Saturday 25 July 2020

கவர்மேன் என்கின்ற நான் - யூசுப் பாசித்

கவர்மேன் என்கின்ற நான் - யூசுப் பாசித்

கிண்டில்! இந்தத் தளம் எனக்குப் புதிதல்ல. என் புத்தகப்புழு நண்பன் "சிவகுமார்" மூலம்  2012-13 வாக்கில் அறிமுகமான தளம்தான். அப்போது இது வெறும் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதற்கான தளம் என்றே தெரியும். இதில் தமிழ்ப் புத்தகங்களும் இருக்கும் என்று தெரியாது. எந்த ஒரு விசயத்தைப் புதிதாக கற்றுக் கொண்டாலும், தமிழில் இருக்குமா என்றுதான் இப்போது தேடுகிறேன். ஆனால் அப்போது அப்படியல்ல. ஹிந்தி படிக்காமல் பின் தங்கிவிட்டோம் என்ற பொய்ப் பரப்புரைகளை நம்பிக் கொண்டிருந்த காலம். அதனால் அதிகமாக ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. அது என் ஆங்கிலப் புலமையை வளர்த்ததில் பெரும்பங்கு வகுத்தது. அதன் மூலம் இன்னும் அதிகம் படிக்கப் படிக்கப் பல உண்மைகள் புரிய ஆரம்பித்தன. திராவிட சித்தாந்தத்தின் தீவிர ஆதரவாளர் ஆனேன்.

முகநூலில் பல தீவிரத் திராவிட ஆதரவாளர்களை பின் தொடர ஆரம்பித்தேன். அப்படித்தான், இரவிசங்கர் அண்ணனையும் அவரின் மற்ற நண்பர்களையும் பின் தொடர்ந்தேன். ஒரு நாள், கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டி குறித்தும், அதற்காக சென் பாலன் எழுதிய "பரங்கிமலை இரயில் நிலையம்" குறித்த பதிவுகள் நிறைய வரத் தொடங்கின. சில விமர்சனங்களைப் படித்தபின், புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ₹49 கொடுத்து வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கிண்டில் அன்லிமிடெட் குறித்து இரவிசங்கர் ஒரு பதிவு எழுதியிருந்தார். உடனே சிவாவிடம் விசாரித்தேன். அவன் சொன்னான், நீ எதிர்பார்க்கும் எல்லாப் புத்தகங்களும் கிடைக்காது, அதனால் முதலில் கிடைக்கும் 3 மாதம் இலவசக் காலத்தைப் பயன்படுத்திப் பார். பிடித்திருந்தால் தொடர் என்றான். அவன் கிண்டில் டேப்லெட் வைத்திருக்கிறான், ஆனால் கிண்டில் அன்லிமிடெட் வாங்கவில்லை. சரி, வாங்குவோம் என்று கிண்டில் அன்லிமிடெட் வாங்கினேன். முதலில் சென் பாலனின் புத்தகத்தைத்தான் வாங்கினேன். ஒரு வார இறுதி நாளில், காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அறைக்கு வரும் வழியில் படித்துக் கொண்டே நடந்து வந்தேன். அந்த விறுவிறுப்பான கதையில் மூழ்கி அறையினுள் நுழையாமல் வாசலில் நின்றே படித்து முடித்துவிட்டுத்தான் நுழைந்தேன். அருமையான கதை. அதில் இழையோடிய அந்தக் கேலியும் கிண்டலும் என்னை வெகுவாக ஈர்த்தது. என்னுடைய முதல் கிண்டில் விமர்சனம் எழுதினேன்.

சில மாதங்களில் சென் பாலன் வெற்றி பெற்றார் என்று கேள்விப்பட்ட போது சந்தோசமாக இருந்தது. அதன்பின் நடந்த பாராட்டு விழா காணொளிகளைப் பார்த்தேன். அப்போதுதான், இதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என் நினைத்தேன். பிறகு திராவிடர் வாசக வட்டத்தில் இணைந்தேன். பல நல்ல நட்புகளை அங்குப் பெற்றேன். 

2019-ம் ஆண்டுக்கான பென் டு பப்ளிஷ் போட்டி அறிவிப்பு அண்ணாவின் பிறந்தநாளில் வெளியானது. புத்தகம் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. சரி, இந்த முறை புத்தகம் எழுதும் ஒருவருக்கு உதவலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் பிரபல எழுத்தாளர், அந்த முகநூல் குழுவில் சிக்கினார். அவர் எல்லோரையும் எழுதச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எழுதச் சொல்லி நான் சொன்னேன். அவரும் ஒத்துக்கொண்டார். 

பயணம் இல்லை பணயம் கதை தயாரானது. அது அவருடைய சொந்த அனுபவம். உண்மைச் சம்பவமே இவ்வளவு சுவாரசியமாக இருந்தால், இதைக் கொஞ்சம் மானே, தேனே, பொன் மானே எனச் சேர்த்து ஒரு கதையாக எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். முதலில் உண்மைக் கதையைத் தயார் செய்தோம். அந்த உண்மை சம்பவம் நடந்த அதே காலகட்டத்தில் நானும் பிரான்ஸில் இருந்தேன். அவர் இருந்தது பாரிஸ். நான் இருந்தது அங்கிருந்து தென்கிழக்கில் சுமார் 600 கி.மீ.களுக்கு அப்பால் கிரனோபிள் என்ற நகரத்தில். நானும் அந்த முறை தனியாக ஒரு ரோட் ட்ரிப் மார்ஸைல்-க்கு சென்று வந்தேன். அவர் போல் என்னிடம் சுவாரஸ்யமான கதை இல்லை. ஆனால் என்னுடைய பிரான்ஸ் பயண அனுபவம், அவருடைய கதையில் விடுபட்ட இடங்களை நிரப்ப உபயோகமானது. அடுத்து கதையை மேலும் சுவாரஸ்யமாக்க, சில பல திருத்தங்களைச் செய்தோம். அவர் ஏற்கனவே புத்தகம் எழுதியிருந்ததால் அவரது நண்பர்களையும் சேர்த்து கதையைத் திருத்தினோம். பிறகு அட்டைப் படத்திற்கு ஒரு யோசனை டிராப்ட் செய்து அனுப்பினேன். அதைப் பார்த்தவர், தம்பி இது டிராப்டா? இல்லை, பைனல் அட்டைப் படமா? என்று தடுமாறினார். பேசாமல் நீயே இதை முடித்து அட்டைப் படத்தைச் செய்துவிடலாமே என்றார். அட்டைப்படத்தைத் தயார் செய்து முடித்தேன். நன்றாக வந்திருந்தது. அனைவருக்கும் பிடித்திருந்தது. அட்டைப்படத்தை வெளியிட்டோம். 

அடுத்து, சென் பாலன் அவரது "மாயப் பெருநிலம்" புத்தகத்திற்கு டிரெய்லர் வெளியிட்டார். நாமும் வெளியிடுவோமா? என்று பிரபலம் கேட்டார். இதைவிடச் சிறப்பாகச் செய்வோம் என்று டிரெய்லர்/டீசர் செய்தோம். அதை வெளியிட்டபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. நாங்கள் செய்ததைத் தொடர்ந்து புத்தகம் எழுதிய பல நண்பர்கள் அவர்களின் புத்தகத்திற்கு டிரெய்லர் வெளியிட்டார்கள். புத்தகம் எழுதச் சொல்வதோடு நிறுத்தாமல், அதை எப்படி வாசகர்களிடம் எடுத்துச் செல்லலாம் என்பதற்கு புதிய புதிய உத்திகளையும் அறிமுகப்படுத்தினார் சென் பாலன்.

தொடர்ந்து பிரபலம் சார், அவரது நண்பர்கள் சிலரும் அட்டைப்படம் தயாரிக்க உதவி கேட்டார். எனக்கும் இந்த வேலை பிடித்திருந்ததால், ஒத்துக்கொண்டேன். அடுத்ததாக அ.சிவகுமார் அண்ணனின் "ஆயில் கைதி" புத்தகத்திற்கு அட்டைப்படம் செய்தேன். தொடர்ந்து பல கோரிக்கைகள் வந்து கொண்டே இருந்தன. என்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன். போட்டி முடியும் நாளில், 17 புத்தகங்களுக்கு அட்டைப்படம் செய்திருந்தேன். போட்டி முடிந்த பின்பும் சில புத்தங்களுக்குச் செய்து கொடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த அட்டைப்படம் உதயகுமார் எழுதிய “நெருப்பிறகு” கவிதைத் தொகுப்பிற்குத் தயார் செய்தது. அது கவிதைத் தொகுப்பு என்பதால் உதயகுமார் ஒரு சிறந்த அட்டைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்காக அதிகம் மெனக்கெட்டுப் பல புதிய விசயங்களைக் கற்றுக்கொண்டு, சிறப்பாகச் செய்து முடித்தோம். பாலசிங்கும் உதயகுமாரும் இணைந்து எழுதிய “உரிமைகளின் காவலன்” அட்டைப்படம் நிறைய வரவேற்பைப் பெற்றது. 

திராவிட வாசகர் வட்டம் சார்பாக அய்யா சுப.வீ, அருள்மொழி அக்கா, மருத்துவர் எழிலன் ஆகியோரின் முக்கியமான ஒரு உரையைப் புத்தகமாக்கினோம். அவற்றில் மரு. எழிலனின் புத்தகம் தவிர மற்ற 2 புத்தகங்களுக்கும் அட்டைப்படம் செய்தேன். காணொளியாக இருந்த உரைகளைப் புத்தகமாக மாற்றியது ஒரு புது முயற்சியாக இருந்தது. திராவிட கருத்தியலை அனைத்துத் தளங்களிலும் பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு இந்த முயற்சி ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

இத்தனையும் நடந்து முடிந்தவரை, நான் யாரையுமே நேரில் பார்த்ததில்லை. பார்க்காமலே, ஒரே கொள்கையைக் கொண்டதால் எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. இந்த வருடம் வெற்றிவிழா நடக்கும்போது கலந்து கொண்டால் அனைவரையும் சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் டிசம்பர் 20 அன்று புத்தக அறிமுக விழா நடத்துவதாக அறிவிப்பு வந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, முன்னரே அனைவரையும் சந்திக்கப் போகிறோம் என்று. உடனே சென்னை போக டிக்கெட் புக் செய்துவிட்டேன். விழாவிற்காக அழைப்பிதழ் அடித்து சொந்தங்களை எல்லாம் அழைத்து வருவதாகப் பிரபலம் சார் கூறினார். அழைப்பிதழை வடிவமைத்தேன். பிறகு அந்த டெம்ப்ளேட்டை அனைவரையும் பயன்படுத்திக் கொள்ளப் பகிர்ந்து கொண்டோம். விழாவின் போது ஒரு மின் புத்தகக் கண்காட்சியும் நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள்.  கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பதாகைகள் டிசைன் செய்ய இரவி அண்ணன் கேட்டார். சரி செய்யலாம் என்று ஆரம்பித்தேன். ஒரு வழியாகப் பாதி முடித்தேன். உதவி தேவைப்பட்டது. சென் பாலனிடம் சொன்னேன். அஜ்மல் அண்ணன் கிடைத்தார். யாசிர்-ம் உதவ முன் வந்தார். மூவரும் சேர்ந்து பதாகைகள் தயார் செய்தோம். பழூரான் விக்னேஷ் ஆனந்த் அவற்றை அச்சடித்து, காட்சிப்படுத்தினார். 

அந்தப் புத்தக அறிமுக விழாவில்தான் முதல் முறையாக எல்லோரையும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்றுதான் முதல் முறையாகச் சந்தித்தாலும், அத்தனை பேரும் அன்புடன் பழகினர். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது என்றே தெரியவில்லை. அதிகமாகப் புகைப்படங்கள் கூட எடுக்கவில்லை. பிரபலம் சாருடன் ஒன்றும், கார்த்திக் இராமசாமியுடன் ஒரு புகைப்படமும் மட்டுமே என்னிடம் இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வில் சந்தித்த அத்தனை நண்பர்களும் நினைவில் நீங்காது இடம்பிடித்துவிட்டார்கள்.

முதல் சுற்று முடிந்து, இறுதிச் சுற்றுக்குத் தேர்வான புத்தகங்கள் அறிவிக்கப் பட்டபோது, பாலசிங்கின் ”பயணம் இல்லை பணயம்” புத்தகம் இடம் பெற்றதில் வியப்பொன்றுமில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இறுதி முடிவுகளுக்காகக் காத்திருந்த வேளையில், கொரோனா பரவல் காரணமாகப் பரிசளிப்பு விழாவை அமேசான் ஒத்திவைத்தது. கொரோனா பீதியில் போட்டியை அனைவரும் மறந்தே போயிருந்தோம். திடீரென ஒருநாள் அமேசான் முடிவுகளை அறிவித்து விட்டது. ”பயணம் இல்லை பணயம்” இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. நான் வடிவமைத்த முதல் அட்டைப்படம், பங்களித்த முதல் புத்தகமே பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு நானே அந்தப் பரிசை வென்றது போல் ஒரு மகிழ்ச்சி.

நல்ல நண்பர்கள் ஒன்று கூடினால் எப்போதும் நன்மையான காரியங்களிலேயே ஈடுபடுவார்கள். இந்தத் திராவிட வாசகர் வட்டத்தின் நண்பர்கள் இணைந்து இத்தனை புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் உழைப்பு அபாரமானது. இரவிசங்கர் அண்ணனும், சென் பாலனும் கொடுத்த ஊக்கத்தில்தான் இந்தப் போட்டியில் இந்த வருடம் இத்தனை புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அவர்களின் பணி எழுதச் சொல்வதோடு நின்றுவிடவில்லை. புத்தகத்தை எப்படி எல்லோருக்கும் எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது, படிக்க வைப்பது, விமர்சனம் எழுத வைப்பது என்று அனைத்து நிலைகளிலும் துணை நின்றார்கள். அதனால்தான் இந்த இமாலய வெற்றியைத் திராவிட வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரும் தாம் பெற்ற வெற்றியாக நினைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

இத்தோடு நிற்காமல், அடுத்தாக திராவிட வாசகர் வட்டத்தின் சார்பாகப் பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி ஒன்று நடத்தினோம். அது குறித்து, அடுத்த இதழில் எழுதுகிறேன்.

இந்த வருடம் தமிழில் உள்ள 6 பரிசுகளில் 5 பரிசுகளை வென்றுள்ளோம். அடுத்தமுறை ஆங்கிலத்திலும் அதிகமாகப் பங்கு பெற்று வெற்றியை நிலைநாட்டுவோம்.

கிண்டில் நமதே!

No comments:

Post a Comment