Tuesday 31 March 2020

திராவிட இயக்க வீராங்கணை - மணியம்மையார் - திராவிடர் கழகத்தின் வேலூர் மாவட்ட மகளிர் பாசறையின் செயலாளர் தேன்மொழி உரை (எழுத்து வடிவம்: யூசுப் பாசித்)

திராவிட இயக்க வீராங்கணை - மணியம்மையார்
- திராவிடர் கழகத்தின் வேலூர் மாவட்ட மகளிர் பாசறையின் செயலாளர் தேன்மொழி உரை (எழுத்து வடிவம்: யூசுப் பாசித்)

ஒரு மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, கூட்டம் கூட்டமாக, மேடை மேடையாக ஏறி நம்முடைய சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்பதற்காக பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன், பெண்ணுரிமை போராளி பெரியார். அவரோடு இணைந்து கழகப் பணியாற்றிய மணியம்மையார் அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் முதல் வீராங்கணை. 
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலே, நாம் வாழவில்லையே என்ற ஏக்கம்  இன்றைய கருஞ்சட்டை மகளிருக்கு பெருமளவில் இருக்கிறது. கருப்பு நம்முடைய ஆடை மட்டுமல்ல அடையாளம் கூட என்று உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற அனைத்துப் பெண்களுமே திராவிட இயக்க வீராங்கணைகள்தான். அவர்கள் திராவிட கழகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சாராதாவர்களாக இருந்தாலும் சரி, முற்போக்குக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற அனைவருமே திராவிட இயக்க வீராங்கணைகள்தான்.
இன்றளவிலும், மதவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சோஃபியாக்களும் திராவிட இயக்க வீராங்கணைகளே. அதில் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

யார் இந்த மணியம்மையார்?
சமூக வலைத்தளங்களிலே பெரியாரைப் பற்றி  எந்த ஒரு செய்தி எழுதினாலும் உடனடியாக ஒரு பின்னூட்டம் வரும், ”20 வயது பெண்ணை 70 வயதில் திருமணம் செய்து கொண்ட அந்தக் கிழவனா?” என்று. சில நேரங்களில் அந்த பெண்ணின் வயது இன்னும் குறைத்து சொல்லப்படும். 
உண்மையில் அந்த திருமணம் நடந்த போது மணியம்மையாருக்கு 29 வயது முடிவடைந்திருந்தது. பெரியாருக்கு ஏறக்குறைய 70 வயதுதான். (பெரியார் பிறந்த தேதி: 17-09-1879, மணியம்மையார் பிறந்த தேதி: 10-03-1920, திருமணம் நடந்த தேதி: 09-07-1949).
ஒரு மாபெரும் புரட்சியாளனைப் பற்றி இவர்களுக்கு வேறு எந்த விதமான அறிவும் கிடையாது. பெரியாரையும் மணியம்மையாரையும் பற்றி பேசும் போது, அவர்களின் திருமணம் மட்டுமே இவர்களின் நினவுக்கு வருகிறது என்றால், இவர்களின் பகுத்தறிவு எந்த அளவில் இருக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பெரியார், 84 வயதில், அவருடைய உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார் “நான் ஞாபக மறதியால் மிகவும் அவதிப் படுகிறேன். என்னால் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை. என்னுடைய காதுகளின் கேட்கும் திறன் 40% தான் உள்ளது. நான் படிக்க ஆரம்பிக்கிறேன், 10 வரிகளுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை, கண்ணில் நீர் வந்து மறைத்து விடுகிறது. நான் நடக்க ஆரம்பித்தால் பத்து அடிகளுக்கு மேல் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மூச்சு இறைக்கிறது. என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு செல்ல ஒரு ஆள் தேவைப்படுகிறது. அய்யோ முடியவில்லையே என்று சிறுது நேரம் அமரலாம் என்று நினைத்தால், எங்கே குடல் கீழே இறங்கி வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில்,  ஒரு தேங்காய் உருண்டை அளவில், என்னுடைய உடலில் இருந்து உபாதை வருகிறது. உட்கார முடியவில்லையே, எழுந்து நிற்கலாம் என்று பார்த்தால், ஒரு கால்பந்து போன்று ஒன்று என்னுள்ளே உதைத்துக் கொண்டு இருக்கிறது.”
84 வயதில் இவ்வளவு மோசமான உடல்நிலையில் இருந்த கிழவனை, இவ்வளவு உடல் உபாதைகளோடு இருந்தாலும், நன்கு கவனித்துக் கொண்டு 94 வயது வரைக்கும் வாழ வைத்துவிட்டு, அவரை 100 வயதைத் கடந்து வாழவைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட ஒரு தாயுள்ளம் தான் மணியம்மையார்.
அத்தகைய சிறப்புக்குரிய மணியம்மையாரை, இன்று நம்முடைய சமூகம் எந்த அளவிலே உற்று நோக்குகிறது?
1920-ல் பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, பெரியாரை சந்தித்தார் என்ற ஒரே காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் அவரைப் பள்ளியை விட்டு வெளியேற்றுகிறது. எந்த பெரியாரைச் சந்தித்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அதே பெரியோரோடு இறுதி வரை காலம் கழிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. 
தந்தை பெரியாரோடு வந்து சேர்ந்த மணியம்மையார் என்ன செய்தார்? அவருக்கான பணிவிடைகள் மட்டுமா? அவை முதன்மையாக இருந்தாலும், அய்யாவின் கருத்துக்களை வெளிக்கொண்டு செல்லும் முதல் போராளியாக மணியம்மையார் இருந்தார்.  மணியம்மையார் 1944-ல் பெரியாரிடம் வந்து சேர்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய ஒவ்வொரு பணியும் பேசும் படியாகவே இருக்கிறது. 1920களின் இறூதியில் இருந்தே இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன. இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியார் பல போராட்டங்களை அறிவித்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளார். 
1948ல் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் இந்தியை கட்டாயப் பாடமாக்கினார். அதைக் கேள்விப்பட்ட பெரியார், அப்போதைய இந்தியத் தலைமை ஆளுநராக  இருந்த இராசகோபாலாச்சாரிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துகிறார். அதனால் அவரைக் கைது செய்து விட்டார்கள். அடுத்து இந்த போராட்டத்தைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்த துணிச்சலாக, மணியம்மையார் களமிறங்குகிறார். மணியம்மையாரும், புஷ்பாவதி அம்மையாரும் முன்னனி வகித்து அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அந்த தடையையும் மீறி கும்பகோணத்தில் ஊர்வலத்தோடு போராட்டத்தை நடத்தினார். அதனால் போரட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கைது செய்யப்பட்டனர். 
நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. சுயமரியாதைக்கு சொந்தக்காரர்களாக இருந்ததால் எந்த ஒரு வார்த்தையும் தவறுதலாக பயன்படுத்தப்படவில்லை. அனைத்துக் கேள்விகளுக்கும் மிக நாகரீகமான முறையில் பதிலளிக்கிறார். விசாரணையின் போது 144 தடை உத்தரவு இருக்கிறது. அதை மீறி போராட்டம் செய்தது சரியா? என்ற கேள்விக்கு மொழியைக் காப்பது எங்களுடைய கடமையாகும். அதனால் நாங்கள் தடையை மீறினோம் என்று மிக அழகாக பதிலளித்தார். தடையை மீறி போராட்டம் நடத்துவது சரியானதல்ல என்ற எதிர் வாதத்திற்கு, எங்களுடைய மொழியை காப்பாற்றுவது மிக முக்கியமான கடமை என்கிறார். 
அடுத்த கேள்வி, நீங்கள் எந்த மதம்? நான் எந்த மதத்தையும் சார்ந்தவள் அல்ல என்கிறார். அடுத்து, நீங்கள் என்ன சாதி? நான் திராவிட சாதி என்று மிக அழகாக, தன்னிச்சையாக,  பெருமையாக கூறுகிறார்.
அடுத்ததாக, நீங்கள் செய்தது குற்றம். அது குறித்து ஏதேனும் சமாதானம் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, நான் இங்கு சமாதானம் சொல்லுவதற்காக வரவில்லை. சட்டத்தின்படி என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளேன் என்று அஞ்சாமல் உரைக்கிறார். அதனைத் தொடர்ந்து, 2 மாதம் வெறுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. தீர்ப்பைக் கேட்டவுடன், அம்மையார் “மிக்க மகிழ்ச்சி. நன்றி” என்று கூறுகிறார். இந்த மகிழ்ச்சி என்ற வார்த்தை, இன்றைய காலகட்டத்தில் இதே வார்த்தையை திரைப்படங்களில் பயன்படுத்தும் உச்ச நட்சத்திரங்களுக்கு எந்த மாதிரியான எதிர்வினை வருகிறதென்று நமக்குத் தெரியும். அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அம்மாவைப் பார்க்கிறார்கள். பெரியாரிடம் வந்து சேர்ந்த நான்கே ஆண்டுகளில், அவ்வளவு கருத்து முதிர்ச்சியைப் பெற்றவராகிரார்.
1949-ல் பெரியார்-மணியம்மை திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணம் எதற்காக நடந்தது என்று பல முறை கூறியாகிவிட்டது. எல்லோருக்கும் அது தெரிந்தாலும், ஏகப்பட்ட விமர்சனங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார் என்னும் வயதான கிழவரை கவனித்துக் கொள்வதற்காக மட்டும் இந்த திருமணம் நடக்கவில்லை. இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கவும், இந்த இயக்கத்தை வேறு யாரும் வந்து சொந்தம் கொண்டாடி விடக்கூடாது என்பதற்காகவும், கழகம் பிளவுபட்டு விடக்கூடாது போன்ற உயர்ந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது. உடனே இது பெரியாரின் சுயநலனுக்காக நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம் என்று நினைக்க வேண்டாம். இந்த திருமணம் இருவரின் முழு சம்மதத்தோடுதான் நடந்தது. இந்த திருமணம் விமர்சிக்கப்பட்டதை ஒரு பெண்ணாக மணியம்மையார் எப்படி எதிர் கொண்டார்? என்பது முக்கியமாக கவனிக்கப்பட்ட வேண்டியது.
இந்த சமூகம் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். எப்படி வேண்டுமானாலும் ஏளனப்படுத்தட்டும். நான் போகிற பாதை சரியான பாதை. அந்த பாதையில் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்று மீண்டும் மீண்டும் தன்னைக் களப்போராளியாகவே தன்னை மாற்றிக் கொண்டதுதான்.
மணியம்மையாரின் வாழ்வில் மிகவும் பிரபலமான ஒரு விசயம் என்றால் அது இராவண லீலை தான்.
இராவண லீலை குறித்து அறியாத திராவிட இயக்கத் தோழர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில், நாட்டு மக்களிடையே இராமாயணம், மகாபாரதம், மற்ற இதிகாசங்கள் மட்டுமே மிகச்சிறந்த புராணக் கதைகளாக இருந்தன. 
பெரியாரால்தான், இந்த இராமாயண, மகாபாரத, இதிகாசங்கள் நம்மை எவ்வளவு இழிவான நிலையில் வைத்திருந்தன என்று மக்கள் உணர்ந்தார்கள். முக்கியமாக பெண்கள் எவ்வளவு இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று உணர்ந்தார்கள். இராமயணத்தில் உயர்வாக காட்டப்பட்டுள்ள ஏதாவது ஒரு பெண் கதாப்பாத்திரத்தை உங்களால் கூறமுடியுமா?
இருந்தால் தானே கூறுவதற்கு.
சீதையைக்கூட உயர்வாகக் காட்டவில்லை.
பொதுவாக, "சீதை கோட்டைத் தாண்டியிருக்கா விட்டால் இராயணமே நடந்திருக்காது" என்று ஒரு சொலவடை உண்டு. இன்றைய நவீன சீதைகளுக்கு ஒரு கோட்டைப் போட்டால், உங்களுக்கு ஓங்கி 'பளார்!' என்று போட்டு, நீ யாருடா எனக்கு கோடு போட என்று கேட்பார்கள். இராமாயணத்தில் வந்த சீதையும் அப்படிக் கேட்டிருந்தால், இராமாயணத்தின் போக்கே மாறியிருக்கும். 
இராமன் தன்னுடைய தாய்க்கு ஒரு வாக்குறுதி அளித்துவிட்டான். அதனால் அவன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், சீதை எந்தவொரு கேள்வியும் இல்லாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு இராமன் பின்னால் காட்டுக்கு கிளம்பி விடுகிறாள்.
ஒரு நிமிடம், யாரைக் கேட்டு நீ வாக்குறுதி கொடுத்தாய்? உனக்காக நானும் அங்கு வந்து 14 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டுமா? என்று சீதை கேட்டிருந்தால் இராமாயணத்தின் போக்கு மாறியிருக்கும்.
இந்த கேள்விகளை எல்லாம் நமக்குக் கேட்கக் கற்றுத்தந்தது யார்? இந்தப் பகுத்தறிவைத் தந்தது யார்? அந்த ஈரோட்டுக் கிழவன்.
நிறைய பட்டிமன்றங்களில் பார்க்கலாம். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா? இதைத் தவிர வேறு எந்த ஒப்பீடும் கொண்டுவர மாட்டார்கள். 
கற்பில் சிறந்தவர் இராமனா? சீதையா? என்று விவாதிக்கலாமே? மாட்டீர்கள். ஏனெனில் இராமன் தோற்றுவிடுவான்.
கற்பில் சிறந்தவர் இராமனா? இராவணனா? என்று கூட விவாதிக்கலாமே? மாட்டீர்கள். ஏனெனில் அதிலும் உங்கள் இராமன் தோற்றுவிடுவான். 
இராம லீலா என்பது என்ன? அது ஒரு போர். ஒரு பக்கம் சாதாரண இராமன். வேண்டுமானால் ஒரு 'சுமார் ராமன்' என்று வைத்துக் கொள்ளலாம். எதிர்ப் பக்கத்தில் ஒரு 'சூப்பர் இராவணன்' இருக்கிறான். இராமன் குரங்குகளை உதவிக்கு அழைத்துக் கொண்டு போருக்கு செல்கிறான். போரில் வெற்றி பெற்று, இராவணனைக் கொன்றும் விடுகிறான்.
இன்றளவும் இராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் இராம லீலாவும் நடத்தப் படுகிறது. இராம நவமி கொண்டாடும் யாராவது ஒருவர், போரில் இராமனுக்கு உதவிய குரங்கை வீட்டில் வைத்துக் கொள்வார்களா? அப்படி வைத்துக் கொண்டால் எல்லோரும் சேர்ந்தே இராம நவமி கொண்டாடலாம்.
இந்த இராம நவமியை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் பெரியார். அவருடைய மிகப்பெரிய கொள்கை வாரிசான மணியம்மையார், பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை நடத்த ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தார். இராம நவமி/ இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலா நடத்துவதாக ஆலோசித்து தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டது.
பகிரங்கமாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது. வட மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராம நவமியை நிறுத்த வேண்டும். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இராம நவமி விழாவில் கலந்து கொள்வதாக செய்தி வ்ருகிறது. மதச்சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார். அங்கிருந்து அப்படியெல்லாம் தடுக்க முடியாது என்று பதில் வருகிறது. அப்படியென்றால் நாங்கள் இராவண லீலாவைக் கொண்டாடுவோம் என்று மணியம்மையார் பதிலளிக்கிறார்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து இராம நவமி கொண்டாடப்பட்டு விட்டது. மணியம்மையார் மருத்துவமனியில் இருக்கிறார். அங்கிருந்தபடியே தோழர்களுக்கு அறிக்கை வெளியிடுகிறார். 
எல்லோரும் தயாராகுங்கள். இராவண லீலாவுக்கு தயாராகுங்கள்.
அறிக்கையை கண்ட இயக்கத் தோழர்களுக்கு பெரும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. எப்படியாவது இந்த இராவண லீலாவை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்று உழைக்கிறார்கள். 
எல்லப் பத்திரிக்கைகளும் எழுதுகின்றன. இராவண லீலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. நம்முடைய மிகப்பெரிய விளம்பரமே எதிரிகளின் எதிர்ப்புகள்தான். அதுதான் நமக்கு விலையில்லாமல் கிடைக்கும் விளம்பரம். நாம் காசு செலவழித்து விளம்பரம் செய்தால் கூட அவ்வளவு மக்களிடம் போய்ச் சேராது. அன்று முதல் இன்றுவரை அந்த நிலை மாறவேயில்லை. சமீபத்திய உதாரணம் 'காரப்பன் சில்க்ஸ்' கடைக்கு விளம்பரம் செய்த அட்மின். 
யாரெல்லாம் இராவண லீலாவை எதிர்த்தார்களோ, அவர்களே பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் இராவண லீலா நடக்க இருக்கிறது என்று தொடர் விளம்பரம் செய்துவிட்டார்கள். எதற்கும் பேசாத காஞ்சி சங்கராச்சாரி கூட, இது மதம் சம்பந்தப்பட்ட விசயம். இதை உடனே தடுத்த நிறுத்த வேண்டுமென்று வாய் திறந்தார். ஆனாலும் யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தவர் கலைஞர். அமைச்சர் ஒருவர் மணியம்மையாரிடம் வந்து, இந்த இராவண லீலா பெரும் பிரச்சினையாகும் போல் இருக்கிறது. மத்திய அரசின் அழுத்தமும், நெருக்கடியும் மிக அதிகமாக உள்ளது. அதனால் இந்த நிகழ்வை எப்படியாவது நிறுத்தி விடுங்கள், என்று கோரிக்கை வைக்கிறார். மணியம்மையார் முடியாது என்று மறுத்துவிடுகிறார். அதற்கு அந்த அமைச்சர், இதுவே பெரியாராக இருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்று நிகழ்ச்சியை இரத்து செய்திருப்பார் என்கிறார். அம்மா, பொருமையாக "அதனால்தான் அவர் பெரியார்" என்கிறார். தொடர்ந்து நாங்கள் அவருடைய தொண்டர்கள் மட்டுமே. அதனால் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவோம் என்கிறார். 
நிகழ்ச்சி நடத்தும் நாளும் வருகிறது. அப்போது பொதுச்செயலாளராக இருந்த தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் உட்பட முக்கியமான தலைவர்கள் சிலரை முன்கூட்டியே கைது செய்து விட்டார்கள். மாலை 7 மணிக்கு கொண்டாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் வெகு விமரிசையாக இருந்தன. நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெரியார் திடலில் கூடியிருந்தார்கள். திடலில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூன்று உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கழகத் தொண்டர்களில் ஒருவர் இராவணனாகவும், மற்றொருவர் கும்பகர்ணனாகவும், இன்னொருவர் மேகநாதனாகவும் வேடமணிந்து வருகிறார்கள். மூவருக்கும் நடு நாயகமாக மணியம்மையார் நடந்து வருகிறார். அவர்கள் உள்ளே நுழையும்போது தொண்டர்கள் அனைவரும் பெரியார் வாழ்க என்று எழுப்பிய குரல் விண்ணைப் பிளக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே கற்பனை செய்து பார்த்தால், ஒரு உச்ச நட்சத்திரத்தின் படம்தான் சட்டென்று ஞாபகத்திற்கு வருகிறது. மணியம்மையார் வந்து அந்த மூன்று சிலைகளுக்கும் தீ மூட்டுகிறார். அவை அந்த இடத்திலேயே எரிந்து சாம்பலாகின்றன. 
இந்த நிகழ்வு முடிந்தவுடன் தோழர்கள் அமைதியாகின்றனர். காவல்துறையினர் வந்து அம்மையாரைக் கைது செய்கின்றனர். அப்போதும் அம்மா "மகிழ்ச்சி" என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் தோழர்கள் செய்த ஆரவாரம் கோட்டை கொத்தளங்கள் எல்லாம் உடைந்து நொறுங்குமளவுக்கு இருந்தது. இந்த மகிழ்ச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஆரம்பித்தவர் அம்மையார்தானோ என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு பல தருணங்களில் "மகிழ்ச்சி" என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். 
திட்டமிட்டபடி பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று இராவண லீலா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அது நம்முடைய இன இழிவு நீக்கத்திற்கான, இன மீட்புக்கான ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முழுமுதற் காரணம் மணியம்மையார் மட்டுமே. 
நம்முடைய இனம், பெண்கள் இராமாயணத்தில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டார். அதனால்தான் அவர் திராவிட இயக்க வீராங்கனையாக போற்றப்படுகிறார். 
மணியம்மையாரின் வாழ்வில் இது போன்று தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் அனைத்து நிகழ்வுகளையும் இங்கே விவரிக்க முடியாது. ஆகவே காலம் கருதி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
1958ல் சாதி ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போதும் பெரியாரை முன் கூட்டியே கைது செய்துவிடுகிறார்கள். அம்மையார் மட்டுமே வெளியில் இருந்தார். அந்த போராட்டத்தின்போது சிறை சென்ற பல தோழர்கள், சிறைக் கொடுமை தாளாமல் இறந்து போனார்கள். அவர்களில் முதலாக பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரு தோழர்களும் திருச்சியில் மரணித்தனர். காவல்துறையினர் அராஜகமாக அந்த உடல்களை குடும்பத்தினரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க மறுத்து, அங்கேயே புதைக்க ஏற்பாடு செய்கின்றனர். அப்போது திருச்சியில் இருந்த அம்மையார் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரிடம் நேரில் சென்று, உடல்களை ஒப்படைக்க உத்தரவு பெற்று வருகிறார். தோழர்கள் உடல்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்படுகிறார்கள்.
அம்மையார் திரும்பி வருவதற்குள், அருகில் இருக்கும் இடுகாட்டில் புதைக்கச் சொல்லி காவல்துறையினர் நிர்பந்திக்கின்றனர். தோழர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காவிரிக் கரையில் இருக்கும் இடுகாட்டில்தான் புதைப்போம் என்று தோழர்கள் உறுதியாக இருந்தார்கள். அம்மையார் திரும்பி வரும்வரை ஊர்வலம் முடிந்து விடக்கூடாது என்று மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அம்மையார் வந்தவுடன், ஊர்வலத்தை மெதுவாகவே தொடருங்கள், மீண்டும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லுங்கள் என்கிறார். சாதி ஒழிப்பு போராட்டத்திற்காக இரண்டு தோழர்கள் சிறை சென்று உயிர் நீத்திருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தியாகம். அவர்களுக்கு அதிகப் படியான மக்களுடைய மரியாதை கிடைக்க வேண்டும். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றால் அங்கிருக்கும் அனைத்து மக்களின் மரியாதையும் இந்த தோழர்களின் உடலுக்கு கிடைக்கும் என்றார். 
காவல்துறை அதிகாரி வந்து தடுத்து நிறுத்துகிறார். இந்த பக்கம் நீங்கள் செல்லக் கூடாது, அப்படியே நிறுத்துங்கள் என்கிறார். அம்மையார் திரும்பி தோழர்களைப் பார்த்து அப்படியே உட்காருங்கள் என்கிறார். காவல்துறையினரை நோக்கி உங்களால் எங்களை திருப்பியனுப்ப முடியாது. நீங்கள் சொல்லும் பாதையில் செல்ல முடியாது. நாங்கள் முடிவு செய்த பாதையில்தான் எங்கள் தோழர்களை எடுத்துச் செல்வோம் என்று திட்டவட்டமாக கூறினார். தன்னுடைய கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து, அந்த தோழர்களின் உடல்களை காவிரிக் கரைக்கு எடுத்துச்சென்றார். 
இந்தத் துணிச்சல் யாரிடமிருந்து வந்தது? அய்யா போட்ட கொள்கை உரம். அதனால்தான் இந்த இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மிகத்தெளிவான ஒரு சிந்தனை இருந்தது.
நெருக்கடி நிலையக் கொண்டு வந்த இந்திரா காந்திக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம், பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. முதலில் ஒரு இடத்தில் மட்டும் காட்டுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணியம்மையார், இந்திரா காந்தி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி காட்டச் சொல்லி தொண்டர்களுக்கு ஆணையிடுகிறார். மணியம்மையாரும் ஒரு கருப்புக் கொடியோடு செல்லும்போது போலிசார் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். அங்கே ஒரு தொண்டரை ஒரு காவல் அதிகாரி அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து ஏன் இப்படி ஒன்றுமறியாத ஒரு அப்பாவியை போட்டு இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த காவல் அதிகாரி தடியோடு அம்மியாரை நோக்கி ஓடி வருகிறார். மரியாதையில்லாமல் ஒருமையில் ஏசுகிறார். இதையெல்லாம் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவரும் ஒரு அதிகாரிதான். 
இவர்களெல்லாம் யார்? மூத்திரச் சட்டியை தூக்கிக் கொண்டு மேடை மேடையாக ஏறி எந்த சமூகத்தின் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டுமென்று பெரியார் பாடுபட்டாரோ, எந்த சமூகம் முன்னேறி இன்னொரு சமூகத்தைப் போல வாழவேண்டுமென்று பெரியார் விரும்பினாரோ, அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அம்மையார் இவ்வாறு சொல்கிறார், அவர் என்னைத் தாக்க வந்ததுகூட எனக்கு வருத்தமாக இல்லை. அவர் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. 
இப்படி ஒவ்வொரு விசயமாக 1973ல் பெரியாரின் இறப்புக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்திச் செல்கிறார். இதுவே மிகப்பெரும் சாதனை.
பெரியார்-மணியம்மை திருமணத்தின் போது மிகச் சிறப்பாக அடுக்கு மொழியில் பேசக்கூடியவர்களெல்லாம், பக்கம் பக்கமாக, எழுதுகிறார்கள். வேதனைப்பட்டோம், அய்யோ விரட்டப்பட்டோம் என்றெல்லாம் பல அடுக்கு மொழி வசனங்கள் பேசினார்கள். அய்யாவோடு, அம்மாவோடு கூடவே இருந்த தோழர்கள், ஒரு தாத்தா தனக்கு பணிவிடை செய்த பாவையைத் திருமணம் செய்து கொண்டார் என்று எழுதினார்கள். இப்படியெல்லாம் பேசிய தோழர்கள் எந்தளவுக்கு கொள்கையை உள்வாங்கியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்தத் திருமணம் என்ன காரணத்துக்காக நடந்ததோ, அதையல்லாமல் வேறொரு உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. 
யாருக்கெல்லாம் பதவி ஆசை இருந்ததோ, யாரெல்லாம் பதவியில் அமர ஆசைப்பட்டார்களோ, அவர்கள் எல்லாம், இந்த திருமணத்தைக் காரணம் காட்டி, கழகத்தை விட்டு வெளியேறினார்கள். எந்த பெரியார் சீர்திருத்த திருமணத்தை ஆதரித்தாரோ, பால்ய விவாகத்தை எதிர்த்தாரோ, அதே பெரியார் ஒரு சிறுமியை திருமணம் செய்து கொண்டார் என்று கூறினார்கள். திருமணம் நடந்தபோது சிறுமியோ, ஒன்றும் அறியாதவரோ இல்லை. 29 வயது பூர்த்தியடைந்த, சில வருடங்கள் கழகப் பணியாற்றியவர்.  
பெரியார் அவருடைய அறிக்கையில் வயதானவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது விதவைகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவ்வாறு கூறிய பெரியாரே எப்படி மணியம்மையை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார்கள். 
மணியம்மையை திருமணம் செய்து கொண்டது அரசியல் காரணங்களுக்காக மட்டுமேயன்றி, சுக துக்கங்களுக்காக அல்ல. இதை மக்கள் உணர்ந்து கொள்ளும்படி கடைசிவரை வாழ்ந்து காட்டிவிட்டு சென்றிருக்கிறார் மணியம்மையார். 
இன்னும் மணியம்மையார் குறித்து நிறைய பேசலாம். நேரம் கருதி இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம். - எழுத்து வடிவம்: யூசுப் பாசித்

No comments:

Post a Comment