Saturday 25 July 2020

நாகூர் ஹனிபா கச்சேரிக்காரர் அல்ல! - யாசிர் RM

நாகூர் ஹனிபா கச்சேரிக்காரர் அல்ல! - யாசிர் RM

ல்லக்குடி கொண்ட கருணாநிதி...” என்ற பாடல் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான பாடல். அந்தப் பாடலில் ஒலிக்கும் கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனிபா.
நாகூர் அனிபா நீதிக் கட்சியில் தனது பயணத்தைத் தொடங்கினார். சிறு வயதிலேயே கலைஞரோடு சேர்ந்து, பெரியாரை அழைத்துக் கூட்டம் போட்டார் ஹனிபா. திருவாரூரில் நீதிக்கட்சி மாநாடு (1940) நடந்த போது, செஞ்சட்டைப் படைக்குத் தலைமை தாங்கியவர் நாகூர் ஹனிபா. நீதிக் கட்சியின் வரலாற்றில் முக்கியமான இடம்பிடித்த இந்த மாநாட்டில்தான் ‘திராவிட நாடு, திராவிடர்க்கே’ என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது.
பின்பு அது திராவிடர் கழகமாக மாறியபோதும் அதில் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் பொது கூட்டத்தைக் கலைக்க, மின்சாரத்தை ஆஃப் செய்வார்கள், பாம்பைக் கூட்டத்திற்குள் தூக்கி எறிவார்கள். அழுகிய முட்டையை மேடையில் உள்ளவர்கள் மீது கயவர்கள் வீசுவார்கள். அப்படியொரு முறை தி.க. மேடையில் நாகூர் அனிபா பாடிக் கொண்டிருக்கும் போது, அவர் மீது அழுகிய முட்டையை வீசினார்கள்.
தன் முகத்தின் மீது முட்டை வழிந்து செல்வதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். அப்போது பேரறிஞர் அண்ணா, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து ஹனிபா அவர்களுக்குத் துடைத்து விட்டார்.
பெரியாரிடமிருந்து பிரிந்து திமுக-வை அண்ணா தொடங்கிய போது முதல் வாழ்த்து செய்தியைக் கடிதம் மூலம் அனுப்பியவர் ஹனிபா.
நீதிக்கட்சி, தி.க, திமுக-வின் தொடக்க விழா மேடை உட்பட 15,000 மேடைகளில் அவர் பாடியுள்ளார்.
பலரும் ஹனிபா அவர்களை கச்சேரிக்காரர் என்ற அடையாளத்துடன் தான் வரலாற்றை அணுகுகின்றனர். அது தவறு. கட்சிக்கான பல போராட்டங்களைச் செய்து சிறை சென்றுள்ளார் நாகூர் ஹனிபா.
1953-ல் தனிநாடு பிரிவினை கேட்ட தந்தை பெரியாரைப் பிரதமர் நேரு திட்டியவுடன், நேரு பேசியதற்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தார் பேரறிஞர் அண்ணா. அது மட்டுமல்ல, டால்மியாபுரம் பெயர் மாற்றம், ராஜாஜியின் குலக்கல்வி எதிர்ப்பு என்று மும்முனை போராட்டத்தை அறிவித்தது திமுக.
இந்த மும்முனை போராட்டம் தான் திமுக-வை மக்கள் சக்தியாக மாற்றியது என்றே கூறலாம். தொண்டர் படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மும்முனை போராட்டம் நடந்தது. அப்போது தான் நேருவின் சென்னை பயணம் முடிவானது. நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்தார் அண்ணா. உடனே அண்ணா, கலைஞர் என எல்லாத் தலைவர்களும் முதல் நாளே கைது செய்யப்பட்டனர்.
தலையில்லாத மனிதன் போல, தலைவர்கள் இல்லாமல் எப்படிக் கருப்புக் கொடி காட்டுவது என்று தொண்டர்கள் யோசித்தனர். கருப்புக் கொடி காட்டும் போராட்டம் அவ்வளவு தான் என்றே நினைத்தனர்.
ஆனால் சென்னை வந்திறங்கிய நேருவுக்கு விமான நிலையத்தில் கருப்புக் கொடி காட்டி சாதித்தனர், 4 நபர்கள். அவர்கள் சி.பி.சிற்றரசு, நாகூர் ஹனிபா, நாஞ்சில் மனோகரன் மற்றும் தென்னரசு ஆகியோர். கடும் பாதுகாப்பையும் மீறி போராட்டத்தை வெற்றி பெறச் செய்தனர்.
எல்லோரும் தயங்கி நின்ற போது, சிறை உறுதி எனத் தெரிந்தும் சாதித்தவர்களில் நாகூர் ஹனிபாவும் ஒருவர்.
இதில் ஏன் நாகூர் ஹனிபாவைக் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், கலைத் துறையினர் யாரும் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தேவையில்லை என்று சலுகை அளித்திருந்தார் அண்ணா. இந்தச் சலுகையைப் பயன்படுத்தி எம்ஜிஆர் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் நாகூர் ஹனிபா எந்த போராட்டத்தையும் புறக்கணித்தது இல்லை. அண்ணா அளித்த சலுகை போராட்டங்களைக் கண்டு அஞ்சுபவர்களுக்குத் தான் எனக்கல்ல என்று சொல்லித் தயங்காமல் சிறை செல்வார்.
அவருடைய போராட்டத்தில் மற்றுமொரு சிறப்புக்குரிய போராட்டம் தான் 1952 இந்தி எதிர்ப்பு போராட்டம். திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலை நாகூர் ஹனிபா, கலைஞர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு முற்றுகையிட்டனர்.
அண்ணா அறிவித்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம், அரசியலமைப்புச் சட்ட நகல் எரிப்பு போராட்டம் என எல்லாப் போராட்டத்திலும் கலந்து கொண்டு கைதானார்.
1957 ல் திமுக முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டது. கட்சியின் பிரச்சாரப் பீரங்கியாக இருந்த நாகூர் ஹனிபா அவர்களுக்கு நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் பேரறிஞர் அண்ணா.
பாட்டுக் கச்சேரி பாடுகிறார் என்பதற்காக நாகூர் ஹனிபா அவர்களுக்குப் பேரறிஞர் அண்ணா சீட் வழங்கவில்லை. அவர் செய்த கட்சிப் பணிக்காகவே சீட் கொடுத்தார்.
மொத்தம் 81,753 வாக்காளர்கள். 4 முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த நேரத்தில் காங்கிரசுக்குப் பெரியாரின் ஆதரவு இருந்தது. காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது. எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்டும் போட்டியிட்டது. திமுக-விற்கு, இது முதல் தேர்தல். அப்போது உதயசூரியன் என்ற பொதுச் சின்னம் கிடையாது. கிடைக்கும் சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டும்.
நாகப்பட்டிணத்தில் காங். சார்பாக N.S.ராமலிங்கம் அவர்களும், கம்யூனிஸ்ட் சார்பில் ஜீவா அவர்களும், திமுக சார்பில் நாகூர் ஹனிபா அவர்களும் களமிறங்கினர்.
தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 47,133 வாக்குகள் பதிவாகின. காங். சார்பாகப் போட்டியிட்ட ராமலிங்கம் 24,552 (52.09%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் ஜீவா 13,847 (29.38%) வாக்குகள் பெற்றார்.
திமுக சார்பில் நாகூர் ஹனிபா பெற்றது 6,527 வாக்குகள் மட்டுமே. 13.85% சதவீத வாக்குகள் பெற்று 3 ஆம் இடம். நான்காம் இடத்தில் ராஜகோபால் நாயுடு 2,207 வாக்குகள் பெற்றார்.
திமுக 117 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்றது. மொத்தமாக 14% வாக்குகள்.
கட்சிக்கான களப்பணியில் பெரும் பங்களித்த ஹனிபாவால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
1970-ல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வக்ஃபு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து 2002-ல் நடந்த தேர்தலிலும் அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் தோல்வி அடைந்தார்.
இனியும் நாகூர் ஹனிபாவை வெறும் திமுக மேடையில் பாட்டுப் பாடுபவர் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆகச் சிறந்த திராவிட களப் போராளி தான் நாகூர் ஹனிபா.


No comments:

Post a Comment