Friday 2 April 2021

தமிழகத்தின் பார்ப்பன எதிர் மரபைக் காக்க திமுகவை ஆதரிக்கவேண்டும் - விஜயபாஸ்கர்

 தமிழகத்தின் பார்ப்பன எதிர் மரபைக் காக்க திமுகவை ஆதரிக்கவேண்டும் - விஜயபாஸ்கர்


மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்:

பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் இயற்கை சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த பழங்குடி மனிதரின் இயலா தன்மையிலிருந்து தோன்றியது மதம். தனியுடைமை வளர்ச்சி காலகட்டத்தில் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்க மதத்தைப் பயன்படுத்தினர். மதச்சடங்குகள் அரசின் சட்டங்கள் ஆகின. மதத்தின் தலைமைப் பீடங்கள் அதிகார வர்க்க தலைமைப் பீடங்களாக மாறின. மத நம்பிக்கைகளைக் கல்விக்கூடங்களில் போதிக்கப்படும் நிகழ்ச்சி நிரலாக இருந்தன. மக்களின் உணர்வை உருவாக்கும் கருவியாகவும், சமூகத்தின் வர்க்க கட்டுக்கோப்பின் மீதும், சமூக உறவுகளின் மீதும், மதம் செலுத்துகிற ஆதிக்கத்தை ஆய்ந்து அறிந்த காரல் மார்க்ஸ் ”மதம் என்பது மக்களுக்கு அபின்” என வர்ணித்தார். மார்க்சின் சமகாலத்தவரான வள்ளலார் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார். ஆனால் ஆட்சியாளர்களோ, தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் மதத்தை மக்களைத் திசை திருப்பும் கருவியாகக் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதேவேளையில் பெரும் மக்கள் கூட்டத்தை அடக்கி ஆளவும், மக்களை ஆழ்ந்த மயக்கத்தில் நீடித்திருக்க உதவும் கருவியாகவும் மதத்தைப் போற்றி வளர்ப்பதில் ஆளும் வர்க்கங்கள் கவனம் செலுத்தின.


நியூட்டன், கலிலியோ, கோபர்நிகஸ், சார்லஸ் டார்வின் எனப் பல்வேறு அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் மனிதன் இதுவரை கண்டறியாத கேள்விகளுக்கு விடை அளித்தன. அதன் விளைவாக, மக்கள் மத நம்பிக்கைகளிலிருந்து வெளியேறி மத ஆதிக்கத்தின் மீது கேள்விகளை எழுப்பினர். இது ஆளும் வர்க்கத்தின் ஏகபோக உரிமைக்கு இடைஞ்சலாகவும், ஆட்சிக்குத் தடையாகவும் மாறியது. எனவே வளர்ந்து வந்த அறிவியலின் முன்னேற்றத்தை மதம் பலவழிகளில் தடுக்க முயற்சி செய்தது. ஆட்சியாளர்களின் துணைகொண்டு மதத்தலைவர்கள் அறிவியலாளர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டித்தனர். அவர்களைச் சித்திரவதை செய்தனர். கழுமரத்தில் ஏற்றித் தீயிட்டுக் கொளுத்தினர். அறிவியல் நூல்களைத் தடைசெய்து அழித்தனர். இவ்வகையில் மதங்கள் பல நூற்றாண்டுகளாகப் பிற்போக்கான பாத்திரத்தையே வகித்தன. உலகில் வளர்ந்து வந்த அறிவியல் கருத்துக்களையும் ஜனநாயக சோஷலிச இயக்கத்தையும் தீவிரமாக ஈவிரக்கமற்ற வகையில் மதங்கள் எதிர்த்தன.அறிவியல் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் வளர்ந்து மதத்திலும் மத நம்பிக்கையிலும் பெரும் பிளவுகளை உருவாக்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் அரசியலிலிருந்து மதத்தைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அரசியல் கோட்பாடுகளையும் விதிகளையும் உருவாக்குவதில் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புறவயமான அழுத்தம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி மதச்சார்பற்ற அரசைச் சாத்தியமாக்கியது. கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரங்களில் தளர்வு ஏற்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட இந்த மாற்றங்கள் ஐரோப்பாவெங்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கின.


அதே காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் புழங்கிக்கொண்டிருந்த இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய எந்த அவசியமும் ஏற்படவில்லை. தங்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நீட்டித்துக் கொள்ளும் கருவியாக மதத்தைப் பயன்படுத்தினர். ஆட்சி நிர்வாகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே மத நம்பிக்கையில் ஆங்கிலேயர்கள் கை வைத்தபோது, பார்ப்பனர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தனர். முற்போக்கு எண்ணம் கொண்ட பார்ப்பன சீர்திருத்தவாதிகளான ராஜாராம் மோகன் ராய் போன்றோரின் முயற்சியால் சதி போன்ற சில மூடத்தனமான மத நம்பிக்கைகள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் மதம் மக்களின் வாழ்விலும் அரசியலிலும் விலக்க இயலாத ஆதிக்கத்தைச் செலுத்தியது.


மதத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சாதியப் பாகுபாடுகள் பெரும்பான்மை மக்களைச் சுரண்டி ஒடுக்கின. கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது, கோவில்களில், தெருக்களில் நடமாடும் உரிமை தடை செய்யப்பட்டிருந்தது. உணவு, உடை, திருமணம், சொத்துரிமை என மக்களின் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும், மத நம்பிக்கைகள் தலைமைப் பாத்திரம் வகித்தன. மதத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பார்ப்பனர்கள் இந்தியச் சமூகத்தின் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர்.


மனுவின் விதிக்கெதிராகப் பெரியாரின் புரட்சி:

மனுநீதி என்ற சமூகநீதிக்கு எதிரான சட்டம் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையைச் சட்டப்பூர்வமாக்கியது. பார்ப்பன இந்து மதம் அதற்குத் துணை நின்றது. மனுவின் சட்டத்தை மாற்றியமைக்க ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எந்தவிதமான புறவயமான நிர்ப்பந்தமும் ஏற்படவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சி நிர்வாகத்தில் உயர் பதவிகளையும் பார்ப்பனர்கள் வைத்ததால் மனுதர்ம சட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்கள் பார்த்துக் கொண்டனர். மேலும் மனுதர்மம் எவ்வாறு பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்களே நடத்தியதோ, அதே வகையில்தான் பிரிட்டிஷாரும் நடந்துகொண்டனர். இதற்கு உதாரணமாக அசாம் கோயில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக் கொன்ற ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்த வழக்கைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் 13, 1925 அன்று குடி அரசு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.


அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக் கொன்ற ஓர் ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததைக் கேட்க இந்தியர்கள் மனம் பதறும் என்பதில் ஆட்சேபனையில்லை. ஆனபோதிலும், இது முதல் தடவை அல்ல. இதற்கு முன் பல தடவைகளில் இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் செயில்காட் என்ற இடத்தில் ஓர் இந்திய ஸ்திரீயை நிர்வாணமாய் இழுத்துக்கொண்டு போய் ரத்தம் வரும்படியாகப் புணர்ந்த ஓர் ஐரோப்பிய சோல்ஜருக்கு 25 ரூபாய் அபராதம் விதித்த மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு எழுதுகையில்” ஓர் இந்திய ஸ்திரீயை, ஓர் ஐரோப்பியர் புணர்ந்ததை ஓர் பெரிய தப்பு என்பதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ரத்தம் வரும்படியாகப் புணர்ந்ததற்காக அபராதம்

விதிக்கும்படியிருக்கிறது. ஆதலால் அதற்காக 25 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது நேயர்கள் ஞாபகத்தில் இருக்கும். வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையும் இது போன்ற செய்கைகள் இந்து மதத்திற்கு ஆதாரமான மனுதர்ம சாஸ்திரத்தை நமக்கு ஞாபகமூட்டுகிறது. ஏறக்குறைய வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையும், செய்கையும், மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற விஷயத்தில், நமக்கு அதிகமான சந்தேகம் தோன்றுவதே கிடையாது.


ஏனெனில், மனு எட்டாவது அத்தியாயம் 380 சுலோகத்தில் ”பிராமணன் எப்பேர்ப்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக்கூடாது, காயமும் செய்யக்கூடாது, வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்” என்றும்; 381வது சுலோகத்தில் ”எவ்வளவு பெரிய குற்றம் ஆனாலும் பிராமணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது” என்றும்; 379வது சுலோகத்தில் ”பிராமணனுடைய தலையை மொட்டை அடிப்பது கொலைத் தண்டனையாகும்” என்றும்; ”ஸ்திரி விஷயங்களில் சூத்திரன் காவலில்லாத பிராமண ஸ்திரியைப் புணர்ந்தால் ஆண்குறியை அறுத்து, அவன் தேகம் முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி அவனுடைய எல்லாப் பொருட்களையும் பிடுங்கிக் கொள்ள வேண்டும்” என்றும்; ”ஒரு பிராமணன் கற்புடைய ஒரு ஸ்திரீயைத் துராக்கிரதமாகப் புணர்ந்தாளுங்கூட ஆயிரம் பணத்திற்குள் அபராதம் விதிக்க வேண்டும்” என்னும் கொள்கையுள்ள இந்து தர்ம சாஸ்திரங்களைப் பிரிட்டிஷார் பின்பற்றுவதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆனால் இவற்றை அனுபவித்துக்கொண்டு ஒரு பெரிய சமூகம் உயிர் வாழ்கிறதே என்பதைப் பற்றித்தான் நாம் கவலை கொள்கிறோம்.


இது பண்டைய காலச் சட்டமும் மட்டுமல்ல. நடைமுறையில் புழங்கி வருகிற நிகழ்காலம். மனுவின் சட்டப்படி, பார்ப்பனர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். பார்ப்பனரல்லாத மக்களுக்கு உணவகங்களிலும், பொதுக்குளங்களிலும், கோவில்களிலும், கல்விக் கூடங்களிலும், பொதுப்போக்குவரத்திலும் இடமில்லை. விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாது, பார்ப்பனரல்லாத மக்களைப் பல்வேறு சாதிகளாகப் பிரித்து, அவற்றில் உயர்வு - தாழ்வு கற்பித்து, எல்லோருக்கும் பார்ப்பனர்கள் மேல் வகுப்பார் என்றும், ஏனையோர் தாழ்ந்த வகுப்பார் என்றும் பிரித்து, அதற்கேற்ப கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கி, அவற்றை நிலைபெறச் செய்யக் கடவுள், மதம், சாஸ்திரம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


பார்ப்பன பாசிச எதிர்ப்பு மரபு:


மனுவின் பாகுபாட்டைச் சமரசமின்றி எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார் தந்தை பெரியார். மக்களை அரசியல்வயப்படுத்திக் கிளர்ச்சியை ஆரம்பித்தார். பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு, மதத்தை நிராகரித்து அறிவியலின் துணை கொண்டு, மக்களை வாழப் பழக்கினார். புதிய திருமண முறையை அறிமுகப்படுத்தினார். பழங்கால இலக்கியத்தில் உள்ள பிற்போக்குத் தனத்தை விமர்சித்தார். எழுத்தில், பேச்சில், இலக்கியத்தில், பண்பாட்டில், என அனைத்து துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். கல்விக்கூடங்கள் மக்களை அரசியல் மயப்படுத்தும் படிகளாக மாறின. முடிதிருத்தும் நிலையங்களில் இயக்கவாதிகள் ஒன்று கூடும் இடங்களாகின. தேநீர் விடுதிகளில் நீட்சேவும், காரல் மார்க்சும் கலிலியோவும் பேசுபொருள் ஆகினர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஐரோப்பாவை பிடித்து ஒரு பூதம், கம்யூனிசம் எனும் ஒரு பூதம்

பிடித்து ஆட்டுகிறது என்று கம்யூனிச எழுச்சியை வர்ணித்தார் மாமேதை காரல்மார்க்ஸ். அதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு அசுர பூதம் தமிழகத்தை மையமிட்டு இந்தியாவை உலுக்கியது.


காரல் மார்க்ஸ் உருவாக்கிய பொதுவுடைமை தத்துவம் என்ற தத்துவ அடிப்படையைப் புரட்சியாளர் லெனின் கைக்கொண்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை ரஷ்யாவில் ஏற்படுத்தினார். அதைப் போன்றதொரு தத்துவ அடிப்படையைத் தந்தை பெரியார் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது ஓயாத உழைப்பினால், தத்துவத்தைத் தமிழகமெங்கும் பரப்பி வலுவான ஓர் சமூக அடித்தளத்தை உருவாக்கினார். அவரிடம் தத்துவம் பயின்ற மாணாக்கர்கள் தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்றன. பத்திரிக்கைகள், சொற்பொழிவுகள், மாநாடுகள் என இடையறாது சமூக மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன.

பதவி, அதிகாரம் என்பதை மையப்படுத்தி, தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்ற அண்ணா தலைமையிலான பெரியாரின் மாணாக்கர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.


தேர்தல் வெற்றியின் மூலம் பெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டுதல்:


தந்தை பெரியார் ஏற்படுத்தியிருந்த வலுவான அடித்தளத்தை அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறந்த முறையில் பயன்படுத்தினர். கடவுள் மறுப்பு, நாத்திகம் என்ற பெரியாரின் கொள்கைகளிலிருந்து ஒன்றே குலம் , ஒருவனே தேவன் எனச் சற்று விலகினாலும், பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்தது திமுக. வலுவான திமுக என்ற கட்சி கட்டமைக்கப்பட்டது. சிற்சில தேர்தல் நேர சமரசங்களைச் செய்து, 1967 இல் தமிழக முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றினார் பேரறிஞர் அண்ணா.


ஆங்கில ஆட்சிக் காலத்தில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற நீதிக்கட்சி சார்பில் அமைச்சரவை அமைந்தாலும் மத நம்பிக்கையாளர்களாகவே நீதிக் கட்சி உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், அண்ணா தலைமையிலான ஆட்சி புதியதொரு தொடக்கத்தை உருவாக்கியது. பார்ப்பனரல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள், பார்ப்பனரல்லாத அமைச்சரவை, பார்ப்பனரல்லாத மக்களுக்கான அரசு எனப் புதுப் பாய்ச்சல் உருவாகியது. இந்தியாவெங்கும் நடக்காத மாற்றம் தமிழ்நாட்டில் நடந்தேறியது. கடவுளின் சாட்சியின் கீழ் பதவியேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உளமார உறுதி ஏற்றனர். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவது நகைப்புக்குரியதானது. மத நம்பிக்கைகள் அரசுக்கும், அரசு செயல்பாட்டுக்கும் வெளியே நிற்க ஆரம்பித்தன. பார்ப்பனர்களின் ஆதிக்கம் வீழ ஆரம்பித்தது.


பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்த பார்ப்பன சமூகக் கட்டமைப்பை வீழ்த்தியது பெரியார் கண்ட திராவிட இயக்கம். இட ஒதுக்கீடு வழியாகக் கல்வி வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்புத் தரப்பட்டது. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முழங்கிய பெரியார் எதையும் கேள்வி கேட்டுப் பரிசோதித்துப் பார்த்து நம்பு என்றார், நான் சொல்வதைச் சந்தேகிக்காமல் அப்படியே முழுமையாக நம்பு என்று இருந்த மத வழக்கிற்கு நேர் எதிரானது இது.

மொழி, இலக்கியம், எழுத்து, பேச்சு, கலை என அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் நடந்தன. பெரியார் அமைத்திருந்த அடித்தளத்தை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்துக்கொண்டது.


மார்க்சிய தத்துவத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த லெனினுக்குப் புரட்சி தேவைப்பட்டது. அண்ணாவும் திமுகவும் வெகுஜன மக்களைத் தேர்தல் வழியிலேயே பழகி தன் வயப்படுத்தி ஆட்சியப் பிடித்தனர். ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினர். நாலாந்தர மக்களுக்கான ஆட்சி எனப் பெருமைப் பட்டார் கலைஞர். பெரியாரின் கொள்கைகளைச் சட்டப்பூர்வமான வடிவில் நிலைநாட்டினர். சுயமரியாதை திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றது. பெண்கள் சொத்துரிமை பெற்றனர். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை நிலைநாட்டக் கலைஞர் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் முயற்சி செய்தார். பெரியார், நீதிக்கட்சி, திமுக 100 ஆண்டுகளாக ஏற்பட்ட புரட்சி புதிய சமூக மரபைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது.


பார்ப்பன பாசிச இயக்கம்:

வரலாறெங்கும் உயர் தகுதியைப் பெற்று வந்த பிராமணர் என்ற அடையாளம் மறக்கக் கூடிய, மறைக்கப்பட வேண்டிய அடையாளமாகத் தமிழ் நாட்டில் மாறியது. திராவிட இயக்கம் தமிழ்நாட்டை மதச்சார்பற்ற மண்ணாக மாற்றிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் இந்தியாவில் தோன்றிய ஆர்எஸ்எஸ் என்ற பார்ப்பன பாசிச இயக்கம் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்திச் சமூகப் பிளவுகளைக் கூர்மையாக்கி, தேர்தல் காலங்களில் சட்டப்பூர்வமான முறையில் கலவரங்கள் நடத்தப்பட்டு வன்முறை களத்தை வட இந்தியாவில் உருவாக்கியது. மத நம்பிக்கைகள் உலகெங்கும் குறைந்து வருகின்ற

இந்த நூற்றாண்டில், இந்தியாவில் மட்டும் மதத்தின் பெயரால் விவாதங்கள் நடைபெற்றன. சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் சட்டப்பூர்வமற்ற செயல்கள் சட்ட வடிவம் பெற்றன. மதக்கொள்கைகளுக்காகக் கொலைகள் கணக்கின்றி நாடெங்கும் நடந்தன. பெரும்பான்மைவாதம் தலை தூக்கியது. மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறாமல் இருக்கச் சமூக அடித்தளத்தில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக வேலை செய்தது. மதச் சிறுபான்மையினர் இருப்புக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. எதிர்த்துப் பேசியவர்கள் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். பலர் கொலை செய்யப்பட்டனர். பார்ப்பன பாசிச போக்கை எதிர்ப்பவர்களுக்குச் சிறைவாசம் எளிதாகக் கிடைத்தது.


தேர்தல் மேடைகளில் யார் இந்து மதத்தைச் சிறந்த முறையில் பாதுகாக்கிறார்கள் என்பதும் யார் இந்து என்பது முக்கிய வாதங்களாக மாறின. நாட்டின் முக்கியத் தேசிய கட்சியான காங்கிரஸ் காங்கிரசை இந்து விரோத கட்சி என்றது ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்க பரிவாரங்கள். காங்கிரசின் ராகுல் காந்தியோ அதற்கு அடிபணியும் விதமாக நான் ஒரு பிராமணன் எனத் தனது பூணூலை காண்பித்துப் பாஜகவின் இந்து மத அடிப்படைவாதத்திற்கு அடிபணிந்தார். பாஜகவைத் தீவிரமாக எதிர்ப்பது போல் காட்சியளிக்கும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் நான் ஒரு பிராமணத்தி, எனக்கு இந்து மதப்பண்பாட்டைச் சொல்லித்தராதே எனப் பாஜகவின் இந்து மாயையில் சிக்கினார். காங்கிரஸின் மற்ற தலைவர்களும் மற்றும் மாநிலக் கட்சித் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்களும் இந்துக்கள் தான், நாங்களும் இந்து கட்சிதான் என்ற அடையாள நெருக்கடிக்குள் சிக்கின. இந்து என்ற அடையாளத்தை ஏற்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சங்கப் பரிவாரங்கள் மதச் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தின. அரசியல் இயக்கங்களோ இந்த நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, கட்சியின் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.


தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றாலும், பணபலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி, ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக தலைமையிலான ஆட்சி உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில், நீதித்துறையில், அரசு நிர்வாகத் துறையில் கடந்த 70 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த வளர்ச்சித் திசை திருப்பப்பட்டுச் சங்க பரிவாரத்தின் ஆட்சி ஆசிபெற்ற ஆட்கள் நுழைந்தனர். ஒன்று சங்கியாக இரு, இல்லையேல் செத்துமடி என்ற ஒரு பிம்பம் நாடெங்கும் உருவாக்கப்பட்டது. பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் என அனைத்து நிறுவனங்களும் பாசிச பார்ப்பன பாசிசத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. எதிர்ப்பவர் எவருமே இருக்கக் கூடாது எனக் கொக்கரித்தது பார்ப்பன பாசிசம். எதிர்த்தால் தேசத் துரோகிப் பட்டம், இணைந்தால் தியாகிப் பட்டம்.


தேர்தலைப் பயன்படுத்திய, எதிர் எதிர் மரபுகள்:

கடந்த நூற்றாண்டில் இரு வேறுபட்ட அரசியல் கலாச்சாரங்கள் இந்தியாவிற்குள் உருவாகின. தமிழகத்தில் உருவான திராவிட இயக்கம் மனு சட்டத்தின் கீழ் இயங்கிய அரசை, சட்டப்பூர்வமான முறையிலும், அன்றைய சட்டத்திற்குப் புறம்பான முறையிலும், போராடி மனு நீதிச் சட்டத்தைச் சட்டப்பூர்வமற்றதாக மாற்ற முனைந்தது. பெரியார் அமைத்த சமூக அடித்தளத்தை இறுகப் பற்றிய திராவிட முன்னேற்றக்கழகம் தேர்தல் வழியில் இயங்கி, மனுவின் சட்டங்களை மாற்றி எழுத முனைந்தது. அதன் எதிரொலி இந்தியாவெங்கும் ஒலித்தது.


அதே வேளையில் பாஜக 100 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சட்டப்பூர்வமான தாக இருந்த மனு நீதிச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முனைந்தது. அதற்கான போலியான சமூக அடித்தளத்தை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது. அந்த அடித்தளத்தை இறுகப் பற்றிக் கொண்ட பார்ப்பன பாசிச பாஜக, தேர்தல் வழியில் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சட்டப்பூர்வமற்றதாக இருந்த செயல்களுக்குச் சட்ட வடிவம் தந்தது. மாட்டுக்கறி உண்பவர்களை அடித்துக் கொலை செய்தல் சட்டபூர்வ செயலாக மாறியது. பல நூற்றாண்டுகளாக இருந்த மசூதி இடிக்கப்பட்டது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றம், நீதிமன்றங்கள் கேலிப் பொருள் ஆகின. இவை அனைத்துமே தேர்தலைப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமான வழியில் நடை பெற்றன. ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும், புதிய உத்திகளைப் பாஜக பயன்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தனியாக எழுதப்பட்ட விதியை முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதைய ஏதுமில்லை என்ற தர்க்கத்தை உருவாக்கியது.


யாருக்குப் பாசிசத்தை எதிர்க்கும் தகுதியுள்ளது?

பாஜக கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவின் பெற்ற வெற்றிகள் ஒரு புதிய மாயையை ஏற்படுத்தின. தன்னை எதிர்க்க எவருமே இல்லை என்ற இறுமாப்பு உருவாக்கியது பாஜகவுக்கு. முள்ளை முள்ளால் எடுக்க எந்தத் தேர்தல் அரசியல் கட்சிக்கும் தைரியம் இல்லை என்பதில்லை. அந்தத் தைரியம் கொள்கையின்பால் மேலெழும்பி வரவேண்டியது.


கொள்கையோ சமூக அடித்தளம் வரலாற்று மரபு இல்லாததால் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் உருவாகவில்லை. சங்கி வகுத்ததே வாய்க்காலானது. ஆள் இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையானது. ஆனால் தங்கள் இருப்பை உறுதி செய்யக்கூடிய கடைசித் தேவை இந்தியாவின் எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்பட்டது. பாஜக தனது கூட்டணிக் கட்சிகளைக் கூட விழுங்க ஆரம்பித்தது சிவசேனை, நிதிஷ்குமார், அகாலிதளம் எனப் பலர் செய்வதறியாது திகைத்தனர். இதுவரை ஆட்சியைப் பிடிக்கத் தேர்தலிலும் சட்டபூர்வ வழிமுறையைப் பயன்படுத்திய பாஜக இனி தேர்தல்களே இருக்காது எனப் பயமுறுத்தியது.


கடந்த காலங்களில் இந்துமத அங்கீகாரத்தை மட்டுமே பயன்படுத்திய பார்ப்பன பாசிசம் தற்போது தேர்தல் என்ற சட்டப்பூர்வ வடிவத்தையும் பயன்படுத்துகிறது. அதற்கான கருவிகளாக, பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. பொய் தகவல்களைப் பரப்பி, தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தித் தங்களுடைய கருத்தை மிக இயல்பாகச் சமூகக் கருத்தில் பரப்பி வெற்றி கண்டு விட்டனர்.


இந்த ஏற்பாடுகள் தோல்வியடையும் பட்சத்தில், வருமான வரித்துறை, காவல்துறை, நீதித்துறை என அரசின் பல்வேறு துறைகள் மூலமாக எதிர்க்கட்சிகளைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறது. பிழைப்பு வாதத்திற்காகவே கட்சி நடத்துபவர்களுக்குப் பாஜகவின் நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்வதில் தயக்கமில்லை.


இந்தியாவுக்கும் பெற்ற வெற்றியைத் தமிழகத்திலும் நிலைநாட்டப் பார்ப்பன பாசிச பாஜக துடிக்கிறது. மற்றவர்களை எளிதில் எதிர்கொண்ட பாஜக தமிழகத்தில் புதுப்புது உத்திகளைக் கையாள முனைகிறது. அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பது தமிழ்நாட்டில் சமூக மரபு. பார்ப்பன பாசிசத்திற்குச் சமத்துவச் சமூகத்திற்கும் இடையிலான போரில் கடைசி யுத்த களமாகத் தமிழகம் இருக்கிறது. ஏகபோக உரிமைக்கும் சம நீதிக்குமான போட்டி இது. பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, கலைஞர் என வரலாற்று நெடுகிலும் மதச்சார்பின்மை வளர்த்த பூமி தமிழகம். சுயநிர்ணய உரிமைக்கும், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாட்டுக்கும் எதிரான போர் புரிந்த பூமியிது.


இன்றைய பாசிச பாஜக ஏற்படுத்தும் மாற்றம் பல முனைகளிலிருந்து வருகிறது. வெறும் தேர்தலை மட்டும் பயன்படுத்தினால், அதை எதிர்க்க பாஜகவின் வழியையே பின்பற்ற, எதிர்க்கட்சிகள் தயாராகியிருக்கும். ஆனால் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்படுத்தும் சமூக அடித்தளம்.


கார்ப்பரேட் வல்லுனர்கள் ஏற்படுத்தும் புதிய தேர்தல் உத்திகள், மத்திய ஆட்சியின் அதிகார பலம், புதிய தொழில் நுட்ப உத்திகள், பணபலம்” எனப் பல யுத்திகளை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து தேர்தல்களில் வென்று வருகிறது. பாஜகவின் இந்து - இந்தி - இந்தியா என்ற ஒற்றை முழக்கத்தைக் கேள்வி கேட்கக் கொள்கை என்ற ஒரு வலுவான சமூக அடித்தளம் தேவை. இந்தச் சூழலில் திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திமுகவின் தேவை அதிகரிக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு, ஒற்றைப் பண்பாட்டு எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, மாநில சுயநிர்ணய உரிமை, சமூகநீதி என முற்போக்கு அம்சங்களை உள்ளடக்கிய வரலாற்றுப் பெருமை தமிழகத்திற்கு உண்டு. அந்தச் சமூக மரபில் வளர்ந்த திமுகவை விட்டால் பாசிச பார்ப்பன பாஜகவை இந்தச் சூழலில் எதிர்க்க கட்சி இல்லை.


தமிழகத்தின் பார்ப்பன எதிர் மரபைக் காக்க, திமுகவை ஆதரிக்கவேண்டும்:


சமத்துவமான ஜனநாயக சமூகம் லட்சியம் தான், ஆனால் தற்போதைய

தேர்தலில் நிச்சயமான தோல்வியைப் பாஜகவிற்குப் பரிசளிக்க வேண்டும். பாஜகவின் இந்து இந்தி இந்தியா என்ற ஏகபோகத்தை எதிர்கொள்கின்ற மரபு இந்தியாவில் திமுகவிற்கு மட்டுமே உள்ளது.

பாஜகவின் அகண்ட பாரதத்திற்குத் தடையாகப் பெரியாரின் தமிழகமே உள்ளது. குறுகியகால நோக்கமாகப் பார்ப்பன பாஜகவை நடக்கவிருக்கும் உடனடி தேர்தல்களில் வீழ்த்த வேண்டியது கட்டாயம் உள்ளது.


பாஜகவும் திமுகவை நேரடி எதிரியாகக் கருதி களத்தில் இறங்குகிறது. அதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்து பிழைப்புவாதிகளையும் பயன்படுத்துகிறது.


ஆரியப் பார்ப்பன பாசிச எதிர்ப்பு மரபு எனும் தமிழகத்திலுள்ள பெரியாரின் நெருப்பை அணைக்கச் சாக்கடை நீரானாலும் பரவாயில்லை, பயன்படுத்துவோம் என்கின்றனர் பாசிச முதலாளிகள். எதிரிகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய ஒரே விடயம் ஒற்றுமை. அதன் உடனடித் தேவை தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணி களையும் வீழ்த்தும் வலுவான எதிர் இயக்கம். அதற்குத் தலைமை தாங்க திமுக அவைத்தலைவர் தவிர வேறு யாருக்கும் கொள்கையோ சமூக அடித்தளம் இல்லை. எனவே திமுகக் கூட்டணியை நிபந்தனையின்றி ஆதரித்துப் பார்ப்பன பாஜகவிற்குத் தேர்தல் தோல்வியைப் பரிசளிப்போம்.


2014 தேர்தலில் தான் இந்தப் பார்ப்பன பாசிசம் தனது வேர்களை ஆழமாகவும் அகலமாகவும் பரப்ப ஆரம்பித்தது. அதே தேர்தல் வழியில் பாஜகவை வெல்லவேண்டும். வெல்ல முடியும் என்ற நல்ல தொடக்கத்தை இந்தியாவிற்கு அளிக்க வேண்டிய கடமை தமிழகத்திற்கு உள்ளது. இது தமிழகம் காக்கும் தேர்தல் அல்ல, இந்தியாவைக் காக்கும் தேர்தல் ஜனநாயகத்தைக் காக்கும் தேர்தல். மதச்சார்பின்மைக்குத் தேர்தல். மசூதியையோ அல்லது மாற்று மதத்தினரைப் பரப்பும் சமயவாதிகளையோ இழந்துவிடாமல் இருக்க மதச்சார்பின்மையைக் கொள்கை கொண்ட கட்சிகளும் இயக்கங்களும் தான் தேவை. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்.


மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க விரும்பும் பாஜகவை எதிர்கொள்ள மதத்தை அரசியலிலிருந்து பிரித்து

இயக்கும் கொள்கை கொண்ட ஒரு கட்சியே தேவை. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியான திமுகவை ஆதரிப்போம்.


பாசிச பாஜக, அதற்கு அடிமைச் சேவகம் பண்ணும் அதிமுகக் கூட்டணியை எதிர்ப்பை பிரதானப்படுத்தி, தோற்கடித்து அவர்களை ஆட்சியை விட்டு அகற்றுவது இந்தத் தேர்தலில் மிக முக்கியம்.


தேர்தல் அரசியல் என்பது நடைமுறை எதார்த்தம். அதை எதிர்கொண்டே ஆக வேண்டும். இரண்டாம் உலகப்போரில் ரூஸ்வெல்ட், சர்ச்சிலோடு சேர்ந்து தலைவர் ஸ்டாலின் ஹிட்லரை எதிர்கொண்டது போல, இல்லையெனில் நாம் எதிர்பார்க்கிற பொன்னுலகமும் கைக்கெட்டாது. நம் கையில் இருக்கும் மண்ணுலகமும் பறிபோய்விடும்.

தேர்தல் அரசியலில் எதிரி யார், நண்பன் யார் என கண்டறிவது மிக முக்கியம். கண்டறிவதோடு மட்டுமில்லாமல், நண்பன், எதிரி எனப் பார்க்காமல் நேர்மையாகச் செயல்படத் துணிச்சல் மிக அவசியம். தன்னைத் தேர்தல் அரசியல் கட்சிகள் செய்யும் பிழைப்பு வாதத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தூய்மை வாதம் பேசி கள்ள மவுனம் காப்பது பாசிசத்திற்குத் துணை போகும் பச்சை சந்தர்ப்பவாதம். பாசிச பாஜக சர்வாதிகாரத்தை நிலை நாட்டத் தேர்தலைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதே தேர்தல் வழியில், பாசிச எதிர்ப்பு அடையாளத்தைத் துணிச்சலாகப் பொதுவெளியில் வெளிப்படுத்தி, நேர்மையோடும், துணிச்சலோடும் பாசகவை எதிர்க்க வேண்டிய கடமை ஜனநாயகவாதிகளுக்கு உள்ளது.


ஒன்றுபடுவோம்!

வீழ்த்துவோம்!

வெற்றி பெறுவோம்!

ஒன்றிணைவோம் வா தோழா!!!


--விஜயபாஸ்கர்


No comments:

Post a Comment