Saturday 31 July 2021

“தமிழர் திருமணமும் இனமானமும்” நூல் முன்னுரையிலிருந்து - பேராசிரியர் க. அன்பழகன்

 “தமிழர் திருமணமும் இனமானமும்” நூல் முன்னுரையிலிருந்து - பேராசிரியர் க. அன்பழகன் 


மிழ்நிலத்தில் ஆரியம் கால்கொண்டு, நாடாண்ட மன்னர்களிடம், குறிப்பாகப் பிறமொழிச் சார்பு மன்னர்களிடம் தனி உறவு வளர்த்துச் செல்வாக்கு அடைந்து தமது வைதிக வழி முறைகட்கு ஆதரவு பெற்று,

கோயில் அர்ச்சகராக உயர்ந்து தமது பிறவி உயர்வை நம்பிடவைத்து, பல்வேறு வகையான தானங்கள் பெற்று, வளவாழ்வும் எய்திய நிலையால், அவர்களே சமூதாயத்தின் குருமார்களாகவும், ஆன்மிகத்துறையில் மேலுலக வழிகாட்டிகளாகவும் உயர்ந்துவிட்டனர். வைதிக மதவழியில் பரப்பப்பட்ட கற்பனைப் புராணக் கதைகளால் அவர்தம் பிறவி உயர்வும், பிராமண சாதி

மகிமையும் மதிப்படலாயிற்று. பிற பூசாரிகளும் குருமார்களும் பெறாத தனி உயர்வும் பெருமதிப்பும், வடமொழி வைதீக மத வழிபட்ட பிராமணர் பெற்றனர். அதன் விளைவே, தமிழர்களின் திருமணத்திலும், நீத்தார் நினைவு நிகழ்ச்சியிலும் புரோகிதர்களை அழைக்கும் மனப்பான்மை வளர்ந்தது. அவ்வாறு செய்வதன் மூலம் வைதீக வருண முறையால் இழிவடைந்த தமிழர், தமது குலத்தினை - உயர்சாதிப் பிறவி ஆக்குவதாக, ஒரு போலித்தனமான எண்ணமும் உருவாயிற்று. 


தான் பிராமணன் என்பதையும், உலகம் தனக்காக என்பதையும், தெய்வம் தனக்குத்தவே என்பதையும் உறுதிப்படுத்திக் காட்டும் ஒரு பாவனை வளர்ப்பதும், இவைகளைப் பிறர் பொருட்படுத்தாது, பிராமணர் கட்கே இவை உரியவை என்று மதித்திடச் செய்ய ஏதுவாக, மற்றவர்களிடம் 'உலகம் மாயை' என்னும் தத்துவம்  பரப்புவதுமே பிராமணர்களின் வைதிக மத வழிக்

கோட்பாடு ஆயிற்று. அதை நம்பியதால் தமிழன் தாழ்ந்தான், ஆரியன் உயர்ந்தான்; அடியார்க்கும் அடியாராய்த் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்ட தமிழன், ஆரிய வருணப்பிரிவில் கீழ்ச்சாதி - 'சூத்திரன்'

என்று இழிபிறவியாகக் கற்பிக்கப்பட்ட வழக்குக்குப் பலியானான்.


“இந்த எண்ணம் இதிகாச புராணங்களால் பக்தியணர்வோடு மக்கள் மனத்தில் ஊன்றப்பட்ட வகையால், இறைப்பற்றாளரான பெரும்பான்மைத்

தமிழர்கள், தமது பிறவிக்கு ஈடேற்றம் தேடும் ஆர்வத்தில் நிரந்தர அடிமைப் பிறவி' யாயினர்.


எசமான் சாதியினர் துறை தோறும் ஏற்றம் பெற்றதும் - அடிமைச் சாதியினர் கல்விகூடப் பெறாதவர்களாய் ஆனதும், இருபதாம் நூற்றாண்டின்

துவக்க ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது. அந்த நிலையைப் பார்த்துப் பார்த்து வேதனை கொண்ட உள்ளங்களின் குமுறல்தான். நீதிக்கட்சியின் உரிமைக் குரலாக ஒலித்தது. திராவிடர் இயக்கம் தோன்றியது.


சமுதாய வாழ்வில் பிறவி அடிமைத்தனத்திற்கு ஆளாகியுள்ள மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளை ஒழித்தாலன்றித் தமிழன் மனிதனாகத் தலை நிமிர முடியாது என்பதை உணர்ந்த சிந்தனையாளரின் முழக்கந்தான் சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமாக உருக்கொண்டது.


தமிழர்கள் ஓர் இனம் - திராவிட இனம் என்பதை உணரச் செய்தால்தான் அவர்கள் தன்னம்பிக்கை கொள்ளலாகும் என்பதைத் தெளிந்த நிலையில் வடிவு கொண்டதே திராவிடர்க் கழகம். தமிழ் முதலான அனைத்து மொழிகட்கும் சமக்கிருதமே தாய்; அதன் துணையும் வடசொற் கலப்பும் இன்றித் தமிழ் இயங்காது என்னும் புனைந்துரையால் விளைந்த இழிவையும்

பழியையும் துடைத்து, தமிழ் மொழி தனித்தியங்க வல்லது என்னும் உண்மையை நிலைநிறுத்தவும், அதன் வளம் "பெருக்கவும் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம். வடவரின் - வழிப்பட்ட இந்தி ஆதிக்கத்தால் தமிழ் கெடும்; வைதிகம் மேலும் உருப்பெற்றுத் தமிழரின் இனமானம் பறிக்கப்படும் ; திராவிடரின் உரிமை வாழ்வு ஒடுக்கப்படும் என்றுணர்ந்த தமிழறிஞர்கள், தன்மான இயக்கத்தார், நீதிக்கட்சியினர் ஆகியோர் எழுப்பிய போர்க்குரலே இந்தி எதிர்ப்பு இயக்கமாக்கியது. 


தொன்னாள் முதல் தமிழர்கள் இசைக்கலையில் தேர்ந்தவர்களாயிருந்தும், பக்திவழியில் தெலுங்கு இசையை வளர்த்து, அதையே இசை அரங்குகளிலெல்லாம்    பாடுவதை வழக்கமாக்கி, தமிழிசையைத் தமிழர்களே மறக்கும் நிலையை வைதிகர்கள் உருவாக்கியது கண்டு, அந்தப்போக்கினைத் தடுத்து நிறுத்தத் தோன்றியதே  தமிழிசை இயக்கம்.


திராவிட இனமானமும், மொழியுரிமையும் காத்திட, தமிழ்நாட்டு மக்கள் முன் எடுத்து மொழியப்பட்ட சுயமரியாதை உணர்வு; பகுத்தறிவு நோக்கு; தமிழ்மொழிப் பாதுகாப்பு; மாநில அரசின் தன்னாட்சி உரிமைகள்; பொருளியல் சமதர்மம் ஆகிய கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியின் மொத்த வடிவம் ஆக விளங்குவதே அறிஞர் அண்ணாவின் அறிவாற்றலால் மலர்ந்த திராவிட முன்னேற்றக்கழகம். அதன் பின்னர் விளைந்த கட்சிப் பிரிவும் அதன் குறிக்கோளும் திராவிட இயக்கத்தின் கொள்கை வளர்ச்சியினாலோ, இலட்சிய நிறைவேற்றத்துக்காகவோ ஏற்பட்ட மாற்றம் அல்ல.   


திராவிட இனத்தின் இனமானம் காக்கும் மூச்சு, தன்மான உணர்வே. அதன் உயிராக நிலவுவது தாய்மொழிப்பற்று. அதன் உடம்பு திராவிடர் இயக்கம்; அமைப்பு. இந்த அடிப்படையை மறவாது காத்திடும் கடமையுணர்ந்த பாசறையாக விளங்குவது திராவிட முன்னேற்றக்கழகம். எனவே தான் தன்மான உணர்வு தழைக்கும் வழியாகத் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமண முறையைப் பரப்புவதை ஒரு கடமையாக மேற்கொண்டுள்ளோம்.  


திருமணங்களில் வைதிக முறையைக் கைவிட்டுப் புரோகிதரையும் வடமொழியையும் விலக்கிச் சீர்திருத்த முறையை  ஏற்று நடத்துவதன் நோக்கத்தையும் பயனையும் விளக்குவதும், அப்படிச் செய்வதற்குத் தயங்குவோரின் ஐயங்களையும் அச்சங்களையும் நீக்குவதும் இந்த நூலின்

நோக்கமாகும். தமிழர்களின் இனமானம் காத்திட, சில நூற்றாண்டுகள் முன்னர் இடைப்புகுந்த வைதிகப் புரோகிதச் சடங்கு முறையைக் கைவிடுவதன்றி, வேறுவழியில்லை என்பதை அறிந்தவர்களுங்கூட, இறையருள் சித்திப்பதாக நம்பியும், மதவழி என்று மயங்கியும், மரபு என்று உண்மை தெளியாமலும், வைதிகப் புரோகித முறையை இன்றும் பின்பற்றுவதைக் காண்போர் இந்த நூலின் தேவையை உணர்வர். தமிழ் உணர்வும், பகுத்தறிவு நோக்கமும் கொண்ட சீர்திருத்தத் திருமணமுறை, ஒரு கட்சிக்கு மட்டுமே உரியதாகாது. இதனைப் பொதுவுடைமைக் கட்சி, காங்கிரசு முதலான பல கட்சித் தலைவர்களில் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயற்கை நியாயம் உணர்ந்த சில பிராமண அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். பகுத்தறிவும், சுயமரியாதையும், தமிழும் அனைவருக்கும் பொதுவே!


வைதிகப் புரோதிகர்களையோ, பிராமணர்களையோ தனிப்பட்ட முறையில் வெறுப்பதால் பிறந்ததல்ல இக்கொள்கை. ஆரிய இனம் என்பதற்காக, பிராமணர்களை வெறுப்பதற்கும் ஒறுப்பதற்கும் தோன்றியதல்ல இந்த இயக்கம். வைதிகம் போற்றும் பிராமணர்களைவிட, வைதிகத்தைப் பின்பற்றவும் ஆதரித்திடவும் தயங்காத தமிழர்கள் மிகப் பலர் என்பது நாமறிந்ததே. இந்த முறை புரோகிதர்களின் தொழிலைக் கைப்பற்றுவதற்காகத் தோன்றியதும் அல்ல. மாறாகத் தம்மை உணராத தமிழர்கள் தம்மை உணர்ந்து, தன்மானமுள்ள மனிதராகத் தலைநிமிரச் செய்யவும், தமிழராக வாழச் செய்யவுமே தோன்றியது ஆகும்.


பல்லக்கில் அமர்ந்து பவனிவர ஒரு பிறவி; அவர்தம் கட்டளைப்படி. பல்லக்குத் தூக்குவதே புண்ணியம் என்று சுமை தாங்கப் பிறிதொரு பிறவி! தேரில் அமர்ந்து அணையிட ஒரு பிறவி; அந்தத் தேர்வடம் பிடித்து இழுத்துப் புண்ணியந்தேட மற்றொரு பிறவி!: வைதிக தரும உபதேசம் நடத்தி வயிறு பிழைக்க ஒரு பிறவி; அதை நம்பி நாளும் பாடுபட்டும் வாழ்வு பெறாது நலிந்திட வேறொரு பிறவி! என்னும் அநீதியைத் தெய்வக் கட்டளை என்று நம்பி ஏற்றுக் காலமெல்லாம் ஏமாந்து மாயும் தமிழர்களைத் தெளிவடையச் செய்வதே இதன் நோக்கம்.


என்னைப் பொருத்தவரையில், பிராமணர்கள் என்பதற்காக எவரையும் நான் வெறுக்கவும், கண்டிக்கவும் காரணமில்லை. நான் எவரையும் அவரது

பிறவி அடிப்படையில் பார்ப்பனர் என்றோ, பறையர் என்றோ மனமார மதிப்பதுமில்லை/ ஏற்பதுமில்லை.


பார்ப்பனரிலும் பகுத்தறிவு வழிநிற்கும் முற்போக்கு எண்ணங் கொண்டோர் சிலர் உண்டு என்பதையும் நான் நன்றியோடு உணர்கிறேன். பாரதியாரின் பாடல்களையும் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளையும் படித்து உணர்வோர், பார்ப்பனர் உட்பட எவராயினும் கொள்ள வேண்டிய உணர்வே அது. பிறப்பை ஒட்டிய மதிப்பீடுகளை மறந்தும் துறந்தும், எல்லோரும் ஓர் நிறை, ஓர் சமம் என்பது நடை முறையில் வரவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட பகுத்தறிவு நெறியின்படி. எவரையும் தனிப்பட்ட முறையில் வெறுப்பதற்கு நியாயமில்லை. 


“தமிழன் எவருக்குந் தாழான் - தமிழன் எவரையும் தாழ்த்தான்" என்னும் பொதுமை நிலையை உருவாக்கிடவும் உருவாக்கிடவும், எல்லோரும் ஓர் குலமாய், ஓர் இனமாய் வாழ்ந்திட தடையாகும் சாதி வேற்றுமைக்கேடுகளை  ஒழித்திடவும் தமிழர்கள் முன்வரவேண்டும் என்பதே எனது விழைவும் வேண்டுகோளுமாகும்.


- பேராசிரியர் க. அன்பழகன் 

(“தமிழர் திருமணமும் இனமானமும்” நூல் முன்னுரையிலிருந்து)

No comments:

Post a Comment