Saturday 30 January 2021

அப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்

அப்பாவின் நெருங்கிய நண்பர் கலைஞர் - தமிழன் பிரதீபன்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோபாலபுரம் என்னும் சிற்றூரில் வசித்து வந்த எங்கள் குடும்பம், வறுமையின் காரணமாக 90களின் ஆரம்பத்தில் சென்னையை அடுத்த நல்லம்பாக்கம் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தது. அங்கு கல் குவாரி ஒன்றில் என் தந்தையார் கணக்குப்பிள்ளை வேலை பார்க்க, நானும் என் சகோதரர்களும் அங்கேயே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அங்கு வேலை பார்க்கும் நபர்கள் பெரும்பாலும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதால் முதலாளிகளால் கட்டித்தரப்பட்ட சின்னச் சின்ன அறைகள் எதுவும் இல்லாத குடிசைகள் தான் வீடு. அப்பா கணக்கப்பிள்ளை என்பதால் எங்களுக்கு மட்டும் சிமெண்ட் ஓட்டால் மூடப்பட்ட வீடு.


     அந்த சின்ன வீட்டில் அனைவரும் உறங்கச் செல்லும் வேளையில், இருக்கிற அனைத்து சமையல் பொருட்களையும் மேலே கயிற்றால் கட்டியிருக்கும் கட்டையில் அடுக்கிவிடுவோம். இல்லையேல் கால் நீட்டி படுக்க இடம் போதாது என்கிற நிலை. இதனாலேயே பெரும்பாலும் அப்பா வாசலில் தான் தூங்குவார். இப்படியாக கழிந்துக் கொண்டிருந்த காலத்தில், ஒருநாள் இரவில் அப்பா வெளியில் சென்றிருந்த போது சாலையில் வந்த ஒரு வாகனம் மோதி கால், கையில் முறிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் படுக்கையிலேயே இருந்தார். வருமானம் இல்லாத சூழல் ஒரு பக்கம். கட்டிலில் அப்பா படுத்திருப்பதால் ஏனையோருக்கு இடம் இல்லாதது ஒரு பக்கம் என்று மிகக் கொடுமையான காலமாக அமைந்தது எங்களுக்கு. 1996 இல் நடந்த நிகழ்வு அது. 


      அப்போது கலைஞர் மீண்டும் முதல்வர் ஆகியிருந்தது மட்டுமில்லாமல் பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று தான் தந்தை" பெரியார் நினைவு சமத்துவபுரம்". நாங்கள் படித்துக்கொண்டிருந்த மாம்பாக்கத்தில் ஒரு சமத்துவபுரம் உதயமாக இருப்பதாக செய்தி வரவே அப்பா படுக்கையில் இருந்த படியே எங்கள் குடும்ப நிலையை விளக்கி, நேரடியாக மாண்புமிகு முதல்வருக்கு வீடு ஒன்று வழங்கிட வேண்டி மனு எழுதினார்கள். காப்பீட்டு வழக்குக்காக எடுத்த அப்பாவுடைய ஒரு புகைப்படம் தான் எங்கள் குடும்ப நிலைக்கான அப்போதைய ஆதாரம். ஆனால், சற்றும் தாமதிக்காமல் இரண்டொரு நாட்களில் முதல்வரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. அது தான் என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் கடிதம். உற்றார் உறவினர் என்று எவரது தொடர்பும் இல்லாமல் இருந்த எங்களுக்கு, கடிதம் என்பது பள்ளித் தேர்வு முடிவுகள் தாண்டி வேறு எதுவுமாக இருந்ததில்லை. முதன்முறையாக அப்பாவின் பெயருக்கு வந்த கடிதம் ஆதலால் அவர் ஏதோ ஒரு வகையில் அப்பாவின் நண்பர் என்று நினைத்துக்கொண்டோம். வந்திருந்த கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களை சந்திக்கச் சொல்லி கலைஞரின் கையொப்பத்தோடு பரிந்துரைக்கபட்டிருந்தது. அவர்களுக்கும் இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள் என்று நினைவு. 


    அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட படி உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவரையும், ஒன்றியப் பெருந்தலைவரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையை சொல்லி கலைஞர் அனுப்பிய கடிதத்தையும் காட்டினோம். நிச்சயம் அத்திட்டம் நிறைவடையும் போது வீடு கிடைக்க வழி செய்கிறேன் என்று சொல்லி அனுப்பினார்கள். வீடுகள் கட்டும் பணி துவங்கிய சில மாதங்களில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. வீட்டின் எண் 10. கட்டுமான நேரம் என்பதால் தினசரி பள்ளி முடிந்ததும் நாங்கள் குடிபுக இருக்கும் வீட்டின் கட்டுமானப் பணிகளை ஒருமுறை நோட்டம் விட்டு வருவது எனக்கும் அண்ணன்களுக்கும் வாடிக்கையாகிப் போனது. ஒரே அறையில் அதுவரை வசித்து வந்த எங்களுக்கு அந்த சமத்துவபுர வீடு அரண்மனை போலத் தான் காட்சி தந்தது. சமையல் அறை, படுக்கை அறை, முகப்பு என்று தனித்தனியாக இருந்தால் மகிழ்ச்சிக்கு ஏது பஞ்சம். 


      அனைத்தும் தயாராகி துவக்க விழா காணப்போகும் வேளையில் எங்கள் வாழ்க்கையில் மீண்டும் மீள இயலா சோகம் ஆட்கொள்ளும் என்று கனவிலும் நினைத்ததில்லை. 2001 தேர்தல் முடிவுகள் அதிமுகவை அரியணை ஏற்றியதோடு நில்லாமல், உள்ளூரை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சமத்துவபுரத்தில் இரவோடு இரவாக குடிபுகவும் வழிவகை செய்தது. எவ்வளவோ முயன்றும் எங்களைப் போன்று இல்லாதவர்களுக்கு அரசு ஒதுக்கிய வீட்டிற்குள் நாங்கள் நுழைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இடையில் அப்பாவிற்கு கடிதம் அனுப்பிய அந்த நண்பர், அம்மையாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்பாவும் அன்றைய ஆட்சியாளர்களால் தினசரி அலைக்கழிக்கப்பட்டார். 


   அப்பாவுக்கு நேர்ந்த அந்த விபத்திற்குப் பிறகும் நாங்கள் சென்னையில் இருந்ததற்கான ஒரே ஒரு காரணியும் அற்றுப் போனது. எப்படியாக ஊரை விட்டு வந்தோமோ அதே நிலையில் மீண்டும் மூட்டை முடிச்சுகளோடு அடுத்த சில நாட்களிலேயே சொந்த ஊருக்குத் திரும்பினோம், அப்பாவின் நண்பர் அனுப்பிய கடிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு...


   நான் கலைஞரை நேசிக்கத் தொடங்கியதும், ஜெயாவை வெறுக்கத் துவங்கியதும் அந்த புள்ளியில் தான். ஆதரவுக்கு யாருமே இல்லாத சூழலில் அவரின் கடிதம் தந்த தெம்பு இதுவரையில் யாராலும் கிடைக்கப் பெறாதது தான். அந்த கடிதம் தாண்டி எங்களிடம் கொடுக்க பணமோ, அரசியல் பின்புலமோ, தெரிந்த நபர்களோ யாரும் இல்லை. எங்களிடம் இருந்ததெல்லாம் கலைஞர் அனுப்பிய பதில் கடிதம் மட்டும் தான். அதற்காக அப்பா பெரிதாக மெனக்கெடவில்லை அந்த ஒரு கடிதம் எழுதியதைத் தவிர. ஆனால், எங்களுக்கு எங்கள் வேண்டுதல் நிறைவேறியது. எங்கள் கனவுக்கு உயிர் வந்தது. பெரும் ஆறுதலும், எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டது. அதெல்லாம் பிற்பாடு இந்த அராஜக கும்பலால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அன்றுமுதல் அப்பாவின் நண்பராக அறிமுகமான அவர் என்றென்றும் போற்றுதலுக்குரிய தலைவராக நிலைப்பெற்றிருக்கிறார் என்னுள். 


ஏனென்றால்,

     எளியவனின் வலி உணர்ந்தவர் கலைஞர்...பிகு: நாங்கள் ஊருக்குத் திரும்பிய பிறகு சில மாதங்களில் திமுகவினரின் முயற்சியால் மீண்டும் ஒதுக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டதாம். ஆனால், அதில் குடியேற நாங்கள் அப்போது அங்கு இல்லை .தமிழன் பிரதீபன்.
No comments:

Post a Comment