Tuesday 31 March 2020

ஆளுமைமிக்க தலைவர் மணியம்மையார்

ஆளுமைமிக்க தலைவர் மணியம்மையார்

மணியம்மை எனும் இதழாளர் - முனைவர் ந. க. மங்கள முருகேசன்அய்யா நடத்தி வந்த விடுதலை ஏடு, இரண்டாம் உலகப்போருக்குப்பின் அரசிடமிருந்து அய்யாவின் கைக்கு வந்து சேர்ந்ததும் அம்மாவின் பொறுப்பு அதிகமாகியது. அவர் வெறும் தாதியில்லை. 

குடியரசு ஏட்டில் வெளியான விளம்பரம், விடுதலை ஏடு 'புதிய விடுதலை' எனும் பெயரில் 6.6.1946 முதல் வெளிவரும் என்று வந்தது. அவ்வாறே வெளிவந்த விடுதலையின் 'ஆசிரியர், வெளியிடுபவர், அச்சிடுபவர்' என்னும் பொறுப்பினை மணியம்மையார் அல்ல, அல்ல கே. ஏ. மணி ஏற்றார். 

விடுதலை ஏடு கே.ஏ. மணி எனும் மணியம்மையாரைக் கொண்டு, பாலகிருஷ்ணபிள்ளை தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை எனும் முகவரியில் இருந்து வெளிவந்தது. EDITED

PRINTED AND 

PUBLISHED 

BY 

K.A. MANI 

என ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. 6.6.1946 முதல் பொறுப்பாசிரியராக விளங்கிய மணியம்மையார் 10.3.1978 ல் மறையும் வரை அதன் பொறுப்பாசிரியராக, அச்சிடுபவராக, வெளியிடுபவராக விளங்கினார். 

ஆசிரியர்கள் பலர் இருந்தனர், சென்றனர். ஆனால், பொறுப்பாசிரியர் ஒருவர்தான். அதாவது அன்னை மணியம்மையார் தான். இப்படி 32 ஆண்டுக்காலம் ஓர் ஏட்டின் பொறுப்பாசிரியராக விளங்கிய பெண்மணி உலகிலேயே ஒருவர் உண்டென்றால் அவர் மணியம்மையார் தான். 

எனவே இயக்க ஏட்டின் வெளியீட்டாளர், பொறுப்பாசிரியர் என்ற அளவில் வெறும் பெயரளவில் தான் என்று இல்லாது, அரசு விடுதலை ஏட்டின் மீது நடவடிக்கை எடுத்த போதெல்லாம் - அது ஆளும் தமிழகக் காங்கிரசு அமைச்சரவையாக இருந்தபோதிலும் சரி - அவசரநிலை - நெருக்கடி நிலை என்று அய்யா மறைந்த பிறகு அன்னை இந்திரா அம்மையார் நடவடிக்கை எடுத்தபோதும் சரி துணிவுடன் அரசின் நடவடிக்கைகளை எதிர்கொண்டு, அபராதம் கட்டவேண்டும் என்று தண்டனை விதிக்கப்பெற்றால் அத்தண்டனையை ஏற்று, பிணையத் தொகை பறிமுதல் செய்யப்படும் என்றால் பறிமுதல் கொடுத்தும், பெரியார், குத்தூசி குருசாமி முதலியோர் எழுதிய தலையங்கக்கட்டுரைகளைச் சிறைத்தண்டனை எனில் 'மகிழ்ச்சியுடன்' ஏற்றுச் சிறைபுகுந்தார் அன்னை மணியம்மை.

ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பெற்றுச் சிறை புகுந்ததும் உண்டு. அல்லது நீதிமன்றத்தினால் எச்சரிக்கப்பட்டதும் உண்டு. 

எனவே பத்திரிக்கை உரிமை, சுதந்திரம், எழுத்துரிமைக்காகச் சிறை சென்ற இயக்கத் தலைவி அவர். அத்தோடு அவர் மேற்கொண்ட பொறுப்புக் குறித்துத் தாம் மறைவதற்கு முன் 1973 இல் பெரியார் குறிப்பிட்டவை இவை: மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே 

என்னிடம் வந்த இந்த 30 ஆண்டுகளில் பல 

காரியங்களுக்குத் தேவைக்கு உதவி செய்து வந்ததால் 

என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் 

தொல்லையில்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் 

(விடுதலைமலர், 1973)  

பெரியார் மேடைகளில் பேசினார். ஒரு மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் பேசினார். அந்தப் பேச்சுக்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போயிருக்கும். 

பெரியார் அவர்களின் பொதுவாழ்வு அவருக்கு இருந்த நோய்களின் விளைவால் அரைகுறை வாழ்வாக அறுபது வயதைக் கூட எட்டாத வாழ்வாக முடிந்துபோயிருக்கும் அவருடைய சிந்தனைகள் தொடர்ந்து 96 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைக்காமலே போயிருக்கும். 

அந்நிலை ஏற்படாமல் அய்யாவைக் கண்ணும், கருதுமாய்க் காத்து அவரை வாழவைத்த மாபெரும் தொண்டாற்றியவர் அன்னை மணியம்மையார். அதனாலே தான் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 96 ஆண்டு வரை வாழவைத்து அதற்குப்பிறகு ஐந்து ஆண்டுக் காலம் அவர்கள் விட்டுச் சென்ற பணியை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்த விதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்த வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித் தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை ஈ. வெ. ரா மணியம்மை என்றார். - முனைவர் ந. க. மங்கள முருகேசன்


----------------

தனது குடும்பம் குறித்து மணியம்மையார்என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரிய பணக்காரத்தனம் இல்லையென்றபோதிலும் போதிய கவுரவமும் மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில் கஷ்டம் இன்னெதென்று தெரிந்துக்கொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்கும் போதிய வசதியான ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத்தகுதியுடைய நிலையில் இருந்தது தான். சிறுவயது முதல் என் தந்தையால் சுயமரியாதைக் கருத்துப்பட வளர்க்கப்பட்டுத் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அன்போடு பழகி, அவரது கருத்துக்களாலும், கொள்கையாலும், கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப்பணியில் சேர்ந்தேனே தவிர வேறில்லை. - அன்னை மணியம்மையார்

--------

மணியம்மையாரின் இராவணலீலா - மேகலா துரைதிராவிடர் கழகம் “பெரியார் "எனும் மாபெரும் மானுடவாதியோடு முடிந்துவிடும் என்றுதான் அன்றைய நாசக்கார பாசிசக்கும்பல் எதிர்பார்த்திருக்கக் கூடும். 

ஆனால் காலம் மணியம்மையார் மூலம் அவர்கள் எதிர்பார்ப்புக்கு வேட்டு வைத்தது. 

மணியம்மையார் அவர்கள் 1934 ஆம் ஆண்டே  இயக்கப் பணியாற்ற வந்துவிட்டார். 

அக்கால கட்டத்திலேயே ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றிருக்கிறார் . 

முப்பத்திரண்டு ஆண்டுகள் விடுதலை ஏட்டின் பொறுப்பாசிரியராக செயல்பட்டவர். 

பெரியாருக்கு பின் தலைவர் இல்லை என்ற எதிரிகளின் ஆனந்தத்தை அவர்கள் மெல்ல சங்கீதமாக  வாசிக்க ஆரம்பிக்கும் முன்பே பெரியாரின் சட்ட  வாரிசான அன்னை மணியம்மயார்  திராவிடர்கழகத்தின் தலைவர் ஆனார்.. 

உலகிலேயே நாத்திக அமைப்பின் முதல் பெண் தலைவர் என்றால் அவர்  அன்னை  மணியம்மையார் அவர்கள்தான்.

வேலூரை சேர்ந்த மணியம்மையாருக்கு பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதும் பெரியாரின் உடல்நலத்தை பேணுவதும்  மட்டுமே தலையாய கடமைகளாக இருந்தன.

பெரியார் கடைசி மூச்சுவரை , அத்தனை பொது கூட்டங்களிலும் நம் சமூகத்திற்காக தன்  வயது முதிர்வு, உடல்நலத்தை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்ததற்கு  முக்கிய காரணங்களுள் ஒருவர் அன்னை மணியம்மையார் ஆவார். 

திராவிடர் கழகத்தின் கூட்டங்களில் பெரியார் பேசும்போது மாநாட்டுப் பந்தலில் புத்தகம் விற்றுக்கொண்டிப்பார் மணியம்மையார். பாரதிதாசன் ஒருமுறை மணியம்மையார் புத்தகம் விற்பதை பார்த்து அந்த அம்மாவும் எதுவும் கேட்கவில்லை.. இந்த பாவி கூட ஒரு மாலையை மணியம்மையாருக்கு வழங்குங்கள் என்று சொல்லமாட்டான் என்று பெரியார் மீது உரிமையுடனான தன்  கோபத்தில் குறிப்பிட்டெழுதியிருப்பார். 

பெரியாரின் கட்டுரைகள், பேச்சுகள் ஆகியவற்றை தொகுத்து  அவரது கொள்கைகளைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றியவர் மணியம்மையார்.

“அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகுதான் என்னுடைய கருத்துக்கள் பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவர முடிந்தது என பெரியாரே மணியம்மையை பெருமைப்படுத்தினார். “

பெரியாரின் மறைவுக்கு பிறகு அவரின் சமூகப் புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமில்லாமல் பெரியார் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கிறார். 

தலைவர்கள் ஓர்  இயக்கத்திற்கு ,ஓர் இனத்திற்கு, மக்களுக்கு மானுடத்தையும், சமத்துவத்தையும், சமூகநீதியையும் எப்படி கொண்டுசேர்க்கிறார்கள் என்பதை பொறுத்தே ஒரு சமூகம் வளர்ச்சி யடைகிறது..

பெரியாரின் தொண்டையும் ,சமூகநீதியையும் இந்த சமூகத்தில் வேரூன்ற வைத்ததில்  முக்கிய பங்கு அம்மையாருக்கு உண்டு.

பொதுவாக எல்லோருக்கும் இளமை காலத்தில் செயல்களில் வேகம் மேலோங்கி இருக்கும். வாழ்வின் பிற்பாதியில் பொறுமை,அமைதி, விவேகம் ஆகிய குணங்கள் காணப்படும். 

ஆனால் மணியம்மை அவர்களின் வாழ்வின்  முதல் பாதியில் அமைதியின் திருவுருவமாக விளங்கியவர்.  

பெரியாருக்கு பிறகான பிற்பாதியில் வீரம், துணிச்சல் இவையெல்லாம் மேலோங்கி இனப்பகை முடிக்க வேங்கையாய் பாய்கிறவாரானர். அதற்கு எடுத்துக்காட்டாக  தேசிய அளவில் அதிர்வுகளை உருவாக்கிய இராவண லீலா போராட்டத்தைச் சொல்லலாம்.

ராம் லீலாவுக்கு எதிராக நாம் இராவண லீலா நடத்தலாம் என்ற எண்ணம் பெரியாருக்கு 1973 ல் வருகிறது. 

பெரியார் இல்லாத நிலையில் தலைமையேற்று அடுத்த ஆண்டே 1974ல் அன்னை மணியம்மையார் பெரியாரின் நிறைவேறாத அந்த போராட்டத்தை நடத்த அம்மையார் முடிவெடுக்கிறார்.

மணியம்மையார் தலைமையில் இயக்க செயல்பாடுகளில் மைல்கல்லாக இன்றும் நிலைத்திருப்பது அன்றைய ஆரிய கோட்டையாக விளங்கிய டெல்லியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் ”இராவணலீலா” என்னும் பண்பாட்டு புரட்சி மூலம் கதிகலங்க வைத்தது தான். 

காலம் காலமாக ஆரியர்கள் என்ன செய்தார்கள் யாரை கொண்டாடினார்கள், எதை இங்கு மக்களிடம் புகுத்த நினைத்தார்கள் என்பதை நாம் அறிவோம். 

அதில் இராமாயணம் முக்கியமான ஒன்று. 

இராமயணத்தை ஆரியர்கள் மிகப்பெரும் வரலாற்று நிகழ்வாக பரப்புரை செய்து ராமனை கதாநாயகனாக்கி  இராவணனை கெட்டவனாக சித்தரித்து அவன் உருவபொம்மையை எரிக்கும் இராமலீலா என்ற ஒரு நிகழ்ச்சி வருடாவருடம் தசரா பண்டிகையன்று நடத்தி வருகிறார்கள். 

 அதில் இராவணன் மட்டுமல்லாது கும்பகர்ணன் இந்திரஜித் ஆகியோரது உருவ பொம்மைகளும் எரிக்கப் பட்டு வருகின்றன .

இது குறித்து அன்றைய திராவிடர் கழக பொதுசெயலாளர் கி.வீரமணி அவர்கள் முதலில் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். 

Òஜவஹர்லால் நேரு இராமாயணம் என்பதே ஆரிய திராவிட போர் தான் ராமாயணத்தில் அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் தெனிந்தியாவில் வாழும் திராவிட இனத்தை சார்ந்த மக்கள் தான் என்று தன்னுடைய ”டிஸ்கவரி ஆப் இந்தியா” என்ற நூலில் ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார் ஆனால் நீங்கள் இராம்லீலாவை ஆதரிக்கிறீர்கள் அது திராவிடர்களான எங்கள் மனதை புண்படுத்துகிறது எனவே அந்த நிகழ்வை தடைசெய்ய வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் பெரிய தலைவர்கள் கலந்து கொள்வது அபத்தமாக உள்ளது அதையாவது குறைந்தபட்சம் தவிர்த்து கொள்ளலாம்Ó என்ற விண்ணப்பதுடன் எழுதப்பட்ட  அந்த கடிதத்துக்கு இந்திராகாந்தி எந்த ஒரு பதிலும்  அனுப்பவில்லை. 

வழக்கம் போல அந்த ஆண்டு இராம்லீலா நடப்பதும் உறுதி செய்யப்பட்டது , பிரதமர், ஜனாதிபதி ஆகியோர்  கலந்து கொள்வதும் உறுதி ஆகிவிட்டது..

அந்த நேரத்தில் உடல்நலக்குறைவால் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணியம்மையார் பிரதமர் , ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

“Your participation in the Ramlila burning the effigy of the great Dravidian hero Ravanan, is against all canons of secularism and highly provoking and insulting to millions of Davidians hence requesting you to desist from this dastardly act. Otherwise we Dravidians would be burning the effigies of Rama and you, on mass level throughout the length and breadth of Tamil Nadu,”

தபால்துறையினர் ‘you’என்ற சொல்  பிரதமர், ஜனாதிபதியை எரிக்கும் என்பதுபோல் பொருள் அமைவதால் சட்டவிதிகளுக்கு முரணானது என்று கூறியதும் அச்சொல் நீக்கப்பட்டு அவசர தந்தி அனுப்பபட்டது.

இந்த கடிதங்களுக்கு இந்திரா காந்தியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை மேலும் டெல்லியில் இராம்லீலா ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது முடிந்த சிலநாட்களுக்கு பிறகு இந்திராகாந்தி அம்மையார்  அலட்சிய மனோபாவத்தோடு பதில் கடிதம் அனுப்புகிறார்

இந்தியா மட்டுமல்ல பல இடங்களில் தசரா கொண்டாடப்படுகிறது இது இனத்திற்கு எதிரானது அல்ல என்றும் இராவணலீலா நடத்துவதை கைவிடுமாறும் வேறு செயல்களில் கவனம் செலுத்துமாறும் இந்திராகாந்தி தன் பதில் கடிதத்தில் குறிப்பிடுகிறார்..

பிரதமரான இந்திரா அம்மையார் சொன்ன எந்த காரணமும் திராவிடர் கழகத்திற்கு சமாதானம் கொடுக்காததால் மணியம்மையார் மருத்துவமனையில் இருந்து கொண்டே இயக்க தோழர்களுக்கு இராவணலீலாவிற்கு அழைப்பு விடுக்கிறார். 

பெரியாரின் நினைவுநாளுக்கு மறுநாள் அதாவது டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் 1974 ஆம் ஆண்டு இராவணலீலா நடத்த திட்டமிட்டு தேதி அறிவிக்கிறார்..

உத்திர பிரதேசத்திலிருந்து  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்பின் நிறுவனர் அம்மாவிற்கு ஆதரவு அளித்து இராவணலீலாவிற்கு வருவதாக கடிதம் எழுதுகிறார்கள். 

கோவாவிலிருந்து சத்ய சோதக் சமாஜம் எனும் அமைப்பு ஆதரவு தருகிறது மேலும்  பல இயக்கங்கள் ஆதரவு தருகின்றனர் இராவணலீலாவிற்கு தயாராக முன்னதாகவே வந்து விடுகின்றனர்.

நாடெங்கும் இராவணலீலா பற்றிய பேச்சு தான் மிகப்பெரும் பிரளயமாக மக்களிடம் கடத்தப்பட்டது. இராவணலீலாவுக்கு அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது .உருவபொம்மைகளும் தயாராக்கப்பட்டன. செய்திகள், ஊடகவிவாதம் என எல்லா இடங்களில் இதைப்பற்றிய பேச்சுக்கள் பரவலாகின்றன.

தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் இராவணலீலாவை தடைசெய்ய கோருகிறார்கள் கலைஞர் இராவணலீலா பக்தர்களை புண்படுத்துமாயின் இராம்லீலா பகுத்தறிவாளர்களின் மனதை புண்படுத்தாதா? என்றார். 

இராவண லீலா நெருங்க நெருங்க எதிரிகளுக்கு என்ன செய்வது என்று அறியாமல் வாயடைத்து வேடிக்கை பார்த்தார்கள் சட்டமன்றத்தில் இராவணலீலாவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இராவணலீலாவிற்கு எதிரான கமிட்டி மத்திய அரசு அமைக்கிறது.

மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு தகவல் அனுப்பபடுகிறது அப்போது கலைஞரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. கலைஞருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது

போராட்டத்தை கைவிடும்படி மணியம்மையிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்கள் ஆனால் அம்மையாரோ இராவணலீலாவை கைவிட மாட்டோம்.  திடலில்தான் உருவபொம்மைகள் இருக்கின்றன முடிந்தால் தேடுங்கள் என்பது போல் பதிலளிக்கிறார்..

இராவணலீலாலை தடைசெய்ய வேண்டுமானால் இராம்லீலாவை தடைசெய்யவேண்டும் இல்லையானால் பிரதமர் ,ஜனாதிபதி போன்றோர் கலந்துகொள்வதில்லை என்று உறுதியாவது கொடுக்க சொல்லுங்கள் என்றார் மணியம்மையார்.

கடைசியாக  திமுகவின் செயலர், துரை  மணியம்மையாரை சந்தித்து பேசுகிறார்

 மணியம்மையார் கருத்துக்களை அடுக்கி வைக்கிறார் இறுதியாக மணியம்மையார் இராவணலீலா நடந்தே தீரும் என கூறினார். அரசுதரப்பில் மணியம்மையாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. “இதே இடத்தில் பெரியார் இருந்தால் எங்களுக்காக சமாதானமாகி இருப்பார்.  நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்.” என்று கூற மணியம்மை ஒன்றுமே பேசாமல் சிரித்தபடி Òநான் பெரியார் இல்லையே!" எனக் கூற, பிறகு  சொன்ன தேதிக்கு சென்னையில் முழுக்க கருப்புசட்டை தோழர்களால் நிரம்பி வழிந்தது. 

முதல்நாள் செயலாளர் ஆசிரியர் வீரமணி மட்டும் கைது செய்யப்பட்டார்..

இது முன்பே எதிர்பார்த்ததுதான் என்பதால் அம்மையார்  எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் மறுநாள் இராவணலீலாவை நடத்தினார். 

இராவணலீலாவின் கடைசி கட்டமாக இராமனின் உருவ பொம்மையை எரிக்க ஏற்பாடுகள் ஆயத்தமாயின

பதினெட்டு அடி இராமன், பதினேழு அடி இலட்சுமணன், பதினாறு அடி சீதை உருவ பொம்மைகள் தயாராகின. 

தடையை மீறி திராவிடர் கழகத்தினர் மணியம்யைார் தலைமையில் ராமன் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். 

பின்பு தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்கள் விண்ணை பிளக்கும் அளவு வானுயர கேட்கிறது.

அத்தனை உருவபொம்மைகளும் எரிந்த அந்த நொடியை அதிகார வர்க்கத்திற்கு அம்மையார் கொடுத்த பலமான  பதிலடியாக வரலாறு நினைவுக்கூறுகிறது. 

ஆயிரமாயிரம் தோழர்கள் கையில் இருந்த சின்ன சின்ன இராமன், சீதை புகைப்படங்களும் விண்ணை பிளக்கும் முழக்கங்களுடன்   எரித்து அழிக்கப்பட்டன.  

இப்போது  நினைத்தாலும்  உடல் சிலிர்க்கிறது. 

இராவணலீலா முடிந்த பிறகு மணியம்மை உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்..

ஆறுமாத சிறைதண்டனைக்கு பிறகு தான் விசாரணை முடிந்து விடுதலை  செய்யப்பட்டார். .

விசாரணையில் இராவணலீலா யார் மனதையும் எந்த மதத்தையும் புண்படுத்த நடத்தப்பட்ட ஒன்று கிடையாது திராவிடர்களான இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோர் உருவபொம்மைகளை எரித்து இராம்லீலா கொண்டாடுவது தென்னிந்தியமக்களின் மனதை புண்படுத்தியதால் இராவணலீலா பெரியார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது என மணியம்மையார் கூறுகிறார்..

உண்மையாக இராவணலீலா யார் மனதையும் புண்படுத்தவில்லை என்பதை உறுதிபடுத்தினார்கள் வழக்கு முடிந்து அம்மையார் விடுவிக்கப்படுகிறார்.!

பெரியாருடன் திராவிடர்களுக்கான ஆரியத்துடான போர் முடிந்துவிடும் என்ற எண்ணியவர்களுக்கு மணியம்மையின் இந்த இராவணலீலா அடுத்த பெரிய தலைவரை உணர்ந்த தருணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. 

பெரியாருக்குப் பின் மணியம்மையார் எவ்வளவு சிறப்பாக கழகத்தை வழி நடத்தினார் என்பதற்கு இராவணலீலா முக்கியமான ஓர்  உதாரணம்.

அன்றைய நாளில் இந்திய பெண் தலைவர்களுள் மிகவும் துணிச்சலான  பெண் தலைவரென்றால் அவர் மணியம்மை அவர்கள்தான். 

பெரியாருக்கு தொண்டு செய்ய வேண்டி அவருடன் இணைந்து பணியாற்றிய  மிகத் தகுதியான கொள்கை வாரிசு மணியம்மை அவர்கள்தான்.  

திராவிடர் கழகத்தின் ,தமிழனத்தின் பெரியாருக்கடுத்த இரண்டாவது பெருந்தலைவரும் அன்னை மணியம்மை அவர்கள் தான்  என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


- மேகலா துரை

-----------------

நான் ஈ.வெ.ரா. மணியம்மை - நிவேதிதா லூயிஸ்

ஈ.வெ.ரா. மணியம்மை. அப்படித்தான் என்னைக் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் ஐயா. காந்திமதி கனகசபையாகிய நான் கே. அரசியல் மணியாக உருப்பெற்றதும், ஈ.வெ.ரா. மணியம்மையாக மாறியதும் ஐயாவால் தான்; திராவிட இயக்கம் மேலிருந்த என் தீராக் காதலால் தான். நான் பிறந்து வளர்ந்த காலம் விடுதலை வேட்கை நாடெங்கும் தீயாய்ப் பரவிக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலம்; சுய மரியாதை வேள்வியில் கனவுகளைத் திராவிடர்கள் தணலில் இட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த காலம். எளிமையும், தாராள இயல்பும், பகுத்தறிவும் போட்டிப் போட்டு நிறைந்து வழிந்த குடும்பத்தின் மகவாகப் பிறந்து வளர்ந்தேன்.

அனல் பறக்கும் வேலூர்க் கோடைகளில் என் வாசிப்பும், அப்பாவின் நண்பர்கள் வருகையுமே என்னுள் பசுமையை வருடிச்சென்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட ஒற்றைக் கடிதம் போதும் என்பதை நீங்கள் அறிவீர்களா? சுயமரியாதை இயக்கத்தில் ஊறித்திளைத்த என் தந்தைக்கு Òஎல்லோரும் என் உடல் நலனைக் கவனிக்கச் சொல்கிறீர்கள், ஆனால் அருகிலிருந்து கவனிக்கத்தான் யாருமில்லைÓ, என்ற ஐயாவின் கடித வரிகள் நெஞ்சுக்குள் தைத்த நெருஞ்சியாகவே இருந்திருக்கிறது. அந்த நெருஞ்சியில் பூத்த சிறு மஞ்சள் மலராய் எனக்குள் ஐயாவின் மீதும், அவர் கொள்கையின் மீதும் சிறு பற்றுதல் பூத்துக் குலுங்கியபடி தான் இருந்தது.

சிறு வயதில் பாவாடைக் காற்றில் அசைய, கருவிழிகளை உருட்டியபடி ஐயாவின் பேச்சை வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்திப் பொழுதுகளில் அவர் பால் எனக்கே உரித்தான பெருமதிப்பும் பேரன்பும் வேர் விட்டிருந்தது. Òஎன் மகள் உங்களுக்கும் உதவியாக அமைவார்Ó, என்று என் தலை வருடி அப்பா ஐயாவிடம் சொன்னபோது மனைவியை இழந்து உழன்றுகொண்டிருந்த இயக்கப் போராளிக்கு என்னால் இயன்ற ஆதரவை எப்படியேனும் தந்துவிடவேண்டும் என்ற வேட்கை என்னுள் கனன்றது. இதை ஐயாவிடம் சொல்லும் முன் மகளே உன் விருப்பு என்ன என்று என்னை என் தந்தை கேட்டாருமில்லை; என்னால் என்ன உதவி ஆகவேண்டும் என்று ஐயாவும் சொன்னாரில்லை. இரண்டு ஆண்கள் என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, சுய மரியாதை இயக்கத்துக்கு என்னால் என்ன செய்யமுடியும் என்பதையே நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சிறு வயது முதலே ரௌத்திரம் பழகியும் அரசியல் பேசியும் வந்துள்ளேன். காந்திமதியாகிய என்னை ‘அரசியல் மணி’யாக்கி அழகு பார்த்தவர் எங்கள் வீட்டருகில் வசித்த அண்ணல் தங்கோ. அரசியல் மணியை ‘மணியம்மை’ ஆக்கி அழகு செய்தவர் ஐயா. 63 வயதில் தள்ளாடிக் கொண்டிருந்த ஐயாவைப் பேணிப் பாதுகாப்பதை என் கடமையாகவே உணர்ந்திருந்தேன். அவரது உணவு, தூக்கம், எழுத்து, பேச்சு என்று எல்லாவற்றிலும் என் கவனத்தை வைத்திருந்தேன். அது தவிர நீ என்ன தான் செய்து கொண்டிருந்தாய் என்று இந்த உலகத்தின் ஆள்காட்டி விரல்கள் இன்று என்னை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன.

1943ஆம் ஆண்டு ஐயாவை வந்தடையும் முன்னர் குடியரசு இதழில் நான் எழுதியதை நீங்கள் படித்தீர்களா? “இயக்கத்துக்கு வேலை செய்ய சில பெண்கள் வேண்டுமென்று அதிக ஆசைப்படுகிறார். அப்பெண்களுக்கு ஜீவனத்துக்கு ஏதாவது வழிசெய்துவிட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார்Éஇன்னும் சில பெண்கள் முன்வரவேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும் மானம், ஈனம், ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல கல்லைப்போன்ற உறுதியான மனதுடைய நாளைய வாரிசுகளாய் இருக்க வேண்டும்Ó. நாளைய வாரிசுகள் என்று நான் குறிப்பிட்டது ஐயாவின் சொத்துக்கா, அல்லது இயக்கத்துக்கா என்ற தெளிவற்றவர்களே என் மேல் பின்னாளில் முதல் கல்லை எறிந்தார்கள். 1943இல் அப்பா இறந்ததும் நான் அடைந்த கூடு சுயமரியாதை இயக்கம்.

விடுதலை ஏட்டின் ஆசிரியர், திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் என்று தொடர் பணிகள். இதில் 1948ஆம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பான நிர்வாகக்குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டோம். ஆறு நாள் சிறைவாசம் ஆறு ஆண்டுகளாகக் கழிந்தது. என் கவலை எல்லாம் 70 வயதைத் தாண்டிய ஐயா எப்படி சிறையில் உழல்கிறாரோ என்பதாகவே இருந்தது. நீதிமன்றமோ காவல் நிலையமோ அதுவரை நான் அறிந்தேனில்லை. இதை விட மோசமான அனுபவம் குடந்தையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை 144 தடையுத்தரவை மீறி ஐயாவின் வழிகாட்டுதலில் முன்னெடுத்த போது நேர்ந்தது.

அங்குதான் நீதிமன்றத்தில் அழுத்திச் சொன்னேன்- Òஎனக்கு எந்த மதமும் கிடையாது; நான் திராவிட சாதி. எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போரிடுவது என் கடமை, மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குச் செய்யும் துரோகம்Ó. இரண்டு மாதங்கள் கடுங்காவல் தண்டனை என்று நீதிபதி அறிவித்தபோது சிரம் உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி திராவிடப் பெண்ணாய் சிறை சென்றேன். அதற்கு ஐயா தந்த பரிசு மிகப்பெரியது. என்னை வரவேற்க வேலூர்ச் சிறை வாயிலில் காத்திருந்தார். தொண்டர் கைதாகி விடுதலை ஆகும்போது சிறை வாசலில் நின்று வரவேற்ற தலைவர் ஐயாவைத் தவிர வேறு யார் இருந்துவிடமுடியும்?

30 வயது வரை திருமணம் என்ற எண்ணம் எனக்குள் வரவேயில்லை. எனக்குத் தான் ஏற்கனவே இயக்கத்துடன் திருமணம் ஆகியிருந்ததே? என் உடல், உள்ளம் முழுமையும் இயக்கம் மட்டுமே வியாபித்திருந்தது. என்னை மணம் செய்துகொள்வதாக ஐயா முடிவெடுத்துக் கேட்ட நொடியே தாமதிக்காமல் ஆம் என்று என்னைச் சொல்லவைத்தது இயக்கத்தின் மீதான என் காதலும், ஐயாவின் மீதான அளப்பரிய காதலுக்கும் பக்திக்கும் இடையேயான ஏதோவொரு அன்பும்தான்.

என் வயதொத்த சிறு வயது தோழிகள் 10 வயதிலும் 12 வயதிலும் பெற்றோர் கை காட்டிய மணமகன்களை மணந்து, அவர்கள் பிள்ளைகளுக்கு மணமுடிக்கும் பருவத்திலிருந்தார்கள். குழந்தைத் திருமணங்களும், சிறுமிகளை அவர்கள் விருப்பமின்றி முதியவர்களுக்கு மணம்  செய்துவைப்பதும் மலிந்திருந்த காலம் அது. காதலை இன்னதென உணர இயலா சிறுமியல்ல நான். என் வாழ்க்கை எப்படிச் செல்லவேண்டும் என்று சிந்தித்து முடிவெடுக்கும் தெளிவு எனக்கு நிறையவே இருந்தது.

Òஎன்னைப் பற்றி ஒரு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன், நம்பிக்கையான ஒருவர் எனக்குக் கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது; எனக்கும் என் பொருளுக்கும் சட்டப்படியான ஒரு வாரிசு ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம். என் பிரஸ்தாப திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய காரியப்படி எனக்கு வாரிசு தான்Ó, என்று விடுதலையில் ஐயா எழுதியதைப் பலரும் விரும்பவில்லை; புரிந்துகொள்ளவுமில்லை.

நானோ என்னை இயக்கத்துக்கும் ஐயாவுக்குமாய் ஒப்புக்கொடுத்திருந்தேன். விவரம் அறியா சிறுபிள்ளைப் பருவம் முதலே திராவிட இயக்கமன்றி வேறெந்த லௌகீக ஆசைகளும் எனக்குள் இல்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் துணிவுடன் சொல்வேன்! 70 வயது மதிக்கத்தக்க முதியவர் 30 வயதுப் பெண்மணியை மணக்கிறாரே என்று தூற்றிய ஊருக்கு மத்தியில் தான் இன்னும் 30 ஆண்டுக்காலம் தலைநிமிர்ந்து வாழ்ந்தோம்.

மணியம்மை ஈ.வெ.ரா. மணியம்மையாகப் பெயர் மாற்றம் மட்டுமே பெற்றாள்; அவளது கடமையும் பொறுப்பும் வழக்கம் போலவே தொடர்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். எப்போதோ எனக்கு ஐயா தந்த வெள்ளிச் சங்கிலி மட்டுமே என் கழுத்திலிருந்த சொத்து. அணிய இரண்டு கருப்புச் சேலைகள். வேறெதுவும் தேவைப்பட்டதில்லை எனக்கு. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் தெளிவாகவே இருந்தேன். சாதி ஒழிப்பு கிளர்ச்சியில் ஈடுபட்டு மூன்று வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றேன். ஐயாவோ ஆறு மாதம் சிறையில் வாடினார். சிறையிலிருந்து வெளிவந்ததும், குடியரசில் நான் வெளியிட்ட மொழி எதிர்ப்பு கட்டுரைக்காக மீண்டும் கைதாகி இரண்டு வாரம் சிறைத் தண்டனை என்று தொய்ந்து கிடந்தேன்.

ஐயா சிறையிலிருந்த போது சாதி ஒழிப்பு சமரில் சிறையில் இறந்துபட்ட இயக்கத் தோழர்களின் சடலங்களை காவல்துறை தர மறுக்க, முதல்வர் காமராசரைச் சந்தித்துத் தகுந்த ஆணை பெற்று உடல்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்புவித்தேன். சமர் தொடரவேண்டும்; அதைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். உயிரையே ஈந்த தோழர்களுக்காகவேனும் இன்னும் தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுத்தேன்.

எனக்கு இனப்பற்று இருந்ததே ஒழிய இனவெறி இல்லை. பம்பாய் நகரில் சிவசேனை 70களில் நடத்திய தமிழருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து திருச்சியில் ஐயா தலைமையில் சிவசேனை எதிர்ப்பு மாநாடு கூடியது. சிவசேனை எதிர்ப்பு குழுவில் என் பெயர் முதலில் எழுதப்பட்டபோது எனக்குள்ளிருந்த தமிழ் மொழிப்பற்று கண்ணோர கண்ணீர்த் துளிகளாக வெளிப்பட்டது.

1973ஆம் ஆண்டு என் வாழ்வின் ஒளியை நான் இழந்தேன். எத்தனையோ உயரங்களைத் தொட்டுக் கடந்து சென்ற ஐயாவால் ஒரு நூற்றாண்டைச் சுலபமாக கடந்துசெல்லமுடியும் என்றுதான் நம்பியிருந்தேன். ஒரு குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டேன். என் ஆசை எல்லாம் மண்ணாய்ப் போனது. கண்களைத் துடைத்துக் கொண்டேன். கண்ணீர் சிந்தவும் கதறவும் ஐயா என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. இயக்கத்தை தனக்குப் பின் கட்டிக்காத்து வழிநடத்துவாள் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை அவமானங்களைத் தாங்கினார்?

அண்ணா, குத்தூசி குருசாமி, வேதாசலம் என்று ஒவ்வொருவராக இயக்கத்தை விட்டுப் பிரிந்து செல்ல, இயக்கம் என்னை இறுகப் பற்றிக்கொண்டது. மீண்டும் சொத்திற்காக இயக்கத்தில் இருக்கிறார் என்ற அவப்பெயர் ஏற்பட வேண்டாமே என்றே பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளையை உருவாக்கினேன். கொண்டு வந்தது எதுவுமில்லை, கொண்டு செல்லப்போவது எதுவுமில்லை என்பதை என்னைவிட யார் உணர்வார்? எமர்ஜென்சி காலத்தில் தாக்குப்பிடித்து இயக்கத்தைத் தொடர்வது பெரும் சவால் தான் என்றாலும், 1974 டிசம்பர் 25 அன்று எனக்கான ஐயாவின் ஆணையை நிறைவேற்றினேன். இராவண லீலா பெரியார் திடலில் பெரும் கிளர்ச்சியாக நடைபெற்றது. மீண்டும் கைதானேன். விடுதலை ஆனேன்.

கல்லூரிகள், பள்ளிகள், பெரியார் மாளிகை, திடல் என்று ஐயாவின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றியாகிவிட்டது என்ற நிம்மதியுடன் தான் கண் மூடினேன். இன்றும் நீங்கள் என்னையும், என் முடிவுகளையும், ஐயாவின் முடிவுகளையும் அலசி ஆராய்கிறீர்கள். எனக்கென தனிப்பட்ட கருத்து எதையும் நான் எப்போதும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. ஐயாவின் கருத்தே என்னுடையது; அவரது விருப்பமே என் விருப்பம். அவரது ஆசையே எனக்கான கட்டளை.

என் அரசியல் பாதையை நானே வகுத்துக்கொண்டதை ஏற்கமுடியாதவர்களால் என் திருமண வாழ்க்கையை நானே அமைத்துக்கொண்டதையும் ஏற்க இயலவில்லை. ஆணின் நிழலாக அல்லாமல், சுயசிந்தனையுள்ள, தனித்து இயங்கக்கூடிய ஓர் உயிராகப் பெண்ணால் இருக்கமுடியும் என்பது அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இந்த அதிர்ச்சி ஆற்றாமையாகவும் என் மீதான வெறுப்பாகவும் வெளிப்பட்டது. எதையும் பொருட்படுத்தாதே. அனைத்தையும் கடந்து சிறகு விரித்து மேலே மேலே பறந்துகொண்டே இரு என்றார் ஐயா. அவர்கள் வீசும் சொல்லும் கல்லும் தாக்காத உயரத்துக்கு உன்னை நீ கொண்டு போ என்றார் ஐயா.

நான் பறக்க ஆரம்பித்தேன்.  ஓர் இளம்பெண்ணைக் கிழவன் திருமணம் செய்துகொண்டான் என்று ஒவ்வொருமுறை குற்றம் சாட்டப்படும்போதும் சிரித்துக் கொள்வேன். ஒன்றே ஒன்றை மட்டுமே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம் உழைப்பை, குருதியை, வியர்வையை அளித்தே நம் இயக்கத்தை வளர்த்திருக்கிறோம். நம் கருத்தியலை வடிவமைத்திருக்கிறோம். அதன் கனிகளைப் பறித்து உண்பவர்கள் அனைவரும் நம் பிள்ளைகள்.

மரம் பேதம் பார்த்து நிழல் தருவதில்லை. நாடிவரும் அனைவரையும் அது வரையன்றி அரவணைத்துக்கொள்கிறது. திராவிட இயக்கம் அத்தகைய மரம். ஐயாவின் கைத்தடி போல் அது காலம் கடந்து வானம் பார்த்து நிற்கும். பிரிந்தாலும், மீண்டாலும் இந்தக் கருத்தியல் தரும் நிழல் அனைவருக்குமானது; பொதுவானது. இங்கு யார் வேண்டுமானாலும் இளைப்பாறலாம், கூடடையலாம். பறக்கும் பறவைகள் முதல் புழுப் பூச்சிகள் வரை அனைவருக்குமானது இந்த திராவிட ஆலமரம். அதன் பக்கவாட்டு விழுதாக மரத்தைத் தாங்கிப்பிடித்தபடி எங்கோ நான் இன்னும் இருக்கிறேன். உங்களுள் ஒருத்தியாக, உங்கள் மனசாட்சியின் சாளரமாக, உங்கள் எழுச்சியின் ஊற்றாகÉ

இப்படிக்கு,

ஈ.வெ.ரா.மணியம்மை.- நிவேதிதா லூயிஸ்--------------அன்னை மணியம்மையின் எழுத்தும் பேச்சும் - கனிமொழி ம. வீ

தந்தை பெரியாரை 95 ஆண்டுக் காலங்கள் சமூகப் பணி செய்திடப் பாதுகாத்தவர். தந்தை பெரியாரின் நம்பிக்கையைப் பெற்று அவருக்குப் பின் அய்ந்து ஆண்டுகள் ஒரு மாபெரும் சமூக நாத்திக இயக்கத்தின் தலைவராக பணியாற்றியவர். தந்தை பெரியாரே மேல், என்று அவரின் எதிரிகள் சொல்லும் அளவிற்கு எந்த எதிர்ப்பிற்கும்  அஞ்சாமல் இராவண லீலா நடத்திக் காட்டியவர். மேலே சொல்லப்பட்டது அன்னை மணியம்மையாரின் ஒரு பக்கம் தான். அம்மாவின் மறுபக்கம் அவர் அதிகம் வெளிக்காட்டாதது. அவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்பது தான் அது. அம்மாவின் எழுத்தாற்றல் அவர் எழுதிய முதல் கட்டுரையில் வெளிப்படும். இராமாயணமும் கந்தபுராணமும் ஒன்று என்று கூறும் ஒரு அரியக் கட்டுரையை அவர் எழுதினார். பலச் சான்றுகளோடு அந்தக் கட்டுரையை அன்னை அவர்கள் கையாண்டு எப்படி இதிகாசமும் புராணமும் ஒன்றே என்று நிறுவியிருப்பார்கள். இரண்டினையும் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தால் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்க இயலாது. மிக நுண்ணிய அறிவுடன் அதனை உள்வாங்கிப் படித்திருக்கின்றார் என்பதையே அவர் எழுதிய கட்டுரை நமக்கு உணர்த்துகின்றது. பல செய்திகளை உள்ளடக்கிய அந்த கட்டுரையில் இருவரின் பிறப்பைப் பற்றியும் அவை எப்படி அறிவிற்குப் பொருந்தாமல் இருக்கின்றது என்பதைப் பற்றியும் அன்னை மணியம்மையார் அலசி ஆராய்ந்திருப்பார்.

"இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவருக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கோசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப் புரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும், கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங்கையில் சேர்ந்து அங்குப் பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதைப் பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான், கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமும் கந்த புரானமுமே கூறுகின்றன) என்பதாகவும் இருக்கிறது."

அதே போல எப்படி இரு கதைகளில் வரும் திராவிடப் பெண்கள் ஆரியப் பார்ப்பனர்களால் அவமதிக்கப்பட்டனர் என்பதை விளக்கும் வரிகளில் அன்னை இவ்வாறு எழுதியிருப்பார்,

"இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.

சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்."

அதே போலச் சீதையைப் பற்றி ஒரு நடுநிலை ஆராய்ச்சி என்ற கட்டுரையில், சீதையின் பிறப்பை  எவ்வாறு வால்மீகி சீதையின் வாய் மொழியாகவே ஆரண்ய காண்டத்தில் ரிஷி ஆசிரமத்தில் ரிஷியின் மனைவிக்குச் சீதையே சொன்னது போலச் சித்தரித்து இருக்கின்றார் என்பதை விளக்கும்போது,  Òசீதை யாராலோ எப்படியோ பெற்று, கட்டாந்தரையில் போட்டுப் புழுதியினால் மூடப்பட்டுக் கிடந்திருக்கின்றாள். இதனால் சீதையை அவள் பக்குவமடைந்த  வெகு நாள் வரையிலும் யாரும் மணக்க முன் வரவில்லை. வளர்த்த தந்தை இதற்காக வருந்தியுள்ளார்Ó என எடுத்துக்காட்டியிருக்கிறார்.

சீதையைப் பற்றி பரதனும் இழித்துப் பேசியிருக்கின்றான் என்பதை, “நீ பரதனால் பாராட்டத்தக்கவள் அல்ல” என்று இராமன் வாயால் சொன்னதாகச் சித்தரித்து எழுதியிருப்பதை எடுத்துக்காட்டுகிறார். 

சீதையைப் பற்றிய  நடுநிலை ஆராய்ச்சி என்ற கட்டுரையின் மூலம், நாம் சீதையின் கற்பு வால்மீகியால் இழித்தே உரைக்கப்பட்டுள்ளது என்றும், சீதையை யாரும் வெகுநாள் வரையில் மணக்க வரவேயில்லை என்றும், சீதையின் குணத்தில் பரதன் அதிருப்தியடைந்துள்ளான் என்றும் பல செய்திகளைத் தொகுத்து எழுதியிருப்பது அன்னையின் சிறப்பு.

அதே போல பாரதி விழா நடத்தும் திராவிடர்களைப் பார்த்து அன்னையார், இப்படிப்பட்ட விழா நடத்துவது எவ்வளவு பெரிய அநீதி? பாரதி திராவிடரா?ஆரியரா? என்பது கூட தெரியவில்லை என்பதோடு அவர் ஆரியப் பற்று உள்ளவரா?திராவிடப் பற்று உள்ளவரா? என்பதைக் கூட புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றீர்கள். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, சமணர் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆகையவைகளைப் போல் பாரதி விழாவையும் கொண்டாடுகின்றீர்கள் என்று கடுமையாகச் சாடுகிறார்.

"உன்னத ஆரியநாடெங்கள் நாடே", "தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்தமானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடுபேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி."  என்று கூறும் பாரதியின் நாட்டுப்பற்று ஆரிய நாட்டின் மீதே என்பதை எடுத்து இயம்புகின்றார்.

"முன்னியிலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்

ஆரிய ராணியின் வில்

ஆரிய ராணியின் சொல்

ஆரியத் தேவியின் தேர்’

என்று பாரதியின் ஆரிய இனப்பற்றை தோலுரித்துக் காட்டுகின்றார்.

பாரதியாருக்கு இருந்தது தமிழ்ப்பற்றா? அல்லது ஆரியப் பற்றா? என்பதை

"ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன்

அகத்தியனென்றோர் வேதியன் கண்டு

இலக்கணஞ்செய்து கொடுத்தான்

ஆன்ற மொழிகளினுள்ளே உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்" என்ற பாரதியின் வரிகள் புலப்படுத்துவதைக் காட்டுகின்றார் அன்னையார். 

அதே போல, பிற சமயமும் இந்து சமயமும் என்ற தலைப்பில், மற்ற மதக்காரர் எல்லோரும் தங்கள் மதக்காரர்கள் உண்மைக்கும், மற்ற மதக்காரர்கள் நன்மைக்கும் என்று பள்ளிக்கூடம் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து உபாத்தியாயர்களை வைத்துப் படிப்பு சொல்லிக் கொடுக்கின்றனர். இந்து மதக்காரர் கோவில் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து பார்ப்பனர்களையும் தாசிகளையும் வைத்து உற்சவங்கள் செய்கிறார்கள். படிப்பைப் பற்றியோ கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இது மதக்காரர்கள் படிப்புக்குக் கொடுக்காமல் போவதோடு அல்லாமல், ஏறக்குறைய 100க்கு 50 பெண்களுக்குப் பிசாசு பிடிக்கச் செய்து பேயோட்டுகிறார்கள், என்று கிண்டலாகக் கூறுவதைக் காண்கிறோம் .

அதே போல, தேவர்களின் காமவிகாரம் என்ற தலைப்பில், சூரியன், சந்திரன், பிரகஸ்பதி, அக்னி, யமன், என்று வரிசையாகப் புராணங்களில் கூறப்பட்ட காமவிகாரக் கதையைப் பிறழ்ச்சி இல்லாமல் அம்மா படித்தது, படித்ததை எவ்வாறு சாடியுள்ளார் என்பதைக் காண முடியும்.

எடுத்துக்காட்டிற்கு,

Òஇவ்வித காமவிகாரக் கட்டுக்கதைகளைப் படிப்பதைக் காட்டிலும் அரபிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், போன்ற கதைகளைப் படித்தாலாவது சற்று அறிவு வளரும்.

நமது நாட்டில் குருட்டு நம்பிக்கை தோன்றியிருப்பதால், இந்த ஆபாசம் நிறைந்த புராணக் கதைகளைத் தெய்வீகச் சம்மந்தமானது என்றும், மோட்சத்துக்கும், ஆத்மார்த்தத்திற்கும், கடவுளுக்கும், மதத்திற்கும் சம்பந்தமுடையவர்களென்றும் ஜனங்கள்  நினைத்துக் கொண்டிருப்பது மூடத்தனமல்லவா?Ó என்று வினவுகிறார்.

அதே போல, தாழ்த்தப்பட்டோர்  முன்னேற வழி என்று தந்தை பெரியார் பேசிய உரையினை தொகுத்தும் வெளியிட்டு இருக்கின்றார். 

தந்தை பெரியார் மறைந்த பின் 27.12.1973 அன்று எழுதப்பட்ட விடுதலை ஏட்டின் தலையங்கம் அன்னையாரின் துயரையும், உறுதியையும் ஒரு சேர ஏந்திவந்தன.

"அவர் விட்டுச் சென்ற பணியினை அவர் போட்டுத் தந்த பாதையிலே வழி நடத்தி முடிக்கிற வரையிலே மன அமைதி நமக்குக் கிடையாது.

அந்தப் பணிகளை ஆற்றிட அருமைத் தோழர்களே அணி வகுத்து நில்லுங்கள்,

அய்யா அவர்களின் இலட்சியத்தை ஈடேற்றியே தீருவோம், என்ற உறுதியினைச் சங்கல்பத்தினை இன்று எடுத்துக்கொள்வோம்" என்றெழுதினார்.

இறுதி வரை அந்தப் பாதையிலிருந்து விலகவில்லை. தந்தை பெரியார் மறைந்த பின்னர், அய்யாவின் வழியிலேயே திமுகவை அன்னை மணியம்மையார் ஆதரித்தார்.

1974 இல் தி.மு.க அரசு தந்தை பெரியார் வழியில் நடைபோடுவதைக் குறிப்பிட்டு,

"திமுக பெரிய தொல்லைகளுக்கும் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகிறது என்பதைத் தினம் தினம் பத்திரிக்கை வாயிலாக  நாகரீகமற்ற முறையில் வருவதைப்  பார்க்கின்றேன். அதனால் தான் நாம் இந்த அரசைக்  கட்டிக்காக்க நம்மால் முடிந்த அளவு முழு மனதோடு இறங்கிச் செயல் படவேண்டும், என்று நமது தமிழ் மக்களைக் கழகத் தோழர்களையும் அன்போடு வேண்டுகிறோம்." என்று எழுதினார்கள்.

எப்போதும் தாய்மையின் உருவாக அன்னை மணியம்மையார் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார். அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. தான் பெறாத குழந்தைகளை தன்  மடியில்போட்டு வளர்த்துப் பகுத்தறிவு பாலூட்டியவர் அவர். ஆனால் அது மட்டுமே அவர் அடையாளம் அல்ல. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் , நிர்வாகி , தலைசிறந்த புரட்சித் தலைவி என்பதையும் சேர்த்து அடுத்த தலைமுறையினருக்குப் பதிய வைக்க வேண்டியது காலத்தின் தேவை.

பெரியாராவது தேவலாம்.! அவர் தொண்டர்கள் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டர்கள் போலிருக்கே - பிரேம் முருகன்அடுப்பூதிய பெண்கள், படிக்க வேண்டும் எனச்சொல்லி படித்து முன்னேறியப் பிறகு முன்னேறத்திற்கு காரணம் அவர்கள் முயற்சியை விட வழங்கிய சலுகைகள் என்று கொச்சைப்படுத்துவது எளிதாகிவிட்டது. பெண்களுக்கான உரிமை, மதம், நம்பிக்கை, கலாச்சாரம் என பல போர்வைகளில் பறிக்கப்பட்டு, தாய்வழிச் சமூகத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட பெருமை மனித இனத்தையே சேரும். அதனை எதிர்த்து போராடி, பெண்ணின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர்கள் பலர், ஆனால் அவர்களின் வரலாறு என்பது குறைவு, ஏழனம் என்பது அதிகம். இத்தகு புகழுக்கு சொந்தக்காரர்கள் பட்டியலில் முத்துலட்சுமி ரெட்டியார் துவங்கி, தில்லையடி வள்ளியம்மை, நீலாம்பிகையம்மையார் அற்புதம் அம்மாள் என நீளும் பட்டியலில் சிறப்பிடம் அன்னை மணியம்மையாருக்கு உண்டு.

தமிழ்ச் சமூதாயம் என்னும் குழந்தையை மடியிலே தூக்கிப்போட்டு மருந்தைப் பாலாடையில் குழைத்து வாயிலே புகட்டிய அன்னை மணியம்மையார். (கலைஞர் மு. கருணாநிதி)

ஆண்களை மையப்படுத்தி சென்ற அரசியலைக் கடந்து, 100 ஆண்டுகளுக்கு முன் எவ்வித சமரசமும் சஞ்சலமுமின்றி இடதுசாரியாக குறிப்பாக நாத்திகராக, நாத்திகர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய பெருமையும், என்றோ காலம் செல்ல இருந்த மனிதனை தனது பக்குவத்தால் கைத்தடிப்பிடித்து ஊர்சுற்றி புதுமை ஏற்பட வைத்து 96 ஆண்டு காலம் வாழ வைத்த பெயருடையவர் மணியம்மையார் என்றால் அது மிகையல்ல. பகுத்தறிவு இயக்கத்திற்கு பெண் ஒருவர் தலைவரான வரலாறு இந்தியாவில் இதுதான் முதல் வரலாறு.நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 96 ஆண்டு வரை வாழவைத்து அதற்கு பிறகு ஐந்து ஆண்டுக்காலம் அவர்கள் விட்டுச்சென்ற பணியை அவர்கள் போட்டுத்தந்த பாதையில் எவ்வித சபலத்திற்கும் உட்படாமல் செய்து முடித்த வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித்தாயை இந்தநாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தார் நம் அன்னை ஈ. வெ. ரா. மணியம்மையார். (ஆசிரியர் கி. வீரமணி)

‘திராவிட சாதி’ என்று பெருமையுடன் நீதிமன்ற கூட்டில் முழங்கி யாவரையும் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் பகுத்தறிவு பகலவனின் சமூகசீர்த்திருத்த போராட்டத்தின் அரும்பெரும் பேச்சுக்களை காற்றோடு கலந்துவிடாமல், ஏட்டு வடிவம் கொடுத்து, விடுதலையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், அந்த நூல்களை பொது கூட்டங்களில் விற்கும் விற்பனையாளராகவும், பிறகு அதே பத்திரிக்கையும் பொறுப்பாசிரியராகவும் a versatile ஆக விளங்கியவர் மணியம்மையார். கனகசபையின் மகள் காந்திமதி ஆக இருந்தவர், பின் அரசியல்மணியாகி அதன் பின் KA மணி என்றும் ‘க.அ. மணி’ என்றும் பெயர்களால் ஓர் ஏட்டினை 32 ஆண்டு காலம் பொறுப்பாசிரியாக நடத்திய பெருமை உலக பதிப்பகத்தார் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லை.

பிள்ளை வயதுடைய பெண்ணை திருமணம் செய்த பெரியார்..!

சொத்துக்காக பெரியாரை மணந்த மணியம்மை..!

என ஆயிரம் வரலாறு அறியாத ஏளனத்திற்கும் அவதூறுக்கும் சொந்தக்காரர் தான் அம்மையார். தனக்கு பின் கழகத்தை நம்பிக்கையானவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் பொழுது அதற்கு சரியான நபர் மணியம்மையார் என்ற முடிவுடன் தான் ஏற்பாடு (இணையேற்பு அல்ல ஏற்பாடு) நடைபெறுகிறது. இதற்குக் காரணம் சட்டப்படி மனைவி என்னும் நிலையில் உள்ளவர்களுக்குத் தான் வாரிசுரிமை உண்டு என்பதால், சட்டப்படியான ஒரு ஏற்பாட்டினை தந்தை பெரியார் செய்தார். இது குறித்து அவர் பத்திரிகையில் எழுதியதாவது: Òஇந்த திருமணம் என்பது சட்டப்படியான பெயரே ஒழிய,  சட்டப்படி எனக்கு வாரிசு தான் எனது பொருளுக்குத் தான்Ó என்று தந்தை பெரியார் எழுதினார். பெண்களை வாரிசாக ஆக்க அப்போதைய ‘இந்து திருமணச் சட்டம்’ இடம் தராது துணைவி என்றால் வாரிசுதாரராக இயல்பாக ஆகலாம் என்ற சட்ட ஆலோசனையை சட்ட வல்லுனர்கள்  வழங்கினர். பிறகு சொத்துரிமைக்கு குரல் கொடுத்து அவரது வழியில் வாழ்ந்த திமுக தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் முகருணாநிதி அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை இயற்றினார்.

 “மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 30 ஆண்டுகளில் பல காரியங்களுக்குத் தேவைக்கு உதவி செய்து வந்தால் என் உடல் பாதுகாப்பு, விட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லையில்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்Ó (பெரியார் 1973)

இந்த திருமணத்தை காரணம் காட்டி தாய்க் கழகத்திலிருந்து பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. பிரிந்தது; இது ஒரு காரணமாக சொல்லப் பட்டதே தவிர, அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் தான் இதன் பின்னணியில் இருந்தது. 22.1.1976-ம் ஆண்டு மணியம்மையார் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாட்டில் உரையாற்றிய தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் இதனை ஒப்புக்கொண்டார். தன்னை விமர்சித்த அண்ணா பெயரையும், ஈரோட்டில் பெரியார் நினைவு இல்லத்தோடு இணைக்க இசைவு தந்தார். அவ்வில்லத்திற்கு நிதி தர அரசு தயாராக இருந்தும்,  அதை ஏற்கமறுத்தார். ‘அய்யா அண்ணா நினைவகம்’ என்று அன்னையார் கூறி, நன்னயம் செய்து உயர்ந்து நிற்கிறார்.

தியாகம் என்ற சொல்லுக்குள் அடங்கிய தன்னலம் பல வகைப்பட்டவை. ஆனால் ஒரு பெண் தன் இளமையை தான் ஏற்ற சுய மரியாதை லட்சியங்களுக்காக அதன் தலைவருக்குத்  தொண்டூழியம் செய்வதற்கென்றே தியாகம் செய்து எல்லையற்ற ஏச்சுகளை, வசவுகளை, அவதூறுகளை ஏற்றுக்கொண்டு எல்லை தாண்டிய சகிப்புத் தன்மையோடு எவர் எவர் எல்லாம் கடுமையாய் கொடுமையாய் விமர்சித்தார்களோ, தூற்றினார்களோ அவர்களிடமிருந்தே 20 ஆண்டுகளுக்குப் பிறகே பாராட்டையும் பரிவு கலந்த மரியாதையும் பெற்றார் என்பது சரித்திரத்தின் விசித்திரங்களில் ஒன்று அல்லவா? 

அம்மையார் பாதை சற்று நெருடலானது தான், அதனால் தான் சிறைவாசத்திற்கும் போராட்டத்திற்கும் பஞ்சமின்றி இருந்தது. பத்திரிகை உரிமை, சுதந்திரம், எழுத்துரிமைக்காக சிறை சென்ற ஓர் ஒப்பற்ற இயக்கத்தின் தலைவி அவர். 1948-ல் இந்தி திணிப்பிற்கு எதிராக தடையை மீறி பேரணி நடத்தியதற்கு நீதிமன்ற கூண்டில் ஏறியபொழுது Òதிராவிட சாதிÓ என்றும் கடுங்காவல் தண்டனைக்கு Òமகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.!Ó என முழங்கி கடுங்காவல் தண்டனை அனுபவித்த பெண்மணி அவர்கள். அதனைத் தொடந்து, 140 நாட்கள் திருவல்லிக்கேணியில் ‘பிராமண விடுதி’ என பெயரிடப்பட்ட விடுதிக்கு எதிராக போராடியவர். அதன் பின் போராட்டமும் சிறைவாசமும் ஏராளம். 

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார். எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகு அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பெயரில், திருச்சியில் உடல்நலமின்றி மருத்துவமனையிலிருந்த காலத்தில் கருப்புக்கொடி போராட்டத்திற்கு தலைமை தாங்க சென்னை வந்து தலைமை தாங்கி போராடினார்.  Òராமனை ஆரதிக்கும் இம்மண்ணில் எதிர்க்கவும் உரிமை உண்டுÓ என்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு பின்புலம் எதுவென்றால் அம்மையார் தலைமையில் பெரியாரின் ஆசையான ‘இராவண லீலா’ கொண்டாடி நிறைவேற்றியது தான். 

திருச்சியில் 1960-ம் ஆண்டு முதல் ஆதரவற்ற நாகம்மை அனாதைக் குழந்தைகள் இல்லம் தொடங்கப்பட்டு பெரியார் மாளிகையில் இயங்கியது. அவர்களின் பெறாத தாயாக மணியம்மையார் விளங்கினார். மருத்துவமனையில் கைவிடப்பட்ட சிலநாள் குழந்தைகளைக்கூட தத்தெடுத்து வளர்த்து, குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, படிக்கவைத்தார். அக்குழந்தைகளுக்கும் Òஈ.வெ.ரா.ம.Ó என்று இணைந்த ஈ.வெ.ரா.ம. கலைமணி, ஈ.வெ.ரா.ம. அருள்மணி, ஈ.வெ.ரா.ம. அன்புமணி என்று பெரியார் மற்றும் அம்மையார் பெயரை இணைத்து அடையாளப்படுத்திய பெரிய மனதை என்ன சொல்லிப்பாராட்டுவது என்றால் அகராதி அலுத்துவிடும். இன்று தமிழ்நாட்டில் குழந்தைகளை வளர்த்து கல்வியளித்துப் பராமரிப்பதில் ஒரு எடுத்துக்காட்டான இல்லம் இயக்கம் என்று மதுரை, சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதிகளே புகழ்ந்தது திருச்சி இல்லம் தான்.

தந்தை பெரியார் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மக்களின் பொது நலனுக்கே அவை பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல்நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்த போது மணியம்மையார் Òபெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம்Ó தொடங்க ஏற்பாடு செய்தார். அந்த அமைப்பு சென்னையில் பதிவு செய்யப்பட்டது. பெரியார் நூலகம் மற்றும் ஆய்வகத்தை நிறுவினார். ‘பெரியார் மணியம்மை பெண்கள் உயர் நிலைப்பள்ளி’ யைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.

“பெரியாராவது தேவலாம்.! அவர் தொண்டர்கள் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டர்கள் போலிருக்கே என எண்ணும் படி செய்ய வேண்டும்Ó 

 என்ற அறிக்கையை அம்மையார் கழகத்தலைவரான பிறகு  தொண்டர்களுக்கு அனுப்பினார். இதன் மூலம் தான் பிடித்திருந்த கொள்கையில் ஒரு பிடிப்பு, பற்றுதல் துவங்கி, பெரியார் மீதான மரியாதை, தியாகம், போர்க்குணம், தலைமை, எழுத்தாளுமை, கடைசி வரை நீதியின் பக்கம் நின்று எதிர்க்கும் தன்மை என பன்முக ஆளுமைகளோடு பிறந்த மாதர் திலகம் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது. பெரியார், அம்மையார் தொடங்கி அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்கள் கண்ட கனவை பெண்கல்வி, சொத்துரிமை என பல பொருண்மைகளில் நிரூபித்துள்ளது தமிழகம் என்றால் மிகையல்ல. பெரியாரை 96 ஆண்டு வரை பத்தியச்சோறுடன் உடலை கவனித்த அம்மையார், தனது உடலை ஒரு பொருட்டாக கொள்ளாததே அவர்கள் அவ்வளவு விரைவாக காலஞ்செல்ல காரணம், ஆனால் அவரது புகழ் காலங்கடந்து நிற்கக்கூடிய தன்மைப்பெற்றது.

“அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகு தான் என்னுடைய கருத்துக்கள் பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவரமுடிந்தது.

-தந்தை பெரியார்...-பிரேம் முருகன்


No comments:

Post a Comment