Saturday 30 May 2020

சிவா மனசுல சக்தி - a love story - அருணா சுப்ரமணியன்

சிவா மனசுல சக்தி - a love story - அருணா சுப்ரமணியன்

சார்வரி ஆண்டின் முதல் நாள் அதிகாலை. இன்னும் ஊரும் சூரியனும் விழித்திருக்கவில்லை. தஞ்சை பெரிய கோவிலின் தலைமை அர்ச்சகர் விசேஷ பூஜைக்காகத் தயார் செய்ய வழக்கத்தைக் காட்டிலும் சற்று முன்னரே கோவிலுக்கு வந்திருந்தார். ஓம் நமசிவாய என்று கூறிக்கொண்டே கருவறையைத் திறந்தவர் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனார். 29 அடி சிவலிங்க வடிவாய் காட்சிதரும் பெருவுடையாரின் கருவறை இன்று காலியாக இருந்தது. இரண்டொரு நிமிடம் சிலையாய் உறைந்தவர் உணர்வு பெற்று தன் இடுப்பில் சொருகியிருந்த கைப்பேசியை எடுத்து அம்பாள் சன்னதியை திறக்கச் சென்ற மற்றுமொரு அர்ச்சகரை அழைத்தார்.

" டேய் சாமா! எங்கேருக்க ?"

" என்ன மாமா ? இப்போ தான் அம்பாள் சன்னதிய திறந்திட்டுருக்கேன். ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கேள் ?"

" சாமா ! என்ன சொல்றதுன்னே தெரிலைடா. இங்க மூலவர் சன்னதியில் சிவலிங்கத்தைக் காணோம்."

"மாமா, என்ன ஆச்சு உமக்கு? அதெப்படி அவ்ளோ பெரிய சிவலிங்கம் காணாம போகும். தூக்கம் இன்னும் கலையலையா? முகத்தை அலம்பிட்டு போய் நல்லா பாருங்கோ." என்றவாறே அம்பாள் சன்னதியின் கதவைத் திறந்தார். " ஐயோ ! மாமா , இங்க அம்பாள் சிலையும் இல்லை."

"என்னடா சொல்ற?"

இருவரும் வெளியில் ஓடி வந்து சுற்றுப்புறத்தில் இருந்த விநாயகர், முருகர், கருவூலார், வராகி அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சரி பார்த்தனர். எல்லா விக்ரககங்களும் சிலைகளும் அப்படியே இருக்கக் குழம்பியபடியே கொடிமரத்தின் அருகில் வந்து நின்று நந்தி மண்டபத்தை நோக்கினர் . நந்தி மண்டபம் வெறுமனே காட்சியளித்தது.

--------
மேகக்கூட்டங்களில் நடுவில்...

"ஐயனே! இந்த அகால நேரத்தில் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?"

"அது ஒண்ணுமில்லை சக்தி! பூமியில் இப்போது கொள்ளைநோய் காலம். இந்த மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ளச் சமூக இடைவெளி ஊரடங்கு என்று ஏதோ ஏதோ செய்து தங்களைக் காத்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நம்மை எங்குக் கவனிக்கப் போகிறார்கள். அதை விடவும் நமக்கும் இந்தச் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறேன் என்று நம்மைப் பிரித்து வைத்துவிடுவார்களோ என்று நினைத்தேன். அதற்குத் தான் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று உன்னை அழைத்து வந்தேன்."

"ஆமாம். இது எல்லாம் உங்களின் வேலை தானே. அட நம் பிள்ளைகளை அங்கேயே விட்டுவந்துவிட்டோமே?"

" ஆரம்பித்துவிட்டாயா உன் பிள்ளை புராணத்தை. அவர்கள் பிறந்ததிலிருந்து என்னை நீ கண்டுகொள்வதே இல்லை. இந்த நேரத்திலாவது அவர்களின் பேச்சை எடுக்காதே. விநய் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவன் ஒரு தனிக்கட்டை. சமூக இடைவெளியின் முன்னோடி. வேலனின் பாடு தான் கொஞ்சம் திண்டாட்டமாக இருக்கும். எதுவானாலும் அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ என்னைப் பற்றி மட்டும் தான் சிந்திக்க வேண்டும்."

" ஹ்ம்ம். எனக்கு மட்டும் உங்கள் மீது ஆசை இல்லையா என்ன? பிள்ளைகளை வளர்ப்பதில் நீங்களும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் எனக்கும் சற்று ஓய்வு கிடைத்திருக்கும். பிள்ளைகளையும் ஆளாக்கி உலகையும் காத்துக்கொண்டு நிற்க நேரமில்லாமல் நான் சுத்திக்கொண்டிருந்ததில் உங்களை நான் எங்கிருந்து கவனிக்க? இதை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுதெல்லாம் உன்னை யாரு உலகைக் காக்கச் சொன்னது என்று குதர்க்கப் பேச்சு வேற. அவர்கள் நம் இருவருக்கும் பிள்ளைகள் தானே. அவரக்ளின் வளர்ப்பில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது அல்லவா? அத்தோடு நீங்கள் மட்டும் என்ன ? எப்பொழுதும் உங்கள் அழிக்கும் தொழிலைத் தானே பெரிதாய் எண்ணினீர்கள். எனக்கென்று எங்கு நேரம் ஒதுக்கினீர்கள் ?"

" சரி சரி! நாம் இருவரும் தான் கவனம் கொள்ளவில்லை. இப்பொழுது கடந்ததையெல்லாம் பேசவேண்டாம். நீ இல்லாமல் நான் இல்லை சக்தி. நீ என்னில் சரி பாதி இல்லையா. இதை எல்லோருக்கும் உணர்த்த தானே நான் அர்த்த நாரீஸ்வரராய் அருள் பாலிக்கிறேன்."

"ஆமாமாம்! எல்லாம் பேச்சோடு சரி! ஒன்னும் செயலில் இல்லை."

"ஹே! என்னமா இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய் ?"

"சிவம் சக்தி சரி பாதி என்பது வெறும் பேச்சோடு இருக்கக்கூடாது. இருவரின் செயலிலும் இருக்க வேண்டும்."

"ஒப்புக்கொள்கிறேன் உமையே! இப்பொழுது உனக்கு என்ன செய்ய வேண்டும்?"

"ஹ்ம்ம்! நீங்கள் ஒப்புக்கொண்டது இப்போதைக்குப் போதும். உங்கள் செயலிலும் இது பிரதிபலிக்கிறதா என்று பார்க்கிறேன் இனி வரும் காலங்களில்."

"தேவியின் விருப்பமே தேவனின் விருப்பமும் ..."

"எனக்கு மாலத்தீவுகள் செல்ல வேண்டும் என்று வெகு காலமாய் ஆசை . நாம் இப்பொழுது அங்குச் செல்வோமா ?"

"இல்லை சக்தி. இப்பொழுது பூமியின் அனைத்து பகுதியிலும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. நமக்கு உகந்த இடம் நமது கைலாயம் தான். அங்கேயே செல்வோம். நீ கவலை கொள்ளாதே. நந்தி தேவன் நமக்கு முன்னரே அங்குச் சென்று பூத கணங்களுடன் சேர்ந்து நமது வருகைக்காக அனைத்தும் தயார் செய்து வைத்திருப்பான்."

"அட , பலே கில்லாடி தான் நீங்கள்."

-----
கைலாயத்தில்...

எமதர்மரும் சித்திரகுப்தரும் சிவன் கைலாயம் வரும் செய்தி அறிந்து அவரைக் காண காத்துக்கொண்டிருந்தனர். சிவனும் பார்வதியும் அங்குச் சென்றதும், "சக்தி! நீ சென்று சற்று இளைப்பாறு. நான் இவர்களுடன் பேசிவிட்டு வருகிறேன். பிறகு நாம் இருவரும் சேர்ந்து உணவு அருந்துவோம்." "ஆகட்டும் சுவாமி! சீக்கிரம் வந்து சேருங்கள்!" என்று பார்வதி தேவி அங்கு நின்றிருந்த நந்தி தேவன் ஏனையோரின் வணக்கங்களப் பெற்று உள்ளே சென்றார்.

எமதர்மர் சிவனின் முன் வந்து வணங்கி, "பிரபோ! இது என்ன பொல்லாத காலம். கொத்து கொத்தாய் மனிதர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் overtime பார்த்தும் எங்களால் சமாளிக்க முடியவில்லை. resources ரொம்பக் குறைவாக இருக்கின்றன. இந்த நிலை எப்பொழுது மாறும். தாங்கள் தான் தயவு கூர்ந்து ஒரு வழி சொல்ல வேண்டும் பிரபோ!" என்றார்.

"எமதர்மா! இந்த மானுடப் பதர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என்று போட்டிபோட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருந்தார்கள் அல்லவா? அவர்களுக்கெல்லாம் உண்மையில் "who is the boss ?" என்று நினைவுறுத்தவே யான் இந்த விளையாட்டைத் துவங்கினோம். இதுவும் எனது திருவிளையாடல்களுள் ஒன்று தான். இன்னும் சிறிது காலம் இந்நிலை தொடரும். மனிதர்கள் தங்கள் நிலை உணரும் வரை. அப்புறம் உனக்கு ஆள் பற்றாக்குறை என்றால் mass recruitment செய்து கொள் . இல்லையென்றால் நந்தி தவிர மற்ற பூத கணங்களை அழைத்துக்கொண்டு வேலைகளைக் கவனி. என்னை எதற்கும் சிறிது காலம் தொந்தரவு செய்யாதே."

"ஆகட்டும் பிரபோ! தங்கள் உத்தரவுபடியே அனைத்தும் நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று கூறி விடைபெற்றுச்சென்றார் சித்ரகுப்தர் மற்றும் பூத கணங்களுடன்.

அனைவரும் சென்ற பின்னர், நந்தி தேவர் தயங்கியபடியே, "ஐயனே எனக்கு ஒரு ஐயம்." என்றார்.

" உனக்கென்னப்பா சந்தேகம். சீக்கரம் சொல்! தேவி காத்திருக்கிறாள்."

"இது எல்லாமும் தாங்கள் அம்மையின் கவனத்தைப் பெற ஏற்பாடு செய்தீர்களோ ? என்று என் மனதின் ஓரத்தில் ஒரு யோசனை."

"ஷ்ஷ்ஷ்...உன் யோசனையை அப்படியே வைத்துக்கொண்டு போய்க் காவலில் இரு.."

"ஷ்ஷிவாஆ........." என்று பார்வதி உள்ளேயிருந்து குரல் கொடுக்க....

"coming பாரு ...." என்று சிவன் உள்ளே செல்கிறார்....

-அருணா சுப்ரமணியன் (arunasubramaniantj@gmail.com)

No comments:

Post a Comment