Wednesday 19 August 2020

கலைஞர் என்னும் ஜனநாயகவாதி - சூரியா கிருஷ்ணமூர்த்தி

 கலைஞர் என்னும் ஜனநாயகவாதி -  சூரியா கிருஷ்ணமூர்த்தி 

 

"Democracy is a way of life" என்கிற பார்வை, உலகளாவிய ஜனநாயக சிந்தனை மரபில் ஓர் அங்கம். ஜனநாயகத்திற்கு வரையறை கொடுத்த பல மேலைநாட்டு அறிஞர்களும் இதை ஒரு வரையறையாக முன்வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும்  ஜனநாயகம் தொடர்பான வாதங்களில், அரசாட்சி முறையை கடந்தும் அணுக வேண்டிய ஒன்றாகவே ஜனநாயகம் பேசப்பட்டிருக்கிறது. அரசியல், தத்துவம் தொடர்புடைய சிந்தனையாளர்களை கடந்து ஆன்மீக சிந்தனையின் வழிவந்தவர்கள் கூட ஜனநாயகத்தை ஒரு அகண்ட வெளியில் வைத்தே பேசியிருக்கிறார்கள். 1994 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி, மதுரை வானொளியில் ஆற்றப்பட்ட தவத்திரு. குன்றக்குடி அடிகளார அவர்களின் உரை இங்கே குறிப்பிடதக்கது. "ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை" என்று "எங்கே போகிறோம்" என்ற தலைப்பிலான உரையில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

 

ஆகவே, "ஜனநாயகம்" என்பது முதன்மையாக அரசாட்சி முறை தான் என்றாலும், அது மட்டுமே அல்ல. அதையும் தாண்டியதொரு சிந்தனை, செயல்முறை, உணர்வு நிலை. ஜனநாயகம் தொடர்பிலான இத்தகைய பார்வைகள் உலகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் புதியது அல்ல. எனவே அரச முறையிலும், அதற்கப்பாலும் கலைஞரை ஒரு ஜனநாயகவாதியாக அணுகிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

 

*திராவிட இயக்க வேரிலிருந்து..*

 

கலைஞரைப் பற்றிய  உரையாடல்கள் ஒருபோதும் கலைஞரைப் பற்றிய உரையாடல்களாக மட்டும் முழுமையாக முற்றுப்பெற சாத்தியமில்லை. அது திராவிட இயக்கத்தை பற்றிய, அதன் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கால கட்டத்தை பற்றிய, அந்த இயக்கத்தின் வெற்றிகளை, அது சந்தித்த நெருக்கடிகளை, அதன் வளர்ச்சிப் போக்கில் நிகழ்ந்த இட வல மாற்றங்கள் பற்றியதான உரையாடல்களாக நீண்டே தீரும். கலைஞரைப் பற்றிய எந்த ஒரு எழுத்தும், பேச்சும் திராவிட இயக்கத்தின் அடிப்படைகளிலிருந்து தொடங்கும் அல்லது அதில் சென்று முடியும். எழுதப்படாத இந்த விதிக்கு, இந்த கட்டுரையும் விலக்கல்ல.

 

ஜனநாயகம் தொடர்பான கலைஞரின் அணுகுமுறைகளும் திராவிட இயக்கத்தின் அணுகுமுறைகளிலிருந்தே தான் வேர்பிடித்து வளர்கிறது.

 

*தேசிய இனங்களும் ஜனநாயகமும்*

 

"இறையாண்மை பெற்ற தேசம்" என்கிற கருத்து, அரசு அல்லது நிலப்பரப்பின் இறையாண்மையாகப் பார்க்கப்பட்ட காலத்தில்,  "தேசம் என்பது நிலங்களின் எல்லை அல்ல அது மக்களின் தொகுப்பு" என்று எதிர் சிந்தனையைக் கூர்தீட்டியவர் அண்ணா. இதைச் சற்றே முன்னும் பின்னும் நீட்டித்து பார்த்தால், மக்கள் தான் இறையாண்மைக்கு அதிபதி என்கிற பதினெட்டாம் நூற்றாண்டின் ஜனநாயக வாதங்களில் தொடங்கி, பங்கிடப்பட்ட இறையாண்மை அடிப்படையில் தேச உருவாக்கம் என்கிற காலத்தைக் கடந்து, அரசை இறையாண்மைக்கான முழு உரிமை படைத்த அமைப்பாக பார்க்கத்தொடங்கிய ஒரு இடத்திற்கு வந்து நிற்கும்.

 

எல்லோரும் தங்கள் சொந்த அடையாளங்களையும், பண்புகளையும் அடுத்தவர் தலையீடுகள் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை தான் குறைந்தபட்ச இறையாண்மை நிலை. இதை ஒரு தேசம், அந்நிய தேசத்தின் தலையீடு இல்லாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிற அளவோடு நிறுத்துவிட்டார்கள். இறையாண்மையின் பெயரால் தேசத்தின் அடையாளங்களையும், உரிமைகளையும் காக்க முற்பட்டவர்கள், அதே இறையாண்மையின் பெயரால் மக்களின் அடையாளங்களையும், உரிமைகளையும் காக்கத் தவறிவிட்டார்கள். இன்னும் சொன்னால் வலிமையான தேசம் என்கிற பெயரில், பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளைக் காவுகொடுக்கவும் தயாரான காலத்தில் தான் அண்ணாவின், திராவிட இயக்கத்தின் அந்தக்குரல் வலிமையாக ஒலித்தது.

 

"நாடு என்பது மக்களின் தொகுப்பே" என்கிற திராவிட இயக்கத்தின் வாதம், ஜனநாயகத்தில் மக்களே இறையாண்மைக்கு அதிபதி என்கிற பதினெட்டாம் நூற்றாண்டு சிந்தனையின் தொடர்ச்சி. ஒருவகையில் அரச இறையாண்மைக்கு எதிராக, மக்களின் இறையாண்மையை முதன்மைபடுத்திய அரசியல் அது. ரூசோ போன்றவர்கள் சொன்ன மக்களின் இறையாண்மை (popolur sovereignty) என்கிற கருத்தின் வகைப்பட்டது.

 

தனி மனித இறையாண்மையின் அடுத்த நிலை வளர்ச்சி தான், தேசிய இனங்களின் இறையாண்மை. இந்தியா என்கிற நிர்வாக தேசத்தின் உருவாக்கத்தில், பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மை கேள்விக்குள்ளான போதுதான், திராவிட இயக்கத்தின் தமிழ்த்தேசிய, திராவிட தேசிய வாதங்கள் வெடித்துக் கிளம்புகின்றன.

 

ஆகவே, திராவிட இயக்கத்தின் "தேசிய கனவு", தேசிய இனங்களின் இறையாண்மை மற்றும் அதன் தொடர்ச்சியான தனி மனிதர்களின் இறையாண்மை தொடர்பானது.

 

உதாரணமாக, அண்ணாவின் புகழ்பெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை பேச்சில், "we want self determination" (ஏப்ரல் - 1962) என்று அவர் கேட்டது, இந்திய தேசியத்திற்கான கட்டுமானத்தில் தவறிப்போன, தேசிய இனங்களுக்கான இறையாண்மை. ஒருவேளை தேசிய இனத்திற்கான சுயநிர்ணய உரிமையை அடைந்திருந்தால், அதற்கு அடுத்த நிலையாக தனிமனிதர்களின் சுயநிர்ணய உரிமை என்கிற பெருங்கனவை நோக்கி திராவிட இயக்கம் நகர்ந்திருக்கக் கூடும். காரணம் தனிமனிதர்களின் சுயநிர்ணயமே ஜனநாயகத்தின் உயரிய இலக்காக அமைய முடியும். (இது தொடர்பான கல்விப்புல ஆய்வுகள் அன்றும், இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன)

 

சுருக்கமாக, தேசிய இனங்களின் இறையாண்மை வழியாக தனி மனிதர்களின் இறையாண்மையை அடைவதை ஜனநாயகத்தின் அடிப்படையாகக் கொண்டால், திராவிட இயக்கத்தின் "தேசிய கனவு" என்பது ஜனநாயகத்தின் அடிப்படையைக் காக்கும் பொருட்டு எழுந்தது.

 

கலைஞர் தன்னுடைய வாழ்வின் இறுதி நிலை வரை தூக்கிப்பிடித்த, "தமிழ் - தமிழர் - தமிழ்நாடு" என்கிற தேசிய இன அரசியல், இந்த அடிப்படையிலிருந்தும் எழுகிறது. தேசிய இன அரசியலின் கர்த்தாவாக நீண்ட காலம் செயலாற்றியதால், ஜனநாயகவாதி என்கிற நிலையில் முதிர்ந்த இடத்தில் கலைஞர் நிலைக்கிறார்.

 

தேசிய இனங்களின் அரசியலை ஒருகட்டத்திற்கு மேல் அவர் பேசவில்லை என்கிற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுகிறது. அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டு இது. இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கும், அவர் பேசிய அளவுக்கும் மாறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். அந்த மாறுபாடுகளையும் கூட திராவிட இயக்கத்தின் அணுகுமுறையான படிப்படியாக இலக்கை அடைதல் (gradualism) என்பதன் விளைவாகத்தான் பார்க்க முடியும். அதிகாரம் தன் கைக்கு கிடைத்த போதெல்லாம், தேசிய இனங்களை உரிமை பெறச்செய்ய அவர் முயன்றார். மற்றொரு புறத்தில் அந்த அரசியலை நீருபூத்த நெருப்பாக இருத்தி வைத்திருந்தார். நெருங்கி ஐம்பதாண்டு காலம், அவர் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால், இன்றைக்கு இருக்கிற தேசிய இன உணர்வு குன்றாமல் இருந்திருக்க சாத்தியங்கள் குறைவு. இந்த இடத்திலிருந்து தான் தேசிய இனங்களின் உரிமைகள் வழி ஜனநாயகம் என்பதில் தவிர்க்க முடியாத இடத்தை கலைஞர் அடைகிறார்.

 

*சொல்லில் தொடங்கும் ஜனநாயகம்*

 

இறையாண்மை தொடர்பான உயர்நிலைகளில் மட்டும் அல்ல, அன்றாட பயன்பாடுகளில் கூட ஜனநாயகம் உண்டு.

 

"ஜனநாயகம் என்பதொரு பழக்கம்" (Democracy is a practice) என்று சொல்லுவார்கள், அன்றாட செயல்களிலும், பயன்படுத்தும் சொற்களிலும் கூட ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க முடியும்.

 

"people are the ultimate powers of democracy" என்கிற மற்றொரு வாதத்தையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டிவிட்டு, ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.

 

2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்த இந்தியாவின் போக்கிற்கு எதிரான தீர்ப்பினை அளித்திருந்தது தமிழ்நாடு. மக்களின் அந்த தீர்ப்பை ஒட்டி வெளியிடப்பட்ட தலைவர்களின் கருத்துகள் அதிர்ச்சி தந்தன.

 

"தமிழகம் செய்த தவறை விரைவில் உணரும்" என்றார் அன்றைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

 

"தமிழர்கள் பிற்போக்குத்தனமாக வாக்களித்துள்ளார்கள்" என்று மக்களை முத்திரை குத்தினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

 

"எவ்வளவோ சொன்னேன் கேக்கல, இப்ப அனுபவிங்க" என்று சாபமிட்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 

"தமிழகத்திற்கு எந்த திட்டமும் வராது" என்று  மிரட்டினார் தேமுதிக பிரேமலதா.

 

மருத்துவர் இராமதாசோ இன்னும் ஒருபடி மேலே போய், "அதிமுக - பா.ம.க கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி" என்று மடல் தீட்டினார்

 

அதிர்ச்சியின் விளைவாகச் சொல்லியிருப்பார்கள் என்று சொன்னாலும், "தமிழ்நாடு" இந்தியாவின் போக்கிற்கு மாற்றான தீர்ப்பை அளிப்பது அது முதல்முறை அல்ல. 

 

அவசர நிலை பிரகடனத்தை முன்வைத்து இந்தியாவே இந்திரா காந்தி அம்மையாரை நிராகரித்தபோது, தமிழ்நாடு எம்.ஜி.ஆரை முன்வைத்து கலைஞரை நிராகரித்தது. இந்தியாவே இராஜிவ் காந்திக்கு மாற்றாக வி.பி.சிங்கை ஏற்றபோதும் தமிழ்நாடு தேசிய முன்னணியை நிராகரித்தது. இப்படி பல வரலாற்று முன்னுதாரணங்கள் உள்ளன.

 

தலைவர்களின் இத்தகைய எதிர்வினைகள் தந்த அதிர்ச்சியோடு கலைஞரின் பழைய அறிக்கைகளை தேடிப்பார்த்தோம்.

 

தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் வரலாறு காணாத வெற்றியை பார்த்தவர் அவர். அதே சட்டமன்றத்தில் யாரும் காணாத தோல்வியையும் பார்த்தவர் அவர் தான். இனி வீசும் வசந்தமெல்லாம் அவர் திசை நோக்கியே என்று கருதிய காலத்தில் நினைக்க முடியாத தோல்வியை சந்தித்துள்ளார், அவ்வளவு தான் முடிந்தது என்று நினைத்தபோது முன்னைவிடவும் ஆகுதியோடு எழுந்து வந்துள்ளார்.

 

வரலாற்றின் பெரு வெற்றி காலத்திலும் சரி, கடுந்தோல்வி காலத்திலும் சரி. அவருடைய செய்திகள், "மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்" என்பதாகவே இருந்திருக்கிறது.

 

ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள் என்கிற அடிப்படையைக் காலம் முழுக்க, கலைஞர் தன் பழக்கத்தில்  (Democratic Practice) வெளிப்படுத்தியதற்கு ஒரு சோற்று சான்று இது.

 

"எல்லோருக்குமான சுயமரியாதை", என்பதை வலியுறுத்தி இயக்கம் கண்டவர்கள் திராவிட இயக்கத்தவர்கள். எல்லோருக்குமான சுயமரியாதை என்பதை, தனிமனித இறையாண்மையின் வழி ஜனநாயகத்தோடு இணைத்துப் பார்க்க முடியும். அந்த வகையில் அவச்சொற்களால் அழைக்கப்பட்ட பாலினத்தவரை "திருநங்கை" என்று அழைத்ததும், குறைபாடு உடையவர்களாகச் சுட்டப்பட்டவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என்று குறிப்பிட்டதும் கூட கலைஞரின் ஜனநாயகமயமாக்கல் பட்டியலில் சேரும். இந்த கருதுகோளை இன்னும் சற்று விரித்து விவாதித்தால், மொழிக்குள் ஜனநாயக கூறுகளை அறிமுகப்படுத்த முயன்றவர் கலைஞர் என்கிற இடத்தை நோக்கி நகர முடியும். அதற்கு திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே சான்றாக்கலாம்.

 

இந்த பெயர் மாற்றங்களை, ஒடுக்கப்பட்ட மக்கள் "ஆதிதிராவிடர்கள்" என்கிற பெயரை அடைந்த அரசியலின் தொடர்ச்சியாகப் பார்த்தால், தமிழ் நிலத்தின் நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலின் உச்சம் கலைஞர் என்கிற புள்ளியும் புலப்படும்.

 

*அதிகார பரவலாக்கம்*

 

ஜனநாயகம் அதிகாரம் தொடர்புடையது என்பதைத் தனித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருப்பது ஜனநாயக அமைப்பின் செழுமையைக் குலைத்து காலப்போக்கில் அந்த சொல்லையே அர்த்தமற்றதாக மாற்றிவிடும். எனவே ஒரு நல்ல ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க அதிகார குவியலைத் தகர்த்து பரவலாக்கத்தை நோக்கி நகர்வது அவசியமாகிறது.

 

கலைஞரின் முழுமையான அரசியலை மதிப்பிட்டால், எல்லா கொள்கைகளும் அதிகாரத்திற்கு எதிரான அரசியல் என்கிற இடத்திற்கே போய் நிற்கும். ஒருவகையில் பெரியாரிய அரசியலின் தொடர்ச்சி அது.

 

சாதி ஆதிக்கம் நிறைந்த ஒரு அமைப்பில், அதற்கு எதிரான அரசியல் தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி அரசியல். அரசியல் அதிகாரம் குவிந்திருப்பதற்கு மாற்றான அரசியல் தான் மாநில சுயாட்சி, ஆணாதிக்க சூழலுக்கு நெருக்கடி கொடுக்கத் தான் பெண்களை அதிகாரப்படுத்தும் அரசியல், இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் மொழி அரசியல். இப்படி அவருடைய எல்லா அரசியலுக்கும் இந்த கோணத்தில் வியாக்கியானம் சொல்ல முடியும்.

 

அதிகாரத்தைப் பரவலாக்குவது எந்தவகையில் ஜனநாயகத்தோடு தொடர்புடையது என்கிற கேள்வி எழலாம். இதற்கு பல்வேறு விளக்கங்கள் சாத்தியப்பட்டாலும், மேலே விவாதித்த விளக்கத்தையே சுட்டிக்காட்டலாம்.

 

ஜனநாயகத்தின் உயரிய நிலை தனிமனிதனின் சுயநிர்ணயம் (தனிமனித இறையாண்மை), அத்தகைய சுயநிர்ணய உரிமைக்குத் தேவை அதிகாரம். அதிகாரத்தைப் பரவலாக்காமல் ஒவ்வொரு மனிதரையும் அதிகாரப்படுத்துதல் சாத்தியமில்லை. இந்தவகையில் அதிகார பரவலாக்கம் ஜனநாயகத்தோடு தொடர்புபடுகிறது.

 

கலைஞர் வகுத்த திமுகவுக்கான ஜம்பெரும் கொள்கைகளும் இந்த அடிப்படையில் எழுந்தது தான்

 

1) மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி.

 

2) ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

 

3) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். 

 

என்பவைகள் நேரடியாக அதிகார பரவலாக்கத்தை பேசுகிறது.

 

ரஷ்யாவின் புகழ்பெற்ற ப்ரவ்டா (pravda) இதழுக்கு, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கலைஞர் அளித்த நேர்காணலும் இங்கே நினைவூட்ட தகுந்தது.

 

"if DMK came to power, there would be real communism" என்று திமுகவின் அரசு ஒரு கம்யூனிஸ சார்பிலான அரசாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் திமுக வை கம்யூனிச கட்சி என்று சொல்ல அவர் கொடுக்கும் காரணம் தான் கூடுதல் கவனம் பெறுகிறது. ".. since DMK was against the centralisation of powers at centre". அதாவது திமுக அதிகார குவிப்பிற்கு எதிரான கட்சி என்பதால் அதை கம்யூனிச கட்சியாக வரையறுக்கக் கோருகிறார்.

 

கூடுதலாக,

 

 1) equality and rationlism in society

 

2) equality in income

 

3) democracy in politics 

 

என்று அந்த பேட்டியில் திமுகவின் கொள்கைகளை விளக்குகிறார். சுட்டப்பட்டுள்ள பேட்டி ஐம்பெரும் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக வெளியானது குறிப்பிடதக்கது.

 

(குறிப்பு - பேட்டியின் உள்ளடக்கம், பின்னாளில் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது) 

 

அண்ணா - பாபா உரையாடல் மற்றும் இரஷ்ய இதழுக்கு கலைஞரின் பேட்டி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் ஆய்வுகள், திமுகவின் தொடக்ககால பொருளாதார பார்வைகள் குறித்த பல்வேறு திறப்புகளை கொடுக்கும்.

 

அதிகார பரவலாக்கத்தை, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு இடம் மாற்றுதல் என்கிற பார்வையிலிருந்து, அவர் அணுகவில்லை. மாறாக எல்லா நிலையிலும் அதை பரிட்சயித்துப் பார்த்தார்.

 

1) சமூகநீதி அரசியல் - குறிப்பிட்ட சமூகங்களின் அதிகாரத்தை உடைக்க இடஒதுக்கீட்டைத் தூக்கிபிடித்தார். இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் சில சமுதாயங்கள் மட்டும் அதிகாரம் பெறுவதை உணர்ந்த போது பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உடைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டையும். இஸ்லாமியர்களுக்கான தனி ஒதுக்கீட்டையும் ஏற்படுத்தினார்.

 

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பைத் தடுக்க, அதற்கொரு தனி இடஒதுக்கீடு. அதன் பிறகும் நீடித்த ஏற்றத்தாழ்வுகளை போக்க நுழைவுத்தேர்வு ரத்து என்று சமூகநீதிக்குள்ளாக அவர் நிகழ்த்திய மாற்றங்கள், எந்த அடுக்கிலும் அதிகாரம் குவிந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் விளைவு.

 

2) மாநில உரிமை கேட்ட நிலையோடு நின்று விடாமல், பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல்களை நடத்தியதன் மூலம், அடுத்த அடுக்கிற்கு அதிகாரம் போவதையும் உறுதி செய்தார்.

 

3) மொழி அரசியலை எடுத்துக்கொண்டால் கூட, இந்திக்கு மாற்றாக தமிழ் என்று கோரவில்லை. பட்டியலிடப்பட்ட அத்தனை மொழிகளுக்குமான உரிமைகளைத் தான் அவர் பேசினார்.

 

4) பொருளாதாரத்தை மையப்படுத்திய பரவலாக்கத்தைச் சற்று விரிவாகவே விவாதிக்க வேண்டும்.

 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வங்கிகள், மில்கள் போன்றவைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று பேசியவர் அவர். தன்னுடைய காலத்தில் பேருந்துகளை அரசுடைமையாக்கியதில் தொடங்கி, இந்திராகாந்தி அம்மையார் வங்கிகளை நாட்டுடமையாக்கியப் போது துணை நின்றது வரை, பேசியதை செயல்படுத்தியும் காட்டினார்.

 

திமுக வின் முதல் பத்தாண்டு கால ஆட்சியில் நிகழ்ந்த இரண்டு துறைகளின் மாற்றங்களை, மாதிரியாகக் கொண்டு இந்த பரவலாக்கத்தை ஆராயலாம்.

 

அ) தொழிற்துறை சார்ந்த அதிகாரம்.

 

1967 வரையிலான தமிழகத்தின் நிலை மற்றும் 1967ல் தொடங்கி 1976 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் கண்ட வளர்ச்சி, இந்த இரண்டையும் ஒப்பிட்டு வெளியானது, திமுகவின் 1977 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை.

 

அதில் தொழிற்துறை பட்டியல்

 

67 வரையில் பெரிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 703, திமுக காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது 443. அதேபோல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நடுத்தர தொழிற்சாலைகள் 30, ஒன்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது 242. சிறிய தொழிற்சாலைகள் அதுவரையில் இருந்தது 10,431, புதிதாக உருவாக்கப்பட்டவை 25,693.

 

அதாவது, பெரிய தொழிற்சாலைகள் வளர்ந்த அளவு 63%, நடுத்தர தொழிற்சாலைகள் வளர்ந்த அளவு 806%, சிறிய தொழிற்சாலைகள் வளர்ந்த அளவு 246%. ஆகவே தொழில் மூலதனங்கள் சாத்தியப்பட்ட அளவு பரவலாக்கம் பெற்றுள்ளன.

 

ஆ) விவசாயம் - நிலம் சார்ந்த அதிகார பரவலாக்கம்.

 

நிலமே அதிகாரம் என்கிற குரல் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் நிலம் ஒரு மிகப்பிரதான அதிகாரம். அதையும் தன்னால் ஆனமட்டும் பரவலாக்கியவர் கலைஞர்.

 

மீண்டும் 1977ல் வெளியான பட்டியலுக்கே செல்வோம்.

 

1967 வரை நிலப்பட்டா பெற்றவர்கள் 1.15 இலட்சம் பேர், அடுத்த ஒன்பது ஆண்டுகளில் நிலப்பட்டா பெற்றவர்கள் 3.80 இலட்சம் பேர். அதுவரையில் மனைப்பட்டா பெற்றோர் 63,770 பேர், திமுகவின் முதல் இரண்டு ஆட்சியில் பெற்றவர்கள் 5,14,435 பேர். குடியிருப்பு மனையும், உச்சவரம்பில் உபரியும் 1967 வரை பெற்றவர்கள் யாரும் இல்லை. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் 1,75,195 பேர் குடியிருப்பு மனையும், 39,550 பேர் உச்சவரம்பில் உபரி நிலமும் பெற்றார்கள். ஆதிதிராவிடர்களுக்கான இலவச கான்கிரீட் வீடுகள் மூலம் வீடுகள் பெற்றோர் 39,389 பேர். அதற்கு முன்பு அப்படியானதொரு திட்டம் இல்லை.

 

பத்திரிக்கையாளர் சமஸ் ஒரு கட்டுரையில், 1970களில் கலைஞர் செயல்படுத்திய நிலச்சீர்திருத்தத்தின் விளைவு தான், தமிழகத்தில் 98% பேர் சிறு விவசாயிகள் ஆனது என்று குறிப்பிடுகிறார்.

 

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், நிலமும் தொழிலும் மிகப்பெருமளவு அவர் காலத்தில் பரவலாக்கப்பட்டதை அறிய முடியும்.

 

அரச அதிகாரத்தில் மற்றுமொரு பரவலாக்கல் முயற்சி தான் வாரியங்களை உருவாக்கியது. அரசு தொடர்புடைய அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும், மக்களுக்கு நேரடியாக தேர்தலில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள ஒரு தரப்பை உருவாக்கும் முயற்சி தான் வாரியங்கள்.

 

அதிகாரப் பரவலாக்கத்தின் வழி ஜனநாயகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளின் பட்டியல் இன்னும் நெடியது என்பதால், இந்த அளவில் நாம் நிறுத்திக்கொள்ளலாம்.

 

*போதமைகளும் அதற்கப்பாலும்*

 

ஜனநாயகவாதி என்று ஒருவரை சுட்டுகிறபோது, ஜனநாயகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்தும் அவருடைய செயல்பாடுகளை மதிப்பிட வேண்டிய தேவை எழுகிறது.

 

அண்ணா ஒரு ஆகச்சிறந்த ஜனநாயகவாதி என்று நாம் நிறுவ முடியும். ஆனால் அவர் காலத்தைய ஜனநாயகத்தின் மீதே அவருக்கு கடும் விமர்சனங்கள் இருந்தது. 1953 ஆம் ஆண்டு "மேட்டுப்பாளையம் வாரீர்" என்று அண்ணா எழுதிய அழைப்பு கட்டுரையில், ஆதிபத்தியம் ஜனநாயகத்தின் போர்வையில் வருகிறது என்று கடுமையாக சாடினார். சுதந்திர உரிமை போராட்டத்தின் வெப்பம் குறையாத ஒரு காலத்தின் ஜனநாயகத்தையே "ஆதிபத்தியத்தின் போர்வை" என்று எழுதியவர், இந்த எழுபது ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் அடைந்திருக்கிற தேய்மானங்களை வைத்து மதிப்பிட்டால் நிச்சயமாக இன்னும் கடுமையாக சாடவே செய்திருப்பார். 

 

எனில் அண்ணா விமர்சித்த ஒரு ஜனநாயகத்தைத் தான் கலைஞர் காப்பாற்றி நின்றாரா என்கிற கேள்வி எழும்.

 

நிச்சயமாக அந்த ஜனநாயகத்தைத் தான் காப்பாற்றினார். அண்ணாவிற்கு ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய கனவு உண்டு. அதேசமயம் நிலவி வந்த ஜனநாயகத்தின் மீது அவருக்கு விமர்சனங்களும் உண்டு. 

 

நிலவி வரும் ஜனநாயகத்திலிருந்து, அண்ணா கனவு கண்ட ஒரு உயர்நிலை உள்ளடக்கத்தை உடைய ஜனநாயகத்தை நோக்கிய பயணம் தான் கலைஞரின் அரசியல் வாழ்வு.

 

எந்த ஒரு அமைப்புக்கும் போதாமைகள் இருக்கும். ஜனநாயகத்திற்கும் அந்த போதாமைகள் உண்டு. அவற்றையெல்லாம் தன்னால் ஆன வரையில் இட்டு நிரப்ப கலைஞர் முயன்றார்.

 

அப்படியானவற்றின் பெரும் பட்டியலை வாசிக்க முடியும் என்றாலும், ஒன்றை மட்டும் விரிவாக்கி விளக்கலாம்.

 

எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய போதாமை. விகிதாச்சார பிரதிநிதித்துவம் இல்லாமையும், அதன் தொடர்ச்சியாக விளிம்பு நிலை மக்களின் அதிகாரம் தொடர்பான சிக்கல்களும்.

 

அரசியல் ரீதியிலான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொண்டால்

 

1962 ஆம் ஆண்டு தன்னுடைய நாடாளுமன்ற மாநிலங்களவை உரையிலேயே 

 

"...As far as democracy is concerned, unless we have proportional representation coupled with a system of referendum initiated in a vast sub-continent like this, you cannot have any utility for democracy..."

 

என்று பொது வாக்கெடுப்பு முறையுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் இல்லாமல் ஜனநாயகத்தின் பயன்பாடு சாத்தியமில்லை என்று கூறியவர் அண்ணா.

 

தன்னுடைய காலம் முழுவதும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதை வலியுறுத்தினார் கலைஞர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வாக்கில் கூட இவற்றை வலியுறுத்தி பேசினார்.

 

அவருடைய காலத்தில், இந்த நிலையை அடைவதற்கான பெரிய முன்னெடுப்புகள் சாத்தியப்படவில்லை. ஆனால் இதன் இன்னொரு அம்சமான விளிம்பு நிலை மக்களுக்கான அதிகாரம் குறித்து மிகப்பெரிய முன்னெடுப்புகளை கலைஞர் எடுத்தார்.

 

*விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல்*

 

வாக்குத் திரட்சியற்ற, எண்ணிக்கை பலமற்ற சமூகங்கள் தான் இந்திய ஜனநாயகத்தால் வஞ்சிக்கப்படும் முதன்மையான கூட்டம். தேர்தல் அரசியலில் பெரிய தாக்கத்தை செலுத்த முடியாத இவர்களின் நலன்கள், வாக்கு வங்கி அரசியலில் கண்டுகொள்ளப்படவே சாத்தியங்கள் குறைவு. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்குள் அமர்ந்துகொண்டு அதை தாண்டியும் செயல்பட்ட கலைஞர், விளிம்புநிலை மக்களின் நலன்களுக்காக சிந்தித்தார், செயலாற்றினார்.

 

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகள் ரிசர்வ்டு பஞ்சாயத்துகளாக அறிவிக்கப்பட்டதால், அங்கு தேர்தல் நடத்த முடியாத சூழல் நிலவியது. அப்படியான நிலையில் தான் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின், அந்த பஞ்சாயத்துகளில் தேர்தலை நடத்தினார். தேர்தல் நடத்தியது மட்டுமின்றி, அந்த வெற்றிக்கு சென்னையில் பெரிய விழா எடுத்தார். அவருடைய அரசு யாருக்கான அரசு என்று அவர் சொன்ன செய்தியே அந்த விழா. குறிப்பிட்ட அந்த விழாவில் தான், விசிக தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், கலைஞருக்கு "சமத்துவப் பெரியார்" என்று பட்டம் கொடுத்தார்.

 

திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தது, வீடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்தது,  நரிக்குறவர்களுக்கு நலவாரியம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அரச பீடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிற ஒருவருக்கு வாக்கு வங்கியில் விளைவுகளை ஏற்படுத்த வலுவற்ற இவர்களின் துயரங்கள் எல்லாம் கண்ணில் படவே கூட, அவர் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டும்.

 

இத்தகைய அதிகாரமாக்கலில் குறிப்பிட தகுந்த மற்றொரு முயற்சி, புதிரை வண்ணார் சமூகம் தொடர்பானது.

 

இந்திய சாதிய அமைப்பின் கொடுமைகளை ஒருவருக்கு சொல்ல வேண்டுமானால், இந்த சமூகத்து மக்களை சொல்லலாம். சாதி எத்தனை குரூரமானது என்பதற்கு இவர்களே சான்று.

 

1901 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சாதிகளுக்கான தொகுப்புகள் வழங்கப்பட்டது

 

1) பிரமாணர்

2) சத்திரியர்

3) சத் சூத்திரர்

4) தங்களுடைய சடங்குகளில் பிராமணரை அமர்த்தும் சூத்திரர்... என்று நீளும் 14 தொகுப்புகளை கொண்ட பட்டியலில், தீண்டாமலே தீட்டுப்படுத்தும் சாதிகள் என்று சில தொகுப்புகள் வழங்கப்படுகின்றன அவற்றுள் வைக்கப்பட்ட ஒரு சமூகம் அது.

 

"இவர்கள் கண்ணில் பட்டாலே தீட்டாகிவிடும் என்ற காரணத்தினால், இந்த மக்கள் பகல் நேரத்தில் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. துரதிர்ஷ்டசாலிகளான இந்த மக்கள் இரவு நேரப் பழக்கத்தைக் கட்டாயமாக மேற்கொண்டு இருட்டிய நேரத்தில் தமது குடியிருப்புகளை விட்டு வெளியே வந்து, வேலைகளை முடித்துக்கொண்டு பொழுது புலர்வதற்குள் ஓடிப் பதுங்கிக்கொள்ள வேண்டும்" என்று திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்த புரத வண்ணார்களைப் பற்றி அம்பேத்கர் எழுதியிருக்கிறார். (ஆதாரம் - வெ.சந்திரமோகன், 2015 பிப்ரவரி 21 அன்று தி இந்து தமிழ் இதழில் எழுதிய கட்டுரை)

 

அப்படிப்பட்ட கொடுமைகளைச் சந்தித்த மக்களுக்கு தனி நலவாரியம் அமைத்தார். அந்த வாரியத்தில் பதிவானவர்களே 25000 க்கும் குறைவு தான். அந்த அளவிற்கு வாக்கு வங்கியில் வலுவற்ற சமூகம் அது. அவர்களது நலன்களைக் காக்க, ஆண்டுக்கு ஐம்பது இலட்சம் ஒதுக்க வழி செய்தார்.

 

அடையாளபூர்வ அதிகாரமயமாக்கலிலும் கவனம் செலுத்தினார். கோயில்களின் அறங்காவலர்களுக்குப் பெரிய அதிகாரங்கள் இல்லை என்றாலும் உள்ளூர் அளவில் ஒரு மதிப்பு இருக்கும், நிலவுடைமை சமூகத்தின் படிமங்கள் அவை. அப்படியான அறங்காவல் குழுக்கள் அமைக்கும்போது கட்டாயம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆதிதிராவிடர் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார். கட்சிக்குள்ளும் நியமன பொறுப்புகளில் இத்தகைய இடஒதுக்கீடுகளை அமலாக்கியது கவனங்கொள்ளத் தக்கது.

 

நீதிபதிகள் நியமனம் தொடங்கி அறங்காவலர்கள் நியமனம் வரையில் குரல் வலுவற்ற மக்களின் குரலை அங்கீகரித்து அவர்களின் நலன்களை காப்பதன் வழியாக, ஜனநாயகத்தின் போதாமையை நிவர்த்தி செய்ய முயன்றார்.

 

*மற்றமைக்கும் மதிப்பளித்தல்*

 

ஜனநாயகம் என்பதே கருத்து மோதல்களின் களம் தானே ஆனால் கலைஞர் என்றால் மட்டும் கருத்து என்கிற பெயரில் காழ்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படும். அவரைச் சீண்டி எழுதாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிகபட்சம் தன்னுடைய முரசொலியில் கட்டம் கட்டி அவர்களுக்குப் பதில் சொன்னார், அவ்வளவு தான். இன்றைக்கு அந்த கட்டங்களைத் தங்கள் வாழ்நாள் பெருமிதங்களாகச் சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கையாளர்களை நாம் அறிவோம்.

 

"கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்வார், பேனா முனையை வாள் முனை கொண்டு ஒருபோதும் அவர் மௌனமாக்கியதில்லை" என்று, பத்திரிக்கையாளர் திரு.ஏ.எஸ். பன்னீர்செவ்வம் அவர்கள் சொன்னது கலைஞரின் கருத்துரிமைக்குச் சான்று.

 

தன்னுடைய முகநூல் பக்கத்தில் கொட்டப்பட்ட ஆபாச வசவுகளை அகற்ற வேண்டாம் என்று 90களைக் கடந்த ஒரு தலைவன் சொன்னதெல்லாம், இந்தியக் கருத்துரிமை களத்தில் என்றைக்கும் எண்ணி வியக்க வேண்டிய செய்திகள்.

 

கருத்துரிமைக்கு எதிராக, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஜனநாயக விரோத காரியங்களை  இன்றைக்கு மதிப்பிடுகிற பலபேர், ஒரு பெண்ணாக அரசியலில் நிலைத்து நிற்க அத்தகைய செயல்களுக்கான தேவை இருந்ததாக நியாயம் சொல்கிறார்கள். கலைஞருடைய பின்புலத்திலிருந்து பார்த்தால், கலைஞருக்கும் அத்தகைய நியாயங்கள் பொருந்தும். ஆனாலும் கலைஞர் சாத்தியப்பட்ட வரையிலும் கருத்துரிமைக்கு ஆதரவாகவே நின்றார்.

 

தன் கொள்கைக்கு மாறானவற்றைக் கூட, எதிர் தரப்பின் உரிமை என்கிற பெயரில் ஒரு நிலப்பரப்பின் அரச உரிமை பெற்றவராக செய்துகொடுத்தார். தமிழ்நாட்டில் அதிக ஆலயங்களுக்குத் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியவர் அவர் தான். ஓடாத தேர்கள் பெரும்பாலானவற்றை ஓட வைத்தது அவர் தான். இராமர் கோயில் எழுகிற ஒரு காலத்தில் நின்று இவற்றைத் திரும்பிப் பார்க்கையில், கலைஞர் போற்றி வளர்த்த ஜனநாயகத்தின் பிரம்மாண்டம் புரியும்.

 

*சமத்துவத்திற்கான பாதையில்*

 

கொஞ்சம் யூகமாக இந்த வாதத்தை நீட்டிப்போம், ஜனநாயகத்தின் இறுதி எல்லை என்னவாக இருக்க முடியும். எல்லோருக்கும் எல்லாமும் என்கிற நிலையாக இருக்கலாம். அடிப்படையில் ஒரு பெருங்கனவு நிலை அது. பிறப்பால் நிகழ்த்தப்படும் பாகுபாடுகளை களைவது அத்தகைய சமத்துவ பயணத்தில் தொடக்க நிலை.

 

சமத்துவ நிலையை ஜனநாயகத்தின் உட்கூறாக கருதினால், சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற சாத்தியமில்லை.

 

26 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்ததை ஒட்டி டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையில்

 

"we are going to enter into a life of contradictions. in politics we will have equality and in social and economic life we will have inequality. in politics we will be recognising the principle of one man one vote and one vote one value. in our social & economic life, we shall, by reason of our social and economic structure, continue to deny the principle of one man one value. how long shall we continue to live this life of contradictions ? how long shall we continue to deny equality in our social and economic life ? if we continue to deny it for long, we will do so only by putting our political democracy in peril

 

we must remove this contradiction at the earliest possible moment or else those who suffer from inequality will blow up the structure of political democracy which this assembly has laboriously built up."

 

என்று குறிப்பிட்டார். சுருக்கமாக சொன்னால், அரசியலில் சமத்துவத்தை ஒரளவு எட்டிவிட்டோம், ஆனால் சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் நீடிக்கின்றன. அவை கூடிய விரைவில் தீர்க்கப்படாவிட்டால் அரசியல் ஜனநாயகத்திற்கும் அது ஆபத்தை விளைவுக்கும் என்பது அம்பேத்கர் உரையின் சாரம்.

 

சமூக சமத்துவத்திற்கான கலைஞருடைய முயற்சிகளை மேலே பல இடங்களில் பார்த்தோம், அவற்றின் உச்சம் இந்தியாவில் எந்த மாநிலமும் இன்றைக்கும் முயல முடியாத, சமத்துவபுரம்.

 

பொருளாதார சமத்துவத்திற்கான அவருடைய முயற்சிகளும் மேலே பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டன. ஒருவகையில் ஒருங்கிணைந்த தமிழகத்தின் வளர்ச்சியே கூட அதற்கு சான்று தான்.

 

ஜனநாயகத்தின் இலக்கான சமத்துவ நிலையை எட்டிவிட்டோமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் கலைஞரின் காலத்தில் அதற்கான திசையில், அதற்கான பாதையில், கொஞ்சம் கூடுதலான வேகத்தில் பயணித்தோம் என்பது மட்டும் உறுதி.

 

*கலைஞருக்கான நன்றி*

 

கலைஞருடைய ஜனநாயக பிடிப்பிற்குக் காரணங்களைத் தேடுவது மற்றொரு நெடிய முயற்சிக்கான தொடக்கமாகிவிடும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

கலைஞர் போன்று எண்ணிக்கை பலமற்ற, ஒடுக்கப்பட்ட, சமூக அடுக்கில் கீழ்நிலையில் வைக்கப்பட்ட  சாதியிலிருந்தும், ஒரு எளிய கிராமத்தில் வறிய பின்புலத்திலிருந்தும் வந்த ஒருவர், இந்திய அரசியலில் யாரும் தொட முடியாத உச்ச புகழையும், பெருமைகளையும் பெற முடிந்ததானால், அதற்கு இந்த ஜனநாயக அமைப்பு முறையும் ஒரு காரணம். அதை உணர்ந்தே ஜனநாயகத்தை அவர் காலம் முழுதும் மதித்துப் போற்றியிருக்க வேண்டும்.

 

கலைஞருடைய அந்திமக் காலத்தில், அவர் குறித்து கவிஞர் கனிமொழி எழுதிய ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது

 

"... அவருக்குள் ஒரு சிறிய கிராமத்திலிருந்து பட்டணம் வந்த சிறுவனிடமிருந்த அந்த ஆச்சர்யம் என்றும் குறைந்ததில்லை.." என்று எழுதினார்.

 

கலைஞர் போன்ற பின்புலத்திலிருந்து வருகிற, சிறிய கிராமத்து சிறுவர்கள், உழைப்பு, கொள்கை, அறிவு இவற்றின் துணை கொண்டே உச்சங்களைத் தொடமுடியும் என்கிற நிலையை உருவாக்கிக் காப்பதே கலைஞர் என்கிற ஜனநாயகவாதிக்கு நாம் செய்கின்ற நன்றி.

 

 சூரியா கிருஷ்ணமூர்த்தி

15/08/2020.

No comments:

Post a Comment