Friday 2 July 2021

நாட்டில் நடந்த டேஷ் அரசியல் - கவிஞர் சொ. கார்த்திக்

நாட்டில் நடந்த டேஷ் அரசியல் - கவிஞர் சொ. கார்த்திக்


தஞ்சம் புகுந்தவனெல்லாம்

தாளாளர் ஆவதற்குத்

தாய்பூமி என்று சொல்லித்

தத்தெடுத்தான் தமிழ்நாட்டைப்


பூமாலை சூட்டிக்கொண்டு

புதியதோர் கட்சி தொடங்கி

பாமர மக்களிடம்

பாமாலை கேட்டு நின்றான்


அந்தச் சூழலில்

இதயம் கனிந்த மக்களும்

இன்முகமா வரவேற்று

பன்முகம் காட்டாமல்

பாசத்தால் அரவணைத்து


திராவிட அரசியலைச் சிதறடிக்க

ஆன்மீக அரசியலை முன்வைத்து

மூக்குடைந்து போனது

ஒரு முட்டாள் நட்சத்திரம்


பலகாலம் ஆட்சியிலே

பலன்கொடுத்த கட்சியையும்

சிலகால ஆணவத்தால்

சிதறடித்துச் சிணுங்கியதை


பார்த்துணர்ந்த மக்களெல்லாம்

மன உளைச்சல்

தானாகும் வேளையிலே


மக்களின் மனமுணர்ந்த

மதவாத சக்தியெல்லாம்

மாபெரும் அரசியலை

மாட்டை வைத்துத் தொடங்கியதே


சலிப்படைந்த மக்களெல்லாம்

சாதிக்குள் தான் அடங்கி

மதவாத சக்தியுடன்

மண்டியிட்டுக் கொண்டதுவே


மக்களின் அறியாமையை

ஆய்ந்தரிந்த பிறகட்சி

புரியாமையை உணரவைக்கப்

பொதுக்கூட்டம் நடத்தியதே


அதை உணர்ந்த அமைச்சர்கள்

ஆங்காங்கே கட்சித் தாவ

அவர்கள்

கொடுக்கின்ற பணத்துக்காக

அற்ப அரசியலுக்குள்

அடங்கியவர்களும் உண்டு


நாட்டில் நடந்த அவலத்திற்கு

ஒருமுறையும் குரல் கொடுக்காத

திரையுலகப் பிரபலங்கள்


சாதிய மதவாத

அரசியல் பிரச்சாரங்களுக்கு

ஓயாமல் குரல் கொடுத்ததையும்

கடந்த

ஒருமாத தேர்தலில் பார்த்தோம்


சாதி மத இருதுருவ

தேர்தல் முடிவினிலே

ஆதி தமிழ்க்குடி மக்களால்


இன்று

முடக்கப்பட்டது சனாதனம்

முறியடித்ததோ சனநாயகம்…


-கவிஞர் சொ.கார்த்திக் போளையம்பள்ளி

No comments:

Post a Comment