Saturday 25 July 2020

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [உள உறுதி!] - கனிமொழி ம. வீ

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [உள உறுதி!] - கனிமொழி ம. வீ

ந்த கொரோனா கால முடக்கத்தில் பெரும்பாலானோர் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளோம்; பலருக்கு வேலை இழப்பு , இனிவரும் மாதங்களில் ஊரடங்கு தொடர்ந்தால் எவ்வாறு சமாளிப்பது என்ற கவலை என மனது இறுகிப்போயிருக்கிறது; எந்த துன்பம் வரினும் இந்த வாழ்க்கையை நடத்தித்தான் தீர வேண்டும் என்ற உள உறுதியைத் தந்தை பெரியாரிடமிருந்தே நாம் பெறுகிறோம்;

திரு வி.க தந்தை பெரியாரின் நண்பர் ; பல கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் இருந்தபோதும் உற்ற நண்பர்களாகப் பயணித்தவர்கள்; அவர் தந்தை பெரியாரின் மன திண்மை பற்றிக் கூறும்போது ,

“1924 இல் மயிலாப்பூர் மந்தைவெளியில் பெரியார் சொற்பொழிவு ஆற்றினார்; அதற்காக அவர் மீது 124- ஏ அரசவெறுப்பு வழக்கு தொடரப்பட்டது; வழக்கு விசாரணைக்காக அவர் ஈரோட்டிலிருந்து சென்னை வந்திருந்தார்; நாளை வழக்கு விசாரணை; எத்தனை ஆண்டுகள் தண்டனையோ என்ற கவலை திரு வி காவிற்கு இருந்தது; இரவு உணவிற்குப் பின் பாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் வெளித்திண்ணையில் இருவரும் உறங்கியுள்ளனர் ; திரு வி. க அவர்களுக்குத் தூக்கம் வரவே இல்லை; தந்தை பெரியாரோ குறட்டை விட்டுத் தூங்கிவிட்டார்கள்; நல்ல மழை வேறு பெய்கிறது ; குளிர்காற்று வீசுகிறது; திரு வி.க எழுந்து உட்கார்ந்து கொண்டார் ; பெரியார் அப்போதும் உறங்குவதைக் கண்டு பெரியாருக்கு இரும்பு மனம் என நினைத்துக்கொண்டாராம்; காலை விடிந்தவுடன் , “இரவு நல்ல மழை தெரியுமா?” எனத் திரு வி. க கேட்டாராம், “எனக்குத் தெரியவில்லை , நன்றாக உறங்கிவிட்டேன்” என்ற தந்தை பெரியாரை வியப்புடன் பார்த்திருக்கிறார் திரு.வி. க . அவர் மீது அரசவெறுப்பு வழக்குப் போடப்பட்டுள்ளது, என்ன தண்டனை வரும் எனத் தெரியாது, ஆனால் அதைப்பற்றி கவலையின்றி அஞ்சாநெஞ்சத்துடன் இருந்த பாங்கு; அந்த வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது”.

அன்னை நாகம்மையார், காதலியாக - மனைவியாக- தோழியாகத் தந்தை பெரியாருக்கு இருந்தவர், அவர் மறைந்தபோது அந்த துன்பத்தை தன்னுள் விழுங்கிவிட்டு அடுத்த நாளே 144 தடை உத்தரவை மீறி ஒரு திருமணத்தை நடத்திவைத்தவர் தந்தை பெரியார்.

1938 முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெல்லாரி சிறையில் கடுமையான நெருக்குதல்களுக்கு ஆளானபோதும், தன் உடல் உபாதைகளுடன் போராடி சிறை மீண்டார் தந்தை பெரியார்; துன்பம் கண்டு - நோய் கண்டு துவளாத மனம் தான் தந்தை பெரியாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது;

தனிப்பட்ட தன் வாழ்வின் துன்பங்கள் பெரிதும் தன் போராட்ட வாழ்வினை பாதிக்காமல் பயணித்துக் கொண்டே இருந்தவர் தந்தை பெரியார் ; ஆனால் இனத்திற்கு வரும் இழப்புகளைக் கண்டு மனம் துடித்திருக்கிறார் என வரலாறு சொல்கிறது;

திராவிட நாடு கோரிக்கை உச்சக்கட்டமான நேரத்தில் 2-வது உலகப் போர் தொடங்கியது. அப்போது அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்சரவையில் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரின் செயலராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார்; எப்படியும் இலண்டன் சென்று சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினால் திராவிட நாடு நமக்குக் கிடைத்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்; அவர் சென்ற விமானம் மறைந்துபோனது; அதில் பயணித்தோர் என்ன ஆனார்கள் என இன்று வரை நமக்குத் தெரியாது; பன்னீர்செல்வம் இறந்துவிட்டதாக இலண்டன் அறிவித்தபோது , தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார்கள்;

அப்போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தி , இரங்கல் இலக்கியம் என்று இன்றும் வகைப்படுத்தப்படுகிறது;

அந்த இரங்கலில், “என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே இலண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. ஆனால் பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகிரென்கின்றது.” என்று எழுதினார்!

ஆம் , இனத்திற்கு ஒரு இழப்பவரின் அந்த துன்பம் தந்தை பெரியாரைக் கொஞ்சம் கடுமையாகவே பாதித்தது என்றபோதும் இறுதி வரை தன் பயணத்தில் அவர் சோர்வடையவே இல்லை; பல துன்பங்களை அவர் தன் வாழ்நாளில்  சந்தித்தபோதும் உறுதியாகப் பயணித்த தந்தை பெரியாரின் நெஞ்சுரத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!
-        தொடரும்

No comments:

Post a Comment