Saturday 25 July 2020

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [முடிவுகள் மறுபரிசீலனை!!] - கனிமொழி ம. வீ

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [முடிவுகள் மறுபரிசீலனை!!] - கனிமொழி ம. வீ

முகநூலில்  தோழர் இனியன் அவர்கள் தந்தை பெரியாரிடம் அவருக்குப் பிடித்த குணம் , அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது,  தன் முடிவுகளைப் பெரியார்  மறுபரிசீலனை செய்யும் பாங்கு  என்றார். அந்தக் கூற்றில் தான் எத்தனை உண்மை?!
தந்தை பெரியார் தன் கொள்கையில் உறுதியானவர்.  தான் கொண்ட கொள்கைக்காக தன் முடிவுகளை   மறுபரிசீலனை செய்து இனநலமே  பெரிது என்று பல நேரங்களில் நிரூபித்துக்காட்டியவர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையில் நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது நம் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது. நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என வாதிட்டுக் கொண்டிருந்தால் காலத்திற்கேற்ப நாம் தகவமைத்துக் கொள்ளாமல் போகலாம். குறிப்பாக பொது வாழ்வில் அரசியலில் காலத்திற்கேற்ப முடிவுகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
தன் இளமைப் பருவம் முதலே பெரியாரிடம் அந்தக் குணம் இருந்ததை அவர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்ற போது உணர்ந்து கொள்ள முடியும். தன்னுடைய 25 -வது வயதில் , காசிக்குத் துறவு மேற்கொள்ளப் பயணிக்கிறார். பல இன்னல்களுக்குப் பின் காசியை அடைந்து , உணவிற்குச் சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் உணவு என்பதைக் கண்டு மனம் வெதும்புகிறார். எச்சில் இலைகளை உண்டு தன் பசியைத் தீர்த்துக் கொண்டு தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு மடத்தில் வேலைக்குச் சேருகின்றார். அந்த சாமியார் மடத்தில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் அவருக்கு அருவருப்பைத் தருகின்றன. காசி வாழ்வு புண்ணியமானது, செம்மையானது என்ற வைதீக கூற்றை அவர் நம்பி அந்த ஊருக்குச் சென்றார். ஆனால் அந்த ஊரில் ஆண்களும் - பெண்களும் மது அருந்தி வெளிப்படையாக விபச்சாரம் செய்தபோது, அவர்  அந்த நகரம் புண்ணியத் தளம் என்று சகித்துக் கொண்டு இருக்கவில்லை. உடனடியாக அந்த ஊரிலிருந்து கிளம்பினார். இந்த மனித சமுதாயத்திற்குத் தன்னலமற்று உழைக்க வேண்டும் என்ற உந்துதல் , பொது வாழ்க்கைக்கு முழு நேரம்  வர வேண்டும் என்ற அவா அவருக்கு அங்கு தான் ஏற்படுகின்றது.
தான் காசி மீது வைத்திருந்த பார்வையை அங்கே நடக்கும் கீழான செயல்களைப் பார்த்தவுடன் உடனடியாக மாற்றிக்கொண்டு பயணித்தவர் தந்தை பெரியார்.
இன்றைக்கும் பலர், தாங்கள் ஒன்றின் மீது கொண்டுள்ள பிடிப்பை அதன் பாதகங்கள் தெரிந்தபோதும் மாற்றிக்கொள்ளாமல் பயணிப்பதைப் பார்க்கின்றோம். அவர்கள் பெரியாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய குணம் இது.
அதுமட்டுமல்ல,  காங்கிரஸில் இருக்கும்போது காந்தியார் மதுவிற்குப் பயன்படும் மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்திவிட வேண்டும் என்று கூறியபோது, தன் தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் தந்தை பெரியார். ஆனால் பிற்காலத்தில் , மதுவிலக்கு பற்றி தந்தை பெரியார் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். மதுவிலக்கு என்பது அதிகார ஆணவமே ஒழிய , மனிதத்தன்மையில் சேர்ந்ததல்ல  என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார் என்று 1971 இல் தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார். 

சமூகத்தில் எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு எதிராக அரசால் செய்யப்படும் செயல்களை மறைக்கவே மதுவிலக்கு பயன்படுகிறது என்று தன் அரசியல் அனுபவத்தால் அவர் உணர்ந்து கொண்டார்.

1953
இல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, அவர் மதுக்கடைகளை மூடிவிட்டு மக்களிடம் நற்பெயர் கொண்டார், அதனால் மக்கள் அவர் முதற்கட்டமாக மூடிய 2500 தொடக்கப்பள்ளிகளைப் பற்றி கேள்வி எழுப்பிடவில்லை. மதுவிலக்கு என்பது தூய்மை வாதம் என்றே பெரியார் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் ஜாதிய உணர்வோடு, வர்க்க உணர்வோடு ஆணாதிக்க உணர்வோடு இருப்பது பற்றிய விமர்சனம் எதுவும் இல்லாமல், அவன் மது அருந்தாமல் இருக்கின்றான் என்ற ஒரே காரணத்திற்காக அவனை ஆதரிப்பது மடத்தனமானது, சமூகநீதியைப் பற்றி அரசிற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் ஒரு புரிதலும் இல்லாமல் வெறும் மது விலக்கு மட்டும்  ஒரு அரசு செயல்படுத்தினால் போதும் என்பதும் சரியான அரசியல் நிலைப்பாடு இல்லை  என்பது தான் பெரியாரின் கருத்தாக இருந்தது.

அதே போல, 1925 நவம்பர் மாதத்தில் ஈரோட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தந்தை பெரியார் காங்கிரஸ் -சை ஒழித்தே தீர வேண்டும் என்று வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால் 1953 இல் ராஜாஜியின் குலக்கல்வியை ஒழிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரஸின் சார்பில் காமராசரை ஆதரித்தார். தான் காங்கிரஸ் - ஐ எந்தக்காலத்திலும் ஆதரிக்க மாட்டேன் என்ற கொள்கையைத் தந்தை பெரியார் மாற்றிக்கொண்டதை நாம் பார்க்கின்றோம். திமுக தொடங்கப்பட்டபோது கடுமையான மாறுபாடு கொண்டிருந்த தந்தை பெரியார், கருத்து மாறுபாடுகள் விலகும்போது , மீண்டும் விடுதலையில் திமுக என்றே எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
பல நேரங்களில் தான் எடுத்திட்ட முடிவுகளிலிருந்து தந்தை பெரியார் மாறியிருக்கலாம் ஆனால் முழுதும் அது தன் கொள்கை சார்ந்த நலனுக்கே என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிவுகளைத் தேவை கருதி மறுபரிசீலனை செய்யும் நேர்த்தியைத் தந்தை பெரியாரிடமிருந்து கற்றுக்கொண்டு, வாழ்க்கையிலும் அலுவலக செயல்பாடுகளிலும் நாம் செயல்படுத்துவோம் !!

-        தொடரும்

No comments:

Post a Comment