைப்பு முறைநடைமுறையில் உள்ளது. ''வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி நாம் குறைபேசக்கூடாது' என்று பெரியார் கூறியுள்ளதைப் பார்த்தோம். அதேதான் இங்கு திமுகவுக்கும் பொருந்தும். 

நீதிக்கட்சியை காங்கிரஸ் பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பெரியார் விளக்கினார்:

"உலகிலே காங்கிரஸ் கொள்கைக்கு முரணானது, பிற்போக்கானது என்று காங்கிரஸ்காரர்களால் சொல்லப்படுகிற கட்சிகள் பல இருந்தும் ... அவைகளையெல்லாம் விட்டுவிட்டு, நம் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் வெட்டிப்புதைக்க வேண்டும் என்று ஆசைபடுவதன் அர்த்தம் என்ன என்று பாருங்கள். சென்ற வாரத்தில் தோழர் பிரகாசம் பந்தலு ...  'ஜஸ்டிஸ் கட்சியாரை விட ஆங்கிலேயர்களும் ஆங்கிலேய ஆத்சியும் மேலானது' என்று சொன்னாரே - அதன் அபிப்ராயம் என்ன? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியால் இந்த இருநூறு வருஷ காலமாய்ச் செய்யாததையும் செய்ய முடியாததையும் ஜஸ்டிஸ் கட்சியார் செய்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்? அது என்ன என்பதைத் தோழர் பிரகாசம் அடுத்த வரியில் சொல்லி விட்டார். அதாவது 'ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பாடு செய்து விட்டார்கள்; ஆதலால் அதை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்."

எனவேதான் பெரியார் அன்று காங்கிரஸ் கட்சியைவிட நீதிக்கட்சி சிறந்தது என்றும் அதை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்த அரசியல் வாய்ப்பும் சுயமரியாதை இயக்கத்தவருக்கு இருந்திருக்க முடியாது என்றும் கருதினார்.  (குடி அரசு: 19.5.1935)

'50 வருட திராவிட ஆட்சியில் எல்லாம் கெட்டுவிட்டது' என்று பார்ப்பன கூட்டமும் அதன் அடிமைக்கூட்டங்களும் கதறுவது ஏன்? .கல்லூரிகளில், அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் உள்ளே வர ஆரம்பித்து அடித்தட்டு மக்களும் மேலே எழுந்துகொள்ள தொடங்கியதால் தான். இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு 49 சதவிகிதமாக ஆனதற்கு வி.பி.சிங் 'மண்டல் கமிஷனை' அமல்படுத்தியது. அந்த வி.பி.சிங் அரசை அமைப்பதில் பெரும்பங்காற்றியவர் கலைஞர். இதனை நீர்த்துபோகச்செய்யும் அத்தனை வேலைகளையும் தற்போதைய பாஜக அரசு செய்துவருகிறது. அதன் துணையாக அடிமை அதிமுக அரசு நிற்கிறது.

"நீதிக்கட்சியின் குற்றங்குறைகள், அதிலிருந்த பணக்காரர் ஆதிக்கம் , சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பெரியார் , அதை ஓரளவேனும் சீரமைத்து நவீன அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்கான இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டார். முத்தையாச் செட்டியார்களும் பொப்பிலிகளும்தான் கட்சியில் ஆதிக்கம் வகிப்பார் என்றாலும், அக்கட்சி வெகுமக்கள் தன்மையைப் பெறுமேயானால் , அத்தலைவர்களைச் சில நிர்பந்தங்களுக்குப் பணிய வைக்க முடியுமென்று கருதினார். வர்க்க அடிப்படையில் நீதிக்கட்சிக்கும் காங்கிரசுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணமுடியாது என்றாலும், சாதிய அடிப்படையில் பார்க்கையில் காங்கிரசை விட நீதிக்கட்சியே சிறந்தது என்று கருதினார். அக்காரணத்தினாலேயே நீதிக்கட்சிப் பற்றி காங்கிரசும் பார்ப்பனர்களும் செய்து வந்த விமர்சனங்களுக்குத் தொடர்ந்து பதில் கூறிவந்தார்." (பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ஆர் & கீதா)

நீதிக்கட்சி மேல் பெரியார் அப்போது மேற்சொன்ன இந்த விமர்சனங்கள் ,  திமுகவுக்கு பொருந்தத்தான் செய்கிறது. UAPA சட்டத்தை ஆதரித்தது, பாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு வலுவான எதிர்வினை ஆற்றாமல் விட்டது, போன்றவைகளில் தவறு இழைத்தது வருந்தத்தக்கதுதான். இவை போன்ற தவறுகளையும் சுயவிமர்சனம் செய்து திருத்தி எதிர்காலத்தில் நிச்சயம் திமுக தன்னை வலுவான சமூக நீதி இயக்கமாக, சிறுபான்மை மக்களின் தோழனாக நிலைநிறுத்திக்கொள்வது அவசியம். 

"சுயமரியாதை இயக்கத்திற்குள் சுயமரியாதை சமதர்ம கட்சி என்ற ஒரு தனிப்பிரிவை உருவாகிச் செயல்படலாம் என்று அதற்கு ஒரு திட்டத்தை வகுத்த பிறகு பெரியார் அதனை ஆதரித்து பேசி வந்ததுடன் அவர் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்த பார்ப்பனிய ஒழிப்பு, தீண்டாமையொழிப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பனவற்றைச் செயல்முறைபடுத்த பல்வேறு சக்திகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வந்தார். இந்த விஷயத்தை பொருத்தவரை கட்சி வேறுபாடுகளற்ற "பரந்துபட்ட வரலாற்றணி தேவை" என்ற புரிதலின் அடிப்படையிலேயே செயல்பட்டார். இதனால்தான் ஈரோடு சுயமரியாதை சமதர்ம மாநாட்டிற்கு டாக்டர் வரதராஜலு நாயுடுவையும் திரு.வி.க வையும் அழைத்திருந்தார். ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர் போன்ற தாழ்த்தப்பட்டோர் தலைவர்களுடனும் உறவுகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்." (பெ.சு.ச - எஸ்.வி.ஆர் & கீதா )

இங்கே எஸ்.வி.ஆர், கீதா குறிப்பிட்டது போல அன்றைய காலச்சூழலில் பெரியார் பரந்துபட்ட வரலாற்றணியை உருவாக்க வேண்டுமென்பதில் பல தோழமை சக்திகளையும் அரவணைத்து சென்றார். அதே போல் தற்போது பாசிசப் பாம்புகள் நம்மைச் சூழ்ந்த இந்த நிலையில் இடதுசாரிக் கொள்கையுடைய தோழமைகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2016ல் திமுக தோற்றது வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில்தான். 2016ல் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விசிக, இரு கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தன. இவை அன்று பிரித்த 3.27% வாக்குகள் அன்றைய திமுகவின் தோல்விக்கு ஒரு காரணம். 

இதனால்தான் ஆட்சிக்குவந்த அடிமை அதிமுக அரசு நிகழ்த்திய கொடுமைகள் ஏராளம். நீட் விஷயத்தில் மாணவர்களுக்கு செய்த துரோகம்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரைச் சுட்டுவீழ்த்திய கொடூரம் ஆகியவை நடந்தேறின. இப்படியொரு வரலாற்றுத்தவறு மீண்டும் நிகழாமல் இருப்பது அவசியம். அதனால்தான் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தார். திமுக மேல் நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் இருந்தாலும் தற்போதைய நிலைமையில் சமூகநீதி காக்கும் வெகுமக்கள் கட்சி வேறெதுவுமில்லை.

ஜஸ்டிஸ் கட்சி மீது பலர் கூறி வந்த விமர்சனத்துக்கு பெரியார் கூறிய பதிலோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். இவற்றைத் திமுகவோடு பொருத்திப்பாருங்கள்.   

"இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கம் செத்துபோய்விட்டது என்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கிதை போய் விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருக்கும்? அவர்களுடைய மேடை ஏது? என்று யோசித்துப்பார்க்கட்டும். ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதி இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை . அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களில் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல.

ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்து வருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் நமது சமதர்மமும் பொதுவுடமையும் போலி புலிவேஷம் போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது." என்றார். (குடி அரசு: 29.03.1936)

திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் செயல்பாடுகள் போதுமான அளவு இல்லை என்கிற பட்சத்தில் அப்போது நாம் அவர்களை விமர்சிப்போம், அப்போது அவர்களை குறைசொல்லலாம். ஆனால் 9 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவை இப்போது குறைகூறுவது, விமர்சிப்பது நமது பொது எதிரிக்கே சாதகமாய் முடியும். இதற்கு மேலும் 'திமுகவும் அதிமுகவும் ஒன்று', எனவோ, 'திமுகவின் கொள்கை நீர்த்துபோய்விட்டது' என்றோ கம்பு சுத்தினால், 'திமுகவை விட பன்மடங்கு வலுவான திராவிட கொள்கையுடைய வெகுமக்கள் அபிமானம் பெற்ற தேர்தல் அரசியல் கட்சி ஒன்றை கட்டமையுங்கள்' பிறகு பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பெரியாரின் மூல எழுத்துகள் 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பெரியாரை புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
- இரா.வாஞ்சிநாதன்

No comments:

Post a Comment