Saturday 31 July 2021

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க. அன்பழகன்

 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் க. அன்பழகன் 


நாம் கற்றறிந்த உண்மைகளைச் சமுதாயத்தில் நிலைநாட்டும் ஆற்றலோ, உள்ளத்து உறுதியோ நம்மிடம் இல்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் குற்றம் செய்யவில்லை எனினும், உள்ளம் அறிந்த உண்மையை நடைமுறையில் வலியுறுத்த நாம் தயங்குகிறோம். 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்று இந்தப் போக்கைக் கருதலாகாது. உண்மையை நிலைநிறுத்துவதற்கு உரிய விலையைத் தரவும், இழப்பை ஏற்கவும் இளைஞர்கள் துணிய வேண்டும். உண்மையான உளமொத்த  காதல் கொண்ட இருவேறு சாதி மதங்களை சேர்ந்த காதலர் - தம் பெற்றோரும், உற்றாரும், சமுதாயமும் எதிர்த்துக் கண்டித்தாலும் - தம் சொத்து சுகம் யாவும் இழக்க நேரிட்டாலும், காதல் மணத்தை உறுதிப்படுத்த தயங்குவதில்லையன்றோ! அது காதலில் கட்டுண்ட அவர்தம்  மன உறுதியின் வலிமைக்கு மட்டுமன்றிச் சாதியின் பொய்மைக்கும் சான்றாவது அன்றோ? ஆக நாம் தெளிவாக உணர்ந்த உண்மையை, சமுதாய நன்மைக்கான கொள்கையை நாமே கைவிடலாகாது. மாறாக நாம் அறிந்து தெளிந்த உண்மைகளை ஒதுக்கி வைத்துச் சமுதாயத்தின் போக்கில் நாம் முழுகிப் போனால், புதிய சமுதாயத்தைப் படைக்கும் ஆற்றல் பிறக்காது; புதியதொரு சமத்துவ உலகம் தோன்றாது.   


***


'தமிழ்மொழி தொன்மையும் மேன்மையும் வாய்ந்த மொழி மட்டுமன்றி- பண்பாட்டு மொழி - செம்மொழி (Classical Language) - வேறு எம்மொழியினும் தமிழ் தாழ்ந்ததன்று. பல்லாற்றான் உயர்ந்த இலக்கணம்  உடையது;தரணி  ஆளும் திறமும், பல்கலைகளையும், அறிவியலையும் பாங்குற விளக்கும் ஆற்றலும் பெற்றது'        


***


கல்வி என்பது அறிவுக்குத் தரும் பயிற்சியே! 'கண்டு, கேட்டு, எண்ணி, அறிந்து, தொகுத்து, வகுத்து, நன்மை தீமை தெளிந்து, நினைவில் நிறுத்தி, செய்யத்தக்கதும் அல்லதும் துணிந்து, நடை போட்டிடத் துணையாவதே  கல்வி. அதற்கான பயிற்சி சிறப்பது கல்லூரியில். மனிதனின் மூளை, ஆற்றல் நிறைந்தது. அதனைப் பயன்படுத்தும் வாய்ப்புப் பெற்றால்தான், அதன் திறமையின் சில கூறுகள் வெளிப்பட்டுப் புலனாகும். பயன்படுத்தும் முயற்சியே நிகழாத போது, மூளை முடங்கிக் கிடக்கும். பெருஞ் செல்வக்குவியல் ஆனாலும், கண்டெடுக்கப்படாத  புதையலாகவே மூளை பயனற்றுப் போகும்.


*** 


பெரியார் தோன்றிய காரணத்தாலே ஒரு பெரிய மாற்றம் இந்த நாட்டிலே விளைந்தது. தன்னம்பிக்கை பெறுவதற்குத் தந்தை பெரியார் அடிகோலினார். மனிதத் தன்மைக்கு ஒரு சிறப்புச் சேர்த்தார்.நம்முடைய சமூக மக்கள் பிறவியினாலே இழிவு என்று கருதுகிற அந்த நிலையிலிருந்து, நம்மையெல்லாம் விடுவித்தார். எல்லோரும் ஓர் குலம் என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கு வாழ்நாளெல்லாம்  பாடுபட்டார்.சமத்துவத்திற்கு மாறான சதி நடைபெற்ற இடங்களிலெல்லாம் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். உண்மை தெளியாது கண்மூடிக்கிடந்த மக்களின் கண்களைத் திறந்துவைத்தார்.


இன்னும் உண்மையாக சொல்வதாக இருந்தால், எனக்குக் கிடைத்துள்ள இந்தத் தகுதியும் எனக்குக் கிடைத்திருக்காது...


இன்னும் ஒருவகையிலே சொல்வதாக இருந்தால், தமிழ்நாட்டு மக்களின் மறுமலர்ச்சிச் சிந்தனையைப் பெருமளவுக்கு வளர்த்தவர் பேரறிஞர் அண்ணா என்றாலும், தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழங்கிய பெருங்கொடையே அறிஞர் அண்ணா..


(பெரியார் பல்கலைக்கழகத்தில்...)


*** 


உலகோரைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும்,மூட நம்பிக்கைகளை முறியடிக்கவும் அருந்தொண்டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை - அறிவியல் மேதைகளை - சீர்திருத்த செம்மல்களையெல்லாம் எடுத்துக்காட்டுவது ஏன்? இளைய தலைமுறையினாரான புதிய பட்டதாரிகள், நாடு வாழவும், சமுதாயம் முன்னேறவும், மதவெறி ஒழியவும், சாதி வேற்றுமை தொலையவும் பாடுபடுவதற்கு உறுதிகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். வருங்கால வையகம் பழைமை போற்றும் மதத்திற்கன்று; புதுமையை வரவேற்கும் அறிவியலுக்கே; அவதாரக் கடவுளர்க்காகவன்று - அறிவுள்ள மானிடத்திற்கே. (மாநில கல்லூரியில்) 


***


காரிருளில் நடப்பவன் பெற்ற கைவிளக்கு கல்வி; கல்வியினால் பெறும் அறிவின் வகை, எழு ஞாயிற்றின் கதிரெனப் பல திசைகளிலும் விரிவது; வளர்வது; பலவற்றையும் புலப்படுத்துவது. அந்தக் கதிர்களில் ஒருவன் கண்கொள்ளும் அளவே, பார்வை செல்லும் அளவே, ஒருவன் வாழ்நாளில் பெறலாகும் பெரும்பேறு - இறுதிநாள் வரை கல்வி அறிவைத் தேடுவதே என்பேன்.  


*** 


உள்ளத்தில் ஊறும் உணர்வுகளை ஒழுங்குபடித்திடவும், மன அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளவும், மனித உணர்வுகளை விளங்கிக்கொள்ளவும், மனிதத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும். நாட்டின் பண்பாட்டைக் காத்திடவும், மனித உரிமை உணர்வை வளர்த்திடவும் கலை, இலக்கியத்துறை ஈடுபாடு துணையாகும்.     


**


நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுதான் உள்ளோம். அந்த மாற்றத்தை முற்போக்கான பாதையில் நடைபோட ஏதுவாக அமைத்துக்கொள்வதே இளைஞர்களின் கடமை.


***


நாம் உண்மை என்று அறிந்ததை நாமே பின்பற்றுவதில்லை. அந்த நிலைமையையே நாம் சமுதாயத்திற்கு ஏற்புடைய நடைமுறை என்று கருதிக்கொள்கிறோம். நமது மனச்சான்று உறங்குகிறது. உண்மையை நிலை நிறுத்தும் ஆர்வம் பிறக்கவே இடமில்லாமல் போகிறது.      


***


உண்மையை எதிர்கொள்ளும் ஒரு மனப்பான்மையைக் கல்வி நமக்கு ஊட்டவில்லை. போகிறபோக்கில் கற்ற கல்வி என்பது நாம் நீரில் ஆழாமல் மிதப்பதற்கு ஒரு தெப்பமாகவோ, படகாகவோ ஆகியிருக்கிறதே தவிர, நீரோட்டத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போடுகிற துணிச்சலை, ஆற்றலை நமக்குத் தரவில்லை. இந்த ஆற்றல் ஏற்படவேண்டுமானால், தன்னம்பிக்கையை வளர்க்கும் சுயசிந்தனை வளரவேண்டும். சமுதாயத்திலே சுயசிந்தனை ஏற்படுத்துவதற்கு நாம் ஒவ்வொரு வழியிலேயும் துணைநிற்க வேண்டும். சமுதாயத்தில் அந்தச் சுயசிந்தனை வளருவதற்குத் தாய்மொழியிலே உயர்கல்விக்குரிய கருத்துகளை மாணவர்களும் பயிலக்கூடிய நிலை உருவாக வேண்டும்; விரைந்து உருவாக்கவேண்டும்!  


***


கல்வி என்பது, அறிவு வளர்ச்சிக்கு ஓர் அடிப்படையான இன்றியமையாத பயிற்சி, கல்வி என்றால் பயிற்சி தான். அறிவு வளர்ச்சியிலே கல்வி, பட்டறிவை விட மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எந்த அளவு பயிற்சித்திறன் கிடைக்கிறதோ, அந்த அளவு அறிவு வளர்ச்சியும் கிடைக்கிறது. 


***


அறிவியல் சார் உணர்வு, அறிவியல் சிந்தனையினுடைய தாக்கம், அறிவியல் மனப்பான்மை, இந்த மனப்பான்மை வளர்வதன் காரணமாக மூடநம்பிக்கையில் இருந்து  விடுபடுகிற மனநிலை. தங்களுடைய சுயசிந்தனையைப் பயன்படுத்தித் தங்களுடைய வாழ்வை நிலைமைக்கேற்ப அமைத்துக்கொள்ளக்கூடிய ஓர் ஆற்றல், மக்களிடத்திலே உருக்கொள்ளவில்லை. பயன்மிக்க நவீன அறிவியல் சாதனங்கள், வளமுள்ள வாழ்க்கை பெற்றவர்களுக்குக் கிடைக்கிறது. ஏழை எளியவர்கட்கு அவை கிடைக்கவில்லை. போக்குவரத்துச் சாதனங்களில் மகிழுந்தோ, வேறுவிதமான பயனுள்ள சாதனங்களோ வசதியுள்ளவர்களுக்குக் கிடைப்பதைப்போல வறியவர்களுக்குக் கிடைப்பதில்லை.


மேலும், கடுமையான உடல் உழைப்பை உள்ள எளியவர்களுக்கு இந்த அறிவியல் கருவிகளால் கிடைக்கக்கூடிய பயன்கள் கிடைப்பதில்லை. கிராமத்திலே உள்ள ஏழைக் குடியானவனுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்காததைப்போலத்தான், வாழ்க்கையிலே அறிவியலால் பெறலாகும் நல் விளைவுகளை அடித்தட்டு மக்கள் பெறமுடியவில்லை. இந்த அடித்தட்டு மக்களும், அதனுடைய பயனை ஓரளவேனும் பெற வேண்டுமானால், அறிவியல் கருத்து விளக்கம் தாய்மொழியில் (தமிழில்) நடைபெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வது கடினமே.    


***

மதப் பழக்கமாகச் சொல்லப்படுகிற கருத்துதான் ஒழுக்கமே தவிர மற்றவை சிறந்த ஒழுக்கமல்ல என்ற எண்ணம் வளர்ந்தது, மதசார்புடைய கருத்தால் ஏற்பட்ட விளைவு. 


***


நான் எண்ணிப்பார்த்த அளவில் கல்வி என்பதன் வடிவம் மட்டுமல்ல; அதனுடைய உட்பொருள் மட்டுமல்ல; கன்டென்ட்ஸ் (contents) மட்டுமல்ல; அதனுடைய நோக்கமே கூட மாறியிருக்கிறது. 


***


இதுதான் கல்வி. இது மட்டும்தான் கல்வி என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கல்வி அறிவின் வழிபட்டுக் கதிரவன் ஒளிக்கதிர் போல் பரவிக் கொண்டே இருப்பது. 


***


தத்துவம் என்பது மனித வாழ்க்கையின் தேவைக்கான பயன்பாட்டிற்கு எதிரானதன்று. பயன்பாடு என்பது மனித வாழ்வுக்கு வழி செய்வது. இது தத்துவங்களுக்கு மாறுபட்டதன்று.  


***


'பெண்களின் உரிமை மறுப்பு' - என்பது வாய்ப்புகள் இல்லாத நிலையைக் குறிப்பதல்ல. வாய்ப்புகள் இருபாலாருக்குமே அமையாது போகலாம். ஆனால், தலைமுறை பலவாகவே இருபாலரின் குருதியில் படிந்த உணர்வாகவே, பெண்களின் வாழ்வுரிமை முற்றிலும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே மகளிர் வாழ்வுரிமை பற்றி எண்ணிப்பார்க்கும் நிலை அமையவில்லை. 


***


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாட்டுப்பாடி ஆடினாலும், பெண்கள் அந்தச் சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் சமுதாயச் சூழல் உருவாகவில்லை. மகளிர் பலரே "வழக்கத்தால் மாடுகளும் செக்கைச் சுற்றும்" என்னும் போக்கினில், தத்தம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட எண்ணங்களிலிருந்தும், ஒருவகைச் சமுதாய மதிப்பு உணர்விலிருந்தும் தங்களை விடிவித்துக்கொண்டவர்கள் ஆகவில்லை.     


***


ஆதி நாள்களில், சங்க காலமாயினும் - வேத காலமாயினும் பெண் உரிமையைப் பறித்திடும் மதவழிப் பழக்கம் உருவாகவில்லை. மகளிர் இயல்பாகப் பெறக்கூடிய வாழ்க்கை உரிமைகளும், தமது அறிவைச் சுதந்திரமாகப் பயன்படுத்திச் செயற்படும் வாய்ப்புகளும் தடைசெய்யப்படவில்லை.


ஆனால், நால் வருணப் பகுப்பும் அதன் வழியில் சாதிப்பிரிவுகளும் வழக்கிற்கு வந்துவிட்ட பின்னர்தான், அந்தந்த வருண மகளிர் பிற வருணத்தாருடன் கலந்துவிடக்கூடாது. கலந்தால் அதனால் தத்தம் வருணம் மதிப்பு இழக்கும். இழிந்த சாதியாகிவிடும் என்னும் கருத்தால், மகளிர்க்குத் தடைகள் விதிக்கப்பட்டன. 


***


இனி யாரும் கல்வி எங்களுக்கு மட்டுமே உரியது என்று சொந்தம் கொண்டாட முடியாது. வேதம் மறுபடியும் பிறக்காது. பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த, "நால்வகை வருணத்தை நான்தான் படைத்தேன்" என்னும் வஞ்சம் பேசிய பகவத்கீதை மொழிகள் இனி ஏற்கப்பட மாட்டாது. வருணாசிரம தரும அடிப்படை தகர்க்கப்பட்டுவிட்டது. வைதீக நெஞ்சங்களின் பேராசையினால் மிச்ச சொச்சங்கள் இருக்கலாமே தவிர, அவையும் அடையாளம் தெரியாமல் எதிர்காலத்தில் நொறுக்கப்படும். இது ஒரு தனிப்பட்ட வைதீகச் சாதியாருக்கு உரிமையானதாகக் கருதப்பட்டிருக்குமானால், அப்படி ஒரு சாதி இருப்பதற்குத் தகுதி இழந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.  


***


கடந்த காலத்திலே 'கல்வி' என்பதே கடவுளைத் தேடுவதற்காக, மதவழியில் நம்பிக்கைக்கொண்டு, ஆன்மிகம் வளர்ப்பதற்காக என்று கருதி இருந்தனர். இனிவரும் கால கட்டத்திலே கல்வி மதத்தைக் காப்பாற்றாது. அதற்கடுத்த கால கட்டத்திலே கல்வி என்பது பழமையைக் கவ்விக்கொண்டுள்ள சமூக அமைப்பை அப்படியே நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடாது. அதற்கு அடுத்த காலகட்டத்திலே கல்வி, மதவழியில் பதிந்துவிட்ட நம்பிக்கைகட்கு வாழ்வளிக்காது.  அதற்கடுத்த காலக்கட்டத்திலே, கல்வி, 'கடவுள்' எண்ணத்தையேகூட ஒதுக்கும் ஆற்றல்பெறும். அப்பொழுதுதான் மனிதனின் அறிவு, சுயசிந்தனைத் திறன் பெறும். கட்டுக்கதைகளிலிருந்து கடவுளும் விடுபடுவார்.    


***


பெரியார் அண்ணாவை தந்தார். அண்ணா கலைஞரை தந்தார். ஒருவேளை கலைஞர் இல்லாவிட்டால் என்ன நேரிட்டிருக்கும், நேரும் என்பதனை இன்று நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். இது கலைஞரை பாராட்டுவதற்கான என்னுடைய வார்த்தை அல்ல. 


கலைஞர் இல்லையென்றால், தமிழ்நாடு எந்த நிலையில் எந்தச் சூழ்நிலையில் தள்ளப்பட்டதாக இருக்கும்; வீழ்த்தப்பட்டதாக இருக்கும்; விவேகமற்றதாக இருக்கும்; ஜனநாயக உணர்வற்றதாக இருக்கும்; உரிமைகளை மதிக்காத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் என்றெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்தால்தான் உண்மை விளங்கும். தந்தை பெரியாருடைய பெயரில் இந்த பல்கலைக்கழகம் வருவது நாம் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம்; எதிர்காலத்தமிழகம் வாழும் என்பதற்கு அடையாளம். 


***


மனிதன் மறைந்தான். சாதியின் பெயராலே பலபேர் தலையிட்டார்கள். அதனுடைய விளைவாகச் சமூக வீழ்ச்சிக்கு ஆளானோம். தீண்டாமைக்கு நாம் பலியானோம்; ஏற்றத்தாழ்வு எண்ணங்களுக்கு ஆட்பட்டோம். ஒருவரோடு ஒருவர் கலந்து உண்ணாத அளவுக்குப் பிரிவுபட்டோம். கலப்புத் திருமணங்கள், சாதி விட்டுச் சாதி திருமணங்கள் தடை செய்யப்பட்டன. இவற்றால் சமுதாய மொத்த வாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, அடியோடு முன்னேறாமல் தடைபட்டு நின்றுபோய்விட்டது. இவையெல்லாம் மாறக்கூடிய அளவுக்கு இன்றைக்கு அறிவு, கல்வி வளர்ந்துவருகின்றன.


கல்வி வளர வளரப் பகுத்தறிவு சிந்தனை, பக்குவமாக நம்முடைய எண்ணங்களிலே வளரத்தான் செய்யும். தோட்டத்திலே மலர்கள் பூக்கின்றபோது மணம் பரவாமல் இருக்குமா? அதைப்போல நாம் அறியாமலே கூட நாம் படிக்கிற அறிவியல் கருத்துகள், நம்முடைய எண்ணங்களை மெல்லமெல்லப் பக்குவப்படுத்தி, நம்மைப் பகுத்தறிவுப் பாதையில் நடைபோடுவதற்கு ஓர் அளவுக்காகவாது நிச்சயமாக வழிசெய்யும்.


***   


நீண்ட நெடுங்கால மாகவே மானுடத்தின் சமுதாய வாழ்விலே கற்பனை தான் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. கற்பனை தான் இன்பமானது; கற்பனை தான் மகிழ்ச்சி அளிப்பது; கற்பனை தான் கலைகளைத் தருவது; கற்பனை உணர்வு தான் கவலைகளை மறக்கவும் துணையாவது; கற்பனையினால் பெருக்கெடுக்கும் ஓசையின் எழிலோட்டம் இசை.     


***


நம்முடைய மூளையினுடைய இயற்கை ஆற்றல் என்பது கணிணியைப் பற்றி நாம் எப்படியெல்லாம் வியக்கிறோமோ, அதைவிட மகத்தான ஓர் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட கடவுளாக இருக்கிறது; அறியப்படாத எங்கும் நிரம்பிய பிரம்மமாக இருக்கிறது; உணரப்படாத உண்மையாக இருக்கிறது; தேடி எடுக்கப் படாததாக, நம்முடைய கையிலே சிக்காததாக நம்முடைய மூளையின் அறிவாற்றல் இருக்கிறது. அந்த அறிவாற்றலிலே நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.  


***


இந்த நாட்டிலே மக்களிடம் பரவிய சாதி வேற்றுமையும் வருண தருமமும் செய்துள்ள கேட்டையும், தீமையையும் வேறு எதுவும் செய்யவில்லை. அதற்கடுத்து மதவேற்றுமையால், விளைந்த கேடுகள் ஏராளம். இன்றைக்குக்கூட இந்த நாட்டிலே தீவிரவாத வன்முறைகலாச்சாரம் வளர்வதற்கு மத அடிப்படைவெறி "Fundementalism" காரணமாக இருக்கிறது என்பதை நாமறிவோம். ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் ஒருவகைக் கொள்கையை, பழக்க வழக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பெயர் மதமே தவிர, இன்னொரு மதத்துக்காரனைக் கொடுமைப்படுத்த - அழிக்க - வேற்றுமத மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்த, எந்த மத உணர்வும் இடம் அளிப்பது   நியாயமாகாது; எவரும் நியாயப்படுத்த முடியாதது. 
- பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் புத்தகத்தில் இருந்து

No comments:

Post a Comment