Saturday 25 July 2020

இது எழுத்துலகின் பொற்காலம் - கதிர் ஆர்.எஸ்

இது எழுத்துலகின் பொற்காலம் - கதிர் ஆர்.எஸ்

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் ஆங்கிலத்தில் “Honey Don't Say You Love Me: A Non-Novel” என்ற புத்தகத்தை எழுதிய கதிர். ஆர். எஸ் அவர்களிடம் சில கேள்விகள்:

கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? 

நண்பர் சென் பாலன் அவர்களால் அறிமுகமும் ஆர்வமும் ஏற்பட்டது. நண்பர் பூபதி என்னை தொடர்ந்து எழுதச்சொல்லிக் கொண்டே இருந்தார். போட்டி தொடங்கி 2 மாதம் முடிந்த பின் ஒரு நாள் இரவு முடிவு செய்து எழுதத் தொடங்கினேன். அந்த இரவே நாவலின் மொத்த கன்டென்டையும் முடித்துவிட்டேன்.

எடிட்டிங் முன்னுரை கவர் டிசைன். இவற்றை இறுதிசெய்ய மேலும் 4 நாட்கள் ஆயின.2019 டிசம்பர் 15 போட்டிக்கு இறுதி நாள்.நான் 14 டிசம்பர் அன்று நாவலை தரவேற்றம் செய்தேன்.
சென் பாலன்தான் முதல் பிரதியை வாங்கினார். சென்பாலனும் பூபதியும் இல்லையென்றால் இந்த நாவல் எண்ணமே வந்திருக்காது. எழுதிய நாவலை படித்து குறை நிறைகளை திருத்த உதவியவர்கள் என் அன்புக்குரிய ரெபல் ரவியும், ஜென்னியும் ஆவர்.

ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

தமிழில் நூற்றுக்கணக்கான நூல்கள் வந்துவிட்டிருந்தன. ஆங்கில நூல்கள் அதை விட அதிகம் என்றாலும் ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு வித மேட்டிமைத்தனமாக பார்க்கப்பட்டது.

கிராமத்தில் பிறந்து தமிழ் மீடியத்தில் படித்து பெரிய ஆங்கில மொழியறிவோ இலக்கண இலக்கிய அறிவோ  இல்லாத ஒரு சாதாரண மனிதனால்  முருமையான ஆங்கிலப் படைப்பை தர முடியுமா என எனக்குள் ஒரு கேள்வி இருந்தது.

தமிழில் எழுதுவது எனக்கு இயல்பானது. ஆங்கிலத்தில் எழுதுவது சவாலானது. மேலும்
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை தொடங்கிவிட்டேன்.

ஆங்கிலத்தில் சில சிறுகதைகள் பயணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். மும்பையிலிருந்த சினிமா நிறுவனம் ஒன்றிற்கு சில திரைக்கதைகளும் எழுதியிருக்கிறேன்.
(அவை படமாகவில்லை)

அந்த அனுபவம் தந்த துணிச்சலில் துணிந்து இறங்கினேன்.


தமிழர்கள் ஆங்கிலத்தில் பேச/எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. இந்தியச் சூழலில் அவசியமாகவும் இருக்கிறது. காரணம் நாம் பயின்ற சித்தாந்தங்கள் பண்பாட்டு பெருமைகள் நமக்குள்ளேயே இருந்து அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் வாழ்வியல் பற்றி தவறான கற்பிதங்கள் பரப்பப் படுகின்றன.

சர்வதேச சமூகத்தில் தமிழ், தமிழ்நாடு என்றால் ஃபில்டர் காஃபி, கோவில்கள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், பட்டுப் புடவை, ஆழ்வார்கள், சித்தர்கள் ஆன்மீகம் இப்படியான பிம்பங்களே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதைவிடக் கொடுமை தமிழர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்று கூட நம்புகிறார்கள்.
இவையெல்லாம் உண்மையா...? இதை உருவாக்கியவர்கள் யார்? எப்படி உருவானது? நமக்கு முன்பே ஆங்கிலம் பேச எழுத கற்றுக் கொண்ட சிலரால் தானே. தமது பண்பாட்டை தமிழர் பண்பாடு என நிறுவி வைத்திருக்கிறார்கள்.
இதை எப்படி மாற்றுவது? யார் மாற்றுவது? ஆங்கிலத்தில் பேசாமல் எழுதாமல் இவை எப்படி மாறும்?

நீங்கள் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு வாசிப்பு என்பது உச்ச நிலையை அடைந்திருப்பது நாம் வாழும் இந்த தொழில்நுட்ப யுகத்தில்தான்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் ஒரு நாளைக்கு சுமார் 3-4 மணி நேரம் படிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் இதை சாத்தியமாக்கியிருக்கின்றன.

சமூக ஊடகங்கள் வருவதற்கு முன் தினசரி படிக்கும் பழக்கத்தை நாளேடுகள் மட்டுமே தந்தன. அதுவும் ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே. அதை விட்டால் வார ஏடுகள். மாத இதழ்கள். அவை மேலும் சில மணி நேரங்கள் அவ்வளவுதான்.

பெருவாரியான மக்கள் தினமும் மணிக்கணக்கில் படிப்பது தற்காலத்தில்தான்.

அதிகமாக நிகழும் வாசிப்பு அதிக எழுத்தாளர்களையும் உருவாக்கியிருக்கிறது.

இதில் நல்ல எழுத்து நச்செழுத்து அரசியல் இலக்கியம் கட்டுக்கதைகள் இப்படி எது வேண்டுமானாலும்
இருக்கலாம்.

ஆனால் எல்லாவற்றையும் மக்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த சூழலை எழுத்துலகின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் புத்தக வாசிப்பு கொஞ்சம் சுணக்கமாக இருப்பதாவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் புத்தகங்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது.

உதாரணமாக என் புத்தகத்தை வாங்கியவர்கள் 1000 பேர் எனில் படித்தவர்கள்.100 பேர் மட்டுமே.

சமூக ஊடகத்தில் ஒருவர் எப்படி இயங்க வேண்டும். எப்படி தங்களை வளர்த்துக்கொண்டு சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கற்பகத் தருன்னு புராணங்கள்ல ஒன்னு சொல்லுவாங்களே. அது மாதிரிதான் சமூக ஊடகம். இதில் நீங்கள் விரும்புவதை பெற முடியும். அதற்கு உழைக்கவேண்டும். திறமையை வைத்துக்கொண்டு வாய்ப்புக்காக அங்கீகாரத்துக்காக அலைந்த காலம் ஒன்றிருந்தது.

ஆனால் இன்று சமூக ஊடகங்களில் சில ஆண்டுகள் உழைத்தால் போதும். உங்கள் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கலாம். இப்படி உங்கள் இலக்கு எதுவானாலும் சமூக ஊடகங்கள் அவற்றுக்கான சாத்தியங்களை வைத்திருக்கின்றன.

இந்த சாத்தியங்களை தருபவர்கள் உங்களைப் போலவே சமூக ஊடகத்தில் இருக்கும் உங்கள் சக நண்பர்கள். அவர்களைப் போலவே நீங்களும் உங்கள் பங்கினை இந்த சமூகத்திற்கு திருப்பித்தர வேண்டும். அதிகமில்லை ஒரு லைக் ஒரு ஷேர் அல்லது ஒரு ரைட் அப் போதுமானது. அவற்றை சமூகப் பொறுப்புடன் செய்ய வேண்டியது அவசியம்.

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எவை?

ஆங்கிலத்தில் சிட்னி ஷெல்டன். காரணம் சம கால எழுத்தாளர்களில் அவர் ஒருவரைத்தான் எனக்குத் தெரியும்..ஓ ஹென்றியைப் பிடிக்கும்..அவரின் மொழி பெயர்ப்பு கதைகளை படித்திருக்கிறேன்..


தமிழில் அறிஞர் அண்ணா, கலைஞர், ராஜேஷ்குமார், சென்பாலன் (நண்பர் என்பதற்காக அல்ல)

புத்தகங்கள் அதிகமில்லை.  ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, அனுராதா ரமணன் ஆகியோரது படைப்புகளை நாவல்களாகவும் தொடர்கதைகளாக படித்திருக்கிறேன்.

மனதைத்தொட்ட சிறுகதைகள் நிறைய உண்டு. பா. செயப் பிரகாசத்தின் இரவுக்காவலன் என்ற சிறுகதை இன்னும் என்னை கலங்க வைக்கக் கூடியது.
அதே போல அண்ணாவின் செவ்வாழை.

அறிவியல் தகவல்களை புனைவதில் ராஜேஷ்குமார் நாவல்கள் பிடிக்கும்.

ஆனந்த விகடனில் தொடராக வந்த எஸ். ராமகிருஷ்ணனின் துணையெழுத்து அந்த காலகட்டத்தில் ஒரு புதிய உணர்வைத்தந்தது.

Honey Don't Say You Love Me புத்தகத்தை வாசிக்க: https://amz.run/3K7o

No comments:

Post a Comment