Friday 2 July 2021

நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் - ரவிகுமார் சுதர்சனம்

நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் - ரவிகுமார் சுதர்சனம்

நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். ஆனால் அப்படி நிகழும் மாற்றம் என் விருப்பத்திற்குரியதாக இருக்க நான் செய்ய வேண்டியது என்ன?

'மாற்றம்' என்பதற்கு என்னிடம் உள்ள அளவுகோல் என்ன, அதற்கான காரணங்கள் என்ன, எது மாற வேண்டும், சித்தாந்த மாற்றமா, தலைமை மாற்றமா, கட்சி மாற்றமா, அந்த மாற்றங்களை கொண்டு வர என்னளவில் உள்ள கருவி எது?

அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல், இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எனக்குத் தெரியவோ அந்த விடைகளை தேடிச்செல்லும் முனைப்பு என்னிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.

நம் கல்வி பாடத்திட்டத்தில், அரசியலுக்கான பாடம் என்று தனியாக இருக்கின்றதா என்ன? வரலாறு என்ற பெயரில் தகவல்களைக் கடத்தலாமே தவிர, அதை தாண்டி அதில் எந்தப் பலனும் இருப்பதாய் தோன்றவில்லை. அந்த வரலாறும் வடிகட்டியதுதான். எது ஒருவரை அரசியல் மயப்படுத்தாமல் இருக்குமோ அதுதான் பாடத்திட்டத்தில் இருக்கும்.

பதினெட்டு வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை வந்துவிடுகிறது. வாக்கு நம் கடமை! வாக்கு நம் பெருமை!! வாக்கு நம் உடமை!!! போன்ற கவர்ச்சிகரமான கோஷங்கள் சொல்லி வாக்குச்சாவடிகளுக்கு வேண்டுமானால் அவர்களை அழைத்து வந்துவிடலாம். ஆனால் அந்த வாக்கு யார் கரத்தில் சேர வேண்டும் என்கிற முடிவும் பொறுப்பும் சேர்ந்தே அவர்களிடம் இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற ஒரு தெளிவான பார்வை எல்லோருக்குமே இருக்க வேண்டுமே.

அந்த அரசியல் பார்வையை எல்லோருக்குள்ளும் விதைக்க என்ன மாதிரியான செயல்முறைகள் இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன? முன்னரே சொன்னதுபோல் கல்விக்கூடங்களில் அரசியல் என்பது எப்போதும் தொடர்புக்கு வெளியேதான் இருந்திருக்கிறது. 1950-களில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மாணவர்களும் முன்னெடுத்தது எல்லாம் ஒரு விதிவிலக்கு. அப்படி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்கிற பரிந்துரையும் கிடையாது. இப்போது போராட்ட வடிவங்கள் மாறிவிட்டன. ஜனநாயக முறையில் நம் ஆதரவை, எதிர்ப்பை நேர்மையாக காட்ட ஆகச் சிறந்த வழி இருக்கிறது. அதனை முடிந்த வரையில் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

குடும்பங்களில் எத்தனை தீவிரமாக ஓர் அரசியல் சார்ந்த உரையாடல் நடக்கின்றது என்பதே சந்தேகம்தான். ஆனால் ஒரு குடும்பம்தான் முக்கியமாக அரசியலை பேசவேண்டும். தங்கள் பிள்ளைகளிடம், எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த வேலைக்குச் செல்ல வேண்டும், எப்போது கல்யாணம் செய்ய வேண்டும், என்ன மாறி வீடு கட்ட வேண்டும் போன்ற உரையாடல் நடக்கின்றதோ, அதே போல் பிள்ளைகளின் அரசியல் அறிவை விசாலப்படுத்த நாம் வழி வகுக்க வேண்டும். அதுவும் நம் முடிவுகளை அவர்கள் மீது திணிக்காமல் நடக்க வேண்டும்.

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று சொல்கிறோம் இல்லையா. அது வேட்பாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை இல்லை வாக்காளர்களுக்கும் உள்ள பிரச்சினை. அது என்ன? குடும்பம் குடும்பமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சங்கிலி உடைந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன் என் அப்பா இந்தக் கட்சிக்கு வாக்களித்தார், அதனால் இந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்பது எத்தனை அபத்தமோ, என் அப்பா இந்த கட்சிக்கு வாக்களித்தார், அதனால் நான் வேறொரு கட்சிக்கு வாக்களிக்கிறேன் என்பதும் அபத்தமே. வாக்கு சங்கிலி தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கும், ஒரு கட்டடத்தில் அறுபடுவதற்கும் சரியான பார்வையும் புரிதலும் வேண்டும் என்பதே என் விருப்பம்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பகிர்வுகள் மட்டுமே வரலாறு என நம்பிக்கொண்டிருக்கும் கூட்டத்தை உண்மையான வரலாற்றை நோக்கி திருப்ப வேண்டும். ஒரு பிரபலமான உதாரணம் "திராவிடத்தால் வீழ்ந்தோம்". தமிழ்நாடு ஐம்பது வருடங்களில் அடைந்த வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், மருத்துவம், மனிதவளக் குறியீடு இவற்றில் நாம் அடைந்த சாதனைகள். அதற்கு யாரெல்லாம் காரணம். அவர்கள் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் என்ன, இவை எதுவும் தெரிந்துகொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது அபத்தம்.

அதற்காகத் திராவிடம்தான் சிறந்த கொள்கை. எல்லோரும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என் வாதமல்ல. அப்படி முன்மொழிய எனக்கு இப்போதைக்கு எந்தத் தகுதியும் இல்லை. நானே இப்போதுதான் அரசியல் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்மூடித்தனமாக ஒரு கட்சியை, தலைமையை, அவர் முன்வைக்கும் கொள்கையை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ தேவையற்றது என்கிறேன்.

நாற்பது வயதை நெருங்கும் இந்தக் காலத்தில்தான் நான் ஓரளவுக்கு சுயநினைவுடன் என் பொறுப்பை உணர்ந்து வாக்கைச் செலுத்தினேன். நான் யாருக்கு வாக்களிக்க போகிறேன். அவர்கள் முன்வைக்கும் கொள்கை என்ன, கடந்த காலத்தில் அவர்களின் சாதனைகள் என்ன, அவர்களின் தவறுகள் என்ன, அவர்கள் தோற்றால் என்ன விளைவு ஏற்படும், இவை எல்லாவற்றையும் ஓரளவுக்கு அறிந்தே வாக்களித்தேன். என்னுடைய முடிவு சரியா, தவறா என்பது அடுத்த கட்டம். அதை நோக்கிய என் பயணம்தான் முதன்மையானது.

என் இத்தனை வருட அறியாமைக்கு நானோ அல்லது என் குடும்பம் மட்டுமோ காரணமாய் இருக்காது என்பது என் கணிப்பு. ஐம்பது மற்றும் அறுபதுகளில் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் ஊர் ஊராக, வீதி வீதியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பொது மக்களுடன் கட்சி உறுப்பினர்கள் இணைந்து மக்களின் எண்ண ஓட்டங்களை மாற்றக்கூடிய நேரடி உரையாடல்களை முன்னெடுத்தார்கள்.

இதனால் இரண்டு விதமான விளைவுகள் என்னளவில் முக்கியமாக நினைக்கிறேன். ஒன்று, இதனால் அனைத்துத் தரப்பு மக்களின் அரசியல் குறித்த பார்வை மேம்படுகிறது. இரண்டாவது, அரசியல் என்பது மக்களுக்கு அன்னியமானது இல்லை என்கிற ஓர் உணர்வைக் கட்டமைக்கிறார்கள். இப்போது அப்படியான உரையாடல் இல்லையென்று சொல்லவில்லை. அதன் வடிவங்கள் மாறியிருக்கின்றன. காணொளிகள், பதிவுகள் அதன் இடத்தை சமூக வலைத்தளங்கள் நிரப்பிவிட்டன. இதனால் தாக்கமே இல்லையென்று சொல்ல முடியாது.

ஆனால் சமூக வலைத்தளத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் எது உண்மை, எது பொய் என்று கண்டறியவே ஒரு தனி முயற்சி தேவைப்படுகின்றது. அதனாலேயே பெரும்பாலும் மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கான தெளிவான காரணத்தை முன்வைக்க முடியாமல் திணறுகின்றனர். 

ஐம்பது வருடங்கள் இரு கட்சிகள் ஆண்டுவிட்டன, ஆண்ட கட்சிகள் மீது நிறைய குற்றச்சாட்டுகள், அதிருப்தி அலைகள் உள்ளன, அதனால் ஒரு புதிய கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்கிற மனநிலைதான் இருக்கின்றது. இந்த புதிய கட்சிகள் முன்வைக்கும் மாற்று என்ன, அதன் உண்மைத்தன்மை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது இங்கே இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. ஊழல் ஒழிப்பு, மது விலக்கு போன்ற பொதுவான பிரச்சாரம் போதுமானதாக இருக்கின்றது.

ஊழல் ஒழிப்பு, மது விலக்கு போன்றவை தேவையில்லையா என்று கேட்பது புரிகிறது. அதுவும் தேவை. மாற்றத்தை இங்கே யாரும் தடுக்கவில்லை அல்லது மறுக்கவில்லை. எதுவுமே மாறக்கூடியதுதான் மாற வேண்டியதும்தான். ஆனால் அதைவிட நம் மண்ணில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்த இட ஒதுக்கீடு பற்றிய கொள்கை என்ன, பொதுத் தேர்வுகள் (இவை இரண்டு உதாரணங்கள்) பற்றிய பார்வை என்ன என்பதையும் தெளிவாக தங்கள் பேச்சில், அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அடிப்படைத் தேவையல்லவா.

முடிவாக நான் சொல்வது நான் விரும்பும் மாற்றம் என்பது எல்லோரையும் அரசியல் மயப்படுத்துவதுதான். அந்த மாற்றம்தான் நமக்குத் தேவையான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் கருவி. மாறவேண்டிய மாற்றம் எவை, மாறக்கூடாத மாற்றம் எவையென தெளிவுபடுத்தும் மாற்றம்.

தேர்தல் முடிந்தவுடன் இதை எழுதுகிறேன். ஏனென்றால் இது தேர்தலுக்கானதில்லை நம் தேவைக்கானது.

அரசியல் கற்போம். அரசியலைக் கற்பிப்போம்.

No comments:

Post a Comment