Friday 2 April 2021

சீரழிந்த தமிழகத்தை மீட்கவரும் உதயசூரியன் - மெர்லின் ஃபிரிடா


சீரழிந்த தமிழகத்தை மீட்கவரும் உதயசூரியன் - மெர்லின் ஃபிரிடா


மிழ், தமிழன், தமிழ்நாடு என்ற வார்த்தைகளை உலகில் எங்கிருந்து கேட்டாலும் நம் நினைவிற்கு வருவது சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை. எதிலும் சமநிலை என்ற சிந்தனைக்குக் காரணகர்த்தா தந்தை பெரியார். அவர் பயிற்றுவித்த சமூக நீதியைக் கடைப்பிடித்து அதிகார பீடத்தில் இருந்து பொதுச் செயல் வடிவமாகக் கொண்டு வந்து, நமக்குப் பெரியாருடைய சித்தாந்தங்களை கற்றுத் தந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும். அவர்கள் போட்ட விதையால் இந்த மண் இன்னும் சுயமரியாதை மண்ணாக இருக்கிறது. 


திமு கழக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு நடத்திச் சென்று, அடிப்படை காரியங்களான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உள்கட்டமைப்பு என்று எல்லாவற்றிலும் சதம் அடித்து, எல்லாருக்கும் எல்லாம் சரிசமமாய் கிடைக்க வழிவகுத்து, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருந்தது. 

காலச் சூழ்நிலையில் ஆட்சி மாற நல்லா இருந்த தமிழகத்தின் உள்கட்டமைப்பைச் சீரழித்து, தரமற்ற நிர்வாகத்தால் பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குத் தள்ளி, உரிமைகளை மத்தியில் அடகு வைத்து, சமநிலையை அழித்து, அமைதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மாற்றி வைத்திருக்கிறது, நம்மைக் கடந்த பத்தாண்டு காலங்கள் ஆண்ட அதிமுக அரசு. எங்கும் சமத்துவம் எதிலும் சமத்துவம் என்று இருந்த தமிழ்நாட்டை எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாற்றிவிட்டார்கள். சின்ன ‘LED bulb' முதல் பெரிய நெடுஞ்சாலை வரை கை வைத்த இடமெல்லாம் ஊழல்! ஊழல்!! ஊழல்!!!


ஊழல் செய்வதோடு நின்றுவிடுவார்கள் என்று பார்த்தால், ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க மத்திய அரசாகிய பாசிசத்தை ஆதரித்து நம்முடைய சுயமரியாதை முழுவதையும் அடகு வைத்து தமிழகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இவர்கள் நடத்திய அராஜகம், செயல்வடிவம் என்ற பெயரில் சீர்குலைவு, பெண்களை பாதுகாக்கத் தவறியது போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம். 

கேலிக்கூத்தான பாலங்கள்:

பெருநகரங்களில் பாலங்கள் கட்டுவதின் முக்கிய நோக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பை அழகுபடுத்தவும் ஆகும். அதன் கட்டுமான பணிகள் நடக்கும் போது தேவைப்பட்டால் வாகனங்களின் வழித்தடத்தை மாற்றி அமைப்பார்கள். எவ்வளவு வேகமாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக பணிகளைச் செய்வார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் மட்டும் வித்தியாசமாகப் பாலம் காட்டுகிறோம் என்ற பெயரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மக்களுக்கு இன்னல்கள் சேர்த்து, அரைகுறையாய் தொங்க விட்டதுதான் மிச்சம்.


நான் வசிக்கும் கோவை மாநகரை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். இங்கு இந்த அதிமுக அரசு சொல்கிற படி பார்த்தால், அவர்கள் கிட்டத்தட்ட 7 உயர்மட்டப் பாலங்கள் கட்டி 50 ஆண்டு வளர்ச்சிகளை வெறும் 5 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்று பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரம் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.


அவை உப்பிலிபாளையம் - சின்னியம்பாளையம் உயர்மட்ட மேம்பாலம் (ரூ. 1621 கோடி செலவில்) , காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் (ரூ. 194 கோடி செலவில்), திருச்சி சாலை - ராமநாதபுரம் பகுதி உயர்மட்ட மேம்பாலம் (ரூ. 253 கோடி செலவில்) , ஆற்றுப்பாலம் -உக்கடம் மேம்பாலம் (ரூ. 215 கோடி செலவில்) , கவுண்டம்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் ( ரூ. 66 கோடி செலவில்) , கணபதி - ஆவாரம்பாளையம் பாலம் (ரூ. 54.70 கோடி செலவில்) , பொள்ளாச்சி (முள்ளுபாடி) ரயில்வே கடவு மேம்பாலம். இதில் கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், உக்கடம் மேம்பாலங்கள் இன்னும் முழுமை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் கவுண்டம்பாளையம் பாலம் அங்கு அவசியம் இல்லாத ஒன்று. அதன் கட்டுமானம் என்ற பெயரில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தான் மிச்சம். அங்கு மாலை வேளை நெரிசலில் மாட்டிக்கொண்டால் தப்பித்துச் செல்வது மிகவும் கடினமான காரியம். பெரும்பாலான பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவன ஊழியர்கள், கீரநத்ததில் உள்ள IT நிறுவனம் போன்ற இடங்களுக்குச் செல்ல, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கவுண்டம்பாளையம் கடந்து தான் போக வேண்டும். காலை வேளையில் இந்த நிறுவனங்கள் நேரம் கொஞ்சம் முன் பின் இருந்தாலும் மாலை பள்ளி, கல்லூரியின் பேருந்துகள் மற்றும் சில தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் வந்து அந்த நெரிசலில் மாட்டிக்கொள்ளும். அதாவது அடுத்த நிறுத்தம் கவுண்டம்பாளையம் என்றால், அவர்கள் முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடந்தே தங்கள் நிறுத்தத்திற்கு (கவுண்டம்பாளையம் நிறுத்தம்) போன வரலாறும்… இந்தப் பாலக் கட்டுமான பணிகளுக்கு உண்டு. சில நேரங்களில் அதிக நெரிசலின் போது மற்ற வாகன ஓட்டிகள், மருத்துவ அவசர ஊர்திக்கு வழி விடச் சிரமப்பட்ட அவல நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இருந்த கடைசி ஒன்றரை வருடங்களில் எனக்குத் தெரிந்தளவில் நல்லா இருந்த தேசிய நெடுஞ்சாலை தான் இந்த மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் - துடியலூர் வழி! அதையும் இறுதியாக மோசமாக மாற்றி விட்டார்கள்.





அதிர்ஷ்டவசமாகக் கோவை காந்திபுரம் பாலத்தை சில வருடங்கள் கழித்து அதிமுக அரசு கட்டி முடித்தார்கள். ஆனால் அங்கு பாலம் வந்ததே ஓர் அலங்கோலம் ஆகிவிட்டது. கணபதி-லட்சுமி மில்ஸ் பாலம் ஒன்று முந்தைய திமுக ஆட்சியில் அங்கு கட்டப்பட்டது. அந்தப் பாலம் ஏறி இறங்கி ஒரு 2-3 நிமிடத்தில் இந்த காந்திபுரம் பாலத்தின் துவக்கம் வந்துவிடும். இதுதான் காந்திபுரம் பாலத்தின் தனித்துவம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்று பார்த்தால்...., காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை (பல்பொருள் அங்காடித் தெரு) போன்ற பகுதிக்குச் செல்ல விரும்புவோர், அந்தப் பாலத்தை நிச்சயம் பயன்படுத்த இயலாது, ஏனென்றால் காந்திபுரம் பாலத்தின் முடிவு காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் இந்த கிராஸ் கட் சாலையைத் தாண்டிப்போய்விடும். அதனால் அரசு நகரப் பேருந்துகள் அதில் பயணிப்பதில்லை. நாட்டிலேயே ஓர் அரசுப் பேருந்து பயணிக்க இயலாத வகையில் பாலங்கள் கட்டிய பெருமை அதிமுகவைச் சாரும். இந்த காந்திபுரம் பாலம் ஈரடுக்கு பாலம் என்பதால் இதற்கு மேல் பகுதியில் மற்றுமொரு பாலம் இருக்கும் (100 அடி சாலை - சித்தப்புதூர்). அதன் வழி பயணிக்கும் பயணிகள் நிலைமை இன்னும் கொடுமை.

இதே முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் இங்கு பல பாலங்கள் கட்டப்பட்டன. தலைவர் கலைஞர் ஒவ்வொரு பாலத்திலும் பிரமாண்டம் இருக்கும்படி வடிவமைத்தார். இங்கு இருக்கும் அவினாசி - உப்பிலிபாளையம் ரவுண்டானா மேம்பாலம் அதற்கு எடுத்துக்காட்டு. அந்தப் பாலத்தின் ரவுண்டானவிலிருந்து மேற்குப் பக்கம் போனால் டவுன் ஹால், உக்கடம் போகவும், கிழக்குப் பக்கம் பயணம் செய்தால் அவினாசி சாலையையும், வடக்குப் பக்கம் சென்றால் மேட்டுப்பாளையம் சாலையையும், தெற்கு வழி பயணித்தால் கோவை ரயில் நிலையம், திருச்சி சாலை என மிக எளிதில் அடைய முடியும். முன்பு நான் சொன்னதையும், இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! எது மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டப் பாலம் என்று!

அப்பொழுது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தளபதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 11 பாலங்கள் வடிவமைத்து சிங்கார சென்னையாக மாற்றினார். ஆனால் இந்த 10 ஆண்டில் இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களோ அவர் சொந்த மாவட்டமான கோயம்புத்தூரில் கூட அக்கறை எடுத்துச் சரிவரப் பாலங்கள் கட்ட முடியவில்லை. இவர்களுக்குப் பாலம் கட்ட ஒதுக்கப்படும் நிதியில் எப்படி டெண்டர் விடுவது, எப்படி கமிசன் அடிப்பது என்பதைப் பற்றி யோசிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரின் சொந்த ஊரிலே இந்த நிலைமை என்றால் மற்ற மாவட்டங்களை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஆகவே, பாலங்கள் இங்குப் பத்திரிகையில் முதல் பக்கத்தில் மட்டும்தான் வெற்றி நடை போட்டது.


குடிநீர் பிரச்சனை:

தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் தாய்மார்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனை, எங்களுக்குச் சரிவரக் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்பதுதான். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கே தண்ணீர் விடுவதில் மாநகராட்சி கால தாமதம் பண்ணும் நிலை என்றால் கிராமப்புறப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் குடிநீர் வரத்துச் சட்டச் சிக்கல் தான். குடிநீர்க் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் பல கிராம மக்கள் சார்பாக வைக்கப்படுகிறது. பலர் போராட்டங்கள் செய்தும் அவர்கள் இன்னல்களை நீக்க, இந்த அரசு முன்வராத சூழல் தான் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை இந்தத் தண்ணீர் பிரச்சனை உலுக்கிப் பார்த்ததை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். பல உணவக உரிமையாளர்கள் எங்களால் தண்ணீர் இல்லாமல் நடத்த முடியாது என்று கூறினர். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் குடிநீர்த் தேவையைச் சமாளிப்பதே சவாலான காரியமாகிவிட்டது. இந்த நிலைக்குக் காரணம், சரியான முறையில் நீர் நிலைகளைப் பராமரிக்காமல் விட்டது. தலைநகருக்கே இந்த நிலைமை என்றால், கிராமவாசிகள் நிலையை யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியது குடிநீருக்காகத்தான். பல கிராமப்புற மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் பெற வேண்டிய அவல நிலை. பருவ காலங்களில், நீர் நிலைகளைச் சரிவரப் பராமரித்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டிருக்காது. அந்த இடத்தில் நின்று களப்பணி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் அலட்சியமாய் விட்டதால் தான் இந்த நிலை. 

உலகத்திலே சுவையான குடிநீர் கிடைப்பதில் இரண்டாம் இடத்தில் அங்கம் வகிப்பது கோவை மாவட்டம். இங்கு சிறுவாணி தண்ணீரைத் தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த சிறுவாணி நீரை சூயஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விடுவதற்கான முயற்சிகளை இந்த ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது. சரி இந்த சூயஸ் என்னும் நிறுவனத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்! பொலிவியா நாட்டில் அங்கு ஆண்ட ஆட்சியாளர்கள் இதே மாதிரி தங்கள் நீர்நிலையை சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு அங்கு வாழ்ந்த மக்கள் குடிநீர் கிடைக்க அந்த நிறுவனத்துக்கே வரி செலுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தி வைத்தது பொலிவியா அரசு. நெடுநாள் பொருத்தும் அவர்கள் அரசாங்கம் மக்களின் நிலையைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு அவர்கள் கடுமையான போராட்டத்தில் இறங்கித்தான் அந்த நிறுவனத்தை தங்கள் நாட்டை விட்டு விரட்டி விட்டிருக்கிறார்கள். இப்படித் தண்ணீருக்காக மக்கள் போர்க்கொடி தூக்க வேண்டிய அவல நிலைக்கு மக்களைத் தள்ளப் பார்க்கிறது இந்த அரசு. 


முதல்வர் குடிநீருக்காகப் பல திட்டங்களை இயற்றி அதற்கு அடிக்கல் நாட்டினதை எல்லாம் நாம் செய்தி வாயிலாகப் பார்த்திருப்போம். அவர்கள் அடிக்கல் நாட்டியதோடு போய்விட்டார்கள். அதற்குச் செய்ய வேண்டிய திட்டப் பணிகளைச் சரிவர செய்யவில்லை. ஆனால் செல்லும் இடமெல்லாம் மாண்புமிகு அம்மாவின் அரசு மக்களுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் செய்தது வெறும் அடிக்கல் நாட்டு விழா மட்டும் தான். 




தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு குடிநீருக்காகப் பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோவைக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம், அத்திக்கடவு - அவினாசி குடிநீர்த் திட்டம், பல அணைகள் கட்டி மக்கள் குடிநீர் பிரச்சனை நிவர்த்தி செய்தது கலைஞர் அவர்கள். ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் இவர்கள் புதிதாக எந்த நீர்நிலை அமைக்கும் காரியமும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இவர்கள் இருக்கிற நீர்நிலைகளைப் பராமரிக்காமல் குத்தகைக்கு விடும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள். மனிதன் உயிர்வாழ்வதற்கு ஜீவாதாரமான குடிநீரில் இவர்கள் அரசியல் லாபத்திற்காக மக்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு விடிவுகாண கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொலைநோக்கு திட்டமான "குடிமக்கள் அனைவருக்கும் குறையாத குடிநீர்" என்று ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளில் ஒன்றாக இதை அறிவித்திருக்கிறார். ஆட்சி அமைந்ததும் நிச்சயம் செய்வார்.

கல்வியைப் பறிக்கும் கூட்டம்:

தமிழ்நாட்டைப் போல வேறெந்த மாநிலத்திலும் இத்தனை எண்ணிக்கையில் படித்த இளைஞர்களைப் பார்க்க முடியாது. அப்படியே படித்தவர்களாக இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த மக்களாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் இங்கு மட்டும் தான் பாகுபாடில்லாமல் அனைத்துச் சமூகமும் படிக்க வழி இருந்தது. ஏன் என்றால்...? இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண். மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை. அதனால் படிப்பு பெரும்பாலும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. நம் தலைவர்கள் கொடுத்த இலவசக் கல்வி, வகுப்பு வாரி இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிக்கு உதவித் தொகை போன்ற எண்ணற்ற காரியங்களால் நாம் எல்லாரும் படித்து வந்துவிட்டோம். இவர்கள் செய்யும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்கிறோம். அதனால், நீங்க படிச்சதால தான கேள்வி கேக்குறீங்க? உங்கள் படிப்பை நாங்கள் பறிக்கிறோம் என்ற பெயரில் முதலாவது மருத்துவப் படிப்புக்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை வைத்து தமிழக மாணவர்களுக்குத் தடையை வைத்தார்கள். இந்த நீட் என்னும் நுழைவுத் தேர்வு பல மாணவர்களின் கனவைக் கனவாகவே மாற்றி, பல அப்பாவி உயிரைக் காவு வாங்கி விட்டது. 12 ஆம் வகுப்பில் தமிழக அரசின் கல்வி முறைப்படி படித்து நல்ல மதிப்பெண் எடுக்கிற மாணவர்களின் தகுதி பற்றாது என்று நீட் தேர்வை நடத்தும் மத்தியரசு நிறுவனம் நமது மாணவர்களைத் தகுதி எடை போடும் நிலைக்கு இந்த அதிமுக அரசு நம்மைத் தள்ளிவிட்டார்கள். தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் உள்ளார்கள். இதனால் நமது பிள்ளைகள் படிக்கிற இடத்தையெல்லாம் வடநாட்டுக்காரர்கள் நிரப்பும் சூழல். அதுமட்டும் இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர், பேராசிரியர் பணி நிரப்புதல் போன்றவற்றில் லஞ்சம் தலைதூக்கி இருக்கிறது. இப்போது கலை அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகள் எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்த முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையான குலக் கல்வியைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நாம் படிக்கக் கூடாது! அதற்கான எல்லாக் காரியங்களையும் சிறப்பாகச் செய்கிறார்கள். இது அத்தனையையும் பறிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. 


நாங்களாம் எப்படி எங்க புள்ளைங்களை படிக்க வைக்க முடியும்? எங்களுக்கு அந்த அளவுக்கு வசதி வாய்ப்பு கிடையாதே என்று தவித்த பல சமூக மக்களுக்கு இலவசக் கல்வி, சத்துணவு, இலவச பஸ் பாஸ், கல்லூரியில் இடம் கிடைக்க வகுப்பு வாரி இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, முதல் தலைமுறை பட்டதாரிக்கு உதவித் தொகை என்ற காரியங்களைச் செய்ததும் அல்லாமல் பெண்களும் படித்து பட்டதாரியாக வரவேண்டும் என்ற நோக்கில்..., பொருளாதார நிலைமையைக் காட்டி பின்தங்கிய மக்கள் தங்கள் பெண் குழந்தைகள் கல்வியை நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவர்களிடம் உதிக்காமல் இருக்கத் திருமண உதவித் தொகை அரசு சார்பாகக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்தி, பெண்கள் அதற்குப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நிலையை வகுத்து பெண்களும் படிக்கட்டும் என வழி வகுத்தவர் கலைஞர். 

பெண்களுக்குக் கொடூரம் :

சமுதாயமே பின்தங்கி இருந்தது. அதிலும் குறிப்பாகப் பெண்களை இன்னும் ஒரு படி கீழேதான் இந்தச் சமுதாயம் வைத்திருந்தது. நாமெல்லோருக்கும் நன்றாகவே தெரியும் பெண்களுடைய உரிமைகளுக்காக நாட்டிலே குரல் கொடுத்தது தந்தை பெரியார். நாட்டிலே பெண்கள் சிறந்து விளங்கக் கழக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. உத்திரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பெண்களுக்குக் கொடூரமே நேர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கழக ஆட்சியில் பெண்களுக்கு உரிமை கொடுத்ததோடு நின்று விடாமல் அவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்தது. தற்போது இந்த ஆட்சியில் 


பெண்களுக்கு நேர்ந்த மிகக் கொடுமை என்னவென்றால் பொள்ளாச்சி பாலியல் கொடூரம். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்கள் காணொளியில் 'அண்ணா அடிக்காதீங்க' என்று சொன்ன வார்த்தையை மறக்கவே முடியாது. அதுவும் ஓர் ஆளும் கட்சியின் மாணவர் அணி நிர்வாகி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இதில் ஈடுபட்டது, மக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆட்சியிலிருந்து கொண்டு அதிகார பலத்தை வைத்து இப்படிப் பட்ட கொடூரத்தை நடத்தியது இந்த அதிமுக அரசு. தங்களுடைய கட்சியில் பெண்ணை தான் அரசியல் தலைவராக வைத்திருந்தார்கள். நாங்கள் அம்மா வழி ஆட்சி தான் நடத்துகிறோம் என்று வாய்கூசாமல் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பல மாவட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை தான். செய்திகளில் ஆங்காங்கே பெண்களுக்குக் கொடுமை நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் படிக்கப் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வேலைக்கோ அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்து சேருகிற வரைக்கும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆளும் ஆட்சியாளர்களே கொடூரராக இருந்தால் என்ன செய்வது? 




பொள்ளாச்சியில் நடந்த கொடூரத்துக்கு முதல் முதலில் குரல் எழுப்பியது திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணிச் செயலாளருமான திரு. கனிமொழி அவர்கள் தான். இந்த ஆளும் கட்சி குற்றவாளிகளை உடனே சட்டத்திற்கு முன்பு நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் இவர்களே அதற்கு உடன்பட்டுள்ளதால் ஒன்றுமே நடக்காத மாதிரி அமைதி காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பத்திரிகை/வானொலி /தொலைக்காட்சி என்ற எதிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஆட்சி என்று விளம்பரம். இதில் கொடூரத்தின் உச்சம் என்னவென்றால், இந்தக் கொடூரத்துக்குத் தொடர்புடைய நபரையே 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக அதே பொள்ளாச்சியில் நிறுத்தி இருக்கிறது இந்தக் கல் நெஞ்சு கொண்ட அதிமுக. நிச்சயம் பொள்ளாச்சி மக்கள் அதிமுகவை அவர்கள் தொகுதியை விட்டு விரட்டி அடிப்பார்கள். 




விவசாயிகளுக்கு வஞ்சனை :

நான் ஒரு விவசாயி! நான் ஒரு விவசாயி! என்று மூச்சுக்கு 300 தடவை குறிப்பிட்டுச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு நன்மை ஒன்றுமே செய்யவில்லை. மாறாக, இன்னல்களையே கொடுத்துள்ளார். குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரில் கொள்ளை, சாகுபடிக்குத் தயாராக இருந்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உரிய இடம் ஏற்படுத்தித்தராதது, விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கும் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு, மழை புயலால் பாதிக்கப்பட்ட விவசாய வயல் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதது என்று இவர்கள் செய்த துரோகம் எண்ணிலடங்காதவை. ஆனால் நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் விவசாயிகள் கஷ்டம் எனக்குத் தெரியும்! எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? என்று பச்சைப் பொய்யைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார். 

விவசாயிகள் நலனை உறுதி செய்தது திமுக அரசு. 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் பொறுப்பேற்ற உடன் அவர் விவசாயிகள் வாங்கிய 7000 கோடி கடனை தள்ளுபடி செய்தார். காவேரி நடுவர் மன்றம் அமைத்தார். நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து, நெல் கொள்முதலுக்கு ஊக்கத் தொகை மற்றும் விலை ஏற்றம் செய்ததும் கலைஞர். தன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றியவர் கலைஞர். தற்போது இந்த அரசு, விவசாயிகள் கடனை எல்லாம் தள்ளுபடி பண்ணுவோம் என்ற அறிக்கையை ஆட்சி முடியும் கடைசி நேரத்தில் வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்த இத்தனை காலம் ஒன்றும் செய்ய இவர்களுக்கு நேரம் இல்லை.

ஜனநாயகப் படுகொலை :

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களின் கோரிக்கையைக் கேட்காமல் அவர்களைத் துப்பாக்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்த அதிமுக அரசு. அதைப் பற்றி கேள்வி எழுப்பியபோது நானும் உங்களைப் போலத் தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிந்தேன் என்று எதுவும் தெரியாத மாதிரி பொய்யைக் கூறினார். அதே தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் என்ற இரு உயிர்களை விசாரணை என்ற பெயரில் காவல் துறை லத்தியால் அடித்துக் கொன்று விட்டார்கள். காவல் துறையை கையில் வைத்திருப்பது முதல்வர். ஆனால் இவர்கள் மூச்சுத் திணறலால் உயிர் இழந்தனர் என்று மக்களிடம் பொய்யைக் கூறுகிறார். 


ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுப் போட்ட மக்களையே கொன்று குவிக்க நினைக்கும் கல் நெஞ்சு கொண்டவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள். தங்கள் அரியணையைத் தக்க வைத்துக் கொள்ள எந்தக் கொடுமையும் செய்வார்கள். ஆனால் நான் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வழிநடத்திக் கொண்டு வந்தேன் என்று ஏறும் மேடையில் எல்லாம் முதல்வர் பேச்சு. அதுமட்டும் இல்லாமல் ஜனநாயகத்தின் 4வது தூணாகக் கருதப்படும் ஊடகத்தையும் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மக்களுக்குத் தெரிய வேண்டிய பல நாட்டு நடப்பை ஊடகம் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அதையும் தங்களுக்கான தளமாக உபயோகம் பண்ணிக்கொண்டார்கள். ஆளும் அரசாங்கம் தங்கள் சுயநலனுக்காக மக்களைக் கொல்வதும், எதிர்த்து கேள்வி கேட்கத் தடுப்பதும் இந்த ஆட்சியில் மட்டும் தான்! கழக ஆட்சியில் மக்களை இப்படிக் கொன்று குவிக்கப் படவும் இல்லை! அநீதியை எதிர்த்து கேள்வி கேட்க எல்லாருக்கும் அனுமதி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் பத்திரிகையாளர்களைக் கேள்வி கேட்க கற்றுக் கொடுத்ததே ஆசான் தலைவர் கலைஞர் அவர்கள். 


இன்னும் நுணுக்கமாக அலசிப் பார்த்தால் இவர்கள் அரங்கேற்றிய அராஜகத்தைப் பட்டியல் பட்டியலாக எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள். இப்படி பொதுத்துறை, உள்கட்டமைப்பு, பெண்கள் பாதுகாப்பு போன்ற எதிலும் மக்களுக்குத் தேவையான காரியங்களை செய்துதரவே இல்லை. ஆனால் எந்தத் துறையில் கையை வைக்கிறார்களோ அதில் ஊழல் செய்து பணத்தை அடிப்பது பற்றி மட்டும்தான் இவர்கள் முழு நேர எண்ணங்களாக இருந்தது. சிறிதளவும் மக்களைப் பற்றிய கவலை இல்லை. இவர்கள் ஆட்சியை அடுத்த முறையும் தக்க வைத்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாய் இந்தக் கொரோனா காலகட்டம் அமைந்தது. ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் கொரோனா உயிர்க்கொல்லி நோயை விட இன்னும் ஒரு படி அதிகக் கொடூரர்களாகத் தான் செயல்பட்டார்கள். கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கையில் குளறுபடி செய்ததில் இருந்து பிளிச்சிங் பவுடர் வாங்குவது வரைக்கும் ஊழல்! ஊழல்!! ஊழல்!!!



இவர்கள் ஆட்சி செய்ததைப் பார்த்து இதை மாற்றி அமைக்க நாங்க வரோம் என்று பலர் எழும்பி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் பாசிசத்தை எதிர்க்கமாட்டார்கள், நடக்கிற அராஜக ஆட்சியைத் துளியும் கேள்வி கேட்க மாட்டார்கள், உரிமைக்காகப் போராட மாட்டார்கள் ஆனால் தேர்தல் களம் என்றால் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிடுவார்கள். கூர்ந்து கவனித்தால் இவர்கள் எல்லாம் எதிர்ப்பது 10 ஆண்டாக ஆட்சியில் இல்லாத திமுகவை மட்டும் தான். திமுகவை எதிர்க்கிறவன் நிச்சயம் பாசிசத்தை ஆதரிக்கிறவர்கள் தான். அதனால் மக்கள் கவனித்து நமது எதிரி யார் என்பதை எப்பொழுதும் அறிந்திருக்க வேண்டும். எதிரி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வருவான் விழிப்புடன் இருக்க வேண்டியது மக்களாகிய நாம் தான்!


போதும்! போதும்! இவர்கள் செய்த அராஜகங்களைப் பொறுத்துக் கொண்டது போதும். இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆட்சியில் அமர்ந்ததும் நம் அடிப்படை காரியங்களை உறுதி செய்ய தலைவர் தளபதி ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்' என்று நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். நிச்சயம் செய்வார். 

நம் துன்பங்கள் நீக்கி அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளி தர ஓடிவருகிறான் உதயசூரியன்!





  • இனிமேலும் ஜனநாயகம் சீர்குலையாமல் இருக்க!
  • இனிமேலும் நம்முடைய அடிப்படை உரிமை பறிக்கப்படாமல் இருக்க!
  • இனிமேலும் நம் கல்வியை இவர்கள் பறிக்காமல் பாதுகாக்கப்பட!
  • இனிமேலும் பெண்கள் பயத்தோடு வாழும் வாழ்வு ஒழிய!
  • இனிமேலும் நம்முடைய வேலைவாய்ப்பு வடக்கனுக்கு இல்லை என்ற நிலை உருவாக !
  • இனிமேலும் கேலிக்கூத்தான பாலங்கள் எழும்பாமல் இருக்க!
  • இனிமேலும் லஞ்சம் /ஊழல் தலைவிரித்து ஆடாமல் இருக்க!
  • இனிமேலும் காவல்துறையால் அப்பாவி உயிர்கள் காவு வாங்கப்படாமல் இருக்க!
  • இனிமேலும் இந்த மோசமான சூழல் நிலவாமல் இருக்க!
  • "சமூக நீதி - சம உரிமை - சுயமரியாதை" நிலைநாட்டப்பட

-------------------------------------- ஆதரிப்பீர் உதயசூரியன் ----------------------------------------



- மெர்லின் ஃபிரிடா








No comments:

Post a Comment