Saturday 25 July 2020

கிண்டில் உலகில் கூட்டுப் பயணம் - கபிலன் காமராஜ்

கிண்டில் உலகில் கூட்டுப் பயணம் - கபிலன் காமராஜ்

ன் நினைவில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியில் நடந்த ஒரு கட்டுரை போட்டி தான் நான் முதன்முதலில் பள்ளி பாடங்களை தாண்டி எழுதிய முதல் அனுபவம். மூன்று தலைப்புகள் கொடுத்திருந்தார்கள், அவற்றை பற்றி பள்ளி நூலகம், மாவட்ட பொது நூலகம், நாளிதழ்கள் என தேடி விவரம் சேகரித்து குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். போட்டி நடக்கும் வகுப்பறைக்குள் சென்று அமர்ந்ததும், கருப்பலகையில் 'இந்தியாவின் விண்வெளி சாதனை' பற்றிய தலைப்பை எழுதிப் போட்டனர்.

தலைப்பை பார்த்ததும், நான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை கொண்டு ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். எனக்கு வேகமாக எழுத வரவே வராது. அப்படியே எழுதினாலும் அது யாரும் படிக்கவியலாத அளவிற்கான கையெழுத்தாகத் தான் இருக்கும். கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசத்திற்குள் என்னால் இயன்ற அளவு எழுதி முடித்தேன். மதிப்பெண்களை கடந்து கற்றலை எதிர்நோக்கும் எனக்கு போட்டியில் கலந்து கொண்டதே வெற்றியாகத்தான் தெரிந்தது.

அதன் பின்னர் நான் போட்டிக்காக எழுதாவிட்டாலும் எனக்காக சிலவற்றை எழுதிக் கொண்டிருப்பேன். அவற்றை சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருந்தது. ஆனால் அது ஒரு குறுகிய வட்டம். என்னுடைய அந்த சிறிய வட்டத்திற்குள் புத்தகம் வாசிக்கும் நண்பர்கள் மிகக் குறைவு. வாசிக்கும் சிலருக்கும் மாறுபட்ட பல கருத்துக்கள் இருக்கும்.

பொறியியல் கல்வி சேர்ந்ததும் தமிழில் எழுதும் வழக்கம் முற்றிலும் நின்று போனது. திக்கி திணறி ஆங்கிலம் பேசும் எனக்கு கல்லூரி நாட்களில் ஆங்கிலப் புலமையை பெறுவதில் தான் அதிக கவனமும் இருந்தது என்பது தான் அதற்கு முக்கிய காரணம். கல்லூரி முடித்து வேலைக்கு சென்ற சில ஆண்டுகள் கழித்து முகநூல் கணக்கு துவங்கியதும் எழுதிய முதல் பதிவு தமிழில் தான். அந்தப் பதிவும் எனது ஐரோப்பிய பயணத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பற்றியது. பல ஆண்டுகள் தேக்கிய வைத்திருந்த ஆசைக்கு வடிகாலாக முகநூல் அமைந்தது. முகநூலில் என்னுடைய பதிவுகள் 99% தமிழில் மட்டுமே எழுதினேன். எழுதஎழுத எனக்கென ஒரு எழுத்து நடையும், குட்டியாய் கதை சொல்லும் பாணியும் பிடிபடத் துவங்கியது. அதை தாண்டி நான் ஏதும் பெரிதாக எண்ணியதில்லை.

சென்ற ஆண்டின் துவக்கத்தில் கிண்டில் போட்டியில் சென் பாலன் வென்றதும், அதை கொண்டாடிய பொழுது பேசிய பலரின் கருத்துக்களை கோர்த்தால் அவை அனைத்தும் 'நாம் எல்லோரும் ஏன் எழுத வேண்டும், புத்தகம் பதிப்பிக்க வேண்டும்' என்ற ஒற்றை புள்ளியில் வந்து நிற்கும். அதற்கான காரணிகள் பல இருந்தாலும், நான் பெரிதாக கருதும் காரணம் எழுத்து, இலக்கியம், புத்தகம் பதிப்பிப்பது என்பது ஒரு சிறு கூட்டத்தின் கட்டுப்பாட்டை தாண்டி அனைவருக்கும் பொதுவான, செய்ய கூடிய ஒரு காரியமாக அமையவேண்டும் என்பதுதான். அதுதானே ஜனாயகம், சமத்துவம், சமூகநீதி. கிண்டில் தளம் அந்த வாய்ப்பை கொடுக்கிறது. ஆர்வமுள்ள எவரும் புத்தகம் எழுதி பதிப்பித்து தங்களுக்கான வாசகர்களை தேடிக் கொள்ளும் பெரும் வாய்ப்பு அது.

2019ஆம் ஆண்டிற்கான கிண்டில் போட்டி அறிவிக்கப்பட்டதும் முந்தைய ஆண்டுகளைவிட பலர் ஆர்வமுடன் எழுதி பதிப்பித்தனர். அப்படி பதிப்பிக்கப்பட்ட நூல்களில் நான் வாசித்த முதல் நூல் சென் பாலனின் வெற்றியை கிண்டலடிக்க இலக்கியவாதிகள் சொன்ன 'நாலாந்தர எழுத்து' என்ற பதத்தை புத்தகத்தின் பெயராக வைத்து வெளியிட்ட வியன் பிரதீப் எழுதிய சிறுகதை தொகுப்பு. புத்தகத்தை படித்துவிட்டு வியனுடன் நள்ளிரவில் நெடுநேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்போது வியன் "நீங்களும் எழுதுங்கள்" என விதை போட்டார். பாலசிங்கின் புத்தகத்தை படித்து விமர்சனம் எழுதிய பொழுது "அம்மா சொல்லியே எழுதாதவர், என் புத்தகத்தை படிச்சுட்டு எழுதப்போறார்" என பதிவிட்டார்.

ஒரு போட்டியில் பங்கு பெறுபவர்கள் மற்றவர்களை போட்டியாக கருதி விலக்காமல் "நீங்களும் எழுதி போட்டியில் கலந்து கொள்ளுங்கள்" என அழைக்கும் பண்பு எனக்கு புது அனுபவம். போட்டி காலத்தில் இந்தி பதிப்பிற்கு இணையாக தமிழ் பதிப்புகளும் எண்ணிக்கையில் போட்டியிடுவதை பார்த்து நாமும் இதற்கு ஒரு பங்களிப்போம் என ஒரு சிறுகதை எழுதத் துவங்கினேன். கதை எழுத ஆரம்பித்ததும் அது நெடுநெடுவென வளர்ந்து சற்று நெடுங் கதையாக முடிந்தது.

நூலின் அட்டைப்படத்தை வெளியிடுமாறு சென் பாலனை கேட்டதும் சம்மதித்து வெளியிட்டார். ஏன் சென் பாலன் வெளியிடுமாறு நான் கேட்டேன்? காரணம் மிக எளிது, நான் புத்தகம் எழுதும் பொழுதும், அமேசான் கிண்டிலில் பயனர் விவரங்கள் நிரப்பும் பொழுதும் எழுந்த பல சந்தேங்களை சென் பாலனிடம் மெஸ்சேஞ்சுரில் கேட்ட சில நிமிடங்களில் பதில் சொல்லுவார். அவருக்கும் தெரியாத விவரங்களை தேடிக் கண்டுபிடித்து என் ஐயங்களை நீக்கினார். போட்டி காலத்தில் எழுத முயலும் சக போட்டியாளருக்கு இப்படியும் ஒருவர் உதவுவார் என அறிந்து கொண்டதும் என் 'வலியறியாத தோட்டா' நூலின் உருவாக்கத்தில் தான்.

சென் பாலன் அட்டை படத்தை வெளியிட்டதும், அதை முகநூலில் பல திராவிட வாசகர் வட்ட நண்பர்கள் பகிர்ந்தார்கள். என் புத்தகம் வெளியானதும் அமேசான் தளத்தில் வந்த கருத்துரைகள் பெரும்பாலும் சமூக வலைதளத்தில் இணைந்த தோழர்களிடம் இருந்து தான். ஒருவரின் முதல் படைப்பை உற்சாகமாக வரவேற்று பாராட்டும் மனம் 100ஆண்டுகளாக திராவிட இயக்கம் இந்த மண்ணில் வளர்த்தெடுத்த பண்பின் பயன்.

ஆனால் சமூக வலைதளத்தில் மாற்றுக் கருத்து கொண்டோர் தொடர்ந்து கிண்டில் பதிப்புகளை, அதில் பங்குபெற்ற திராவிட தோழர்களை பகடி செய்து, 'இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதைக்காக பேசிக் கொண்டிந்த வேளையில் வியன் பிரதீப் கொடுத்த யோசனையின்படி திராவிட வாசகர் வட்டம் சார்பாக 'அறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி' நடத்த முடிவெடுத்து என்னை ஒருங்கிணைக்கும் படி கேட்டதும் ஏற்றுக் கொண்டேன். போட்டியின் நோக்கம் புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, தமிழில் படைப்புகள் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்க ஊக்குவிப்பதே. கிண்டிலை 'ஆக்கிரமித்த' திராவிட இயக்கத்தினர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி அறிவித்ததும் அதற்கு புரவலர்களாக பணம், தங்க நாணயம், வரைப்பட்டிகை என வாரி வழங்கினார்கள்.

போட்டியின் விதியில் மூன்றில் ஒரு பரிசு பெண்களுக்கு என இடஒதுக்கீடு செய்து அறிவித்தோம். முதலில் சிலர் பதிப்பித்து செய்தி அனுப்பினார்கள். அவர்களை கொண்டு ஒரு சிறு குழு துவங்கினோம். அடுத்தடுத்து யாரெல்லாம் போட்டிக்கு நூல் பதிப்பிக்கிறார்களோ அவர்களை அந்த குழுவில் இணைத்து விவாதித்தோம். அவர்கள் எழுதிய கதைகளை வாசித்து கருத்துக்கள் சொன்னோம். பலர் முதல் முறை எழுத்தாளர்கள், அவர்களுக்கு அமேசான் கிண்டில் பற்றி பல சந்தேகங்கள். அதே குழுவில் சென் பாலன், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, யூசுப் பாசித், பாலாசிங் மற்றும் வியன் சேர்த்ததும், புதிய எழுத்தாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது, விளம்பர யுக்தி, அட்டைப்பட வடிவமைப்பு என தங்களுக்கு தெரிந்த பலவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். குழுவிற்குள் இருந்த எழுத்தாளர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி, சந்தேகங்களை தீர்த்து, போட்டி என்றில்லாமல் எழுதுவது, அவற்றை விளம்பரபடுத்துவது என ஒரு பயிற்சி பட்டறை போல இயங்கினார்கள்.

போட்டி பற்றி முகநூல் விளம்பரம் கொடுத்ததும், அதன் பின்னூட்டத்தில் பல திராவிட ஒவ்வாமை வசவுகள் வந்தன. அவற்றை புறம் தள்ளிவிட்டு போட்டியில் கலந்து கொண்டு எழுத ஆர்வமுடன் இருபவர்களுக்கு அமேசான் கிண்டில் என்றால் என்ன என்பது துவங்கி புத்தகம் பதிப்பிப்பது வரை உதவினோம். ரவிசங்கர் அய்யாக்கண்ணு ஒரு நேரலை பயிற்சி பட்டறை நிகழ்வை நடத்தியபொழுது பலர் கலந்து கொண்டு கிண்டில் புத்தகம் பதிப்பிப்பது எப்படி என அறிந்து கொண்டார்கள்.

அண்ணா நினைவு சிறுவர் கதை போட்டியில் புத்தகம் பதிப்பிக்கும் காலக்கெடு முடிவடைந்த பொழுது 115 எழுத்தாளர்கள் 190 புத்தகங்களை பதிப்பித்திருந்தனர். அமேசான் போட்டிக்கு பதிப்பிக்கப்பட்ட மொத்த தமிழ் நூல்களின் எண்ணிக்கை 492. இந்தப் புள்ளி விவரங்களின்படி பன்னாட்டு நிறுவனம் நடத்தும் போட்டிக்கு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பாதியை நெருங்கும் அளவிற்கு திராவிட வாசகர் வட்டம் நடத்திய போட்டிக்கு வரவேற்பு இருந்தது.

அதைவிட முக்கியமான விடயம் போட்டியில் பங்குபெற்ற எழுத்தாளர்களில் பெரும்பான்மை பெண்கள். உற்சாகமாக கலந்து கொண்டு எழுதிய அந்த பெண் எழுத்தாளர்களில் 60வயதை கடந்துவர்களும் உண்டு பள்ளிச் சிறுமியும் உண்டு. பணிஓய்வு பெற்ற பின்னர் கற்பனை குதிரைகளை கட்டவிழ்க்க கிண்டில் உலகம் கிடைத்ததாக அவர் கூறிய பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.  இந்த கட்டுரையின் துவக்கத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நான் எழுதிய முதல் கட்டுரை பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா, அந்த கட்டுரை எழுதிய நினைவை தவிர என்னிடம் வேறேதும் இல்லை. ஆனால் இந்தப் போட்டியில் பங்குபெற்ற 13வயது பள்ளி மாணவியின் கிண்டில் நூல் காலத்திற்கும் அவர் பெருமையாக சொல்லிக் கொள்ள இணையத்தில் இருக்கும்.

புதிய எழுத்தாளர்கள், வாசகர்கள், படைப்புகள் அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் உருவாவது என் பார்வையில் "Creating an eco space" என்று சொல்வேன். கல்வெட்டிலும் பனையோலையிலும் இருந்த தமிழ் அச்சு உலகிற்கு வந்து நிலைபெற்றது போல தொழில்நுட்ப காலத்தையும் தமிழ் மொழி வெல்ல நாம் உருவாக்கும் eco space. இதில் தனி பயணம் என்பதை விட நாம் கூட்டாக பயணித்தால் நெடுந்தூரம் செல்லலாம். படைப்போம், வாசிப்போம், பயணிப்போம்.


- கபிலன் காமராஜ்

No comments:

Post a Comment