Wednesday 19 August 2020

கண்டிப்பான ஆசிரியர் கலைஞர் - எழுத்தாளர் ஷாநவாஸ், சிங்கப்பூர்

 கண்டிப்பான ஆசிரியர் கலைஞர் - எழுத்தாளர் ஷாநவாஸ், சிங்கப்பூர்

1979 ... ஈவெரா கல்லூரி தவிர மற்ற கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல் பெரும்பாலும் நடைபெறாது, ஜமால் முகம்மது கல்லூரியில் அந்த ஆண்டு மாணவர் சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருந்தோம், அநேகமாக 1977-1980 தான் வாக்களிப்பு நடந்து மாணவர் தேர்தல் நடந்த கடைசி ஆண்டாகவும் அது இருந்தது, அதற்கு காரணம் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் அரசியல் பேசத் தொடங்கியிருந்தோம்,

1977 முதல் 1987 வரை எம்.ஜி. ஆரே முதல்வராக இருந்தார். அப்போது கட்சியில் இளையர்களைக் கொண்டு வரும் நோக்கத்தில் மாணவர் திமுக அமைப்புக்கள் கல்லூரிகளில் துவக்கப்பட்டன, வேட்டி, அரைக்கை வைத்த புஷ் கோட் சட்டை (இப்போதைய சபாரி போல்). பின்னர் கைத்தறிப் பட்டில் பல வண்ணங்களில் கழுத்தில்லாத ஜிப்பா அதற்கேற்ற வண்ணத் துண்டு. கொஞ்ச காலம் பின்னர், பருத்தித் துணியில் வெள்ளை ஜிப்பா, கறுப்பு, சிவப்புக் கரையுடன் நீண்ட மேல் துண்டு. அமைச்சரான பின் காலர் வைத்த முழுக்கை சட்டை, வெள்ளைத் துண்டு பின்னர். வெள்ளைச் சட்டையுடன் பல்வேறு வண்ணங்களில் சால்வைகள் - என்று கலந்து கட்டி தலைவர் கலைஞரின் உடையையும், உடல்மொழியையும் ரசித்து அவரைப் போலவே நடு வகிடு எடுத்து சட் சட் டென்று தயங்காமல் பேசும் நண்பன் ராஜாமுகம்மது தி மு க வின் பக்கம் என் எண்ணங்களை திருப்பினார். அன்று தலைவர் திருச்சி சர்க்யூட் ஹவுஸில் மாணவர்களை சந்திக்க இருக்கிறார் என்ற செய்தியின் குதுகலத்துடன் காலையில் 10 மணிக்கெல்லாம் கூடி விட்டோம். தலைவரை அன்றுதான் நேராகப் பார்த்தோம், பேராசிரியர் அருகில் இருந்தார். அனைத்துக் கல்லூரி

மாணவர்களும் சுமார் 40 பேர் இருப்போம். கூட்டம் ஆரம்பிக்கு முன்பு கலைஞர் “எல்லோரிடமும் பேனா, பேப்பர் உள்ளதா என்று கேட்டார்

பாதிக்கு மேல் யாரிடமும் இல்லை, இல்லாதவர்கள் அனைவரும் வெளியில் போங்க என்று சொல்லிவிட்டார், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது .பேராசிரியர் இடையில் குறுக்கிட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களை கடிந்து கொண்டு பேனா ,பேப்பர் வாங்கி வரப் பணித்தார்,எந்த சூழலிலும் சரியாக செயல் படும் குணத்தை கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு ஆசிரியர் .மாணவர் உறவில் கலைஞர் வைத்திருந்ததை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த  நினைவுகள் வந்து விடும் . திருச்சி என்றாலே கலைஞருக்கு மிகவும் பிடித்த இடம், அனேகமாக 1953 கல்லக்குடி போராட்ட காலத்திலிருந்து ஏற்பட்ட பந்தம் திருச்சி சர்க்யூட் ஹவுஸில்தான் அவர் பெரும்பாலும் தங்குவார். அவர்சி மிஸ் பண்ணியதே இல்லை, கட்சியில் அவ்வளவு தீவிரமாக இல்லாவிட்டாலும் என்னுடைய முதுகலை அரசியல் படிப்பு கலைஞரின் உரைகளை மொழி பெயர்த்து பட்டம் வாங்க உதவியது.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் உபகாரச் சம்பளம் வாங்கும்போது தீர்க்கமான ஒரு தலைவனின் தொடர்ந்த போராட்டக் களத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை, புலம்பெயர்ந்து சிங்கப்பூர் வந்தபிறகு, பத்திரிகை யாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி, அகில இந்தியத் தலைவர் இப்படிப் பன்முக ஆற்றலின் கலைஞரின் முகங்களை தரிசிக்கும் பலதரப்பட்ட சிங்கப்பூர் தமிழர்களுடன் பழகியிருக்கிறேன். தீவிரமாக, அரசியலில்

ஈடுபட இயலாவிட்டாலும், இங்கேயே பிறந்து வளர்ந்த பலரிடம் திராவிட உணர்வு மேலோங்கி இருப்பதை காண்கிறேன். 1999ல் சிங்கப்பூரில் தேசிய பல்கலைக் கழகத்தில் தெற்காசிய தமிழ்க் கல்வி பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து பல அயல் நாட்டு மாணவர்கள் தமிழ் கற்க அடிப்படை கல்வி பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் பேராசிரியர்கள் வரும்போதெல்லாம், சிங்கப்பூர் எழுத்தாளராக இருக்கும் என்னை சந்திப்பார்கள். அந்த இருக்கையில் அமர்வதற்கு கலைஞர் சமூக நீதி போராட்டங்கள் எவ்வாறு உதவி இருக்கிறது என்பதை அவர்கள் மனம் உவந்து நெகிழ்வதைக் கண்டிருக்கிறேன்.

 

கலைஞர் முதல்–அமைச்சராக இருந்தபோது, 5 முறை அரசு ரீதியாக வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். 1970–ம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கும், பாரீசில் நடைபெற்ற 3–வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவுக்கும் சென்று வந்த கருணாநிதி, அதன் பிறகு, 1971–ம் ஆண்டு அமெரிக்கா, 1987 மற்றும் 1999 ஆண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

 

நேரம் தவறாமை கலைஞரின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடும் குணத்தை நன்கு அறிந்த சிங்கப்பூர் ஏற்பாட்டளர்களுக்கு இங்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட நேரங்களில் நேர்காணல் செய்ய நேரம் வாங்குவது மிகவும் சுலபமாக இருந்ததை கூறக் கேட்டிருக்கிறேன்.

 

அவர் ஆயிரம் பொன் யானை. அரசியல் அச்சை தன்னைச் சுற்றியே தகவமைக்கத் தெரிந்த மத்தகம் விரிந்த யானை. அதிகம் பேசப்பட்டவரும் எழுதப்பட்டவரும், காட்டப்பட்டவரும் அவரே. எனினும், அவரைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏதோவொன்று மிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும் அதை நாம் இளையர்களுக்கு சொல்ல வேண்டும்.

 

-              எழுத்தாளர் ஷாநவாஸ், சிங்கப்பூர்

 

 

 

No comments:

Post a Comment