Tuesday 31 March 2020

எமெர்ஜென்சி காலத்தில் தனியாக வீட்டுக்கு வந்த மணியம்மையார் - கனிமொழி எம்.பி




       ஒவ்வொருமுறையும் ஒரு நிகழ்ச்சிக்காக திடலுக்கு வரும்பொழுது ஏதோ தாயின் கற்பகிரகத்திற்கே மீண்டும் போவதை போன்ற ஒரு உணர்வோடே நான் வருகிறேன்.

       நான் பெரியாரை படித்து அறிந்து இருக்கிறேன். அவரை பார்க்கக் கூடிய வாய்ப்போ, அவரை நேரடியாக அறிந்துக்கொள்ளும் வாய்ப்போ எனக்கு இருந்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றிய ஆர்வம், அவரது கொள்கைகளை பற்றி ஆர்வம், பெரியாரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற விழைவு எனக்கு ஏற்பட்டப் போது எனக்கு உறுதுணையாக, பெரியார் என்ற அந்த கொள்கைச் சுடரை தெரிந்துக்கொள்ள எனக்கு தூண்டலாக இருந்தது அய்யா ஆசிரியர் அவர்கள் தான் என்றால் அதில் மிகையில்லை. அந்த வகையிலே என் அறிவுக்கு ஆசிரியராக இருக்கக்கூடியவர் தான் அய்யா அவர்கள்.

       அம்மா அவர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால், பலருக்கு பல நினைவுகள் இருக்கும். தந்தை பெரியாரை நான் சந்திக்க கூடிய வாய்ப்பை பெற்றிருக்காவிட்டாலும் அம்மாவை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் சிலதடவை பெற்றிருக்கிறேன். அவர் எவ்வளவு மென்மையானவர், அன்பானவர் அதே நேரத்தில் எவ்வளவு கொள்ளை உறுதியானவர் என்பதை பற்றியெல்லாம் இங்கே பேசியவர்கள் எடுத்துச்சொன்னார்கள்.

       எமெர்ஜென்சி காலத்திலே அவர் எவ்வளவு உறுதியோடு அதற்கு பணியாமல் அதை எதிர்த்து நின்றார்கள் என்பதைபற்றியெல்லாம் இந்த நூலிலும் சொல்லப்பட்டிருக்கிறது, நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால், திராவிடர் கழகத்தை போல கொள்கை உறுதியோடு இருக்கும் அத்தனை கட்சிகளும் எமெர்ஜென்சி காலக்கட்டத்திலே பாடாய் படுத்தப்பட்டது நாம் அனைவரும் அறிந்தது தான். திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும் தலைவர்களும் எப்படி பந்தாடப்பட்டார்கள், சிறையிலே அடைக்கப்பட்டார்கள், என்னென்ன அல்லல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் நாம் அறிந்தது தான்.

       அந்த நேரத்திலே, என் வீட்டிற்கு சோதனை என்ற பெயரில், ஒரு பத்து பதினைந்து பேர் திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்துப்பார்த்த போது வந்து இருந்தார்கள். எனக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி கூட இருக்கும். என்னைக்கூட பள்ளிக்கூடத்திற்கு போகவிட மாட்டார்கள். அதனால் எனக்கு விடுமுறை கிடைத்துவிடும். ஆனால், அந்த பதினைந்து பேர் ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு அங்குலமாக பூத்தொட்டியை கூட விட்டுவைக்காமல் சோதனையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இது பலதடவை நடந்து இருக்கிறது. என் தாயை, வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து காலையில் இருந்து மாலை வரை வைத்திருப்பார்கள். நான் பள்ளிக்கூடத்தில் இருந்து நேராக அங்கு செல்லும் நாட்கள் எல்லாம் இருந்திருக்கிறது. காலையில் இருந்து மாலை வரை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். குடைந்துக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலிலே வீட்டிற்கு கூட வருவதற்க்கு பலர் பயப்படுவார்கள். வீட்டிற்கு வரக்கூடிய கழகத்தினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தினர். தலைவர் கலைஞர் கூட யார் யார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாமல், "அண்ணா நினைவு நாளுக்கு வரமுடியாதவர்கள்” என்று அந்த பட்டியலை இட வேண்டிய சூழல் இருந்ததை பற்றியெல்லாம் நாம் படித்து இருக்கிறோம்.

       அப்படிப்பட்ட நிலையிலே, பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட பேசப் பயப்படுவதால் வீட்டில் யாருமே இருக்கமாட்டார்கள். நான், என் வயதான பாட்டி, அம்மா இவர்கள் மட்டுமே இருப்போம். ஒருநாள் நான் வீட்டிற்கு பின்னால், ஒரு வழியிருக்கும், அங்கே விளையாடிக்கொண்டிருந்தேன். திடீரென பார்த்தால் ஒரு அம்மையார் வந்து, "என்னப்பா அம்மா எங்க?" என்று என்னைக்கேட்டார்கள். திரும்பிப்பார்த்தால், அங்கே மணியம்மையார் நின்றுக்கொண்டிருந்தார்கள். அம்மா எங்க இருக்காங்க? நான் வீட்டை சுத்திசுத்தி வரேன் யாரையும் காணும்? நீ மட்டும் இங்கே விளையாடிக்கிட்டு இருக்க? வீட்ல யாருமே இல்லையா?என்றுக் கேட்டார்கள். நான், அம்மா உள்ளே இருக்கிறார்கள் என்று கூறியபொழுது, "இது என்ன கொடுமை?, வீட்டில் என்னென்னன்னு கேட்க கூட ஆளில்லாத ஒரு நிலையிலே நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கண்ணீரோடு என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போய் என் தாயாரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

       எப்படியொரு  எளிமை? எப்படியொரு மனது?  தானே தேடிக்கொண்டு, தனியாக, கூடக்கூட யாரையும் அழைத்துவராமல், வந்து என் தாயாரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தைரியமாக   இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார். இன்று இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது கூட, என் தாயார் ராஜாத்தி அம்மையார், இந்த நிகழ்வை சொல்லித்தான் கண்கலங்கினார்கள். அப்படிப்பட்ட ஒரு அன்புள்ளம் படைத்தவர். வாடக்கூடிய, தவிக்கக்கூடிய அத்தனை பேருக்கும் உறுதுணையாக இருக்குக்கூடிய அந்த மனஉறுதி படைத்தவர் தான் அன்னை மணியம்மையார் அவர்கள். இந்த அன்பிற்கு பின்னால் தான் அவரது உறுதி இருக்கிறது என்பதை நாம் அவரை பற்றி தெரிந்துக்கொள்ளும் போது அறிய முடியும்.



- கனிமொழி எம். பி

மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா 16-03-2010 அன்று மாலை நடந்த கூட்டத்தில் கவிஞர்.கனிமொழி (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் ஆற்றிய உரை.


No comments:

Post a Comment