Friday 2 July 2021

சாதி உணர்வும் வர்க்க உணர்வும் - Dr.அருணாச்சலம் அங்கப்பன்

 சாதி உணர்வும் வர்க்க உணர்வும் - Dr.அருணாச்சலம் அங்கப்பன்.


2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிகமாக விவாதப் பொருளாக மாறி இருப்பது கொங்கு மண்டல தேர்தல் முடிவுகள். இது குறித்த விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்தவர்கள் பற்றிய திறனாய்வுகள் மிகுதியாகப் பதிவிடப்படுகின்றன. அந்தப் பதிவுகளில் உண்மை இல்லாமல் இல்லை.


இதே கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவன் என்ற முறையிலும், அந்தப் பெருவாரியான சாதியினரால் பல சந்தர்ப்பங்களிலும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலும் எனது கருத்துக்களையும் பதிவிட விரும்புகிறேன். தொடர்ந்து படியுங்கள்.


இந்தப் பதிவு சாதி வேற்றுமையைத் தூண்டுவதற்கு அல்ல. என்னோடு அடுத்தடுத்த வீடுகளிலும் அடுத்தடுத்த தெருக்களிலும் ஊர்களிலும் வசிக்கும் அனைத்து இனத்தவர்களும் அந்நியோன்யமாகப் பாரம்பரியத்துடன் அரவணைத்து வாழவேண்டும் என்ற அவாவினால் எழுந்த வேட்கையே!


சாதியம் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்ட வர்க்க ஆதிக்கம் என்பது முற்றிலும் உண்மை. விவசாயத்தைக் கைவிட்டு மண்ணை விற்று நகரங்களுக்குப் பெயர்ந்து வந்த கவுண்டர்கள் பெரும் தொழில் அதிபர்களாகவும், கல்வி சக்கரவர்த்திகளாகவும், குறைந்தபட்சம், சிறுகுறு தொழில் அதிபர்களாகவும் செல்வம் செல்வாக்குடன் வளர்ந்தார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஈரோடு, திருப்பூர், கோவை மாநகர நிலைமைகளைச் சொல்ல வேண்டும்.


மேற்படி நகரங்களில் தொழில், வியாபாரம், வணிகம் செய்து, தொழிற்சாலைகள் உற்பத்தி ஆலைகள் நிறுவி, கொள்ளை லாபம் ஈட்டுவது குறிக்கோள் என்று இல்லாமல் சமுதாயம் பயன்படும் படி வாழ்ந்த நாயுடு, முதலியார் சாதியினர் குறி வைக்கப்பட்டார்கள். அவர்கள் வசம் இருந்த, அவர்கள் பல நெடுங்காலம் உழைத்து உற்பத்தி செய்திருந்த வணிகங்களும் வியாபாரங்களும் தொழில் நிறுவனங்களும் கிராமத்தின் மண்ணை விற்று பெரும் முதலீட்டுடன் வந்த கவுண்டர்களால் வளைத்துப் போடப்பட்டன.


அதேசமயம் இன்னொரு பிரிவினர், அந்த மண்ணை நம்பி விவசாயத்தையே முழுமூச்சாகப் பாவித்து அல்லும் பகலும் உழைத்து ஓடாய்த் தேய்ந்து, தங்களுக்கு எதிரான திட்டங்களுக்காகப் போராடிக் கொண்டு போனார்கள். ஆனாலும் முதலாளி வர்க்கம் ஆக மாறிய கவுண்டர்களின் செல்வாக்கினால் கிராமங்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் ஆகவே நின்றுவிட்ட கவுண்டர்கள் பெரிதாக ஏதும் சாதிக்க முடியவில்லை. அவர்களும் இனம், சாதி, அங்காளி- பங்காளி, மாமா- மாப்பிள்ளை அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்டு அதிமுகவையே ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காரணம் அண்ணா கலைஞர் அவர்களால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் கீழ்த்தட்டு மக்களை ஆதரிக்கும் நிலையிலிருந்தபடியால், எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த பொழுது பெருவாரியாக அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.


கூர்ந்து கவனித்தோம் என்றால் எந்தக் கட்சியில் தங்கள் இனத்தவர் வேட்பாளராக இருந்தாலும், அவரை ஆதரிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்ட நிலையிலும்கூடத் திமுகவை இரண்டாம் பட்சமாகப் பார்ப்பதே அவர்களது வாடிக்கையானது. மேலும் பல கட்சிகளிலும் தங்கள் இனத்தார் வேட்பாளராக இருக்கும் பட்சத்தில் அதிமுகவில் இருக்கும் தங்கள் இனத்தவர் பார்த்தே அவர்கள் வாக்களிப்பர்.


எம்ஜிஆர், ஜெயலலிதா காலம்தொட்டே கொள்கைப் பிடிப்புக்கும் தலைவர்பால் உள்ள ஈர்ப்புக்கும் அவர்கள் துணை நின்றவர்கள் அல்ல என்பதே பட்டவர்த்தனமான உண்மை.


ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர் கீழ்த்தட்டு மக்களுக்கு உறுதுணையாக இருந்த பொழுது அவருக்கு எதிராகவும் செயலாற்றியவர்கள்தான் இந்தக் கவுண்டர்கள். கீழ்த்தட்டு விளிம்புநிலை மக்கள் பால் எம்ஜிஆர் காட்டிய பரிவும் அக்கறையும் இவர்களைப் பாதித்த பொழுது, ஒரு காலகட்டத்தில், அதாவது 1980களில், காவேரி ஆற்றுக்குக் கிழக்கு-மேற்கு என்று தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளையும், நாட்டுக் கவுண்டர் - கொங்கு கவுண்டர் என்ற பாகுபாடுகளையும் மறந்து, அனைத்து கவுண்டர் களையும் அரவணைத்துத் தங்கள் பெரும்பான்மை காட்டும் தந்திரம் செய்தார்கள்.


தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, அன்றைய பரந்துபட்ட ஒன்றுபட்ட கோவை மாவட்டம் மட்டுமே கொங்கு மண்டலம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பலத்தை மக்கள் தொகையைப் பெருகிக் காட்ட ஆற்றுக்குக் கிழக்கே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என்று ஒன்றிணைத்தார்கள்.


கவுண்டர்களின் எதிர்வினையைச் சமாளிக்க முடியாத எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் விளிம்புநிலை சாதியைச் சார்ந்தவர்கள்மேல் காட்டிவந்த அக்கறையைச் சிறிது குறைத்துக் கொண்டு, கவுண்டர்களைக் கை கொடுத்துத் தூக்கி விட ஆரம்பித்தார். பின்னர் வந்த ஜெயலலிதாவும் அதையே பின்பற்றி அவர்களை மேன்மேலும் உயர்த்திப் பிடித்தார்.


சீர்திருத்தவாதிகள் ஆன தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், தளபதி தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர்களை அவர்கள் வெறுப்புடனேயே பாவித்து வந்தார்கள். வெற்றிபெறும் கட்சி பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும் பொழுது சீர்திருத்தவாதிகள் மற்றும் அறிஞர்கள் பின்னால் சென்றார்கள். ஆக எப்படிப் பார்த்தாலும் அதிகாரம், பொருளீட்டல், பணம் சேர்த்தல், சொத்து சேர்த்தல், மற்ற சாதியினரை இழிவாக நடத்துதல் ஆகியவையே முக்கியக் குறிக்கோளாகும். இவர்களே இக்காலகட்டத்தில் சாணக்கியர்களாகவும் பிராமணர்களாகவும் அவதாரம் மாறி வருகிறார்கள். சாணக்கிய தத்துவம், பிராமணச் சூழ்ச்சி கோட்பாடுகளின்படி அனைவரையும் மிக அனுசரணையாக, அன்பாக, பண்பாக அரவணைத்துக் காரியம் சாதித்துக் கொள்வார்கள். அவர்களால் தங்களுக்கு ஆக வேண்டிய தேவை முடிந்தவுடன் மற்ற சாதியினர் அவர்களுக்கு மீண்டும் இழிவாகத் தெரிவார்கள். கேவலமாக நடத்தப்படுவார்கள். அவர்களைப் பகைவர்கள் ஆக்கி முடித்துக் கட்டவும் துணிவார்கள்.


-Dr.அருணாச்சலம் அங்கப்பன்.No comments:

Post a Comment